சிந்தனை என்பது பெருவானம்! – அதில்
சீறிப் பறப்பது அறிவாகும்!
விந்தைகள் புரிவது அறிவாலே! – இதை
விளங்குவர் இருப்பார் நிறைவாலே!
சிந்தனை வானில் பறப்பதற்கு – எண்ணச்
சிறகுகள் முளைப்பது அவசியமே!
வந்தனை செய்தே வரவேற்போம்! – நல்ல
வளமிக்க கருத்தினை சிரமேற்போம்!
சிந்தனை வேறு ; செயல் வேறு – வந்து
செறிந்திடும் கருத்துக்கள் பலநூறு!
வந்ததெல் லாமரங் கேறாது – அதில்
வடித்தெடுத் தவையே மாறாது!
இருபது முடிந்து நூற்றாண்டு – உலகு
எப்படியோ வெல்லாம் மாறியது!
ஒருபது நூறின் முன்னுள்ள – சில
உருப்படா கருத்திங்கு ஊறியது!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியிலே – அவர்
விண்ணுல கினிலே பறக்கின்றார்!
அஞ்ஞானத்தில் அழுந்தியதால் – இவர்
அசிங்கத்தினிலே மிதக்கின்றார்!
ஜாதிச்சண்டை மதச்சண்டை – அதில்
ஜாலப்பேச்சில் நிலச்சண்டை!
ஏதும் வேறு அறியாது – இதில்
ஏற்றம் என்பது கிடையாது!
கருத்துகள் விதைத்துக் காத்துவிட – பலர்
காலந் தோறும் அவதரித்தார்!
வருத்தங்கள் கொண்டே அவர்சென்றார் – அதை
வருந்திச் சொல்ல யார்வந்தார்!
கருத்துகள் வருவது போதாது – அதை
கவரும் சிந்தனை வரவேண்டும்!
அருத்தங்கள் வாழ்வில் அமைவதென்றால் – மனம்
அடுத்தாரைப் பேணும் திறன்வேண்டும்!
bairaabaarath@gmail.com