வாசகர் முற்றம் — அங்கம் 05: எங்கள் தங்கராஜா திரைக்கு வந்தவேளையில் பிறந்த மதுரை கல்லுப்பட்டி ராஜா! மலையடிவாரங்களில் இலக்கியசுவாசத்தில் திழைத்தவரின் வாசிப்பு அனுபவங்கள்!

கருப்பையா ராஜா“இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை 
இதயத்தில் விழுந்தது திருமண மாலை 
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக்கோலம்”

இந்த பாடல் திரையிலும் வானொலியிலும் ஒலித்தவேளையில் சங்ககால தமிழர் நாகரீகம் தழைத்த ” கீழடி” அமைந்துள்ள மதுரையில் கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த இந்தக்குழந்தைக்கு தற்போது 45 வயதாகிவிட்டது.

இந்தப்பாடலில் கவியரசு கண்ணதாசன் இப்படியும் ஒரு வரி எழுதியிருப்பார்: “கவிஞர் சொன்னது கொஞ்சம் – இனி காணப்போவது மஞ்சம்” இதே கவிஞர், பார்மகளே பார் திரைப்படத்திலும் ஒரு பாடல்வரியை இவ்வாறு எழுதியிருந்தார். “நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே. அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”. இந்தப்பத்தியில் இடம்பெறும் முதலாவது பாடல் வரிகள் வரும் திரைப்படம் எங்கள் தங்கராஜா வெளியான காலத்தில், அந்த அம்மாவுக்கு பிரசவ வலி கண்டுள்ளது. கட்டிலில் கவிதை படித்ததால் , தொட்டிலுக்கு வந்தது அந்தக்குழந்தை. அதனால் ராஜா எனப்பெயரிட்டார்கள்.

இந்த ராஜா பிறந்த கல்லுப்பட்டியைச்சுற்றியிருக்கும் ஆறு விவசாயக் கிராமங்களைச்சேர்ந்த மக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றுகூடி கொண்டாடும் முத்தலம்மன் திருவிழாவிற்காகவும், மழைவேண்டி விழா எடுக்கும் மாரியம்மன் திருவிழாவிற்காகவும் சப்பரம் கட்டுதல், ஓவியம் தீட்டுதல், பேப்பர் கூழால் பொம்மைகள் செய்தல், கதாகாலட்சேபம் மற்றும் நாடகத்திற்கு வேஷம் கட்டி ஆடுதல் இவை அனைத்திலும் தனது பெற்றோரும் உற்றோரும் இணைந்து தணியாத ஆர்வத்துடன் கலந்துகொள்வதையே பார்த்துவளர்ந்தவர்தான் இந்த ராஜா.

தமிழர்களின் தொன்மையான கலையை ஆராதித்து கொண்டாடிய மண்ணையும் மக்களையும் நேசித்த குடும்பத்தில் கருப்பையா – லட்சுமி தம்பதிக்கு 1973 இல் கடைசியாக பிறந்த இந்த கடைக்குட்டி ராஜா, பூவுலகை கண்டு அழுது – சிரித்தவேளையில், திரையில் ஓடுகிறது சிவாஜி – மஞ்சுளா இணைந்து நடித்த எங்கள் தங்கராஜா. அது திரையில் ஓடட்டும்! 

“எங்கள் வீட்டில் ஓடவும் ஆடவும் பாடவும் வந்துபிறந்திருக்கிறான் எங்கள் தங்கராஜா. இந்தச் செல்வத்திற்கு ராஜா பெயர் சூட்டி ராஜாவாக்குவோம் என நினைத்தனர் மஞ்சத்தில் கவிதை எழுதியவர்கள்.

ராஜாவின் அப்பா, பணிநிமித்தம் திண்டுக்கல்லில் இருந்தமையால் அங்கும் வாழ்ந்திருக்கும் ராஜாவுக்கும் சகோதரங்களுக்கும் அங்கிருந்த மலைக்கோட்டை வார விடுமுறை நாட்களில் தங்களுக்கானவை என்று பெருமிதம் பொங்கச்சொல்கிறார். அங்கு அப்பா தற்புனைவுகளோடு சொல்லித்தந்த கதைகள் ஏராளம். ராஜாவின் தாய்மாமனார் இயற்கை வைத்தியர். கோயம்புத்தூரில் அவருக்கு உதவியாக இருந்த ராஜாவின் மூத்த சகோதரர்தான் இவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டியவர் என்கிறார்.

அவரை தனது வழிகாட்டி எனவும் சொல்கிறார். முத்துகாமிக்ஸ் தொடங்கி, சுஜாதாவின் 401 காதல் கவிதைகள், குறுந்தொகை அறிமுகம் வரையில் பல புத்தகங்களை பரிசாக வழங்குபவர். இது தவிர நல்ல திரைப்படங்கள், திரையிசைப்பாடல்களை தமிழ் – ஆங்கிலத்தில் இன்றுவரையில் அறிமுகம் செய்துவருபவர். அத்துடன் சிறந்த ஓவியர். அவரால் தனக்கும் ஓவியத்தில் ஆர்வம் வளர்ந்து ஓவியங்களும் வரையத்தொடங்கினேன் என்கிறார் ராஜா.

இவரது மூத்த சகோதரர் ஜீ.டீ. நாயுடு போன்று தானாகவே பொறியியல் கற்றுத்தேறி ஒரு தொழிற்சாலையை நடத்திக்கொண்டிருக்கிறார். “எங்கள் சிறுவயதில் நாம் சண்டையிட்டுக்கொண்டது புத்தகங்களுக்காகத்தான்.” எனவும் சொல்லும் ராஜாவுடன் மேலும் உரையாடியபோது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

தேவன்குறிச்சிமலை, ஈஸ்வரன்கோவில் மலை என அழைக்கப்படும் சமணர் குகைச்சிற்பங்கள் உள்ள கல்லுப்பட்டி ஊரிலிருந்து வந்த அப்பா, வரலாற்றுச்சிறப்புமிக்க மலைக்கோட்டை மலையிலிருக்கும் திண்டுக்கல்லில் வசித்த அப்பா, அடுத்து எங்களை குடியமர்த்தியது மதுரையில் திருப்பரங்குன்றம் மலையடிவாரம்தான்.

எனது பாடசாலைக்காலம் இங்குதான் ஆரம்பமாகியது. ஒரே தெருவில் வசித்த வடிவேல் ஹோசிமின் எனது வகுப்புத்தோழன். அவன் பின்னாளில் எழுத்தாளனுமானான். அற்பாயுளிலும் மறைந்தான்.

அவன் எழுதிய அகத்தினிலே கவிதை – கதைத்தொகுப்பிலிருந்துதான் உங்களது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கவிதா மண்டலம் நிகழ்ச்சியில் ஒரு கவிதையை சமர்ப்பித்தேன். பின்னாளில், வடிவேல் ஹோசிமின், இளங்கோ ஆகிய நண்பர்களுடன் திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் நடக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் விழாக்களுக்கு செல்வேன். எங்கள் பள்ளியில் நடக்கும் ஆண்டுவிழாவில் தனது அதிரடிப்பேச்சுக்களினால் எம்மை பெரிதும் கவர்ந்த அண்ணன் சு. வெங்கடேசன் எனது மற்றும் ஒரு ஆதர்சம். இவர் எழுதிய நூல்கள்தான்: காவல்கோட்டம், வேள்பாரி. 

அவருடன் உரையாடுவதற்காகவே செல்வோம். எங்கள் சந்திப்பு இரவுநேரத்தில் நிலாக்காலத்தில் இடம்பெறும். சாலை ஓரம், தேநீர்க்கடை என்பனதான் எங்கள் அரங்கம். எழுத்துலக ஜாம்பவான்கள் என்பதை அறியாமலேயே பலரதும் இலக்கியப்பேச்சுக்கள் எம்மை வசீகரித்த காலம் அது. இது ஒரு பக்கம். ஆனந்தவிகடனில் ” நட்பாட்டம்” கவிதைத் தொடரைத்தந்தவரும், எண்ணற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் வரவாக்கிக்கொண்டிருப்பவருமான எழுத்தாளர் ஆத்மார்த்தி என்ற ரவிசங்கரும் எனது நெருங்கிய நண்பரானது மற்றும் ஒரு பக்கம். அவரது பேச்சில் கவிதையும் நகைச்சுவையும் தொடர்ந்து சுரந்துகொண்டிருக்கும்.

அவரது சகோதரி உமாவும் அவரது கணவர் கிருஷ்ணகுமாரும் திருப்பரங்குன்றத்தின் மலையடிவாரத்தில் கடை வைத்திருக்கும் சிபுவும் எங்கள் இலக்கிய வாசகர் வட்டத்தில் இணைந்திருந்தனர். எங்கள் நட்புவட்டத்தில் எப்போதும் புத்தகங்களும் இளையராஜாவின் இசையும்தான் பேசுபொருள்.

சுஜாதா சாரின் பரமவிசிரிகளாக நாம் இருந்தோம். அவரது ” கற்றதும் பெற்றதும்” எம்மை பெரிதும் கவர்ந்த புத்தகம். அவர் எமக்கு பலரையும் அடையாளம் காண்பித்தார். அதனால் எமது தேடுதலும் தீவிரமடைந்தது.

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளுக்கு ” புரமோஷன்” தேடுவார்கள். ஆனால், சுஜாதா அவ்வாறில்லாமல் தனக்கு மாற்றுக்கருத்துள்ளவர்களையும் படிக்குமாறு தூண்டியவர். ஆனந்தவிகடனின் நீண்டகால வாசகனாகவும் இருக்கின்றேன். இந்தப்பழக்கம் எனது ஐந்தாவது வகுப்பில் தொற்றிக்கொண்டது. 

மெல்பனுக்கு வந்தவிடத்தில் எனது வாசிப்பு பழக்கத்தை மேலும் வளர்த்தது வாசகர் வட்டம். இங்குதான் கீழடி ஆய்வுகளில் ஈடுபடும் முத்துக்கிருஷ்ணன், இலங்கை எழுத்தாளர்கள் ஜே.கே. மற்றும் முருகபூபதி அய்யா ஆகியோரின் நட்பும் கிடைத்தது. மாதாந்தம் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளை சீராக ஒழுங்குசெய்துவரும் இலக்கிய ஆர்வலர்கள் சிவக்குமார் – சாந்தி தம்பதியருக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்.

தேர்ந்த வாசகர் கூட்டத்தை இந்த வட்டத்தில் காண்கின்றேன். பாரதியுடனும் வள்ளுவருடனும் தினமும் பேசிக்கொண்டுதானிருக்கின்றேன். எனது குடும்பத்தில் இருசகோதரர்களும் நல்ல ஓவியர்கள். அதனால் எனக்கும் இயல்பாக ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் பிறந்திருக்கவேண்டும். கடந்து சென்ற 2018 ஆம் ஆண்டு எனக்கு வளமாக இருக்கவில்லை. தொழில் தேடும் படலத்தில் இருந்தமையும் ஒரு காரணம். அந்த சோர்வான காலத்தை கடந்துசெல்வதற்காக மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன். மலர்ந்துள்ள 2019 இல் என்னுடன் பயணிக்க ஒரு அதிர்ஷ்ட தேவதையை (Good Luck Fairy ) வரைந்தேன்.

எனது நம்பிக்கை வீண்போகவில்லை. இந்த ஆண்டின் தொடக்கமே எப்போதும்போல் கோடையில் தொடங்கியிருந்தாலும், எதிர்காலத்திற்கான கொடையாக நம்பிக்கையை தந்திருக்கிறது.

இருபது வருடங்களாக என்னோடு பயணிக்கும் காதல் மனைவி விஜயலட்சுமி. கேரள படைப்பாளுமை பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் சிதம்பர நினைவுகள் போன்றது எமது பயணமும். அறிவியலின் ஆச்சர்யமாக பத்துவருடங்களின் பின்னர், சித்தார்த் – அனன்யா என இரண்டு செல்வங்கள். “

இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் ராஜாவின் கரங்களில் ஒரு நோட்டுப்புத்தகமும் ஏதாவது ஒரு புதிய நூலும் இருப்பதையும் அவதானித்துள்ளேன். இவரும் படித்ததில் பிடித்ததை குறிப்புகளாக எழுதிவைப்பவர்.

வாசகர்வட்டத்தின் சந்திப்புகளில் குறிப்பிட்ட நோட்டுப்புத்தகத்திலிருந்து அள்ளி அள்ளி தெளிப்பார். ஒருநாள் திடுதிப்பென நான் தொலைவில் வசிக்கும் மோர்வல் என்ற ஊருக்கு வந்திறங்கினார். இவருடன் வந்தவர் தமிழக எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்.

நானும் முத்துக்கிருஷ்ணனும் உரையாடிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த ராஜா எனது நூலகத்திற்குள் பிரவேசித்து தேடுதலில் ஈடுபட்டார். வாசிப்பு இவருக்கு தாகம்.

இனிய இலக்கிய வாசக நண்பர் கருப்பையா ராஜாவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com