தொடர் நாவல் (1): பேய்த்தேர்!

அத்தியாயம் ஓன்று: சுடர் தேடுமொரு துருவத்துப் பரதேசி!

தொடர் நாவல் (1): பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -ஒரு பெளர்ணமி நள்ளிரவில் ‘டொராண்டொ’வில் வசிக்கும் புகலிடம் தேடிக் கனடாவில் நிலைத்துவிட்ட இலங்கை அகதியான கேசவனின் சிந்தையிலோர் எண்ணம் உதித்தது. வயது நாற்பதைக் கடந்து விட்டிருந்த நிலையிலும் அவன் எவ்விதப்பந்தங்களிலும் தன்னைப் பிணைத்துக்கொள்ளாமல் தனித்தே வாழ்ந்து வருகின்றான். இந்நிலையில் அவன் சிந்தையில் உதித்த அவ்வெண்ணம் தான் என்ன? ‘நெஸ்கபே’ ஒரு கப் கலந்துகொண்டு , தான் வசிக்கும் தொடர்மாடியின் பல்கணிக்கு வந்து, அங்கிருந்த கதிரையிலமர்ந்தான். எதிரே விரிந்து கிடந்த வானை நோக்கினான். சிந்தனைகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறையத்தொடங்கின. மீண்டும் அவன் சிந்தையில் அவ்வெண்ணம் தோன்றி மறைந்தது. தான் யார்? என்று மனம் சிந்தித்தது. அதுவரை காலத் தன் வாழ்வைச் சிறிது சிந்தித்துப்பார்த்தது மனம். பால்ய பருவம், பதின்மப் பருவம், இளைமைப்பருவம், புகலிடப்பயணம் என பல்வேறு பருவங்களைப்பற்றி மனத்தில் அசை போட்டான். ‘காலம் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது.’ எனறொரு எண்ணம் தோன்றி மறைந்தது. தன் எண்ணங்களை, இதுவரை காலத்தன் வாழ்க்கையினை எழுத்தில் பதிவு செய்தாலென்ன  என்றொரு எண்ணமும் கூடவே தோன்றியது. இவ்வெண்ணம் தோன்றியதும்  சிறிது சோர்ந்திருந்த நெஞ்சினில் உவகைக் குமிழிகள் முகிழ்த்தன. அதுவரை காலமுமான தன் வாழ்பனுவங்களை ஆவணப்படுத்துவதன் அவசியம் பற்றிச் சிந்தித்தான். அதுவே சரியாகவும் தோன்றியது.    அது அவனுக்கு ஒருவித உற்சாகத்தினைத் தந்தது. அதன் மூலம் அவனது எழுத்தாற்றலையும் செழுமைப்படுத்த முடியுமென்றும் எண்ணமொன்று தோன்றி மறைந்தது. எதிர்காலத்தில் அவன் தானோர் எழுத்தாளனாக வரவேண்டுமென்று விரும்பினான். இவ்விதம் தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதன் மூலம் தன் எழுத்தாற்றலைச் செழுமைப்படுத்தலாமென்றெண்ணினான். அதுவே எழுத்தாளனாவதற்குத் தான் இடும் அத்திவாரமுமாகவுமிருக்கக்கூடுமென்றும் எண்ணினான்.

அவனுக்கு அவன் அதுவரையில் வாசித்த சுயசரிதைகள், புனைவுகள் பல நினைவுக்கு வந்தன. கவிதையில் எழுதப்பட்டிருந்த பாரதியாரின் சுயசரிதை அனைத்துக்கும் முன்வந்து நின்றது. அவனுக்குப் பிடித்த சுயசரிதையும் கூட.  எப்பொழுது மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தாலும் அச்சுயசரிதையை எடுத்து வாசித்துப்பார்ப்பான். அலை பாயும் மனம் அடங்கி அமைதியிலாழ்ந்து விடும். அச்சுயசரிதை நீண்டதொரு சுயசரிதையல்ல. ஆனால் அதற்குள் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை,  முதற்காதல், மணவாழ்க்கை, குடும்பத்தின் பொருளியல் நிலை மாற்றங்கள், இருப்பு பற்றிய அவனது கேள்விகள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தான்.

பட்டினத்துப்பிள்ளையின் ‘பொய்யாயொ பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே’ என்னும் வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு தொடங்கும் சுயசரிதையின் ஆரம்பத்தில் ‘வாழ்வு முற்றுங் கனவெனக் கூறிய , மறைவ லோர்த முரைபிழை யன்றுகாண்’ என்று கூறியிருப்பான். தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் எல்லாம் சரதம் (உண்மை) அல்ல என்பதையும் அறிந்திருந்தான். இம்மானுட வாழ்க்கை கனவுதான் ஆனால் இவ்விருப்பு மாயை அல்ல. மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன் என்கின்றான். ஆனால் அனைத்துக்கும் அடிப்படையான இப்பிரம்மத்தின் இயல்பினை  ஆய நல்லருள் பெற்றிலன் என்கின்றான். ‘தன்னுடை அறிவினுக்குப் புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தியியற்கையும் வாய்ந்திலேன்’ என்னும் மனத்தெளிவு மிக்கவனாகவுமிருக்கின்றான் அவன்.

‘உலகெலாமோர் பெருங்கன வஃதுளே உண்டு உறங்கியிடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவினுங்கனவாகுமிதனிடை சில தினங்களுயிர்க்கமுதாகியே செப்புதர்கரிதக மயக்குமால் திலக வாணுதலார் தரு மையலாத் தெய்விகக்கனவன்னது வாழ்கவே’ என்கின்றான்.  கலக மானுடப்பூச்சிகளின் வாழ்க்கையோர் கனவு. இதில் திலக வாணுதலார் தரும் மையல் தெய்விகக்கனவு என்று பெண்ணைத்தூக்கி வைக்கின்றான். இவ்விதம் ஆரம்பமாகும் அவனது சுயசரிதையில் அவன் நினைவு கூரும் முதற்கனவு அவனது முதற்காதல் பற்றியது. பிள்ளைக்காதல் பற்றியது.  ‘அன்ன போழ்தினி லுற்ற கனவினை அந்த மிழ்ச்சொலிலெவ்வணஞ் சொல்லுகேன்? ‘ என்றாரம்பித்துத் தன் முதற்காதலை விபரிப்பான். முதற்காதலை அவன் விதந்து கூறுகின்றான். வயது முற்றியபின்  உறும் காதல் மாசுடைத்தது; தெய்விகமன்று என்னும் அவனது வரிகள் முதற்காதலைச் சிறப்பிக்கின்றன.

பாரதியின் சுயசரிதை பற்றிய எண்ணங்கள் எழுந்தாட, எழுந்து உள்ளே சென்றவன் அண்மையில் வாங்கி வைத்திருந்த  குறிப்பேட்டினை எடுத்து வந்தான். சிறிது நேரம் மாநகரத்து இரவு வானை நோக்கியவன், அதுவரை காலத் தன் சுயசரிதையினை எழுதத்தொடங்கினான்; நிகழ்வுகள்  நினைவில் தோன்றிய ஒழுங்கில் எழுதத்தொடங்கினான்.


கேசவனின் சுயசரிதை!

தொடர் நாவல் (1): பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -காலவெளிச்சட்டங்களால் ஆன முடிவற்ற நீளம் கொண்ட திரைப்படம் நாம் வாழுமிந்தப்பிரபஞ்சம். இதுவரை காலமுமான என் வாழ்க்கையும் இச்சட்டங்களால் ஆனதொரு திரைப்படம் போன்றதுதான். இச்சட்டங்களில்தாம் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதம். அப்பருவத்தில் வந்து வந்து சென்ற பாத்திரங்கள்… நடந்து முடிந்த சம்பவங்கள்… அனைத்துமே மனத்தின் ஆழத்தே புதைந்து கிடக்கின்றன. ஆற, அமர்ந்து சிந்திக்கையில் காலவெளிச்சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சிறகடித்துப் பறந்து வருகின்றன.

இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!
என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.

எனது இச்சுயசரிதையினை நான் எழுதுவது எனக்காக. மீண்டும் மீண்டும் என் இதுவரை கால வாழ்க்கையினை அசைபோடுவதிலுள்ள இன்பத்துக்கு நிகர் வேறென்ன இருக்க முடியும்? எனவே இக்குறிப்பேட்டினை யாராவது வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஒன்றை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கானதல்ல. ஆயினும் ஏதோ சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இது உங்கள் கைகளை வந்தடைந்திருக்கின்றது இதன் மூல வடிவத்தில் அல்லது இதனைக் கண்டெடுத்த ஒருவரின் முயற்சியால் வெளியாகியிருக்கக் கூடிய நூல் வடிவத்தில். இது என் வாழ்க்கை, என் இருப்பு பற்றிய நனவிடை தோய்தல். உங்களுக்குச் சுவையாகவிருக்க வேண்டுமென்று எண்ணி எழுதப்பட்ட படைப்பிலக்கியப் பிரதியொன்றல்ல.  அதனை நினைவில் வைத்துக்கொண்டு வாசிக்கத்தொடங்குங்கள்.

என் விருப்பு, வெறுப்புகள், அவற்றில் காலம் ஏற்படுத்திய பரிணாம மாற்றங்கள், வாழ்வின் நிகழ்வுகள், இயற்கை, இருப்பு , மானுடர்கள் பற்றிய என் சிந்தனைகள், நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் இவையெல்லாம் பற்றிய குறிப்புகளை, நினைவுத்துளிகளை இக்குறிப்பேட்டில் நான் எழுதிய சுயசரிதையில் நீங்கள் வாசிக்கப்போகின்றீர்கள். அதனை நினைவில் வைத்து இக்குறிப்பேட்டுப்பக்கங்களை வாசியுங்கள். இச்சுயசரிதை ஒரு நேர்கோட்டில் முதலிருந்து முடிவு என்னும் வடிவில் இருக்காது. சிந்தனையின் அடிப்படையில் எழுந்த உணர்வுகளின் அடிப்படையில் இருப்பதை வாசிக்கும்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அதனால் நிகழ்வுகள் முன்னுக்குப்பின் இடம் மாறிப்பல இடங்களில் இருப்பதையும் நீங்கள் அவதானிப்பீர்கள். நனவிடை தோய்தலில் விளைந்த உணர்வுகள் இவையென்பதால் இடம் மாறி இருப்பதும் இயல்பானதே என்பதை உணர்ந்துகொண்டு வாசியுங்கள்.

[தொடரும்]