யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்

– எழுத்தாளர் பற்றிய குறிப்பு: வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

கவிதை, சிறுகதை, கட்டுரைகள் ஆகிய துறைகளில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனது பங்களிப்பை ஆற்றி வரும் திரு. ருவண் எம் ஜயதுங்க, இலங்கை இராணுவத்தின் மன நலப் பிரிவில் மருத்துவராக கடமையாற்றியவர்.  அத்தோடு இலங்கை சுகாதார அமைச்சின் புத்தளம் மாவட்டத்துக்கான மன நல உத்தியோகத்தராகவும் கடமையாற்றியவர். ஜோன் எப். கென்னடி, வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற தலைவர்கள் குறித்தும், மன நல மருத்துவம், சிறுகதைத் தொகுப்புகள்  என சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். –


எரிந்த நிலையில் யாழ் நூலகம்

வைத்தியர் ருவண் எம்.ஜயதுங்க

யாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்த நபரொருவர் எனக்களித்த வாக்குமூலத்தை பல வருடங்களுக்குப் பிறகு நான் எழுதுகிறேன். இந்த நிகழ்வு குறித்து நான் தனிப்பட்ட பதிவேதும் எழுதவில்லை. எனினும் 2002 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட எனது ‘பிரபாகரன் நிரூபணம் குறித்த மனோவியல் ஆய்வு’ எனும் தொகுப்பில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நபரை, 1994 ஆம் ஆண்டு நான் மாத்தளை வைத்தியசாலையில் கடமையாற்றிய காலத்தில் சந்தித்தேன். அவர் எனது பகுதி நேர நோயாளியாகவிருந்தார். பகுதி நேர நோயாளி என நான் குறிப்பிடுவது ஏனெனில், அவருக்கு ஆரம்பத்திலிருந்து சிகிச்சையளித்த வைத்தியர் நானல்ல. எனினும் அவரது உடல் ரீதியான வியாதிகள் சிலவற்றுக்கு நான் சில வைத்திய அறிவுரைகளைக் கூறியிருந்ததாலும், அவருக்கு சில மருந்துகளை இலவசமாகக் கொடுத்ததாலும் அவர் எனக்கு சினேகமாகியிருந்தார். நான் இங்கு குறிப்பிடப் போவது அந்த நபர் என்னிடம் கூறியதைத்தான். இந்தத் தகவல்கள் உண்மையானவை, பொய்யானவை போன்ற விடயங்களை வாசகர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகிறேன். (ஓய்வுபெற்ற சிரேஷ்ட போலிஸ் பிரதி காவலதிகாரி எட்வட் குணதிலகவால் முன்வைக்கப்பட்ட ‘ஆய்வறிக்கை’யின் பிரகாரம், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரது செயல்பாடாகும். அதற்கு சிங்களவர்கள்தான் காரணம் எனக் காட்டி சர்வதேச மக்களின் அனுதாபத்தை வென்றெடுப்பதே அவர்களது நோக்கமாகும்.)

இந்த வாக்குமூலத்தை அளித்த நபரது உத்தியோகம் என்னவாகவிருந்தது என்பதை நான் கூற மாட்டேன். காரணம் அது சர்ச்சைக்குரியதாகவும், ஈழ ஆதரவாளர்களால் இந்த விடயமும் கூட அவர்களது பிரசார தந்திரமாகப் பாவிக்கப்படக் கூடும் என்பதனாலுமாகும். எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் நடைபெற்ற போது அவர் வடக்கில்தான் இருந்திருக்கிறார்.

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களோடு, ஆசியாவிலிருந்த விசாலமான நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகத்துக்கு 1981 ஆம் ஆண்டு, மே மாதம் 31 ஆம் திகதி தீ வைக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாண அபிவிருத்திக் குழுத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்ததோடு, கொழும்பிலிருந்து சென்றிருந்த காடையர்கள் யாழ்ப்பாணத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவாறு இருந்தனர். இந்த நிகழ்வானது இனவாதக் கலவரங்களின் திருப்புமுனையாக அமைந்தது.

யாழ்ப்பாணத் தமிழர்களின் பெருமைக்குக் கொடுத்த அடியாகத்தான் யாழ்ப்பாண நூலகம் கொளுத்தப்பட்டதென அந்த நபர் கூறுகிறார். இதற்கு சில அரசியல்வாதிகளும் கூட அனுமதியளித்திருக்கின்றனர். அதை நியாயப்படுத்தும் விதமாக, விடுதலைப் புலி இயக்கத் தீவிரவாதிகள் இந் நூலகத்தில் வைத்துத்தான் ஒருவரையொருவர் சந்தித்து தாக்குதல் திட்டங்களைத் தீட்டுவதாகவும், அதனால் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடங்களை அழித்தொழித்து விட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அத்தோடு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் இறுதி பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்ற இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸார் இருவரை தீவிரவாதிகள் கொலை செய்திருந்ததால் இந்தக் குழுவினர் அமைதியற்று இருந்திருக்கின்றனர்.

இந்த நபர் கூறும் விதத்தில், அவரும், அவருடனிருந்த குழுவினரும் முதலில் சாராய போத்தலொன்றில் பெற்றோலும், மணலும் நிரப்பி, புடைவைத் துண்டால் மூடி அதனைக் கொளுத்தி விட்டு நூலகத்தை நோக்கி எறிந்திருக்கின்றனர். அந்த போத்தலுக்குள் சதுர வடிவில் வெட்டப்பட்ட இறப்பர் செருப்பின் துண்டொன்றும் இருந்ததனால் பலமாகத் தீ பற்றிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே குழுவிலிருந்த ஒருவர் ‘நெருப்பு நெருப்பு’ எனக் கத்தியிருக்கிறார். அத்தோடு முன்பே திட்டமிட்டிருந்தவாறு ஒரு குழுவினர் தீயை அணைக்க தண்ணீரை எரிவதைப் போல பெற்றோலையும், மண்ணெண்ணையையும் கொண்டிருந்த வாளிகளை தீயின் மீது எறிந்திருக்கின்றனர். அதனால் தீயானது கொழுந்து விட்டெரியத் தொடங்கியிருக்கிறது. நூலகத்திலிருந்த புத்தகங்களிலும் தீப்பிடித்துக் கொண்ட காரணத்தால் சொற்ப நேரத்துக்குள் யாழ்ப்பாண நூலகம் சாம்பலாகி விட்டிருக்கிறது. இருண்ட வானம் சிவந்து போயிருந்தது.

தீ, அதிக வெப்பத்தையும் கக்கிக் கொண்டிருந்ததனால், தீ வைத்தவர்கள் சற்றுத் தூரமாகச் சென்று இக் காட்சியைக் கண்டு களித்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கொண்டிருந்திருக்கின்றனர். இதற்கிடையே யாழ்ப்பாணத் தமிழ் மக்கள், நூலகத்துக்கு அருகில் ஓடி வந்து தமது அக ஆன்மா எரிந்து கொண்டிருப்பதையும், அதற்குக் காரணமானவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்புவதையும் கண்டிருக்கிறார்கள். இந்த வாக்குமூலத்தைக் கொடுத்தவர் கூறுவதற்கேற்ப தீ வைப்பதில் பங்குகொண்ட சிலர் சாராய போத்தல்களைக் கையில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பருகியவாறு இன ரீதியான கோஷங்களை எழுப்பியிருக்கிறார்கள். மது போதையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு சவால் விடுத்திருக்கின்றனர். பின்னர் போலிஸார் வந்து மிகவும் மென்மையாக அக் காடையர்களை அங்கிருந்து நீங்கிச் செல்லப் பணித்திருக்கின்றனர்.

மிகவும் அரிய கைப்பிரதிகளைக் கூடக் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டதைக் குறித்து ‘Cultural Genocide’ அதாவது ‘கலாசார இனப்படுகொலை’ என பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்திருக்கிறார். யாழ்ப்பாண நூலத்தை எரிக்க இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. காரணம் இராணுவ அதிகாரிகளான ஜெனரல் வஜிர விஜேரத்ன, கர்னல் வைத்தியர் ரஞ்சன செனவிரத்ன போன்ற இராணுவ அதிகாரிகள் கூட யாழ்ப்பாண நூலகத்தின் உறுப்பினர்களாக இருந்ததோடு, அவர்கள் கூட இச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்தக் குற்றச் செயலைச் செய்ய காடையர்களைத் தூண்டி விட்ட அரசியல்வாதிகள்தான் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

எவ்வாறாயினும், யாழ்ப்பாண நூலகத்தை எரித்த காடையர் குழுவிலிருந்த இந்த நபர் பின்னர் அதைக் குறித்து வருந்தத் தொடங்கியிருக்கிறார். அவரது ஒரே பிள்ளையும் கூட பதினாறு வயதாகும் முன்பு இறந்து விட்டிருந்தது. அதனால் வாழ்க்கை குறித்து வெறுப்படைந்திருந்த அவர் மதுபானத்திற்கு அடிமையாகியிருந்தார். அவரை நான் இறுதியாக 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்தேன். இப்போது அவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை நான் அறியேன்.

mrishansha@gmail.com