வாசிப்பும், யோசிப்பும் 324: ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்!

ஜெயமோகன்ஜெமோ எதற்காகத் தூண்டிலைபோட்டாரோ அது நன்றாகவே வேலை செய்கிறது என்பதை முகநூலில் நம்மவர்கள் ஆக்ரோசத்துடன் போடும் கூச்சல் புலப்படுத்துகின்றது. ஜெயமோகன் தனதுரையில் ஈழத்துப்படைப்புகள், கவிதைகள் பற்றிக் கூறியதன் சாரம் இதுதான்.


“திரும்பி இலங்கை எழுத்துகளைப்பார்க்கின்றோம். இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படுகின்றது. இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படும்போது இலங்கேசனிலிருந்து ஆரம்பித்து அ.முத்துலிங்கம், சோபாசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரைக்கும் ஒரு மரபு அங்கே இருக்கு. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை. யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றிருக்குதில்லே.. . ஒரு பட்டியல் இருக்கு . அந்தப்பட்டியல் ரொம்பப் பிரமாண்டமாயிருக்கும் ” இவ்விதம் குறிப்பிடும் ஜெயமோகன் தான் காலம் இதழில் இலங்கைக் கவிஞர்களைப்பற்றி எழுதுகையில் , குறிப்பிட்டிருந்த சில கவிஞர்களைப் பட்டியலிட்டிருந்ததாகவும், அதற்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மு.பொன்னமப்பலம் எழுதிய கடிதத்தில் சுமார் 200 கவிஞர்களுக்கும் அதிகமானவர்களைப் பட்டியலிட்டதாகவும் குறிப்பிட்டார். அது பற்றி மேலும் குறிப்பிடுகையில் தான் அக்கடிதத்துக்கு அளித்த பதிலில் அவ்விதம் 200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும் என்று கூறியதாகவும் கூறினார். மேலும் தொடர்கையில் ‘ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு?’ என்றும் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.


இக்கூற்று யாவரும், வல்லினம் இணைந்து நடத்திய மூன்று நூல்கள் அறிமுக விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரையிலுள்ளது.


இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் ‘200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்’ என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் ‘இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்’ என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் ‘பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்’ என்பதுபோன்ற சொற்பதங்களை யாரும் பாவிப்பதில்லை. அதுவும் அழிக்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. 200 கவிஞர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்குப்பதில் கிருமிநாசினி குடித்து விடலாம் என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனைக் கேட்டு யாரும் கொதித்திருக்க மாட்டார்கள். ஜெயமோகனின் தாய்மொழி மலையாளம் என்பதால் அங்கு இவ்விதம் கூறுபவர்களைக் கிருமி நாசினி கொண்டு அழிக்க வேண்டும் என்று கூறுவதுபோன்ற வார்த்தைப்பிரயோகங்கள் பாவிக்கப்படுகின்றனவா, வழக்கிலுள்ளனவா என்பதை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனால்தான் ஜெயமோகனும் இவ்விதம் கூறினாரா என்பதும் தெரியவில்லை. மேலும் எதற்காக ஜெயமோகன் அடுத்து ‘ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு’ என்று கூறினாரோ தெரியவில்லை. ஜெயமோகனுக்குக் கவிஞர்கள் மேல் அப்படியென்ன கோபமோ? மேலும் கற்பு என்னும் சொற்பதம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் , அச்சொல்லுக்குப்பதில் ‘பாலியல் வன்முறை’ என்னும் சொல் பாவிக்கப்படும் இக்காலகட்டத்தில் இன்னும் எதற்காக ஜெமோ அச்சொல்லில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்?

மேலும் ஜெமோ ‘திரும்பி இலங்கை எழுத்துகளைப்பார்க்கின்றோம். இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படுகின்றது. இலங்கையில் ஐம்பதாண்டு காலமாக எழுதப்படும்போது இலங்கேசனிலிருந்து (இலங்கையர்கோனாக இருக்க வேண்டும். இலங்கேசன் என்று ஜெமோ கூறியதுபோல்தான் காதுகளில் கேட்டது) ஆரம்பித்து அ.முத்துலிங்கம், சோபாசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரைக்கும் ஒரு மரபு அங்கே இருக்கு. ஆனால் இன்றைக்கு வரைக்கும் அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை. யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்றிருக்குதில்லே. ஒரு பட்டியல் இருக்கு . அந்தப்பட்டியல் ரொம்பப் பிரமாண்டமாயிருக்கும் ‘ என்று கூறும் கூற்றினைப்பார்ப்போம். ‘இலங்கேசனிலிருந்து ஆரம்பித்து அ.முத்துலிங்கம், சோபாசக்தி, அனோஜன் பாலகிருஷ்ணன் வரைக்கும் ஒரு மரபு அங்கே இருக்கு’ என்னும் கூற்றில் குறிப்பிடப்படும் ஒரு மரபு இலங்கையில் இல்லை. இந்தியாவில் ஜெமோவிடம் மட்டுமே உள்ளது. இவரே இவ்வுரையில் இன்னுமோரிடத்தில் தமிழகத்திலிருந்து தம்மைப்போன்றவர்கள் போடும் பட்டியலையே இலங்கையிலுள்ளவர்களும் தூக்கிப்பிடிக்கின்றார்கள்’ என்று கூறுவதுபோல்தான் தமிழகத்து ஆளுமைகளின் முதுகுசொறிதலை ஏற்பவர்கள் மத்தியிலேயே இக்கூற்றினை அங்கீகரிக்கும் மரபு உண்டு என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.


ஆனால் உண்மையில் ‘இன்றைக்கு வரைக்கும் அங்கு ஒரு விமர்சன வரிசை உருவாக்கப்படவில்லை’ என்னும் கூற்று தவறானது. இலங்கையிலும் பல்வேறு திறனாய்வாளர்களால் பல்வேறு விமர்சன வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கலாநிதி கைலாசபதியால் அவரது கலை, இலக்கிய கோட்பாடுகளுக்கேற்ப ஒரு வரிசை உருவாக்கப்பட்டுள்ளதென்றால், பிரபஞ்ச யதார்த்தம் பேசிய மு.தளையசிங்கத்தால் இன்னுமொரு வரிசை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழக ஆளுமைகளின் அடிவருடிகளால் இன்னுமோர் வரிசை உருவாக்கப்பட்டுள்ளது. அ.முத்துலிங்கத்தை மிகவும் தூக்கிப்பிடிக்கும் ஜெமோ , விமர்சிப்பதில் தன்னை மிகவும் கறார் பேர்வழியாகக் கூறும் ஜெமோ எதற்காக இன்னும் அ.மு. தனது படைப்புகளில் விடும் முட்டாள் தனமான தவறுகளையெல்லாம் சுட்டிக் காட்டுவதில்லை?


நண்பர்களே ! ஜெமோ போன்றவர்கள் எவற்றையாவது, சர்ச்சைக்குரிய இவை போன்ற சொற் பிரயோகங்களைப்பாவித்தால், அவர்களது முழுக்கூற்றுகளையும் உள்வாங்கித் தர்க்கரீதியாக உரையாடுங்கள். பதிலுக்கு எதிர்வினைகளையாற்றுங்கள். எதிர்வினைகள் மூலம் அவர்களது மூக்குகளை உடையுங்கள் இதற்காக அவர்களது மூக்குகளை உண்மையிலேயே உடைப்பது என்பது அர்த்தமல்ல 🙂 அதற்குப்பதில் இடையிலுள்ள சொற்பதமொன்றினைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு ருத்திரத்தாண்டவம் ஆடினால் நீங்கள் ஜெமோ போன்றவர்கள் விரிக்கும் வலைகளில் முட்டாள்தனமாக விழுந்து விட்டீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே அவர்கள் முன் முட்டாள்களாகக் காட்டுகின்றீர்கள் என்று அர்த்தம். அவர்கள் எதிர்பார்ப்பதும் அவற்றைத்தாம். ஆக பதிலுக்கு அவர்களது கூற்றுகளை முழுமையாக உள்வாங்கி முறையாக, சிறப்பாக, அவர்கள் வாயடைக்கும் வகையில் தர்க்கம் செய்யுங்கள்; எதிர்வினையாற்றுங்கள்.
மேலுமொரு விடயம். இலங்கையில் 200 தரமான கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று மு.பொ. கூறியதற்காக எதற்காக ஜெமோ நக்கலடிக்க வேண்டும்? மு.பொ குறிப்பிட்ட கவிஞர்கள் அனைவரினதும் படைப்புகளையும் படித்தாரா? படித்துத்தான் இம்முடிவுக்கு வந்தாரா? இவற்றைச் சான்றுகளாக வெளிப்படுத்தாமால் ஜெமோவுக்குத் தீர்ப்பு கூறும் தகுதி உண்டா? தமிழகத்தில் இலட்சக்கணக்கில் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நிச்சயம் ஆயிரம் பேராவது சிறந்த கவிதைகளை எழுதியிருப்பார்கள். அதற்காகத் தமிழிலக்கியம் பெருமைப்பட வேண்டுமே தவிர அவர்களையெல்லாம் கிணற்றில் விழுந்து சாகுமாறு கூறக்கூடாது? ஐந்நூறுக்கும் அதிகமான தமிழக் கவிஞர்கள் படைப்புகளை உள்ளடக்கிய சங்ககாலக் கவிதைகளை உள்வாங்கிச் சங்ககாலச்சித்திரங்கள் எழுதிய ஜெமோவுக்கு எதற்காக இலங்கையில் தரமான இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் இருக்கின்றார்கள் என்னும் கூற்று ஆச்சரியத்தை அல்லது கோபத்தைத்தர வேண்டும். மு.பொ.வின் கூற்றில் எவ்விதத் தவறுமில்லை. இலங்கையிலிருந்து வெளியான மிகச்சிறந்த கவிதைகளாக இருநூறுக்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளை என்னால் தர முடியும்? விரைவில் அக்கவிதைகளை ஒவ்வொன்றாக முகநூலில் பிரசுரிப்பேன். தரமான கவிதைகளைஎழுதிய கவிஞர்கள் எல்லோரும் எழுதிய கவிதைகள் அனைத்துமே தரமான கவிதைகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஜெமோவின் படைப்புகள எல்லாமே சிறப்பான படைப்புகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.


ஜெமோவின் சர்ச்சைக்குரிய கூற்றுள்ள காணொளிக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=tYo41uNBjFg&feature=share&fbclid=IwAR3y4F6bmKd-7mORttzMGpN3MKg_wWcNWP-DOsFrXb9rVfmmjNLzTYBGUDA

ngiri2704@rogers.com


இக்கட்டுரை பற்றி முகநூலில் வெளியான எதிர்வினைகள்:

Thillainathan Kopinath தளையசிங்கம் இறந்து 50 ஆண்டுகளும் கைலாசபதி இறந்து 40 ஆண்டுகளும் ஆகப் போகின்றன. ஜெமோவை விடுங்கள். ஈழத்தில் நவீன இலக்கியம் தோன்றியே 70-80 ஆண்டுகள்தான். 40-50 ஆண்டுகள் பெரிய இடைவெளி இல்லையா?

Giritharan Navaratnam:  அவர்கள் காட்டிய வழியில் அவர்கள் பாதைகளில் செல்பவர்கள் படைப்புகளை நோக்கும் விமர்சன மரபு இலங்கையிலுண்டு. கைலாசபதி, தளையசிங்கத்துடன் அம்மரபு முடிந்து விடவில்லை.

Vickneaswaran Sk : ஜெயமோகனுடைய உளறற் தகவல்கள் ஒன்றும் புதிதல்ல. இலங்கேசன் என்பவர் யார், க.நா.சு பற்றிய, செவ்வானம் பற்றிய கைலாசபதியின் கருத்து என்ன, செங்கை ஆழியானையும் முத்துலிங்கத்தையும் ஒரே பந்திப் பாயில் இருத்திய ஈழத்து விமர்சகர்யார், மு.பொ கொடுத்த பட்டியல் எது என்று அவரது வாயில் வந்தபடிக்கு சொன்னவற்றை யாரும் தேடி மினைக்கடத் தேவையில்லை…எல்லாம் ஒரு flowவிலை வாற விடயங்கள்.இந்தப்பேச்சில் முத்துலிங்கம், சோபாசக்தி,அனோஜன் மூன்றுப்பேரையும் அவர் தனது பட்டியலில் போடுமளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான். 🙂

VA Junaid: நிதானமுள்ள பதிவு

Yamuna Rajendran:  உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது – you are wrong. how can these kind of words come spantaneously in a literary speech? how come the comparision of women and poets come in this way unless he has mean mentality of women hood? please do not defend this kind of wordings. it is simply pathetic to dismiss this as just vedikkai. more over, dont you people have any kind of ‘value system’ to asses your literary merits on your own? is it not ‘big boss’ mentality?.


Ramanitharan Kandiah /உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது/ அட! எப்பிடி ஒருவர் கூற்றை இன்னொருவர் விளங்கிக்கொள்வது என்பதற்கும் ஒரு பென்முரசு வந்திருக்கிறதா, என்ன?

சிறீ சிறீஸ்கந்தராசா: சிறீ சிறீஸ்கந்தராசா இவர்களை நாங்கள் உயர்த்திப் பிடிப்பதால் வந்தவிளைவு இது!!

Aanantha Tha:  யமுனா சொல்வது சரி. இது ஒரு பெரியண்ணன் தோரணை தான். பாமினி எழுத்துரு விவகாரத்தில் காலச்சுவடு கண்ணன் எடுத்த நிலைப்பாட்டிலும், இப்போது ஜெயமோகன் செப்பியிருப்பதிலும் ஜெயமோகன் செப்பியதை வழிமொழிந்து அவர் திராவிட அரசியலை மனதில் வைத்துத் தான் சொல்லியிருப்பார் என்று ட்ரொட்கிஸ்ட்டான Koovam Kupusamy சல்லியடிப்பதிலும் அவர்கள் எத்தரப்பினராயினும் வேறு வேறு கருத்துநிலையினராயினும் ஈழம் என்’று வருகிற போது பெரியண்ணன் மனோபாவத்தடனேயே வருகிறார்கள் என்று புலப்படும்.

Anaamikaa Rishi : விமர்சன மரபு என்பதற்கு நடப்பில் இன்னுமொரு அர்த்தமும் உண்டு. விமர்சனத்தின் அரசியல். இது இலங்கையில் எப்படியோ, தெரியாது. தமிழகத்தில் அதிகமாகவே, வெளிப்படையாகத் தெரியும் அளவு. இதில் இரண்டு போக்குகள் உள்ளன. ஒன்று, ஒற்றை வரியில் ‘இதெல்லாம் எழுத்தேயில்லை’ என்பதாய் sweeping statements தருவது. அல்லது மிக அகல்விரிவாகப் பேசும் பாவனையில் அதே ஸ்வீப்பிங் ஸ்டேட்ஸ்மெண்ட்’ஐ வரிவரியாய், பக்கம்பக்கமாய் தருவது. இதில் மூன்றாவது, மிக மிக எளிய விமர்சனப் போக்கும் உண்டு. ஒரு படைப்பைப் பற்றி, படைப்பாளியைப் பற்றி பாராமுகமாய் இருந்துவிடுவது!

மாதிரிக்கு ஒன்று, வட சென்னையை சேர்ந்த கவிஞர்கள் இதுவரை எந்தப் பொதுப்பட்டியலிலும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் மணவாளன், சொர்ணபாரதி, அமிர்தம் சூர்யா, ஆசு சுப்பிரமணியன் போன்றோர் தொடர்ந்து காத்திரமான, நவீன தமிழ்க்கவிதையை எழுதிவருபவர்கள். ஆனால், அவர்கள் பெயரை நான் எந்தவொரு தமிழ்க்கவிஞர் தரவரிசைப் பட்டியலிலும் கண்டதில்லை.

மேலும், சமகாலத் தமிழக விமர்சன மரபில் சுயாபிமானம், குழு அபிமானம், ஊர் அபிிமானம், சாதி அபிிமானம், கருத்தியல் அபிமானம், கோட்பாட்டு அபிமானம், அரசியல் கட்சி அபிமானம், அரசியல் சார்பு அபிமானம், அடிப்பொடியார் ரக அபிமானம், அடுக்குகளாலான அபிமானம், ஆதிக்கநிலை (ஆணாதிக்க, பெண்ணாதிக்க) அபிமானம், அவசரகால (உடனடித்தேவையைக் கருத்தில் கொண்ட) அபிமானம், சாதி அபிிமானம், கருத்தியல் அபிமானம், கோட்பாட்டு அபிமானம், அரசியல் கட்சி அபிமானம், இந்தியா -எதிர்ப்பு அபிமானம், இந்துமத – எதிர்ப்பு அபிமானம், மோடி-எதிர்ப்பு அபிமானம், பார்ப்பன-எதிர்ப்பு அபிமானம் ஆகிய பலவகை அபிமானங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாம் சிறந்ததாகக் கொள்ளும் எழுத்தைப் பற்றிக்கூட, எழுத்தாளர் உயிரோடிருந்த காலத்தில் எழுதாமல் அவர் மறைவுக்குப் பின், உயிரோடிருந்த காலத்தில் அவரைப் பொருட்படுத்தாதிருந்த பெரும் பதிப்பகம் மீள் பிரசுரம் செய்யும்போதுதான் பேசுவது என்பதான ‘கால-தேச-வர்த்தமான அபிமானமும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுத்தின் மேல் கொண்ட ஆர்வமொன்றே காரணமாக கவிஞர்களும் கதாசிரியர்களும் இங்கேயும் எங்கேயும் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள்; உருவாகிக்கொண்டேயிருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

– தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன். –