ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்துகின்றன. காதல், வீரம் என்ற இரு இலக்கியப் பாடுபொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் அக்கால மக்களின் பண்பாட்டுப் பதிவுகள் எண்ணத்தக்க ஒன்றாக விளங்குகின்றன. தண்டமிழ் மொழிக்கண் தோன்றிய சங்க மருவிய நூல்களில் எட்டுத்தொகையில், ஐந்தாவதாக ‘ஒங்கு பரிபாடல்’ என உயர்ந்தோரால் உயர்த்திக் கூறப்படுவது ‘பரிபாடல்’ என்னும் சிறப்புமிகு நூலாகும். 

சங்க நூல்களில் அகப்பொருள்-புறப்பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவும் விதத்தில் புலமைச்சான்றோரால் படைக்கப்பட்ட பெருமைமிகு நூலாகவும் இந்நூல் திகழ்கின்றது. திருமாலையும், முருகனையும், வையைப் பேரியாற்றையும் வாழ்த்துவதனை உட்பொருளாகக் கொண்டு தமிழகப் பண்பு, காதல், வீரம், பண்பாடு, அறம், பண்டைத்தமிழர் பின்பற்றிய சடங்குமுறைகள், அவர்கள் பின்பற்றி நடந்த நம்பிக்கைகள் முதலான கூறுகளை புனைநலத்துடன் எடுத்துரைக்கும் நூலாகவும் விளங்குகின்றது.

இத்தகு சிறப்புமிகு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை உ.வே.சாமிநாதையரைச் சாரும். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார் என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகு நூலின் வாயிலாகச் சங்கப் புலவர்கள் புலப்படுத்தும் கலையும் கலைநுட்பத்திறனும் குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

பரிபாடல் – பெயர்க்காரணம்
பல பாவகைகளையும் ஏற்று வருதலின் ‘பரிபாடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ‘பரி’ என்பதற்கு, ‘குதிரை’ என்று பொருள் கொண்டு. பரிபாடலின் ஒசை. குதிரை குதிப்பது போலவும். ஒடுவது போலவும் நடப்பது போலவும் இருத்தலின் ‘பரிபாடல்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். 

‘அன்பு’ என்னும் பொருள் படும் ‘பரிவு’ என்னும் சொல் இறுதி கெட்டுப் ‘பரிபாடல்’ என வந்ததெனக் கொண்டு, அப்பாடல் அகத்திணையைச் சுட்டுவது” எனக் காரணம் கூறுகின்றார் சோம. இளவரசு. “பரிபாட்டு என்பது இசைப்பா ஆதலான்” எனப் பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் அதன் இசை இயல்பை எடுத்துக்காட்டுவர். இசை தழுவிய உருட்டு வண்ணம் பரிபாடலுக்கு உரியது ஆகும்.

“இன்னியல் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்’ என்னும் பரிபாடலில் வரும் அடியும் அதன் இசைச் சிறப்பை உணர்த்தும். இவற்றை நோக்கும்போது “இசை பரிபாடல் என்பதே இசை என்னும் சொல் கெட்டுப் பரிபாடல் என வழங்கலாயிற்று’ என்று கருதலாம் என்பர் இரா. சாரங்கபாணியார். கலிப்பாவால் இயன்ற நூல் கலித்தொகை என்று பெயர் பெற்றது போலப் பரிபாடல் என்னும் ஒரு பாவகையான் இயன்ற நூலாதலின் இப்பெயர் பெற்றது என்று கொள்ளுதல் தகும்.

 

இறையனார் அகப்பொருள் உரை. தொல்காப்பிய உரை முதலியவற்றால் பரிபாடல் எழுபது பாக்களைக் கொண்டமைந்த நூல் என்பது புலனாகின்றது. 

பரிபாடலைப் பாடிய புலவர்கள்
பரிபாடலைப் பாடிய புலவர்கள் பதின்மூவர் ஆவர். அவற்றிற்கு இசை வகுத்தோர் பதின்மர். ஒவ்வொரு பாடலின் கீழும் பாடியோர் பெயர், இசை வகுத்தோரின் பெயர், பாடற்பண் ஆகியவை காணப்படுகின்றது. அக்காலத்தில் பரிபாடல் இசைப்பாட்டு எனும் பெயர்பெற்றது. 

கட்டடக்கலை
சங்ககாலத் தமிழர்கள் கட்டடக்கலையில் சிறந்து விளங்கினர் என்பதனை இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன. அரசர்கள் உறையும் இடங்களும், இறைவன் உறையும் கோயில்களும் கட்டடக்கலைக்குச் சான்று பகர்வனவாய் அமைந்திருந்தன. இப்பொழுது கோயில் நகர் என வழங்கும் சொற்கள் முன்னர் அரசர் உறையும் இடத்தையும் கடவுளர் உறையும் இடத்தையும் உணர்த்தின. திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை மலை, குளவாய், இருந்தையூர் என்னும் இடங்களில் உள்ள கோயில்கள் கட்டடக்கலையின் சிறப்புக்குத் தக்க சான்றாக விளங்குகின்றன. மதுரை நகர் நடுவண் அமைந்திருந்த பாண்டிய மன்னனது கோயில், தாமரை மலர் நடுவே இருக்கும் பொகுட்டுப் போன்றது என்றும், கோயிலைச் சுற்றியுள்ள பல தெருக்களும் தாமரையின் இதழ்கள் போன்றவை என்றும் மதுரை நகர் திருமாலின் உந்தியில் மலர்ந்த தாமரை மலர் போன்றது என்பதையும்,

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”    (பரி. திர. 7:1-4)

என்னும் பாடலடிகள் விளங்குகின்றன.

மதுரையின் தெருக்கள் அமைப்பை நோக்குழி, முந்திய காலத்தே நகரமைப்புத் திட்டமெல்லாம் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. பல நிலைகளையுடைய பெருமாளிகைகள் மதுரைநகரில் இருந்தமையினை,

“…….வையைப் புனலெதிர்கொள் கூடல்
ஆங்க, அணிநிலை மாடத் தணிநின்ற பாங்காம்”    (பரி. 10:14-15)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. 

  • ஓவியக்கலை

ஓவியத்தைக் குறிக்கும் ஓவு, ஓவம், ஓவியம் என்னும் சொற்களுள் ஓவம் என்பதே பரிபாடலில் வந்துள்ளது. 
“ஓவத் தெழுதெழில் போலு மாதடிந்து”     (பரி. 21:28)

என்னும் தொடர்கொண்டு இதனை உணரலாம். எழுதுதல், எழுத்து என்னும் சொற்கள் முறையே ஓவியந்தீட்டும் தொழிலையும், ஓவியத்தையும் குறிப்பனவாக அமைந்துள்ளன. ஒரு பெரு மாளிகைக்கண் புலிமுகமாடத்துச் செய்துவைத்த புலியை உண்மையான புலி எனக் கருதித் தன்மேற் பாயுமென யானை ஒன்று அஞ்சியது என்னும் செய்தியினை,

“சென்மன மாலுறுப்பச் சென்றெழின் மாடத்துக்
கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று
மைபுரை மடப்பிடி மடநல்லார் விதிர்ப்புறச்
செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதர”    (பரி.10:45-48)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இதனால் கைபுனைந்தியற்றும் ஓவியக்கலையின் சிறப்பினை அறியலாம். 

ஓவியக்கூடம், அழகார்ந்த திருப்பரங்குன்றக் கோயில் காமவேளின் படைப்பயிற்சிச் சாலையினை ஒத்திருந்தது என்பதனை,

“ஒண்சுடர் ஓடைக் களிறேய்க்கும் நின்குன்றத்
தெழுதெழில் அம்பலங் காமவே ளம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்”    (பரி. 11:27-29)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

துருவசக்கரத்தைப் பொருந்தி வரும் கதிரவன் முதலிய கோள்களின் நிலைமையை விளக்கும் ஓவியமும், இரதி-காமன் ஓவியமும், அகலிகை கல்யாண கதை பற்றிய ஓவியமும் அக்கோயிலை அணி செய்ததை,

“என்றூழ் உறவரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும்
இரதி காமன் அவளிவன் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப் போரும்
இந்திரன் பூசை யிவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்”     (பரி.19:46-53)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

இசைக்கலை
பழந்தமிழர்கள் இசைக்கலையில் சிறந்து விளங்கினர் என்பதனை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தம் துணையோடு இன்பவாழ்க்கை எய்தவும், நெடுந்தொலைவுப் பயணத்தின் அயர்ச்சி நீங்கவும், தலைவியர் உள்ளங்களில் மீண்டும் இடம்பெறவும் இசை துணைபுரிந்தது. அன்பர்கள் இசைக்கருவிகளின் பின்னணியோடு இறைவனைப் பரவிப் பாடினர். வண்டினொலி, தும்பியின் ஒசை, குயிலின் குரல், அருவியின் முழக்கம் முதலிய இயற்கை இசையைச் செவிமடுத்து மக்கள் மகிழ்ந்தனர். பரிபாடலில் “கொளை, இயல் என்னும் சொற்கள் இசையைக் குறிப்பிடும் சொற்களாகும்” என்பர் இரா. சாரங்கபாணி.

முழவு, யாழ், குழல், தூம்பு (வங்கியம்), முரசு, கிணை, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, ஒத்து, துடி, பறை முதலிய இசைக்கருவிகளைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. ஏழு துளை உள்ளதும் ஐந்து துளை உள்ளதுமாய இருவகை வங்கியங்கள் இருந்தன. குழல் வங்கியமெனவும், முரசு மன்றலெனவும் ஒரோவழி அழைக்கப்பெறும். தாளம் ஒத்து எனவும் பெயர்பெறும். யாழினை நரம்பு என்றும் கூரம் என்றும் கூறுவது வழக்கமாகும். “எழுவகைப் பாலைப்பண், மருதப்பண், நைவளம், இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை முதலிய பண்கள் பரிபாடலில் பேசப்படுகின்றன” என்பார் இரா. சாரங்கபாணியார். 

ஆடற்கலை
ஆடலரங்கு பற்றிய குறிப்பும் பரிபாடலிற் காணப்படாமலில்லை. ஆடல் வல்லாரைப் போட்டியில் வென்றோர் கொடியேற்றித் தம் வாகையைத் தெரிவிப்பர் என்பதனை,

“ஆடும்போ ராளநின் குன்றின்மிசை
ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
அல்லாரை அல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்ச்
செம்மைப் புதுப்புனல்
தடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப்
படாகை நின்றன்று”    (9:72-78)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. குடக்கூத்து, குரவைக்கூத்து, வெறியாட்டு ஆகியவற்றைப் பரிபாடல் விரித்துக் கூறாவிடினும் பெயரளவிற் சுட்டுவதைக் காணமுடிகின்றது. ஆடுவோர் வயிரியர் என்றும், ஆடல் நிருத்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆடல் மகளிரிற் சிறந்தார்க்கு அரசன் பரிசளிப்பது வழக்கம் என்பதனை,

“புரிநரம் பின்கொளைப் புகல்பாலை யேழும்
எழூஉப்புணர் யாழு மிசையுங் கூடக்
குழலளந்து நிற்ப முழவெழுந் தார்ப்ப
மன்மகளிர் சென்னிய ராடல் தொடங்க”    (பரி. 7:77-80)

என்னும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

முடிவுகள்
சங்க இலக்கியத்தில் அகம்-புறம் என்னும் பாடல் மரபினைப் பரிபாடலில் காணமுடிகின்றது.  சங்க கால மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை எடுத்துரைக்கும் களஞ்சியமாகப் பரிபாடல் திகழ்கின்றது. சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் பல்வகைக் கலைகளில் தேர்ச்சிப்பெற்று விளங்கியமையைக் காட்டுவனவாகப் பரிபாடல் பாடல்கள் அமைந்துள்ளன.  கட்டடக்கலை, இசைக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை முதலானவற்றில் மிகுந்த ஈடுபாடும், அவற்றைத் திறம்பட வடிவமைக்கும் கலைத்திறனும் பெற்றவர்களாக விளங்கியுள்ளனர்.  கலை வளர்க்கும் கூடங்களாக மன்னர்களின் அரண்மனைகளும், கோயில்களும், பொதுமக்கள் ஒன்றுகூடும் மண்டபங்களும், பொது மன்றில்களும் திகழ்ந்துள்ளன. 

துணைநூல்கள் :
1. கோ. சாரங்கபாணி, பரிபாடல் திறன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை 1990
2. கு.வெ.பாலசுப்பிரமணியன், (உ.ஆ.), மற்றும் பிறர், சங்க இலக்கியம், நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பி.லிட்., சென்னை, 2000

Mooventhan Ps <psmnthn757@gmail.com>

* கட்டுரையாளர் – – முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா.