இதுவரை நான்கு முழுநாள் நாவல் கருத்தரங்கினை நடாத்தி முடித்த விம்பம் கலை இலக்கிய திரைப்பட கலாச்சார அமைப்பானது கடந்த சனிக்கிழைமை (03.11.2018) அன்று முழுநாள் சமகால கவிதை அரங்கொன்றினை ஈஸ்ட்ஹாம் Trinity Centre London இல் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இலங்கை,இந்தியா, புகலிட நாடுகள் என்று உலகெங்கும் பரந்து கிடக்கும் சுமார் 20 கவிஞர்களின் படைப்புக்களை ஒரே அரங்கில் அறிமுகப்படுத்தவும், விமர்சனம் செய்யும் முகமாகவும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அருந்ததி ரட்ணராஜ், T.சௌந்தர் ஆகியோரது ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது.
மேற்குறித்த இரு ஓவியர்களினதும் ஓவியங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதமான அரங்க சூழலில் இந்நிகழ்வானது காலை 11 மணியளவில் ஆரம்பமாகியது. மூன்று அமர்வுகளாக நடந்தேறிய இந்நிகழ்வில் இங்கு உரையாற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 நிமிடங்கள் மட்டுமே பேசக் கொடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவது அமர்வினை மீனாள் நித்தியானந்தன் வழிநடத்தினார். முதலாவது உரையினை கவிஞர் சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ கவிதைத்தொகுதி குறித்து தோழர் வேலு அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் உடல் தொடர்பான வலிகளை வதைகளை ஆனந்தத்தை விபரிக்கும் சுகிர்தராணி சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் தனது ஆழ்ந்த கருத்துக்களை வைப்பதாக கூறி அவரது கவிதைகள் மட்டுமல்லாமல் அது வெளிப்படுத்துகின்ற மொத்த சாராம்சத்தினை அவரது கருத்தியல் குறித்தும் பேசினார்.
நெற்கொழுதசனின் ‘வெளிச்சம் என் மரணகாலம்’ தொகுதி குறித்து குல சபாநாதனும் கலா ஸ்ரீரஞ்சனும் உரையாற்றினார்கள். குலசபாநாதன் இவரது கவிதைகள் தவறவிட்ட தருணங்களின் தவிப்புக்கள் என்றும் கலா ஸ்ரீரஞ்சன் துவாரங்கள் வழியாக சீறிப்பாயும் ஒளிக்கீற்றுக்கள் போல இக்கவிதைகள் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் வெவ்வேறு பரிமாணங்களாக பரிணமிக்கும் என்றும் குறிப்பிட்டனர். அனாரின் ‘ஜின்னாவின் இரு தோகை’ நூல் குறித்து உமையாள் பேசினார். பாரதியிலிருந்து இன்று வரையான நவீன கவிதைகளின் போக்குகள் குறித்து பேசிய அவர் அனாரின் கவிதைகளை தான் கவிஞர் பிரமிளின் தொடர்ச்சியாக பார்ப்பதாகவும் பலவேளைகளில் அவரது கவிதைகள் பிரமிளின் கவிதைகள் போன்றே வாசகர்களை பயமுறுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் கவிஞர் சல்மா வேறும் பல பெண் கவிஞர்கள் பாலியல் குறியீட்டு சொற்களை உபயோகித்து மிக இலகுவாக மேலுக்கு வந்துவிட்டனர் என்று குறிப்பிட்டது ஜெயமோகனில் இருந்து அவர் சேமித்த அறிவின் வெளிப்பாடாகவே எனக்குப் பட்டது.
கவிஞர் நரனின் ‘லாகிரி’ குறித்து கஜன் காம்ப்ளர் பேசினார். இவரது கவிதையின் பண்புகளாக இருப்பது தப்பித்தல் மனோபாவம், தத்துவக் குழப்பம், அதி தீவிர காதல், காமம், பொறுப்புத்துறத்தல், போதை, போதை வஸ்துகள் என்று கூறி ஒரு சுவாரஸ்யமான உரையினை நிகழ்த்தி முடித்தார்.
தர்மினியின் ‘இருள் மிதக்கும் பொய்கை’ குறித்து நவஜோதியும் கோகுலரூபனும் தமது விமர்சனத்தை முன்வைத்தனர்.
அடுத்ததாக சோலைக்கிளியின் ‘மண்கோழி’ நூல் குறித்து உரை நிகழ்த்த வந்த எம்.பௌசர், தான் இத்தொகுதி குறித்து மட்டுமல்லாமல் சோலைக்கிளியின் ஒட்டுமொத்த கவிதைகள் குறித்து பேசுவதாக கூறினார். கடந்த 40 வருட நவீன கவிதை மரபின் பண்புகள் கூறுகள் பற்றி விளக்கமான உரையினை நிகழ்த்திய அவர், சோலைக்கிளியின் கவிதைகள் இனத்துவ முரண்பாடுகள் குறித்தும், தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் குறித்தும் அதிகம் பேசி நிற்பவை என்று குறிப்பிட்டார்.
இரண்டாவது அமர்வினை மு.நித்தியானந்தன் வழி நடாத்தினார். ஸ்ரீவள்ளியின் ‘பொன் கொன்றை பூக்க வந்த பேய்மழை’ நூல் குறித்து ஹரி இராசலட்சுமியும், தேன்மொழிதாஷின் ‘காயா’ தொகுதி குறித்து அனஸ் (இளைய அப்துல்லாஹ்) உம் தமது விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஸ்ரீவள்ளியின் கவிதையோன்றிட்கு சாம் பிரதீபனும் ரஜிதா பிரதீபனும் அற்புதமான அளிக்கை ஒன்றினை அளித்து எல்லோரையும் வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தினார்கள்.
நிகழ்வின் இடையில் பஹீமா ஜஹானின் ‘ஆதித்துயர்’ நாவல் குறித்த எம்.ஏ.நுமானின் வீடியோ பதிவும் ஒளிபரப்பப்பட்டது.
பா.அகிலனின் ‘அம்மை’ நாவல் குறித்து பேச என்னை அழைத்திருந்தார்கள். ஒரு காலத்தில் வெங்கடசாமினாதனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு ஈழத்துக் கவிஞராக இருந்தவர் பா.அகிலன். இழிமையைத் தூண்டும் படிமங்களை கட்டமைத்து எப்படி அவர் ஒரு அற்புதமான மொழியினை உருவாக்கியுள்ளார் எனபது பற்றி நான் எனதுரையில் முக்கியமான விடயமாகக் குறிப்பிட்டேன்.
இந்நிகழ்விற்கு சேரனின் கவிதைகளை ‘Het verhaal van de zee’ என்ற தலைப்பில் நெதர்லாந்து மொழியில் மொழிபெயர்த்த பவானி தம்பிராஜா அவர்கள் நெதர்லாந்தில் இருந்து வந்திருந்தார்கள். அவர் மொழிபெயர்ப்பில் ஏற்படும் பிரச்சினைகள் சிக்கல்கள் குறித்து பேசினார். ஆனால் இவரது உரை மொழிபெயர்ப்பு குறித்த சட்டரீதியிலான பிரச்சினை குறித்து ஆராய்ந்ததே தவிர படைப்புலகில் ஏற்படும் பிரச்சினை குறித்து அதிகம் பேசவில்லை.
இம்மொழிபெயர்ப்பு நூல் குறித்து விமர்சனம் செய்வதற்கும் என்னையே அழைத்திருந்தார்கள். பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்கு பதிப்பிக்கப்பட்டது போன்று மிக மட்டமாக பதிக்கப்பட்டிருந்த அந்நூல் பற்றியும் அந்நூலில் உள்ள மொழிபெயர்ப்புத்தவறுகள் பற்றியும் நான் குறிப்பிட்டேன். இத்தவறுகளுக்கு காரணம் அவரது மொழி ஆளுமையில் உள்ள குறைபாடல்ல, நவீன கவிதை குறித்த அவரது புரிதலின்மையே என்பது எனது கருத்தாக இருந்தது.
மூன்றாவது அமர்வினை நா.சபேசன் வழிநடாத்தினார். இதில் முதலாவது உரையினை யமுனா ராஜேந்திரன் நிகழ்த்தினார். இவர் ரியாஸ் குரானாவின் ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’ நூல் குறித்தும் யவனிகா ஸ்ரீராமின் ‘அலெக்ஸாண்டரின் காலணி’ நூல் குறித்தும் தனது விமர்சனத்தை முன் வைத்தார். இவர் இவ் இரு நூல்கள் குறித்தும் ஒரு 10 நிமிடம் மட்டுமே பேசியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
கடங்கநேரியானின் ‘சொக்கப்பனை’ குறித்தும் குட்டி ரேவதியின் ‘அகமுகம்’ குறித்தும் உரை நிகழ்த்தவிருந்த மாதவி சிவசீலனும், பா.நடேசனும் வருகை தர முடியாத காரணத்தினால் இவ்விரு உரைகளும் தவிர்க்கப்பட்டிருந்தன.
இறுதி உரையாக கருணாகரனின் ‘இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்’ குறித்து பேச ஸ்ரீதரன்(முத்து) அழைக்கப்பட்டிருந்தார். இவரது உரையானது இதுவரையும் அற்புதமான ஒரு சூழ்நிலையில் புதிய தரிசனங்களையும் புதிய உணர்வுகளையும் தந்து கொண்டிருந்த இந்நிகழ்விற்கு திருஷ்டி கழித்துப் போட்டாற் போல் இருந்தது. இலக்கியம் குறித்தோ, கவிதைகள் குறித்தோ எந்தவித புரிதலும் அற்ற இவர், கவிதைகள் குறித்தும் இது போன்ற நிகழ்வுகள் குறித்தும் மட்டம் தட்டி பேசியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. அதற்குமப்பால் இது போன்ற தீவிர இலக்கிய அரங்கில் இரண்டாம்தர, மூன்றாம் தர சினிமா பாடல்களை பாடி இந்த நிகழ்வினையே கொச்சைப்படுத்தினார். திருஷ்டி கழிப்பது என்பது எமது மரபில் உள்ள ஒரு விடயம். எனவே இதனை ஒரு திருஷ்டிக் கழிவாக எடுத்துக் கொள்வோம் என மற்றவர்கள் பேசிக்கொண்டனர்.
விம்பம் தனது பயணத்தில் தொடர்ந்தும் மாதாமாதம் எம்மவர்க்கு மீண்டும் மீண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றது. தனியொரு மனிதனாக இருந்து இதனை வழிநடத்தும் ஓவியர் கிருஷ்ணராஜா குறித்து எல்லோரும் வியந்து கொண்டனர்.
vasan456@hotmail.com