1. சிதறிப்போன ஆசைகள்
பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின
சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்
ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை
பொங்கி வெடிகொளுத்த ஆசை
பொரிச்ச மீனைருசிக்க ஆசை
மிட்டாய் வாங்கிஉண்ண ஆசை
மீண்டும் சிறுவனாய்வாழ ஆசை
என்னசெய்வோம் இழந்து விட்டோம்
ஏங்கித்தான் என்ன பலனிங்கு
வாழும்வாழ்வை வகையாய் வாழ
வகையாய் நாமும் கூடிவாழ்வோம்.
2. பொங்கல் நினைவுகளின் நன்றி….
ஊரைவிட்டு ஓடியே வந்தோம்-அன்று
ஊர்நினைவுகளை மறக்க வில்லை-இன்றும்
சின்னச் சின்ன ஆசைகளைத்- தொலைத்தோம்
சிறுதளவாவது மறந்தோம்-நாமிங்கு பொங்கி
மேட்டுர்க் கிராமத்துச் சீர்மிகு-மட்பானையிலே
மஞசளிலையும் இஞ்சி யிலையும்-கட்டியே
மாவிலை தோரணங்கள் எனவே-நாமும்நன்றே
மண்மிது கல்வைத்து நெருப்பிட்டுப்-பொங்கினோம்
மாரி காலத்துக் குளிரிலுமன்று-எமக்காய்
மகிழ்வுடனே கதிர்வீசிக் கதிரவனும்-கிழக்குதித்தான்
மங்கையர்கள் கலகலப்பாய்- மகிழ்வுடன் பொங்கிடவே
மட்பானைப் பொங்கலும் கிழக்கே-பொங்கியேவழிந்தது
குடும்பங்கள் சிலசேர்ந்து நன்றே- அன்று
குதூகலமாய்ப் பொங்கலினைப்-பொங்கியே
புலத்துப் பொங்கல் நினைவுகளை-இரைமீட்டு
புல்லரித்துப் பூரித்துப் பொங்கி-நின்றனர்
இழந்ததை யெல்லாம் பெற்றிடல்-முடியுமோ
இருப்பதில் சிறப்பாய் இன்புற்றிட-முயன்றோம்
முற்றத்தில்வைத்து மட்பானை-கல்லடுப்பில்
மட்டிலா மகிழ்வுடன் பொங்கியே-மகிழ்ந்தோம்
பொங்கல் நிகழ்வினைச் சிறப்பாய்-பலரும்
பொறுப்புடனேபடம் பிடித்து -பகிர்ந்தார்
பதிவுகள்பலபதிந்தோம் நாமும்-மகிழ்வுடன்
பாற்பொங்கல் சுவைபோன்றே-பழகிடுவோ மென்றும்
இறுக்கமான நம் புலம்பெயர்-வாழ்வில்
இன்புடனே இணைந்து வந்து-ஒன்றாய்
ஒற்றுமையாய் ஒத்தாசையாய்-பொங்கினீர்
ஒப்பிலா மகிழ்வுடனே நன்றி-கூறுகின்றோம்.
vilansei@hotmail.com