பேசும் குழந்தைகளிடம் பெரியவர்கள் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம்? அவர்கள் பேச்சை அவதானித்து, சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா? குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகளின் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள்! தனிமையிலிருப்பவர்களை சிந்திக்கவைப்பவர்களும் சிரிக்கவைப்பவர்களும் குழந்தைகள்தான் என்பது எனது அவதான அனுமானம். எமக்குள் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய பல கேள்விகளை வாழ்நாளில் கேளாமலேயே உலக வாழ்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம். அதற்கான சந்தர்ப்பம் அதன்பின்னர் கிடைப்பதேயில்லை.
ஒரு விமான ஓட்டி, எதிர்பாரதவிதமாக சகாரா பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட தருணத்தில், சுற்றிலும் மணல் தரையும் மேலே வானமே கூரையாகவும் தென்படும்போது அமானுஷ்யமாக கேட்கும் ஒரு குரல் அந்தக்குட்டி இளவரசனிடமிருந்து வருகிறது.அந்த விமான ஓட்டியின் பெயர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி. உச்சரிக்க சிரமமாக இருக்கிறதா? அவர் இன்று உயிரோடு இருந்தால் அவரது வயது 118. பிரெஞ்சு இலக்கியத்தில் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட , நினைவு முத்திரையூடாகவும், குட்டிஇளவரன் கதையூடாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது அது விபத்துக்குள்ளாகி காணாமல் போனவர்.
தனது 21 வயதில் பிரான்ஸ் விமானப்படையில் இணைந்து, விமானம் செலுத்துவதற்கு பயிற்சிபெற்று விமானியாகிறார். தனது தொழில் அனுபவங்களை பின்னணியாகக்கொண்டு நூல்களும் எழுதுகிறார். அவருக்கு எழுத்தாளன் என்ற அடையாளமும் கிடைக்கிறது. 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தை ஓட்டிச்சென்ற அவர், அன்றிலிருந்து காணாமல் போய்விட்டார். இதுவரையில் அவரது உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்படாது போனாலும், அவர் புறப்பட்டுச்சென்ற அந்த விமானத்தின் சில பாகங்கள் தீவிர தேடுதலுக்குப்பின்னர் கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மறைந்து, 74 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த மாதம் -இந்தத்தருணத்தில், மெல்பன் வாசகர் வட்டம் அவரது ‘குட்டி இளவரசன்’ நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருப்பது தற்செயல் நிகழ்வுதான்.
அற்பாயுள் மரணம்கூட மேதாவிலாசங்களின் அடையாளமோ என்ற சாரப்பட சுந்தரராமசாமி தனது ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலின் தொடக்கத்தில் சொல்லும்போது , பாரதி, புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், அல்பர்ட் காம்யூ பற்றிச்சொல்வார். ஆனால், நாம் இன்று அந்த மேதாவிலாசம், அந்த்வான் து செந்த் – எக்சுபெரி அவர்களுக்கும் உரியதுதான் என்று பேசுவோம்.
உலகின் பல மொழிகளில் ( சுமார் 175 மொழிகளில்) பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவலை, அவர் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் அதாவது 1943 இல் வெளியிட்டுள்ளார். அவரது ‘குட்டி இளவரசன்’ அதன் பின்னர், பல மொழிகளிலும்- கூட்டிக்கழித்துப்பார்த்தால் சுமார் எண்பது கோடி பிரதிகள் வெளியாகி, குழந்தை இலக்கிய வரிசையிலும் இணைந்து பெரியவர்களும் படிக்கத்தக்கதாக உலக இலக்கியப்பரப்பில் வளர்ச்சி கண்டு, சினிமாவிலும் முழு நீள திரைப்படமாகவும் குழந்தைகளுக்கான திரைப்படமாகவும் நாடகம், இசை நாடகம் முதலான வடிவங்களிலும் வெளிவந்துள்ள சாதனைச் செய்திகளை அறியாமலேயே அந்த்வான் து செந்த் – எக்சுபெரி காணாமல் போயிருப்பது, குட்டி இளவரசன் கதை சொல்லும் வாழ்வின் அபத்தம் போல் மனதை நெருடுகிறது. அவருடைய ஆறுவயதில், அவர் பார்த்த ஆள்புகாக்காடுகளைப்பற்றிய ‘உண்மைக்கதைகள்’ என்ற புத்தகத்தில் அவர் காணும் ஒரு படத்தின் செய்தியிலிருந்து குட்டி இளவரசனின் கதையை நகர்த்துகிறார்.
மலைப்பாம்பு பெரிய விலங்குளையும் மனிதர்களையும் விழுங்கும் இயல்புகொண்டது. அது ஒரு யானையை விழுங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அவர் வரைந்த படத்தை பெரியவர்களிடம் காண்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கு அந்தப்படம் ஒரு பெரிய தொப்பியாகவே இனம் காண்பிக்கிறது. அதனால், மலைப்பாம்பின் வயிற்றுள்ளே இருக்கும் யானையை வரைந்து காண்பித்து அவர்கள் அந்தப்படத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
பெரியவர்களின் ரஸனைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளப்பார்க்கிறது அந்த ஆறு வயதுக்குழந்தை. குழந்தைகளதும் பெரியவர்களதும் உலகங்கள் வேறு வேறானவை என்பதை பிரசார வாடையின்றி வெகு இயல்பாக, அதேதருணம், அங்கதமாகவும் சொல்கிறார்.
இந்த நாவலின் முதல் அங்கமே எளிய நடையில் வாசகரை உள்ளே அழைத்துச்செல்கிறது. மனிதர்களின் நடமாட்டம் அற்ற அந்த பாலைவனப்பிரதேசத்தில் தனித்துவிடப்படும் கதை சொல்லியான அவரை சந்திக்கும் ஒரு கற்பனைப்பாத்திரம்தான் அந்த ‘குட்டிஇளவரசன்’. அவன் ஊடாக வாழ்வின் அபத்தங்களை முன்வைக்கிறார். அவன் வாழும் கிரகத்தில் தினமும் 43 முறை சூரியன் மறைகிறது. அவன் தான் சென்று வந்த கிரகங்களில் சந்திப்பவர்கள் பற்றிய விவரணத்துடன் கதை நகர்கிறது. ஒரு அரசன், ஒரு தற்பெருமைக்காரன், ஒரு குடிகாரன், ஒரு பிஸினஸ்மேன், தெருவிளக்கு ஏற்றுபவன், புவியியல் புத்தகம் எழுதும் ஒரு எழுத்தாளன், இவர்களையெல்லாம் சந்தித்து பேசிவிட்டு, பூமி என்ற கிரகத்திற்கு வரும் அந்த குட்டி இளவரசன், அங்கே, முதலில் ஒரு பாபையும் பின்னர் ஒரு நரியையும் சந்திக்கின்றான். இவர்களுக்கு மத்தியில் ஒரு மலரும் வருகிறது.
தனக்கு முன்னாள் எவரும் கொட்டாவிகூட விடமுடியாது என்ற மமதையில் தனது அதிகாரத்தை மாத்திரம் செலுத்த விரும்பும் அந்த அரசன் முதலாவது கிரகத்தில் வருகிறான். குட்டி இளவரசனை தன்னோடு இருக்கச்சொல்கிறான். இருந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதிதருகின்றான். அது நீதி அமைச்சர் பதவி. அரசனுக்கும் குட்டி இளவரசனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் சமகால அரச அதிகாரத்தில் இருப்பவர்களின் படிமம் வாசகரை வந்தடைகிறது.
இரண்டாவது கிரகத்தில் சந்திக்கும் தற்பெருமைக்காரன் பற்றிய சித்திரத்திலும் எளிமையான சுவாரஸ்யம் வருகிறது. ஆனால், அதனையும் சமகாலத்துடன் ஒப்பிட வைக்கிறார் கதை சொல்லி. குட்டி இளவரசனை முதல் முதலில் பார்த்ததும் ” ஆகா, இதோ ஓர் ரசிகன் தனக்கு கிடைத்துவிட்டான்” என்று உள்ளம் பூரிக்கின்றான். அந்த இடத்தில் வரும் வரிகள்: “தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள்.”
அந்தக்கிரகத்தில் அந்தத்தற்பெருமைக்காரன் மாத்திரம்தான் இருக்கிறான்! ஆனால், தன்னை எல்லோரும் பாராட்டவேண்டும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் முன்வைக்கும் கேள்விகளுக்கு அவனிடமிருந்து பதில் இல்லை. இங்கு ஒரு வரிவருகிறது: ” தற்பெருமைக்காரர்கள் எப்போதும் புகழுரைகளை மட்டுமே காதில் வாங்கிக்கொள்வார்கள்.”
அடுத்த கிரகத்தில் வரும் குடிகாரன், வெட்கப்படுவதை மறப்பதற்காகவே குடிக்கிறான். அவனைச்சுற்றி மதுப்புட்டிகளும் மது இல்லாத வெற்றுப்புட்டிகளும்தான் கிடக்கின்றன. வெட்கப்படும் அந்தக்குடிகாரனுக்கு ஏதும் வழியில் உதவ விரும்புகிறான் குட்டி இளவரசன். ” நீ எதற்காக வெட்கப்படவேண்டும்?” எனக்கேட்டால், அவனிடமிருந்து வரும் பதில்: ” குடிக்கிறேன் என்பதற்காக வெட்கப்படுகிறேன்”
நான்காவதாக வரும் கிரகத்தில், ஐம்பது கோடிக்கும் மேல் விண்மீன்களை வைத்துக்கொண்டு, மேலும் மேலும் அதன் எண்ணிக்கையை பெருக்கும் காரியத்தில் எப்போதும் எண்ணிக்கையை பதிவுசெய்வதிலேயே மூழ்கி இருக்கிறான்! அவனுடன் எதுவும் பேசமுடியவில்லை. எது பேசினாலும் தனது எண்ணிக்கை பிழைத்துவிடும் என்பதனால், குட்டி இளவரசனை அலட்சியம் செய்கின்றான்.
” ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று ” என்று அந்த பிஸினஸ் மேன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, குட்டி இளவரசன் குறுக்கிட்டு, இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய்? எனக்கேட்கவும், ” என்ன செய்கிறேனா? ஒன்றுமில்லை. அவை எனக்குச்சொந்தம்” என்ற பதில் வருகிறது.
முன்னர் சந்தித்த அரசனை நினைவுபடுத்தி, ” அரசர்கள் எதையும் சொந்தமாக்கிக்கொள்வதில்லை. அவர்கள் ஆதிக்கம் மட்டுமே செலுத்துவார்கள் ” என்கிறான் குட்டி இளவரசன். ” அப்படி இருக்கும்போது நீ மாத்திரம் விண்மீன்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறாயே? ” எனக்கேட்கவும், அந்த பிஸினஸ் மேனிடமிருந்து வரும் பதில்: ” அதனால்தான் செல்வந்தனாக இருக்கின்றேன். “
” அதன் பயன் என்ன?” என்று குட்டி இளவரசன் கேட்கவும், ” இன்னும் யாராவது விண்மீன்களைக்கண்டுபிடித்தால், அவற்றையும் வாங்குவதற்காகத்தான்” எனச்சொல்கிறான் அவன். இந்த வரிகளை படிக்கும்போது நாம் யாரை நினைவில் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியும்தானே?!
இவ்வாறு படிம உத்திகளோடு கதை சொல்லி, பிரபஞ்சத்தையும் மக்களையும் அங்கதமாக சித்திரித்து வாழ்வில் எத்தனைவகையான அபத்தங்களை கடந்துவருகிறோம் என்பதை பதிவுசெய்கிறார் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி.
எழாவதாக வரும் கிரகம் பூமி. அதில் வரும் வரிகளின் ஊடாக இந்த எழுத்தாளர், ஏற்கனவே தென் அமெரிக்காவிற்காக புதிய விமானத்தடங்களை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு, Night Flight என்ற புத்தகத்தை 1931 இல் எழுதியிருக்கும் செய்தி எமக்குத் தெரியவருகிறது. தேசங்களுக்கு தேசம் நேர வித்தியாசம் பற்றிய தகவல்களையும் அழகியலோடு பதிவுசெய்கிறார்.
உறவுகளை ஏற்படுத்துங்கள் – சிறியவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்கள் என்பதுபோன்ற வாழ்வின் தத்துவங்களை தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகளை வருந்தியோ, ஆதங்கத்துடனோ சொல்லாமல், பிரசாரத் தொனியின்றி அழகியலோடு சொல்லிவிட்டு அந்தக்குட்டி இளவரசன் போன்றே காணாமல் போய்விட்டார் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி.
அவர் ஏன் இத்தகைய நவீனத்தை படைத்தார் என்பதை எங்காவது நேர்காணலில் சொல்லியிருக்கிறாரா? என்பதை இனித்தான் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கும் எமக்குச்சிரமம் தராமல்,
” என் வாழ்க்கையின் போக்கில் பல புத்திசாலி மனிதர்களுடன் பல தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. பெரியவர்களுடன் நான் நிறையவே பழகியிருக்கின்றேன். அவர்களை மிக அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன். இதனால் என் அபிப்பிராயம் ஒன்றும் அவ்வளவாக உயர்ந்துவிடவில்லை.” எனச்சொல்லியிருப்பதன் ஊடாக அவருடை நோக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் குட்டி இளவரசன் குழந்தைகளுக்கான கதை மாத்திரமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்ற தகுதியையும் பெறுகிறது. பிரெஞ்சிலிருந்து நேரடியாக இதனை அழகாக செம்மைப்படுத்தப்பட்ட மொழி நடையில் தந்திருக்கும் வெ. ஶ்ரீராம் – ச. மதன கல்யாணி ஆகியோரையும் நூலை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு க்ரியா வெளியீட்டாளர்களையும் மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும்.
( மெல்பன் வாசகர் வட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )
letchumananm@gmail.com