– வித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் 05.11.18. அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. வித்துவான் வேந்தனாரை அறிஞர்கள் பலர், பல்வேறு இடங்களில் பல்வேறு கோணங்களில், விதந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர். தலைசிறந்த உரையாசிரியர், நனி சிறந்த கட்டுரையாளர், மிகச் சிறந்த குழந்தைப் பாடலாசிரியர், ஆற்றல் மிகுந்த கவிஞர், பேராண்மைமிக்க சொற்பொழிவாளர், தனித்தமிழ்ப் பற்றுமிக்க தமிழ்ப் பேரன்பர், சைவ சித்தாந்த தத்துவங்களை நன்கறிந்த சித்தாந்த சிரோமணி என பல துறைகளில் சிறப்புற்றிருந்த வேந்தனார் அவர்கள், மாணவர் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட பெரும் தமிழாசானுமாவார். வேந்தனாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, வேந்தனாரின் உரையாசிரியத் தன்மையின் சிறப்பினை விதந்து போற்றி, அவரின் மாணவரும், நீண்டகாலம் வேந்தனாரை அறிந்தவருமான இளவாலை புலவர் அமுது அவர்கள், 2006 ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்’ நூலில் எழுதிய கட்டுரையிது –
ஈழநாட்டின் இணையற்ற உரையாசிரியர் ஒருவர், எங்கள் காலத்தில் இருந்தார் என்றால், அவர் வித்துவான் வேந்தனார் தான். வேந்தனார் ஒரு பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்றாலும் அவரை உரையாசிரியர் என்பதே முற்றும் பொருந்தும். பொதுத் தராதரப் பரீட்சைக்கு எனக் குறிப்பிட்டிருந்த இலக்கியப் பகுதிக்குப் பல ஆண்டுகளாக உரை எழுதி வந்தவர் வித்துவான் வேந்தனார்! வேறு சிலரும் இந்தத் துறையில் முயன்றனராயினும், வேந்தனாரின் உரை ஆற்றலுக்கு ஈடுகொடுக்க இயலாமற் போய்விட்டனர். பல்லாயிரம் தமிழ் மாணவர் வேந்தனாரின் உரைச்சிறப்பை அறிந்து தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் உயர்ச்சியும் பெற அவர் வழிவகுத்தார் எனலாம். அரும்பத உரை, பொழிப்புரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு, எடுத்துக் காட்டு, வரலாறு, நயம் உரைத்தல் என்பனவாக அவர் குறிப்பிட்டு எழுதிய திரவியங்கள் தேடக் கிடைக்காதவை.
இலக்கியம் என்பது ஒரு பசு மாடு. அதிலே பழக்கமில்லாதவர்கள் பால் கறக்கமுடியாது! கண்டவர்களும் மடியில் கைவைத்தால் அது காலால் அடிக்கும், கொம்பால் குதறும் என்று அஞ்சினார்கள் சிலர். இலக்கியம் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்களுடைய முதுசம் பண்டித பரம்பரையின் சீதனம். அந்தத்துறையை கரையிலே நின்று பார்க்கலாமேயன்றி உள்ளே கால்வைப்பது ஆபத்தானது என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். இலக்கியம் என்பது இலக்கணத்தில் ஊறிக்கிடக்கும் ஊறுகாய். ஆழ்ந்த அறிவும், அனுபவமும், முதிர்ச்சியும் பெற்றவர்களே அதை எடுத்து வாயில் போடலாம் என்று சிந்தித்தவர்களும் இருந்தார்கள். தேள், கொடுக்கான், சிலந்தி விடச் செந்துக்களைப்போல இலக்கியம் பாமரர்களை ஒற்றை விரல் காட்டி அச்சுறுத்தியது. கற்கக் கசடறக் கற்பவை… எனத் தொடங்கவே நாக்குத் தெறிக்கும் குறள் வரிகள், அதில் வரும் இன்னிசை அளபெடை. சொல்லிசை அளபெடை அதற்குப் பரிமேலழகர், “எவன் என்னும் வினாத்தொகை என் என்றாய் ஈண்டு இன்மை குறித்து நின்றது” என்றவாறான உரைகளும் ஊமாண்டி காட்டின. கம்பராமாயணம், திருக்குறள், கந்தப்புராணம் என்ற இலக்கிய நூல்களைப் பிஞ்சு உள்ளங்களில் இனிய ஒட்டு மாங்கனிபோல சுவை தெரிய அறிமுகம் செய்து வைத்தார் வித்துவான் வேந்தனார். அவருடைய உரையை நினைந்து கைதட்டியவர்களின் ஓசை, இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வித்துவான் வேந்தனார், வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேலணை, பிறநாட்டுக் கலாசாரம், பிறமொழிக் கலப்பு, பண்பாடு என்பவற்றால் பழுதடையாத மண். எனவே அவருடைய அத்திவாரம் சிறந்த நாற்றுமேடை எனலாம். வித்துவான் அவர்கள் பரமேஸ்வராக்கல்லூரி இயற்றமிழ் பேராசிரியராக நீண்டகாலம் பணிபுரிந்தவர.; நாவலர் பாடசாலையில் பண்டித வகுப்புகளுக்குப் பாடம் எடுத்தவர். இவனும் அவரிடம் தொல்காப்பியம் பொருளதிகாரம் பாடம் கேட்க வாய்ப்புப் பெற்றவர்களில் ஒருவன்.
ஒருநாள் “ஐயா! நீங்கள் யாரிடத்திலே இலக்கணம் கற்றுக் கொண்டீர்கள்?” என்று கேட்டுவிட்டேன். உடனே அவர் சிரித்தவாறு, “சிவஞான முனிவர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்போரிடத்திலேதான் என்றார.;; நான் திறந்த கண்களையே மூடமறந்து, ஆச்சரியத்தில் மிதந்தேன். ஏனெனில் அவர்கள் எல்லோரும் இலக்கணத்துக்கு உரை எழுதிய பெரியார்களே! வித்துவான் வேந்தனாருடைய ஞாபக சக்தி அபாரமானது. ஒருமுறை வாசித்துவிட்டு அப்பகுதியைப் பாராமல் சொல்லக்கூடிய ஆற்றலைக் கண்ட மாணவர்கள் வியப்புற்றோம்.
ஒருமுறை காவலூர் புளியங்கூடலில் ஒரு அரசியல் கட்சியின் மாபெரும் கூட்டம் நடந்தது. பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடியிருந்தார்கள். அது தமிழ் அரசுக் கட்சியின் தீவுப்பகுதி பாராளுமன்றத் தேர்வுக்காக நின்ற அமரர் வீ. ஏ. கந்தையா அவர்களை ஆதரித்து நடந்த இறுதிக்கூட்டம.; தந்தை செல்வா அவர்களும் அங்கு இருந்தார். மேடையில் எனது அருகில் வித்துவான் வேந்தனார் இருந்தார். தீவுப்பகுதியைச் சேர்ந்தவரும், வணிகத்துறையில் மதிப்பார்ந்தவரும், முன்னாள் தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரும், என் பிரிய நண்பருமான அல்பிரெட் தம்பிஐயா அவர்களை எதிர்த்த கூட்டம் அது. என்னை முதலில் பேசுமாறு அழைத்தார்கள். நான் நகைச்சுவையாகப் பேசினேன். “நானும் என் நண்பன் ஒருவனும் கனகராயன் குளத்தில் எங்களுக்கு இருந்த நெல் வயலைப் பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்றோம். வேலையாள் சுப்பனையும் எங்களோடு கூட்டிக் கொன்டு சென்றோம். பஸ் கனகராயன் குளத்தில் நின்றதும், பழைய கண்டி வீதி அருகே சென்றோம். வீதி ஒரமாகப் பெரிய வாய்க்கால் போகிறது. மழை காலம் ஆகையால் வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. என் நண்பன் வாய்க்காலைப் பார்த்துவிட்டு “அட சுப்பா! அங்கே பார்! வெள்ளத்திலே ஆட்டுக்கிடாய் ஒன்று போகிறது. ஓடிப்போய் கட்டிப்பிடித்து அதைக் கொண்டுவா!” என்றார். சுப்பன் ஒரே பாய்ச்சலில் சென்று கிடாயைக் கட்டிப் பிடித்தான்! மாலை நேரம். பொழுது கருகிவிட்டது. எங்களிடமிருந்த ‘ரோச் லைற்’ வெளிச்சமும் மங்கலாய் இருந்தது. சுப்பன் ஆட்டுக்கிடாயுடன் மல்லுக் கட்ட நேர்ந்தது. ஒருமுறை கிடாய் மேலே வந்தது. அடுத்தகணம் சுப்பன் மேலே வந்தான். கிடாய்க்கும் சுப்பனுக்கும் சீவமரணப் போராட்டம். என் நண்பனுக்கு விடயம் விளங்கிவிட்டது. “அடே! அது கரடியடா! கையை விட்டிட்டு வாடா!” என்று நண்பன் கத்தினான். “தம்பிஐயா அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சி என்ற கரடியைக் கட்டிப் பிடித்தார். இப்போது அது அவரை விடுகுதில்லையே” என்று முடித்தேன். சில நிமிட நேரம் ஒரே கைதட்டு. தந்தை செல்வாவே எழுந்து நின்று சபையை அமைதி பெறச் செய்தார். பேச்சு நிறைவுற்று என் கதிரையில் வந்து அமர்ந்தேன். “சபையை நன்றாகக் கவர்ந்துவிட்டீர்களே! நல்ல பேச்சு” என்று வித்துவான் பாராட்டியதும், என் இருதயத்தின் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிந்தன.
என்னை அடுத்து வித்துவான் வேந்தனார் உரையாற்றினார். புறநானூற்றுப் பாடல் ஒன்றைத் தூக்கி நிறுத்தினார். பெரும் பாணாற்றுப் படையிலும் ஒரு நிகழ்ச்சி வந்து கலந்தது. திருக்குறள் சில தலைகாட்டின. திருமுருகாற்றுப் படையுடன் கம்பராமாயணமும் சுரந்தன. இலக்கியநயம் பொருந்திய அருமையான பேச்சு. “கற்றோர் உச்சியில் வைத்து மெச்சக்கூடிய அருமையான பேச்சு, அருமையான பேச்சு” என அடியேன் என் குருவை ஆராதித்தேன்.
ஒருநாள் பண்டித வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, வித்துவ சிரோமணி சுப்பையாபிள்ளை வந்து குறுக்கிட்டு, சோமசுந்தரப்புலவர் காலமான செய்தியைச் சொன்னார். வித்துவான் வேந்தனார் வகுப்பை நிறுத்தி, “நான் சில பாடல்களை எழுத விரும்புகிறேன். நீங்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட பகுதியை வாசியுங்கள்” என்று கூறிவிட்டு கவிதைகளை எழுத ஆரம்பித்தார.; அடியேனுக்கும் மறைந்த புலவரில் இருந்த பெருமதிப்புக் கிள்ளத் தொடங்கியது. ஒரு சில எண் சீர்விருத்தப் பாடல்களை எழுதினேன். அடுத்த வாரம், ஞாயிறு தினகரன் மலரில் முதலாம் பக்கத்தில் என் கவிதைகள் வெளிவந்தன. வித்துவான் வேந்தனாரின் கவிதைகளும் அழகாக வெளிவந்திருந்தன. எனது கவிதைகளை வாசித்துவிட்டு வித்துவான் வகுப்பிலே என்னைப் பாராட்டியது வசிட்டர் வாயால் பெற்ற வாழ்த்துப்போல என்னை இன்ப வெள்ளத்தில் தோய்த்து எடுத்தது.
கிட்டத்தட்ட ஒருமாத காலத்தில் எனது தாயார் இறைவனடி எய்தினார். எங்கள் கவிதை நெஞ்சின் உறவால் எனது அன்னையின் நினைவு அஞ்சலி நூலுக்குச் சில கவிதைகள் எழுதித் தருமாறு கேட்டேன். பேனை எடுத்தார் கவிதை மடை திறந்தது.
அன்பால் அறிவால் உளம் உருகும் அமுத மொழியால் அனைவரையும்
தன்பால் இழுக்கும் தண்ணளியாள் தாயார் சேதுப் பிள்ளை யெனும்….
என்று சில கவிதை மணிகளை யாத்துக் கையில் தந்தார்.
வித்துவான் வேந்தனாரின் கவிதை ஆற்றலை, சொல் வளத்தை, இலக்கண அமைதியை அன்பின் ஊற்றைக் கண்டு பிரமித்தேன். பேராசிரியர் வித்தியானந்தனின் அஞ்சலிச் செய்தியை அடுத்து, வித்துவான் வேந்தனாரின் இரங்கற் பாக்கள் இடம்பெற்றன. வித்துவான் வேந்தனாரின் புலமைக்குச் சான்றாகப் பல கவிதைகளைக் காணலாம்.
தமிழர் காலம் காலமாக நினைவு கூருமாறு ஒரு பாடலுண்டு. அது அம்மாவைப் பற்றி எழுதப் பெற்றது.
காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா—-
பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து
துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா…
இப்பாடல்களில் தாய்ப் பாசம் பொங்கி நுரை தள்ளுகிறது. இலக்கிய வளத்திலும், இலக்கண அறிவிலும், சமயப் புலமையிலும், கவிதைச் செல்வத்திலும் வித்துவான் வேந்தனார் செழிப்புற்று இருந்தாலும், உரையாசிரியர் என்ற முத்திரையே அவரை உயர்த்திக் காட்டுகிறது.
வேந்தனார் இளஞ்சேய் அவர்களின் பிற்குறிப்பு:- மேற்கண்ட கட்டுரை 2006 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. அமரர் இரசிகமணி கனக. செந்திநாதன் அமரர், வித்துவான் க. சொக்கலிங்கம் மற்றும் பல தமிழ் அறிஞர்களும் குறிப்பிட்டிருந்தபடி வேந்தனார் அவர்களின் குழந்தைப் பாடல்கள் 35 உம் (தற்போது 3 பாடல்கள் புதிதாக பழைய பத்திரிகைகளிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன),அழகான மூவர்ணப் படங்களுடன் அதில் 13 பாடல்கள் இசையமைக்கப் பட்டும், 2010 ஆம் ஆண்டு குழந்தைமொழி என்ற தலைப்பில், வேந்தனாரின் மூத்த மகளார் திருவாட்டி கலையரசி சின்னையா அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நூலினது, அவரின் கவிதை நூலான கவிதைப் பூம்பொழில்(மறுபதிப்பு), கட்டுரை நூலான தன்னேர் இலாத தமிழ், வேந்தனார் இளஞசேய் அவர்களால் தொகுக்கப்பட்ட நூலான வித்துவான் வேந்தனார் ஆகிய நான்கு நூல்களின் வெளியீடும், திருமதி கலையரசி சின்னையா மற்றும் வேந்தனாரின் இளையமகன் வேந்தனார் இளஞ்சேய் ஆகியோரால் இலங்கை உட்பட 8 நாடுகளில் நடத்தப்பட்டது. இன்று வித்துவான் வேந்தனாரின் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ள தருணத்தில் அவரின் இசையமைக்கப் படாதிருந்த மீதியான 25 குழந்தைப் பாடல்களும் இசையமைக்கப்பட்டு மொத்தம் 38 பாடல்களும் பிள்ளைகளின் வயதிற்கேற்ப 3 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு குழந்தைமொழி பாகம் 1, குழந்தைமொழி பாகம் 2, குழந்தைமொழி பாகம் 3, என இறுவெட்டுடன் கூடிய மூன்று நூல்களாகவும், அவரின் பத்திரிகை ஆக்கங்கள் தேடி எடுக்கப்பட்டு வேந்தனார் கட்டுரைகள் பாகம் 1, வேந்தனார் கட்டுரைகள் பாகம் 2 என இரு கட்டுரை நூல்களாகவும், வேந்தனார் இளஞ்சேய் அவர்களால், வேந்தனார் நூற்றாண்டு விழா சித்திரை 2019 இல் லண்டனில் கொண்டாடப்படுகையில் வெளியிடப்படவுள்ளன. வேந்தனாரின் நண்பர்கள்-தமிழ் இலக்கிய அறிஞர்கள்-அவரின் மாணவர்கள் பலர் காலத்திற்குக் காலம் பத்திரிகைகளிலும் நூல்களிலும் குறிப்பிட்டிருந்ததிற்கமைய அவர் இறந்து 52 வருடங்களின் பின்னர், அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது அவரின் 60 – 70 வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை இரு நூல்களாக வெளிக்கொணர முடிந்தமையை எண்ணி மனம் நிறைவடைகின்றேன். வருங்காலத்தில் அவரின் ஏனைய பத்திரிகைக் கட்டுரைகளையும் நூல்வடிவில் கொண்டுவரும் நோக்கத்திலுள்ளேன். நன்றி. – வேந்தனார் இளஞ்சேய் –
கட்டுரையைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியவர் இளஞ்சேய் வேந்தனார் அவர்கள்.
venthanar ilansei – vilansei@hotmail.com