வாசிப்பும், யோசிப்பும் 302 : கவிஞர் அனாரின் கவிதை பற்றிய முகநூற் பதிவு பற்றி; முல்லை அமுதனின் காற்றுவெளி!

பாரதியார்இளங்கோவடிகள்கவிஞர் அனார்  தனது முகநூற் பதிவொன்றில் கவிதையைப்பற்றி இவ்விதம் குறிப்பிட்டிருந்தார்:

“யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ? இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இரண்டுபட்ட மனதை கொண்டுசென்று சொற்களாலான கூட்டை இளைத்து நிரந்தரமின்மையான அனைத்திலும் இருந்து விடுதலையடைய முயலும் தொடர்ச்சியான செயற்பாடுதான் கவிதை. கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன். அந்த உணர்ச்சிக்கு ஆண்பால், பெண்பால், அரசியல், தத்துவம், கோட்பாடு, கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும்…..”

இக்கூற்றின் ஆரம்பத்தில் “யாருக்காக நாம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்? நமக்காகத்தான் எழுதுகிறோம் என்றால், நமக்கே அதனை ஏன் திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லவேண்டி இருக்கின்றது ?” என்று கேள்வியைக் கேட்டு, அதற்கான பதிலையும் கேள்வியிலேயே முடித்திருக்கின்றார். இதன்படி நமக்காகக் கவிதைகள் எழுதவில்லை என்னும் தொனியும் பிரதிபலிக்கின்றது. அடுத்து வரும் வரிகளில் “இன்னொருவருக்காக யாரும் கவிதைகள் எழுதுவதில்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ” என்றும் அவர் கூறுகின்றார்.

இக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கவிதை என்பது பல்வேறு காரணங்களுக்காக எழுதப்படலாம். கவிஞர் தன் உணர்வுகளின் வடிகாலாகத்தனக்காக எழுதலாம். அவர் தனக்காக எழுதியபோதும் அக்கவிதையின் சிறப்பினால் பலருக்கும் அது பிடித்துப்போகலாம். உதாரணமாகப் பட்டினத்தார் தன் தாயின் இறுதிச்சடங்குகளின் போது பாடிய கவிதைகளைக் குறிப்பிடலாம். அதிலவர் அக்கணத்தில் தன் தாயின் பிரிவு ஏற்படுத்திய உணர்வுகளை வடித்திருப்பார். அச்சமயம் அவர் பாடியவைகளில் ஒன்றான பின்வரும் பாடல் அனைவரும் அறிந்த பாடல்களிலொன்று: “முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே”

பட்டினத்தார் அச்சமயம் பாடிய பாடல்கள் அனைத்தும் தாயின் பிரிவு அவர்மேல் எற்பட்ட பாதிப்பை வெளிப்படுத்துவன்.

இதுபோல் பாரதியார் பாடிய தேசிய விடுதலைக்கான பாடல்களில் பல அவருக்காக எழுதப்பட்டவையல்ல. அவை ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்கு தேசிய விடுதலையின் அவசியத்தை எடுத்துரைப்பன. அவை பாரதியாரால் அவருக்காக எழுதப்பட்டவையல்ல. அவை பாரதியாரால் அடிமையிருளில் மூழ்கிக்கிடந்த மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சிட எழுதப்பட்ட கவிதைகள்.
சமணத்துறவியான இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தை ஆக்கியது தனக்காக மட்டுமல்ல. ஏனைய மக்களுக்காகவும்தாம்.

‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்’ என்னும் சிலப்பதிகாரத்திலுள்ள ‘பதிக’ வரிகளும் அதனையே எமக்கும் எடுத்துரைத்து நிற்கின்றன.

மேலும் அனார் ‘கவிதை இன்னொரு உணர்ச்சியென நான் நினைக்கிறேன் ‘ என்று கூறுகின்றார். அத்துடன் ‘அந்த உணர்ச்சிக்கு ஆண்பால், பெண்பால், அரசியல், தத்துவம், கோட்பாடு, கலைத்தாகம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகும்’ என்றும் கூறுகின்றார். உண்மையில் கவிதையை உணர்ச்சி என்பதற்குப் பதில் உணர்ச்சியின் வெளிப்பாடு எனலாம். காதல், வீரம், தேச விடுதலை, துன்பம், இன்பம் .. இவ்விதம் மானுடரின் பல்வகைப்பட்ட உணர்வுகளையும் வெளிப்படுத்துவதே கவிதை.

கவிதையானது பல்வேறு காரணங்களுக்காக எழுதப்படலாம். தனக்காக அல்லது பிறருக்காக என்று எழுதுவது கூட கவிதைதான்.


முல்லை அமுதனின் ‘காற்றுவெளி’!

முல்லை அமுதனின் காற்றுவெளி!எழுத்தாளர் முல்லை அமுதன் ‘காற்றுவெளி’ என்னும் சஞ்சிகையொன்றினைச் சிறப்பாக நடத்தி வருகின்றார். ஆரம்பத்தில் அச்சிலும் வெளியான இச்சஞ்சிகை தற்போது இணையத்தில் மட்டுமே வெளியாகின்றது. அழகான வடிவமைப்புடன் வெளியாகியுள்ள அக்டோபர் 2018ற்கான ‘காற்றுவெளி’ இதழினையே இங்கு காண்கின்றீர்கள்.

இது பற்றிய மின்னஞ்சலில் முல்லை அமுதன் அவர்கள் பின்வருமாறு தன் எண்ணங்களைப்பகிர்ந்துகொள்கின்றார்:

“காற்றுவெளி ஐப்பசி(2018) இதழ் தங்கள் பார்வைக்கு.. தொடர்ந்து படைப்புக்களைத் தந்துதவும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும் நன்றிகளைத் தவிர வேறென்ன தந்துவிடமுடியும்.காற்றுவெளி (நினைத்தபோது வரும் இதழாக) அச்சாக வந்த போதும்(அமரர்.வெ.நாராயணன் (காஞ்சி இலக்கியவட்டம்,குடந்தை கீதப்பிரியன்,காகிதம் பதிப்பகம் ஊடாக அச்சில் வெளிவந்தது) இணையவெளியில் இப்போது வருவது வரையும் பலரிடம் கொண்டு போய்ச் சேர்த்ததில் வாசகருக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.இன்னும் பலரிடம் போய்ச் சேரவேண்டும் என்கிற ஆவலில் அவ்வப்போது அச்சிலும் கொண்டுவரும் முயற்சியும் நடைபெற்றுவருகிறது.எனினும் சந்தா, அன்பளிப்பு,விளம்பரம் எதுவுமின்றி தனிநபர் உழைப்பையே நம்பி தொடர்ந்து நடத்தமுடியுமா என்பதும் அவ்வப்போதான கேள்வியே.புதிய வடிவில் வரவேண்டும் என்பதற்காக அவ்வப்போது வடிவமைப்பிலும் கவனம் செலுத்தும் வடிவமைப்பாளர்களையும் நாடிவருவதும் ஒவ்வொரு காற்றுவெளியையும் பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும் என்பது நம்பிக்கை.இன்னும் பலரின் இணைப்பின் மூலம் சாதிக்கலாம் என்றே நினைக்கத்தோன்றுகிறது. எழுதுங்கள். நண்பர்களை அறிமுகம் செய்துவையுங்கள். உலகின் பலபாகங்களிலும் வரும் சஞ்சிகைகளை,நூல்களை,மொழிபெயர்ப்புக்களை காற்றுவெளிக்கும் அறிமுகம் செய்துவையுங்கள். தொடர்வோம்.”

முல்லை அமுதனின் மின்னஞ்சல் முகவரி: mullaiamuthan16@gmail.com.
காற்றுவெளி: http://kaatruveli-ithazh.blogspot.com/

வாழ்த்துகள் முல்லை அமுதன்!

ngiri2704@rogers.com