வாசிப்பும், யோசிப்பும் 296 : தமிழினி ஜெயக்குமரனின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பு பற்றி; கிழக்கில் சுடர்விட்ட தாரகை!; எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது!

தமிழினி ஜெயக்குதமிழினி ஜெயக்குமரனின் 'மழைக்கால இரவு' சிறுகதைத்தொகுப்பு பற்றி...,மரனின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பு தமிழகத்தின் ‘பூவரசி’ பதிப்பகமும், இலங்கையிலுள்ள ‘ஷேக் இஸ்மையில் நினைவுப் பதிப்பக’மும் இணைந்து கடந்த ஆண்டு வெளியிட்ட நூல். ஏற்கனவே சிங்களத்தில் வெளியான ‘அளுயம் சிஹினய’ சிறுகதைத்தொகுப்பின் மூல வடிவம். ‘கவுரவக் கவசம்’, ‘மழைக்கால இரவு’, ‘சுதர்சினி’, ‘வைகறைக் கனவு’, ‘பாக்கியம்மா’ மற்றும் ‘எனது மகன் வந்திட்டான்’ ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பு. தமிழினியின் மறைவுக்குப்பின்னர் அவரது சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’, ‘தமிழினி கவிதைகள்’ மற்றும் ‘மழைக்கால இரவு’ (சிறுகதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிடக் காரணமாகவிருந்த அவரது கணவர் ஜெயக்குமரனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். இவை அனைத்துமே தமிழினியின் அனுபவங்களை கலை, இலக்கிய மற்றும் அரசியல் வரலாற்றில் பதிவு செய்பவை. அத்துடன் தமிழினியின் பல்வேறு காலகட்டச் சிந்தனைப்போக்குகளின் பரிணாம வளர்ச்சியினை வெளிப்படுத்துபவை.

தமிழினியின் ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பும் இலங்கை அரசின் சாகித்திய அமைப்பின் 2017ஆம் ஆண்டுச் சிறந்த சிறுகதைத்தொகுப்பு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இறுதிச்சுற்றில் தெரிவான மூன்று நூல்களிலொன்றாக இருந்தது என்னும் விடயத்தை அறிந்தேன். இறுதிச்சுற்றுக்குத் தெரிவான மூன்று நூல்களின் விபரங்கள் வருமாறு:

1. ஒரு பெண்ணின் கதை – எம்.எஸ்.அமானுல்லா
2. உயிருதிர் காலத்தின் இசை – பதுளை சேனாதிராஜா
3. மழைக்கால இரவு – தமிழினி ஜெயக்குமாரன்

( இறுதியில் விருது பெற்ற நூல் பதுளை சேனாதிராஜாவின் ‘உயிருதிர் காலத்தின் இசை’.)

தமிழினியின் மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் ‘மழைக்கால இரவு’, ‘வைகறைக் கனவு’ மற்றும் ‘பாக்கியம்மா’ ஆகிய சிறுகதைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகியவை என்பதை இத்தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன். அவர் முதலில் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பிய சிறுகதை ‘மழைக்கால இரவு’. அதனை வெளியிட்டபோது கீழுள்ள குறிப்புடன் வெளியிட்டோம்:

“தமிழினி ஜெயக்குமரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான ‘மழைக்கால இரவு’ இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. இந்தச் சிறுகதையில் எம்மைக் கவர்ந்த முக்கியமான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக்கூறுவோம்: நெஞ்சையள்ளும் எழுத்து நடை, போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை விரிவாக அதே சமயம் அவர்களது இயல்பான அந்நேரத்து உணர்வுகளுடன் எந்தவிதப்பிரச்சார வாடையுமற்று விபரித்திருத்தல், இக்கதையில் தெரியும் மானுட நேயப்பண்பு (குறிப்பாகக்கீழுள்ள பகுதியைச் சுட்டிக்காட்டலாம்: ‘அன்றையபோரில் ஈடுபட்டு மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. ‘ஒருவருக்கொருவர் முரண்பட்டு அழிந்து போனவர்களின் உடல்களைப்பற்றிய கதை சொல்லியின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பகுதி. இக்கதையின் முக்கியமானதோர் அம்சமாக இதனைக் கருதலாம்), மற்றும் போராளிகளின் போர்க்காலச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தல். தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். – பதிவுகள்”

இத்தொகுப்பிலுள்ள கதைகளைப்பொறுத்தவரையில் மேற்படி கூற்றினைச் சுருக்கமான கருத்துரையாகக் கூறலாம்.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளாக ‘மழைக்கால இரவு’, ‘வைகறைக்கனவு’, ‘பாக்கியம்மா’ அத்துடன் ‘எனது மகன் வந்திட்டான்’ ஆகிய கதைகளையே குறிப்பிடுவேன்.

தமிழினி விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய பெண் போராளிகளிலொருவர். ஆயுதம் தாங்கிப் போரிட்டவர். அரசியல் அமைப்பிலும் தீவிரமாகப்பணியாற்றியவர். இறுதி யுத்தத்தின் பின்னர் பல்வேறு சிறைகளில் அவரது வாழ்வு கழிந்தது. இறுதியில் விடுதலையானதும் அவர் ஜெயக்குமரனைத் தன் வாழ்க்கைத்துணைவராகத் தேர்ந்தெடுத்தார். அக்காலகட்டத்தில் அவரது கவனம் சிறுகதை, கட்டுரை, கவிதையென இலக்கியத்தின் பல் துறைகளிலும் திரும்பியது. இருந்த குறுகிய கால வாழ்வினுள் தன்னால் முடிந்தவரையில் தன் எண்ணங்களை எழுத்தில் வடித்தார். இன்று அவை ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய படைப்புகளாக விளங்குகின்றன. அவை வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகின்றவை.

உண்மையில் அவரது ‘மழைக்கால இரவு’ சிறுகதைத்தொகுப்பின் கதைகளில் மேற்குறிப்பிட்ட கதைகள் இயக்கப் போராளிகளின் போராட்ட வாழ்வைத் தத்ரூபமாகப்பிரதிபலிப்பவை. அவரது சொந்த அனுபவங்களின் காரணமாக வெளிப்பட்ட கதைகள் போராளிகள், குறிப்பாகப் பெண் போராளிகளின் யுத்தகளச் செயற்பாடுகளை, அவர்களது மென்னுணர்வுகளான காதல், பாசம் போன்றவற்றுடன் நாட்டுப்பற்று போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துபவை. போர்க்காலத்தில் குறிப்பாக இலங்கை அரசின் விமானப்படைகளின் குண்டு வீச்சுகளின்போது மக்கள் அடையும் துயர்களை, அழிவுகளை விபரிப்பவை. எவ்விதப் பிரச்சார வாடையுமற்று எழுதப்பட்ட கதைகளை வாசிக்கையில் போராளிகளின் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட அனுபவங்களை அறிய முடிகின்றது. இலங்கை அரச படைகளை எதிர்த்து அவர்கள் போராடியபோது எவ்விதம் போராடினார்கள் என்பதைக் கதைகள் கூறுகின்றன. குறிப்பாகப் படையினரைக் காவல் அரண்களிலிருந்து வேவு பார்ப்பது, அச்சமயங்களில் அரச படையினருடனான மோதல்களின்போது போராளிகள் அடையும் யுத்த அனுபவங்கள், காயம் பட்டவர்களை , இறந்தவர்களை எவ்விதம் போராளிகள் கையாண்டார்கள், முன் அரங்கிலிருக்கும் போராளிகளுக்கெல்லாம் எவ்விதம் இயக்கம் உணவு வழங்கியது போன்ற விபரங்கள், சிறுது நேரத்துக்கு முன்னர் கூடக் கதைத்துக்கொண்டிருந்த சக போராளிகள் அரச படையினரின் திடீர் எறிகணைத்தாக்குதல்களில் பலியாகும் சந்தர்ப்பங்களில் போராளிகள் எதிர்கொள்ளூம் உளநிலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தொகுப்பின் தலைப்புக் கதையான ‘மழைக்கால இரவு’ பூநகரிச் சமரின் அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்பவை. படையினருடன் நடைபெறும் சாவா, வாழ்வா என்னும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் அதிலீடுபடும் பெண் போராளிகளின் உணர்வுகளை, அழிவுகளையெல்லாம் பதிவு செய்பவை. சமர் நிகழ்வுகளை ஆவணப்படுத்துபவை. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த கதை. தொகுப்பின் தலைப்புக் கதையான ‘மழைக்கால இரவு’ பூநகரிச் சமரின் அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்பவை. படையினருடன் நடைபெறும் சாவா, வாழ்வா என்னும் வகையிலான தாக்குதல் நடவடிக்கைகளில் அதிலீடுபடும் பெண் போராளிகளின் உணர்வுகளை, அழிவுகளையெல்லாம் பதிவு செய்பவை. சமர் நிகழ்வுகளை ஆவணப்படுத்துபவை. அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த கதை.

‘பாக்கியம்மா’ என்னும் சிறுகதை இயக்கத்துக்குத் தன் மகனை வழங்கிய மட்டக்களப்புத் தாயாரான பாக்கியம்மாவின் கதை. தன் மகனைத்தேடி பல்வேறு இடர்களையெல்லாம் கடந்து இயக்கத்தின் கோண்டாவில் காரியாலயத்துக்கு தன் மகனைப்பற்றி விசாரிப்பதற்காக நம்பிக்கையுடன் சென்று காத்திருக்கும் தாய்மார்களில் ஒருத்தி அவர். ஆனால் அவருக்குத்தன் மகன் ஏற்கனவே போராட்டத்தில் பலியாகிய விடயம் தெரியாது.

தொகுப்பின் இறுதிக்கதையான ‘எனது மகன் வந்திட்டான்’ இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் அது கூறும் பொருள் காரணமாக நிலைத்து நிற்கும் சாத்தியம் மிக்க கதை. இலங்கைப்படையினரின் தாக்குதல்களின் போது தன் தாயை இழந்து தவிக்கும் தமிழ் இளைஞனொருவன் நாட்டுக்காகப்போராட இயக்கத்தில் சேருகின்றான். இன்னொரு புறம் ஏழைச்சிங்களத் தாயொருத்தியின் மகன் இலங்கை அரச படையொன்றில் இணைந்து யுத்த களத்துக்குச் சென்று மாண்டு விடுகின்றான். அவனது வருகைக்காகக் காத்திருக்கும் அச்சிங்களத்தாய்க்கு மகனாகத் தமிழ் இளைஞனைக் காலம் அவளிடம் கொண்டு சேர்க்கிறது. முதல் வாசிப்பிலேயே மனத்தில் தங்கி விடும் கதையிது.

மேலும் இத்தொகுப்பின் ஏனைய சிறப்பம்சங்களாக நான் கருதுவது: சரளமான மனதைக் கவரும் , தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை. அடுத்தது இயற்கைக்காட்சிகளைப்பற்றிய வர்ணனைகள். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இயற்கை பற்றிய வர்ணனை போதிய அளவுக்கு இருப்பதில்லை என்பதை அவதானித்திருக்கின்றேன். பாலமுருகனின் ‘நிலக்கிளி’தான் வன்னி மண்ணைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வரும். அது போல் தமிழினியின் கதைகளிலும் ஆங்காங்கே அவர் அனுபவித்த இயற்கைக்காட்சிகள் விபரிக்கப்பட்டிருக்கின்றன.


கிழக்கில் சுடர்விட்ட தாரகை!

'தாரகை' பாரதி சிறப்பிதழ்!எழுத்தாளர் கண மகேஸ்வரன் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர். இவ்வளவுக்கும் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால் வாசித்ததில்லை. இப்பொழுது அவற்றைத் தேடுப்பிடித்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் பிறந்திருக்கின்றது.

இவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று கூறினேனல்லவா. அதற்குக் காரணம் ஒன்றுள்ளது. நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் ஈழநாடு மாணவர் மலர் நடாத்திய ‘தீபாவளி இனித்தது’ என்னும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொன்டிருந்தேன். ஆனால் அதில் என் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அதில் அப்போது உயர்தர மாணவராக இருந்த கண மகேஸ்வரனின் கட்டுரை தெரிவாகிப்பிரசுரமாகியிருந்தது. ஆனால் மாணவர் மலரில் என் கட்டுரையைப்பற்றிக் குறிப்பிட்டு, என்னைப்பற்றியும் நான் படித்துக்கொண்டிருந்த பாடசாலையைப்பற்றியும் குறிப்பிட்டு வாழ்த்துக்கூறியிருந்தார்கள். கட்டுரை பிரசுரமாகாவிட்டாலும் அவ்வாழ்த்துரை என்னை அவ்வயதில் உற்சாகமூட்டியது. அவ்வுற்சாகத்துடன் அடுத்து வந்த பொங்கல் தினத்தை முன்னிட்டுக் கவிதையொன்றினை எழுதிச் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பினேன். அது ‘சுதந்திரன்’ பத்திரிகையின் பொங்கல் இதழில் பிரசுரமானது. அதுவே நான் எழுதிப் பிரசுரமான முதலாவது படைப்பு. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன்.

ஆணால் அண்மையில் ‘நூலகம்’ தளத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பிலிருந்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான ‘தாரகை’ சஞ்சிகையின் சில பிரதிகளைக் கண்டேன். அவற்றை வாசித்தபோது அதன் ஆசிரியர்களாக விளங்கியவர்களைப்பற்றிய விபரம் என் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் அதன் ஆசிரியராக சி.சங்கரப்பிள்ளையும், கெளரவ ஆசிரியராக டாக்டர் இ.மதனகோபாலன் என்பவரும், ஆசிரியர் குழுவில் கண.மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை ஆகியோரும் இருந்துள்ளார்கள். பின்னர் கண மகேஸ்வரனே அதன் ஆசிரியராக அதனைக்கொண்டு நடத்தியிருக்கின்றார். ஓரிதழில் செ.ரவீந்திரன் ஆசிரியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தாரகை’ சஞ்சிகை வெளிவந்த காலத்தில் காத்திரமான இதழ்களிலொன்றாக வெளிவந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதில் தாமரைச்செல்வி, எஸ்.கே.விக்னேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை, காவலூர் எஸ்.ஜெகநாதன், தாழை செல்வநாயகம், செல்வி பரமா சண்முகம், நீள்கரை நம்பி . இரா ரவி ஆனந்தன், செங்கதிர் என்று பலர் சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். எழுத்தாளர் கதிர்காமநாதன் நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்ற தேவி பரமலிங்கத்தின் சிறுகதை வெளியாகியுள்ளது. மேலும் அக்காலகட்டத்தில் ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் பற்றிய மாதாந்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

சோலைக்கிளி, செ.குணரத்தினம், வேலணையூர் சு. கருணாநிதி, வடகோவை வரதராஜன், அன்புநெஞ்சன், கமலினி முத்துலிங்கம், கருணையோகன், வ.ஐ.ச.ஜெயபாலன், அ.கெளரிதாசன், தமிழ்ப்பிரியன், கவிஞர் நீலாவணன், மணிமணாளன் (கண மகேஸ்வரன்), சம்மாந்துறை ஈழக்குயில் இத்ரீஸ், கங்காதரன், ஶ்ரீ தேவிப்பிரியா , சியாமளா, நல்லை அமிழ்தன், நற்பிட்டிமுனை பளீல், ஈழத்து மகேஸ்வரி, பரிபூரணன் என்று பலர் கவிதைகள் எழுதியுள்ளார்கள். கவிஞர் நீலாவணனின் ‘வட மீன்’ குறுங்காவியம் பிரசுரமாகியுள்ளது.

சாருமதி, கோகிலா மகேந்திரன், வடகோவை வரதராஜன், வேலணையூர் சு.கருணாநிதி, நற்பிட்டிமுனை பளீல், வள்ளிநாயகி ராமலிங்கம் (குறமகள்), ஞானரதன் என்று பலரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

ச.முருகானந்தனின் ‘நியாயமான போராட்டங்கள்’ என்றொரு குறுநாவல் தொடராக வெளிவந்துள்ளது. ரவிப்பிரியாவின் ‘சின்னச் சின்ன மேகம்’ குறுநாவலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எஸ்பொ, டானியல் ஆகியோருடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்து எழுத்துக்கலைஞர்கள் பலரை அறிமுகப்படுத்தும் தொடரொன்று வெளியாகியுள்ளது.

இவ்விதம் காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ள ‘தாரகை’ சஞ்சிகை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று என்று நிச்சயமாகக் கூறலாம். அந்த வகையில் எழுத்தாளர் கண மகேஸ்வரனின் இலக்கியப்பங்களிப்பு முக்கியமானது.

கண மகேஸ்வரன் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு பின்வருமாறு கூறுகின்றது: “கண. மகேஸ்வரன் ஈழத்துப் புதின எழுத்தாளர். இவர் 1970களில் இருந்து எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் போன்ற துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சொந்தப் பெயரிலும், வீகேயெம், மணிமணாளன் போன்ற புனை பெயர்களிலும் எழுதி வருகிறார். கண. மகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அரச எழுது வினைஞர் சேவையில் பணிபுரிந்த இவர் தற்போது சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, ஈழநாதம், மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், உதயன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. முன்னர் வெளிவந்த “தாரகை’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் சிரித்திரன் சஞ்சிகையிலும் பணிபுரிந்தார். “எல்லை வேம்பு’ என்ற பெயரில் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. “

யாரிடமாவது இவரது புகைப்படமிருந்தால் பகிர்ந்துகொள்ளவும். இவரது படைப்புகள் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்தவர்கள் அவற்றைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளலாம்.

‘தாரகை’ சஞ்சிகைப்பிரதிகளை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88


முகநூல் எதிர்வினைகள் சில:

1. Paiwa Asa –  கண.மகேஸ்வரன் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டார். மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ‘தொண்டன்’ சஞ்சிகையில் எழுதிவருகிறார் தற்போது.

2.  Giritharan  –  ‘தொண்டன்’ சஞ்சிகையை ‘நூலகம்’ தளத்தில் பார்த்தேன். கிறிஸ்தவ மதச் சஞ்சிகை. அதில் குறுங்கதைகள் தொடராக எழுதிவரும் வீகேயெம் கண மகேஸ்வரேன் என்று கருதுகின்றேன். ஏனெனில் வீகேயெம் அவரது புனைபெயர்களிலொன்று என்று அவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது.

3. Vadakovay Varatha Rajan தாரகையில் நான் எழுதியதை மறந்து விட்டேன் நீங்கள் ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் .நன்றி கிரி . 1983ம் ஆண்டு மட்டகளப்பில் நடந்த இலக்கிய கூடடம் ஒன்றிற்கு சென்று இவர் வீட்டில் தங்கி உள்ளேன் . மிக அன்பான மனிதர் பின்பு தொடர்புகள் விட்டுப்போயின . Mullai Amuthan அவரைப்பற்றி அறிவார்


எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது!

எழுத்தாளர் தேவகாந்தனுடன் ஒரு மாலைப்பொழுது!நேற்று மாலை (16.09.2018) நண்பர் எழுத்தாளர் தேவகாந்தனுடன் சிறிது நேரம் அவர் வீட்டுக்கருகிலுள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையொன்றில் அளவளாவும் சந்தர்ப்பம் வாய்த்தது. மாநகரின் பரபரப்பு வாழ்வினுள் அவ்வப்போது ஏற்படும் இவ்வகையான சந்திப்புகள் முக்கியமானவை. பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. அவற்றில் இரு விடயங்களைப்பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது: ஏன் நீங்கள் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை (எழுத்தில் , வாசிப்பில் ஏற்பட்ட அனுபவங்கள் போன்ற ) எழுதக் கூடாது. இதற்கு அவர் அவ்விதம் பதிவு செய்வதில் தனக்கு ஆர்வமில்லை என்றார். மேலும் அவ்வகையான வாழ்க்கை அனுபவங்களெல்லாம் தனது புனைவுகளிலும் உள்ளடங்கியிருக்கும்தானே என்றும் குறிப்பிட்டார். என்னைப்பொறுத்தவரையில் எழுத்தாளர்களின் சுயசரிதைகளை , வாழ்க்கை அனுபவங்களை விரும்பி வாசிப்பவன். எழுத்தாளர்களின் அவ்விதமான அனுபவப்பதிவுகள், சுயசரிதைகள் கூட வெறும் ஆவணங்கள் மட்டுமல்ல. அவையும் இலக்கியத்தரம் மிக்க இலக்கியப்படைப்புகளே. தேவகாந்தன் நவீனத்தமிழ்  இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். அவரது எழுத்துலக அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே அவரது புனைவுகளைப்போல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக நிச்சயம் விளங்கும். எனவே இவ்விடயத்தில் அவர் தன் கருத்தை மீள் பரிசீலனை செய்தால் தமிழுக்கு நல்லதோர் இலக்கியத்தரம் மிக்க அபுனைவு கிடைக்குமென்பதென் எண்ணம்.

இன்னுமொரு விடயம் பற்றியும் உரையாடல் தொட்டுச் சென்றது. அது இலங்கையில் இதுவரையில் வெளியான தமிழ் நாவல்கள் பற்றியது. ‘நூல்களாக வெளியான நாவல்களை மட்டுமல்லாது, இதுவரையில் இலங்கையில் வெளியான தமிழ்ச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியான தொடர் நாவல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டும்’ என்று நான் கூறியதற்கு அவர் ‘இதனை யாழ் பல்கலைக்கழகம் முன்னெடுக்க வேண்டும். இதற்காகவே திட்டமொன்றினை உருவாக்கி அங்கு ஆய்வுப்பணிகள் செய்ய வேண்டும்’ என்றார். தேவகாந்தன் கூறுவதிலும் நியாயமுள்ளது. நூல்களாக வெளியான படைப்புகளை மட்டும் ஆய்வு இலகுவாக இருக்கும் என்பதற்காக ஆய்வு மாணவர்கள் கவனத்தில் கொள்ளக்கூடாது. தமிழ்ப்பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். தமிழ் நாவல்களைபப்ற்றி ஆய்வுகள் செய்பவர்கள் அவற்றின் பட்டியலைத் தம் ஆய்வுகளில் உள்ளடக்க வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல முறையான ஆய்வுகள் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படும். இது போன்ற விடயங்களைச் செய்வதற்குரிய அமைப்புகள் தமிழ்ப்பகுதிகளில் அமைந்துள்ள  யாழ்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களே. அவர்கள் இவ்விடயத்தில் கவனமெடுப்பார்களென்று நம்புவோம்.

அண்மையில் ‘நூலகம்’ தளத்திலுள்ள ஈழகேசரி, தாரகை , விவேகி போன்ற பழைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் சிலவற்றை மேய்ந்தபோது அவற்றில் பல தொடர் நாவல்கள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது. இது போல் வீரகேசரி, தினகரன் , ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் தொடர்களாக வெளியான தமிழ் நாவல்கள் அனைத்தைப்பற்றிய விபரங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.  இதற்கு இப்பத்திரிகை ஸ்தாபனங்களும் தம்மால் இயன்ற வரையில் உதவிட வேண்டும்.


முகநூல் எதிர்வினைகள் சில:

Mullai Amuthan –  இடையில் நின்றுபோன சிற்றிதழ்களிலும் சில நாவல்கள் வந்து இதழ் நின்றுபோக அதும் வரமுடியாமல் போயிருக்கும். ஈழமணி, சுதந்திரன், மித்திரன் (நல்ல நாவல்களும் அங்கு வந்தன), மாணிக்கம், கலாவல்லி, சிரித்திரன், சுடர் போன்ற பல..இன்று தொடர்பிலுள்ள எழுத்தாளர்களுக்கும் சொல்லிப்பார்த்தேன். வசதி வாய்ப்பிருக்கும் போது தேடி எடுத்து நூலாக்குங்கள் என்று..யாராவது செய்ய முற்பட்டாலும் முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். நந்தினிசேவியரின் ‘மேகங்கள்’ நாவல் இன்னும் நூலுருப்பெறவேயில்லை.ஈழநாடு பரிசு கொடுத்தது எனினும் அவர்களே வெளியிட்டிருக்கலாம். அருள்சுப்பிரமணியம் அவர்களின் ‘சூரசம்காரம்’ தொடர் நூலாகவரவில்லை. இலங்கையில் ஜோதி எனும் பத்திரிகையில் தொடர்கதைகள் வந்தன.இன்னும் நூலாக வெளிவராமல் கையெழுத்துப்பிரதிகளாகவும் வைத்திருந்து அவர்களுடன் அவைகள் அழிந்தும் இருக்கவாய்ப்புண்டு. பல்கலைக்கழகங்களுக்கப்பால் தனிநபர்களும் முயலலாம். சட்டப்பிரச்சினை எதுவுமில்லயெனில் பலர் வெளியிடமுன்வருவார்கள். முயன்றுபார்ப்போம். பதிவிற்கு நன்றி.

Giritharan Navaratnam – அவை நூல்களாக வெளிவருவது அவசியம். அதற்கு முன்னர் அவை பற்றிய பூரணமான ஆய்வு அவசியம். வெளிவந்த , நின்று போன அனைத்துத் தொடர் நாவல்கள் பற்றிய விபரங்களும் அவசியம். உங்களது பயனுள்ள கருத்துக்கு நன்றி முல்லைஅமுதன்

Iravi Arunasalam ‘தொடர் நாவல்கள்’ என்ற சொற்தொடர் சரியா என்பதனைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

Giritharan Navaratnam ஏன் அது தவறு என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? அதன் பின் என் கருத்தைக் கூறுவேன். ஒரு கேள்வி: :தொடர் கதைகள் சொற்பதம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

Iravi Arunasalam நான் புரிந்ததனைக் கூறுகின்றேன், ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு நாவல் வந்தால்தான் அதனைத் ‘தொடர் நாவல்’ எனக் கூறமுடியும். ‘ஒரு நாவல் தொடராக வந்தது’ என்பதே சரியான பதப்பிரயோகம். என் கருத்து இதுதான். நாவல் என்றும் அதனைக் கூற முடியாது. ‘தொடர்கதை’ என்பதில் சிறிது பொருத்தப்பாடு இருப்பதாகக் கருதுகிறேன். நான் பொதுவாக ‘நாவல்’ஐப் பொதுப்படுத்தி(தமிழ்ப்படுத்தி?) ‘நெடுங்கதை’ என்று கூறுவதுண்டு. ஆனால் சென்றவாரம் தம்பி குணாகவியழகனுடன் பேசியபோது அதன் பொருத்தமின்மையையும் போதாமையையும் குறிப்பிட்டான். நான் இப்போது என்னுள் தடுமாறுகிறேன். பேரா.சிவத்தம்பி, தொடர்கதைகளை ஒருபோதும் நாவல் என ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொன்றும் தனித்தனி இலக்கிய வடிவம் என்றே சொல்கிறார். சிலசமயங்களில் ‘தொடர்கதை’யை இலக்கியம் என்றே அவர் ஏற்றுக் கொள்வதில்லை. யாரும் மேலும் விளக்கமளித்தால், நன்றி!

Vadakovay Varatha Rajan  குழப்பமான , சிந்திக்கவேண்டிய சொல் பதங்கள்

Giritharan Navaratnam //Iravi Arunasalam நான் புரிந்ததனைக் கூறுகின்றேன், ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு நாவல் வந்தால்தான் அதனைத் ‘தொடர் நாவல்’ எனக் கூறமுடியும். ‘ஒரு நாவல் தொடராக வந்தது’ என்பதே சரியான பதப்பிரயோகம். என் கருத்து இதுதான். நாவல் என்றும் அதனைக் கூற முடியாது.//

பத்திரிகை , சஞ்சிகைகளில் வாராவாரம் அல்லது மாதாமாதம் தொடர்ந்து (தொடர்ந்த, தொடர்கின்ற & தொடரும் – வினைச்சொல்) வெளிவந்த நாவல்கள், அத்தியாய முடிவில் ‘தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டு வெளியான நாவல்கள் இவை. நாவலானது பகுதி பகுதிகளாக அல்லது தொடர்களாக (பெயர்ச்சொல்), அத்தியாயங்களாக வெளியிடப்படலாம். உதாரணத்துக்கு நூலாக வெளிவந்த நாவலொன்று அத்தியாயம் அத்தியாயமாக மீள்பிரசுரமாகும்போது அது தொடர்நாவலாகின்றது. தொடர்நாவல் என்பது என்னைப்பொறுத்தவரையில் சரியே. மேலும் இலக்கணத்தவறான சொற்பதங்கள் பல நீண்ட கால வழக்கிலுள்ளதால் இலக்கணத்துள் உள்வாங்கப்பட்டுள்ளன. இப்பதம் அவ்விதம் தவறாக இருந்தாலும் , வழக்கிலுள்ளதால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவ்விதம் இலக்கணத்தவறான சொற்பதமல்ல தொடர்நாவல் என்னும் சொற்பதம் என்பது என் புரிதல். //பேரா.சிவத்தம்பி, தொடர்கதைகளை ஒருபோதும் நாவல் என ஏற்றுக்கொள்வதில்லை. // அது அவரின் தனிப்பட்ட கருத்து. அது முடிந்த முடிபான கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடானதல்ல. உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் தஸ்தயேவ்ஸ்கியின் ‘க்ரமசாவ் சகோதரர்கள்’ ‘ரஷியன் மெசஞ்ச’ரில் தொடராக வெளிவந்த நாவலே…. சாள்ஸ் டிக்கன்ஸின் நாவல்கள், தி.ஜானகிராமனின் நாவல்கள், ஜெயகாந்தனின் சிறந்த நாவல்கள் .. இவைபோல் பல தொடர்களாக வெளிவந்தவையே. தொடராக வெளிவந்த நாவல்களில் பல சிறந்த நாவல்களுள்ளன. நூலாக வெளியான நாவல்களில் பல தரமற்றவையும் உள்ளன.

Vadakovay Varatha Rajan நல்லதோர் திட்டம் கிரி

கணன் சுவாமி என்னை பொறுத்தவரை வாழ்வனுபவம் தான் புனைவின் அடித்தளம் காணல் கேட்டல் உணரல் மூலம் கதையெழுதி புனைவு என பெயரிடலில் என்ன எஞ்சும்? For me life ignites the brain to write

 

ngiri2704@rogers.com