அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 3: வள்ளூவர் நினைவு!

அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள் 3: வள்ளூவர் நினைவு!

– -வேலணையூர்த் தொல்காவியன் மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில்  அறிஞர் அ.ந.கந்தசாமி பாடியவை. நவீனத்தமிழ் இலக்கியத்தில் வள்ளுவரைப்பற்றி வெளிவந்த சிறந்த கவிதையிது. –

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வண்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர் கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியன் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றிப்
பரவிடுவேன் அதற்கும்பல ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடித்தெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததை தமிழ்வேதம் என்றே.

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ(டு) இன்பம்
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே
வெறுமொழிஎன்றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1“உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நாடெ”ன்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2″வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந் துவானாயின்” என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதேபொருளை ஆவேசத் தொடு
3″தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத்திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்” என்றார்.

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூலில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் ­ழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டு
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேத்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு இல்லை இவண் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூலின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என்அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழிவாழி.

1. உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சோராது இயல்வது நாடு
2. தனி ஒரு மனிதனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.
3. இரந்தும் உயிர்வாழ்தல்  வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

-வேலணையூர்த் தொல்காவியன் மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை. –


அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள்!

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்)

ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக எம்மிடமுள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றாகப் பிரசுரமாகும்.  கவிதைகள் சில தட்டச்சு செய்த நிலையில் கிடைத்தன. அவற்றில் சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எனவே அவ்வப்போது மூலப்பிரதிகள் கிடைக்கும்போது அவை ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தப்படும். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகள் இங்கு பிரசுரமாகும்.  அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக விபரங்களைப்பெற முடியும்.

நன்றி: ஶ்ரீலங்கா ஜூன 1962.