மீள்பிரசுரம்: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘அசடன்’

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன. நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல்  ஒதுங்கியேவாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது.

பொதுவாக பிரசித்திபெற்ற பல நாவல்கள் பெண்களின் அகவுலகை, உளவியலை மிக நுட்பமாகச் சித்தரிப்பவை.  உதாரணமாக மேடம் பவாரி. ஜேன் ஐயர். வுதரிங் ஹைட்ஸ். எம்மா. அன்னாகரீனனா போன்றவற்றைக் குறிப்பிடலாம், ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி ஆண்களின் அகபுறநெருக்கடியை அதிகம் முன்வைக்கிறார், அதிலும் வாழ்வில் தோற்றுப்போய். தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஆண்களின் மனதை நெருங்கி எழுதுவதே அவரது முதல்விருப்பம். அதைத் தான் அவரது புனைவெழுத்து முழுவதிலும் காணமுடிகிறது, வீழ்ச்சியுற்ற ஆண்களுக்குத் தூய வெளிச்சம் போல மீட்சி தருபவர்கள் பெண்கள் என்கிறார்  தஸ்தாயெஸ்வ்கி அதற்காக பெண்களை உலகைக் காக்க வந்த உன்னத தேவதைகள் போல அவர் சித்தரிப்பதில்லை. தனது நெருக்கடிகளுக்கு உள்ளும் மற்றவர் துயரை தனதாக்கி கொள்கிறார்கள் என்றே அவர்களை அடையாளம் காட்டுகிறார், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலில் வரும் பெண்கள் அதிகம் சிரிப்பதில்லை, துயரத்தின் நிழல்களாகவே உலவுகிறார்கள். ஆனாலும் அவர்கள் உறுதியான மனதும். தீராத அன்பும் கொண்டிருக்கிறார்கள். தன்னை வதைப்பவர்களைக்கூட  அவர்கள் நேசிக்க தயங்குவதேயில்லை, அப்பாவோடு மகள்களுக்குள் உள்ள உறவு பற்றி தஸ்தாயெவ்ஸ்கி எப்போதுமே எழுதுகிறார். அது வெறுப்பும் அன்பும் கலந்தே எழுதப்படுகிறது

தஸ்தாயெவ்ஸ்கியின் தாயான மரியாவின் சாயல் அவரது எல்லாப் பெண் கதாபாத்திரங்கள் மீதும் படிந்தேயிருக்கிறது, தஸ்தாயெவ்ஸ்கியிடம் பாலுணர்வு குறித்த தேடுதல் அதிகமிருக்காது, வேசமை குறித்து எழுதும் போதும் அவர் ஆன்ம வீழ்ச்சியின் அடையாளமாகவே அதை எழுதுகிறார். சூழலின் நெருக்கடி பெண்களின் விருப்பத்தைச் சிதறடிக்கிறது, அவர்கள் குடும்பத்தின் வறுமை. அதனால் உருவாகும் புறக்கணிப்பு, அவமானத்தின் பொருட்டு தனது ஆசைகளைக் கைவிடுகிறார்கள். அவர்களுக்குள் தன்னை யாராவது உண்மையாக நேசிக்க மாட்டார்களா என்ற ஏக்கம் மின்மினியின் ஒளி போல மினுங்கி கொண்டிருக்கிறது.

விதியின் பெருங்கரம் இரக்கமின்றி தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை உருட்டி விளையாடுகிறது, அவர்கள் நம்பிக்கை எனும் முறிந்தகழியை ஊன்றி இருண்ட உலகில் முன்னேறிச் செல்கிறார்கள். நரகம் என்பது நாமாக உருவாக்கிக் கொள்வது தான் என்ற உண்மை அவரது நாவல்களில் துல்லியமாக வெளிப்படுகிறது.

மெல்விலின் மோபிடிக் நாவலில் திமிலிங்க வேட்டைக்கு கப்பலில் செல்வார்கள். திமிங்கலம் மனித விருப்பங்களைச் சூறையாடி தனது இயல்பில் கடலில் சென்றபடி இருக்கும், அந்தத் திமிங்கலத்தை ஒத்த மனிதர்களையும் அவர்களிடம் சிக்கி தவிக்கும் கதாபாத்திரங்களையும் உருவாக்கி, ஆசையின் பின்சென்று வீழ்ச்சியுறும் போராட்டத்தையே தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் தொடர்ந்து சித்தரிக்கின்றன.

வீழ்ச்சி தான் தஸ்தாவெஸ்கியின் எல்லா நாவல்களின் மையப்படிமம், எதிர்பாராமையும் குற்றவுணர்ச்சியுமே அவரது முக்கிய கதைநரம்புகள், வாழ்வின் துயரம் மனிதனை எந்த இழிநிலைகளுக்குக் கொண்டு போய்விடும் என்பதையே கதைப் போக்காக கொள்கிறார் நாவல் என்பது ஒரு நீண்ட கதையாடல் என்பதைத் தாண்டி நாவலின் வழியே சமகால சமூகச் சூழல். ஆன்மவிடுதலை. மதத்திற்கும் மனிதனுக்குமான உறவு. கடவுளின் இருப்பு. அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்வு என்று நிறைய வாதங்களை முன்வைக்கிறார். ஆகவே இவரது நாவல்கள் தர்க்கங்களும். தத்துவார்த்தப் பின்புலமும் கொண்டவை, வாழ்வனுபவங்களின் வழியே அவை புதிய உண்மைகளை அடையாளம் காட்டுகின்றன.

முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாக உப கதாபாத்திரங்களை உருவாக்குவது தஸ்தாயெவ்ஸ்கியின் தனிச்சிறப்பு, கரமசோவ் சகோதரர்கள் நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இடியட்டிலும் அதைக் காண முடிகிறது, உலகை முழுமையாக நேசிப்பவன் அசடனாகவே கருதப்படுவான் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, தன்னை அறிந்தவன் மற்றவர்களின் பரிகாசத்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கிகாட்டுகிறார், இந்த நாவலில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்களும் முக்கியமானவர்கள் அதிலும் நடாஷ்யா கதாபாத்திரம் பைபிளில் வரும் மரியா மக்தேலனாவை நினைவுபடுத்துவது போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த நாவலை தஸ்தாயெவ்ஸ்கி மூன்று ஆண்டுகாலம் ஒரு இதழில் தொடர்கதையாக எழுதியிருக்கிறார்

 இடியட் நாவல் நான்கு பகுதிகளாக உள்ளது, இந்நாவலை பிரெஞ்சு எழுத்தாளர் மார்ச்ல் புருஸீன் Remembrance Of Things Past உடன் ஒப்பிடலாம், இரண்டும் எழுத்தாளரின் சொந்த வாழ்வும் புனைவும் இணைந்து உருவான நாவல்கள், இடியட் நாவலின் நாயகன் மிஷ்கின் இயேசுவின் மாற்றுஉருவம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறான், ஆனால் இவன் ஒரு தோற்றுப்போன கிறிஸ்து, உலகின் மீதான அன்பையும் மனித உறவுகளின் நெருக்கடிகளையும் இந்நாவலெங்கும் தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பாக விவரிக்கிறார் மிஷ்கின் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல் போலவே காட்சிதருகிறான், நான்கு ஆண்டுகாலம் சுவிட்சர்லாந்தின் சானிடோரியத்தில் தங்கி வலிப்பு நோயிற்கு சிகிட்சை எடுத்து கொண்டு பீட்டர்ஸ்பெர்க் திரும்புகிறான் மிஷ்கின், அவன் அதிகம் படித்தவனில்லை, உடல் வலிமையற்ற ஒரு நோயாளி. ஆனால் அவன் மனதில் நேசமும் அன்பும் நிரம்பியிருக்கிறது, அவனது ஒரே உறவினரான ஜெனரலைச் சந்திப்பதே அவனது நோக்கம், அதற்காகவே பீட்டர்ஸ்பெர்க்  வருகிறான் அவருக்கு மூன்று மகளிருக்கிறார்கள் அதில் ஒருத்தி அழகி. இவர்களுடன் தங்கி நட்பு கொள்ளத் துவங்குகிறான்

மிஷ்கினுக்கு எதிர்நிலை அவன் ரயிலில் சந்திக்கும் ரோகோஜீன், அவன் தீமையின் உருவம் போலவே அடையாளப்படுத்தப்படுகிறான், ஆனால் அவனோடும் மிஷ்கின் நட்பாகவே இருக்கிறான், அவனுக்காக கண்ணீர் விடுகிறான். மிஷ்கின் சந்திக்கும் மனிதர்களும் அவர்களோடு உள்ள நட்பும் என உபகதைகளோடு நாவல் நீள்கிறது,

தஸ்தாயெவ்ஸ்கி தான் மரணதண்டனைக்காக காத்திருந்த நிமிசத்தை இந்த நாவலில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார், சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிசத்தை எப்படித் துளித்துளியாக பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இலக்கியத்தின் மிக உயர்ந்த பதிவு

அதுபோலவே கில்லடின் எனப்படும் தலைவெட்டப்படும் தண்டனையின் குரூரம் பற்றி மிஷ்கின் வேதனைப்படுகிறான், torture is better  than instantaneous death because one still has hope if tortured  என்பதே அவனது எண்ணம் சிறையில் சிலந்தியோடு பேசும் ஒரு குற்றவாளி ஒரு இடத்தில் அறிமுகப்படுத்தபடுகிறான், தனிமை எவ்வளவு பெரிய தண்டனை என்பதை அது சுட்டிக்காட்டுகிறது

மிஷ்கினுக்காக நடைபெறும் விருந்தில் அவன் பணியாளரைப் போல நடந்து கொள்கிறான், தன்னை நேசிக்கும் பெண்ணிற்காக அவமானங்களை எதிர்கொள்வதில் தவறில்லை என்று ஒரு இடத்தில் சொல்கிறான். வலிப்பு நோய் அவனை வாட்டுகிறது, அது துயருற்ற அவனது ஆன்மாவின் குறியீடு போலவே இருக்கிறது

அபத்தமான சூழலும், போலித்தனமும் பகட்டும். பொய்மையும் வணிக தந்திரங்களும் நிரம்பிய ருஷ்ய மேல்தட்டு வர்க்க சமூகத்தின் மீது வைக்கப்பட்ட கறாரான விமர்சனமாக இந்த நாவலைக் குறிப்பிடலாம்.  ஏன் இடியட் என்ற தலைப்பு இந்த நாவலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற வாதபிரதிவாதங்கள் இன்றும் இருக்கின்றன, அப்பாவி என்பதே சரியான சொல் என்று ஒரு தரப்பு இன்றும் வாதிடுகிறது, ஆனால் வெளியில் பார்க்க முட்டாள்தனமாக தோன்றும் ஒருவன் உள்மனதில் தெய்வாம்சம் கொண்டிருக்கிறான் என்பதே இந்த தலைப்பின் அர்த்தம் என்று இன்னொரு தரப்பு வாதிடுகிறது இந்த நாவல் எழுதியதைப் பற்றிய தஸ்தாயெவ்ஸ்கியின் குறிப்பு இப்படிதானிருக்கிறது

 My primary hero [Prince Myshkin]—is extraordinarily weak. Perhaps he does not sit weakly in my heart, but he is terribly difficult.’ And in the same letter he complains that sanctity is not a natural literary theme. ‘In order to create the image of a saint, one has to be a saint oneself. Sanctity is a miracle; the writer cannot be a miracle-worker.’

 நாவலின் பெரிய பலம் உரையாடல்கள். கவித்துவமான. ஆழ்ந்த உண்மைகளை எளிமையாக வெளிப்படுத்தும் உரையாடல்கள் அவை, தனது எண்ணங்கள். கடந்த கால வாழ்வு என அத்தனையும் உரையாடல் வழியாகவே மிஷ்கின் வெளிப்படுத்துகிறான், ஜெனரலின் மகள்களோடு மிஷ்கின் உரையாடும் பகுதி அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, அது தான் நாவலின் மையப்புள்ளி.

 நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது, ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார் .

 ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன, அதில் சமீபத்தில் வெளியான David McDuff பின் மொழிபெயர்ப்பு மிகச்சிறந்த ஒன்று  இந்த நாவலைப்பற்றி ஹெர்மன் ஹெஸ்ஸேயின் கட்டுரை முக்கியமான ஒன்று, அதில் அவர் மிஷ்கினை பற்றி  சரியாகக் குறிப்பிடுகிறார்

 Why does no one understand myshkin, even though almost all love him in some fashion, almost everyone finds his gentleness sympathetic, indeed often exemplary? What distinguishes him, the man of magic, from the others, the ordinary people? It is because the “idiot’s” way of thinking is different from that of the others. Not that he thinks less logically or in a more childlike and associative way than they – that is not it. His way of thought is what I call “magical.” This gentle “idiot”  completely denies the life, the way of thought and feeling, the world and the reality of other people. His reality is something quite different from  theirs. Their reality in his eyes is no more than a shadow, and it is by seeing and demanding a completely new reality that he becomes their enemy.

For Myshkin the highest reality, however, is the magical experience of the reversibility of all fixed rules, of the equal justification for the existence  of both poles.   (  Hermann Hesse – Thoughts on The Idiot )

தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது, கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது, இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்

தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு

நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்

••

தமிழில் 800 பக்க அளவு வெளிவரவிருக்கும் இந்நாவலின் விலை 500 ரூபாய்;

பிப்.15 தேதிக்குள் முன்பதிவு செய்வோர்க்கு 350 ரூபாய். கூரியரில்பெற.. 75 ரூபாய் கூடுதல் ’பாரதி புக் ஹவுஸ்’என்ற

பெயரில்மதுரையில் மாற்றும் வகையில் வரைவோலையாகவோ- மணிஆர்டராகவோ கூட அனுப்பலாம்

மேலும் தொடர்புக்கு;
Bharathi Book House,D-28, Corporation Shopping Complex,Periyar Bus Stand, Madurai 1
பதிப்பாளர்- துரைப்பாண்டி- செல்போன் 97893 36277