‘பதிவுகள்’ இணைய இதழின் தோற்றமும், நோக்கமும் பற்றி….

'பதிவுகள்' பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது‘பதிவுகள்’ பற்றி தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பயிலும் பலர் இணைய இதழ்கள் பற்றி ஆய்வுகளுக்காக ஆராய்ந்திருக்கின்றார்கள். எழுத்தாளர் அண்ணா கண்ணன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் ஆய்வுக்காக தான் எழுதிய ஆய்வில் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வு நூல் அமுதசுரபி வெளியீடாக வெளிவந்துள்ளது. மேலும் பலர் தமது பல்கலைக்கழகப் பட்டபடிப்பில் ‘தமிழ் இணைய இதழ்கள்’ ஆய்வுக்காக ‘பதிவுகள்’ பற்றியும் ஆராய்ந்துள்ளார்கள். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வள மையம், புதுக்கோட்டை அவர்களும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவர் திண்ணை இணைய இதழில் கட்டுரையொன்றினை அண்மையில் எழுதியுமிருந்தார்.  எழுத்தாளர் சோழநாடனும் (ப.திருநாவுக்கரசு) இணையத்தில் தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் ‘பதிவுகள்’ இணைய இதழ் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பலர் அவ்வப்போது இவ்வாய்வு சம்பந்தமாக எம்முடன் தொடர்பு கொள்வதுமுண்டு. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் இலக்கியமும் ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையே மேற்படி ஆய்வுகளும், தமிழ் இணைய இதழ்கள் மீதான கவனமும் காட்டுகின்றன. இன்று கணித்தமிழ் இலக்கிய உலகில் இணைய இதழ்கள், வலைப்பூக்கள், விவாதக்குழுக்களெல்லாம் முக்கிய பங்கினையாற்றி வருகின்றன. குறுகிய காலத்தில் கணித்தமிழ் அடைந்துள்ள வளர்ச்சி நம்பிக்கையினையும், பிரமிப்பினையும் ஊட்டுகின்றது.

பலர் எம்மிடம் அவ்வப்போது இணைய இதழ் ஆய்வுக்காகத் தொடர்பு கொள்வதுண்டு. அவர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்விகளையும் அவற்றுக்கான எனது பதில்களைப் ‘பதிவுகள்’ பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படுத்த விரும்புவோருக்காகவும், பதிவுகள் இணைய இதழ் பற்றிய ஆரம்பம் / நோக்கம் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள விரும்பும் வாசகர்களுக்காகவும் இத்துடன் கீழே பிரதி செய்துள்ளேன்.

1. இணைய இதழ் தொடங்கப்பட்ட நாள், ஆண்டு, இடம்? இதழுக்கான எழுத்துரு? 2. இதழ் வெளியாகும் கால இடைவெளி( நாளிதழ், வார இதழ், மாத இதழ்..) மாத இதழ்.

பதிவுகள் இணைய இதழானது மாசி 2000 இல் கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் வ.ந.கிரிதரனால் மாத இதழாகத் தொடங்கப் பட்டது. ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சலின் இணைமதி எழுத்துருவே பாவிக்கப்பட்டது. பின்னர் அது Tscu_Inaimathi ( முரசு அஞ்சலின்) ஆக மாற்றப்பட்டது. தற்போது பதிவுகள் யூனிகோட்டில் (லதா எழுத்துருவில்) வெளிவருகின்றது.

2. இதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம்?

பல்வேறு நோக்கங்கள். எழுத்தாளனான நான் பல்வேறு படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுடன் என் சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வது அதிலொன்று. பதிவுகளின் முக்கியமான நோக்கங்களிலொன்று ‘அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்ளல் ( ‘Sharing knwoledge with every one’). தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுமிடமாகப் பதிவுகள் விளங்குகின்றது. இணையத்தின் ஆரோக்கியமான பயன்களிலொன்று மிக இலகுவாகப் பலரை எல்லைகளைக் கடந்து தொடர்பு கொள்ள வைத்தலென்பது.. இணைய இதழொன்றினால் மிக இலகுவாக, விரைவாகப் பல படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். அதற்கு அனைவரையும் கணித்தமிழின் நன்மைகளை உணர வைக்க வேண்டும். இத்தகைய இணைய இதழ்களால், அவற்றை வெற்றிகரமாக நடாத்திக் காட்டுவதன் மூலம், அவற்றில் பங்களிக்க வைப்பதன் மூலம் உணர வைக்க முடியும். இதற்கு முதல்படியாக பதிவுகள் ஆரம்பத்தில் பாவிக்கும் எழுத்துருக்களில் ஆக்கங்களை, எண்ணங்களை அனுப்பி வைக்கும்படி கோரினோம். அவ்விதம் வரும் படைப்புகளையே பிரசுரிக்கத் தொடங்கினோம். பல பெரிய எழுத்தாளர்கள் ஆரம்பத்தில் தமிழில் எழுதச் சிரமப்பட்டபோது அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். அதன்பின் அவர்கள் பதிவுகளுக்குத் தாங்களாகவே உரிய எழுத்தில் ஆக்கங்களை அனுப்பத் தொடங்கினார்கள். இதன் மூலம் படைப்பாளிகளை கணித்தமிழின் பயனை நேரடியாகவே உணரவைக்கக் கூடியதாகவிருந்தது. மேலும் பதிவுகள் இதழினை ஆரம் காலத்திலிருந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் பங்களிப்புடன் வெளிக்கொணர்ந்திட முடிந்தது. பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்பும் படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் தாங்களே தட்டச்சு செய்து அனுப்புவதென்பது பதிவுகள் சஞ்சிகையின் வெற்றிக்கு முக்கியமானதொரு தேவையாகவிருந்தது. ஆரம்பகாலப் பதிவுகள் இதழ் மிகவும் மோசமான வடிவமைப்புடன் ஆர்வத்தின் காரணமாக வெளிவந்ததை ஆரம்ப ஆக்கங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள். இருந்தும் பதிவுகள் ஆரம்பத்திலேயே பலரையும் ஈர்க்கத் தொடங்கி விட்டது. அடுத்துவரும் ஆண்டுகளில் பதிவுகளில் விவாதக் களத்தினையும் ஆரம்பித்தோம். அச்சமயம் பதிவுகளின் விவாதக் களத்தில் ஜெயமோகனுட்படப் பல படைப்பாளிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். பதிவுகளுக்கும் ஆக்கங்களை அனுப்பினார்கள்.

கணித்தமிழை படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை  அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்.

3. இதழில் வெளியாகும் படைப்பிலக்கியம் (கவிதை, சிறுகதை, நாவல்…) பற்றிய விவரம்…

இதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையத் தள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்களைக் காணலாம்.

பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகின்றது. நூல்களை, இணையத் தளங்களை அறிமுகம் செய்து வைக்கின்றது. இலவசமாக வரி விளம்பரங்களைப் பிரசுரித்து உதவுகின்றது.

மேலும் பதிவுகளின் விவாதத் தளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் மிக ஆர்வமுடன் பல பிரபல எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களென அனைவரும் கலந்து கொள்ளுமிடமாக விளங்கிய இத்தளத்தில் பல்வேறு விடயங்களைப் பற்றியும் விவாதித்துக் கொண்டார்கள்.

4. ‘பதிவுகள்’ இணைய இதழ் முதன்முதலாக வெளியிடப்பட்ட நாள், ஆண்டு?

ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாக வெளியிடப்பட்ட பதிவுகளின் முதலாவது இதழ் மாசி 2000இல் வெளிவந்தது. அன்று வெளிவந்த பதிவுகள் மிக மிக ஆரம்பகால முயற்சி. உண்மையில் பதிவுகள் ஆரம்பத்தில் மிக மிகச் சாதாரணமாக ஆர்வத்தால் தொடங்கப்பட்ட இதழ். ஆவணி பதிவுகளில் ‘காந்தி இருந்திருந்தால்..’ என வெளிவந்திருந்த பகுதியினை அப்பொழுதே ஆனந்த விகடன் (ஆவணி 20, 2000) தனது ‘உலகே.. உலகே… உடனே வா… ‘ பகுதியில் மீள்பிரசுரம் செய்திருந்தது. மிக மிகச் சாதாரணமாக, ஆரம்ப வடிவமைப்புடன் வெளிவந்த பதிவுகள் அப்பொழுதே பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தது இப்பொழுதும் மகிழ்ச்சியினைத் தருமொரு விடயம்.

5. இதழில் சிறப்புப் பகுதிகள் எவை?

சிறுகதை, கட்டுரை (இலக்கியம், அரசியல், சினிமா, அறிவியல் …), கவிதை, நாவல், குறுநாவல், நிகழ்வுகள், விவாதங்கள், நூல் விமரிசனம், இணையத்தள அறிமுகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

6. வாசகர்களின் எண்ணிக்கை பற்றி.. (வாசகர் வசிக்கும் நாடுகள் பற்றிய விவரம் இருந்தால் கொடுக்கவும்)

பதிவுகளை ஆயிரக்கணக்கில் வட அமெரிக்கா, ஐரோப்பா (சுவிஸ், பிரிட்டன், நோர்வே, பாரிஸ், ஜேர்மனி, டென்மார்க்….), ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இந்தியா, இலங்கையுட்பட உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வாசித்து வருவதுடன் பங்களித்தும் வருகின்றார்கள். இந்தியாவில் தமிழகம், மும்பாய், புது டெல்லி என பல இடங்களிலும் பதிவுகளுக்கு வாசகர்களுண்டு. இன்று பதிவுகளை உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ் மக்கள் படித்து வருகின்றார்கள்.

7. தங்கள் இதழ் பணம் கட்டி வாசிக்கும் இதழா? ஆம் எனில் அது பற்றிய விவரம்..

இல்லை.

8. தங்கள் இதழ் ஒரு மொழி இதழா? பன்மொழி இதழா? பன்மொழி இதழ் எனில், வெளிவரும் மொழிகள் பற்றிய விவரம்?

பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் வெளிவரும் ஆக்கங்களையும் தவிர்க்க முடியாத சூழலில் பிரசுரித்து வருகின்றோம். உதாரணமாக ஈழத்து எழுத்தாளரும், விமர்சகருமான கே.எஸ்.சிவகுமாரனின் பக்கத்தினைக் குறிப்பிடலாம்.

9. இதழ் செய்திகள் நூலாக்கம் ( அச்சுவடிவம் ) பெறுகிறதா? ஆம் எனில், அதைப்பற்றிய விவரம்.  முதன்ம ஊடகம் அச்சா? இணையமா?

தற்போது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழிது. விரைவில் பதிவுகள் மலரொன்றினை வெளிவிடும் எண்ணமுண்டு. அதன் மூலம் பதிவுகள் பற்றியதொரு ஆவணமாக அது விளங்கும்.

10. படைப்பிலக்கிய வரிசையில் வாசகர்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பகுதி ….

இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகள், சினிமா, நாவல், அறிவியற் கட்டுரைகளென அனைத்தையும் வாசகர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றார்கள்.

11. படைப்பாளிகளுக்குப் பணம் வழங்கப்படுகிறதா?

தற்போது படைப்பாளிகளின் பயன்கருதா ஒத்துழைப்புடன் வெளிவரும் இதழிது. எதிர்காலத்தில் வருமானம்பெறும் சாத்தியமேற்பட்டால் நிச்சயம் சன்மானம் வழங்குவோம். இதன்பொருட்டு பதிவுகள் தமிழர் மத்தியில் ஸ்தாபனத்துடன் இணைந்து 2005இல் சிறுகதைப் போட்டியின்றினை நடாத்தி வென்ற மூவருக்குப் பணப் பரிசுகள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விபரங்களைப் பின்வரும் முகவரியில் கண்டு கொள்ளலாம்: http://www.geotamil.com/pathivukal/results_contest_final.html#results
தற்போதுள்ள நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புதிய, புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை, எண்ணங்களையெல்லாம் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் எடுத்துச் செல்வதைத்தான் எம்மால் செய்ய முடிகிறது.

12. இணய இதழ்களின் எதிர்காலம் பற்றிய தங்களின் கருத்து… இணய இதழ்களின் வரவால் பிற ஊடகங்களுக்கான பாதிப்பு என்ன? இணய இதழ்களின் வரவால், தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்திற்கான பயன், பயனின்மை குறித்த தங்கள் கருத்து..

என்னைப் பொறுத்தவரையில் கணித்தமிழ் தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு. பொதுவாகக்த் தொழில்நுட்ப வளர்ச்சி ஊடகங்களின் வளர்ச்சியினையும் கூடவே உருவாக்கி வருவது தெரிந்ததே. ஓலைச் சுவடிகள், தாள்களென வளர்ந்து இன்று கணித்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் பல பயன்கள். மிக இலகுவாக உலகின் பல பாகங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாசகர்களிடம் சஞ்சிகையினை மிக இலகுவாக எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் உலாவரும் இணையச் சஞ்சிகைகளில் உடனுக்குடன் இலக்கிய விவாதங்களை, கருத்துப் பரிமாறல்களை நடாத்த முடிகிறது. இது அச்சு ஊடகங்களில் சாத்தியமற்றது. அவை வெளிவரும் வரையில் காத்திருக்க வேண்டும். மேலும் எல்லோருடைய கருத்துகளையும் பிரசுரிப்பதும் சாத்தியமற்றது. இணையத்தில் பலரின் கருத்துகளை, விவாதங்களை உடனடியாகவே பிரசுரிக்க முடியும். மேலும் தனிமனிதரொருவர் கூட தகவல் தொழில் நுட்ப அறிவும், இலக்கிய அறிவும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புமிருந்தால் ஒரு இணையச் சஞ்சிகையினை இலகுவாக வலையேற்றி விடலாம். இதுபோல் பல பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் சிற்றிதழ்கள் வரை, வெகுசன ஊடகங்கள் வரை இணையத்தில் காலூன்றுவதில் அக்கறையெடுகின்றன.

இணைய இதழ்களின் வரவு நிச்சயமாகப் பிற ஊடகங்களைப் பாதிக்கத்தான் செய்யும். உடனடியாகவல்ல. ஒருவரால் இணையத்தில் ஒரு சஞ்சிகையின் விடயங்கள முழுவதையும் படிக்க முடியுமென்றால் அவர் எதற்காக அச்சில் வெளிவரும் அவ்வூடகத்தை நாட வேண்டும். ஆனல் அந்த நிலை வருவதற்கு இன்னும் நீண்ட காலமுண்டு. இணையத் தொடர்பு சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு முதலில் ஏற்படவேண்டும். கணினி அனைத்து மக்களாலும் இலகுவாக அடையுமொரு பொருளாக இருக்கும் சாத்தியம் வேண்டும். அததகையதொரு சூழலில், பிராந்திய மொழிகளில் மக்களின் அனைத்துப் பிரிவினரும் கணினிகளைப் பாவிக்க முடியும் சூழல் உருவாகும். அததகையதொரு சமயம் ஏற்படும்வரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டுதானிருக்கும்.

தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழ் முக்கியமான பரிணாம வளர்ச்சியென நான் கருதுகின்றேன். பதிவுகள் எனக்கு உணர்த்திய பாடமிது. எவ்வளவு இலகுவாக என்னால் பல படைப்பாளிகளுடன் எவ்வளவு இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது. அச்சில் ஒரு இதழைக் கொண்டு வந்தால் இவ்வளவு அதிகமான படைப்பாளிகளிடமிருந்து நான் தான் சேகரித்து வெளியிட வேண்டும். ஆனால் இணையம் அதனை எவ்வளவு இலகுவாக்கி விட்டது. புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் புதிய படைப்பாளிகள்வரை எல்லோருமே பதிவுகளைத் தாங்களாகவே இனங்கண்டு தொடர்பு கொண்டார்கள். சாதாரண அச்சு ஊடகங்களுக்கில்லாத பல பயன்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல் இருப்பதால் இணைய இதழ்களின் வரவு தவிர்க்க முடியாதது மட்டுமல்ல நிலைத்து நிற்கவும் போகின்றது. தமிழ் இலக்கிய உலகில் கணித்தமிழின் நல்லதொரு வரவு. இந்த வகையில் பதிவுகள், திண்ணை, மரத்தடி, நிலாச்சாரல், தமிழோவியம்,ஆறாந்திணை, அம்பலம், இந்தாம் இதழ்கள் போன்ற ஆரம்பகால இணைய இதழ்களின் சேவை வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படுமென நான் நிச்சயம் எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பு: பதிவுகளில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய மீள்பிரசுரமிது.