ஆய்வு: தொண்டைமண்டலத்தில் தொல்பழங்காலப் பதிவுகள்

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.

தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).

பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 – 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).

கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கற்கருவிகள் கோற்றலை ஆற்றின் பள்ளத்தாக்கிலும் அதன்கிளை ஆறான ஆரணியாற்றுப்படுகைகளிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் முதன்முதலாகத் தமிழ்நாட்டில்தான் பழங்கற்காலக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1863-இல் இராபர்ட் புரூஸ்புட் என்ற நிலவமைப்பியல் ஆய்வாளர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரத்துக்கு அருகில் முதன்முதலாகக் கற்கருவிகளைக் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகே அத்திரம்பாக்கம் என்ற ஊருக்கருகில் கோற்றலையாற்றுப் பள்ளத்தாக்கின் மேற்பரப்பாய்வில் அதிகமான கற்காலக்கருவிகள் கண்டுபிக்கப்பட்டன. 1962 – 1964-ஆம் ஆண்டு மத்தியத்தொல்லியல் துறையும் 2003 – 2004-ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றும் அப்பகுதியில் அகழாய்வுகள் மேற்கொண்டு பல அரிய செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆய்வாளர்கள் இந்தியாவின் பழைய கற்காலத்தை இரண்டு தொழில்முறைகளாகப் பிரித்துள்ளனர்; வடஇந்தியாவில் சோன் (Soan or Sohan) ஆற்றுப்பள்ளத்தாக்கில் கிடைக்கும் கற்கருவிகளைச் சோன் தொழில்முறை என்றும் தமிழ்நாட்டில் சென்னைக்கருகே கோற்றலையாற்றின் பள்ளத்தாக்குப் பகுதிகளில்கிடைக்கும் கற்கருவிகளைச் சென்னைத் தொழில்முறை (Madras Industry) என்றும் அழைக்கின்றனர்; சென்னைக் கற்கருவிகளில் ஒருவகைக் கைக்கோடாரிகள் மிக அதிகளவில் கிடைப்பதால் அதனைக் கைக்கோடாரிப்பண்பாடு (Handaxe Culture) என்றும் அழைப்பர். இக்கற்கருவிகள் கூழாங்கல்லிலிருந்து (Quartizite) செய்யப்பட்டவைகளாகும். பழையகற்காலக்கருவிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர், புத்தூர், வதியூர், சேத்துப்பட்டு, மாகானியம், மன்னூர், ஒரகடம், சாலமங்கலம், சிறுவஞ்சூர், திருப்பெரும்புதூர், தொல்லாழி, நன்மங்கலம், பல்லாவரம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன (சீதாராம் குருமூர்த்தி,2008:12).

தொண்டைமண்டலப் பகுதிகளில் பழைய கற்காலப்பண்பாடு கீழ்க்கண்ட இடங்களில் காணக் கிடக்கின்றன: திருப்பெரும்புதூர், சிவன்கூடல், சிறுமாத்தூர், மாகானியம், மதுரமங்கலம், மண்ணூர், நெமிலி, திருமங்களம் கண்டிகை, வடமங்களம், பிள்ளைச்சத்திரம், ஜம்போடை, ஆரியம்பாக்கம், ஒரகடம், தோண்டாங்குளம், வளையாக்கரணை, சாலமங்கலம், சோமங்கலம், நாட்டரசம்பட்டு, தொள்ளாழி, சிறுவாஞ்சூர், உமையாள்பரணஞ்சேரி, பன்ருட்டி, செங்குன்றம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு, நாராயணபுரம், வெள்ளாட்டுக்கோட்டை, இராமபுரம், வடக்குப்பட்டு, ஆப்பூர், கல்வாய், அம்மணம்பாக்கம், திருக்கச்சூர், அஞ்சூர், கொளத்தூர், பூண்டி, ஒட்டந்தாங்கல், வேலியூர், விசகண்டிகுப்பம், பரந்தூர், தென்னேரி, வதியூர், எடமச்சி, பெரமனல்லூர், மங்களம், அச்சரப்பாக்கம், எண்டத்தூர், கீழ்வலம், பில்லாந்திகுப்பம், பள்ளிப்பேட்டை, மலைவையாவூர், ஸ்ரீபேர்பாண்டி, உத்தமநல்லூர், குணங்கொளத்தூர், கருங்குழி, புதுப்பட்டு, தொன்னாடு, நெல்லி, நேமம், வெள்ளப்புத்தூர், பெருவழி, கழணிப்பாக்கம், கரிகிலி, சூரை, நன்மங்கலம், கன்னிமங்களம், நல்லாமூர், பழவூர், மாமல்லபுரம், பல்லாவரம், ஆசூர், அக்கபுரம் போன்ற ஊர்களில் பழையகற்காலப் பண்பாடு காணப்படுகிறது என்பதைக் கி.குமார் தொல்லியல் சான்றுகளுடன் குறிப்பிட்டிருக்கிறார் (நடன.காசிநாதன்,2010:13-33).

புதியகற்காலப்பண்பாடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கரடுமுரடான கற்கருவிகளைப் பயன்படுத்தி நாடோடிகளாக வாழ்ந்த பழங்கற்காலமக்கள் தாங்கள் பயன்படுத்திய கற்கருவிகளை நேர்த்திமிக்க கருவிகளாகமாற்றியும் வாழ்க்கைத்திறனில் முன்னேற்றேம்கண்டும் வாழத்தலைப்பட்டனர்; நாடோடிகளாகத்திரிந்து உணவைத்தேடிச் சென்றவர்கள் நிலையாக ஓரிடத்தில்தங்கி உணவின்மூலங்களைத் தாங்களே அறிந்து பயிரிடத்தொடங்கினர்; இக்காலக்கட்டத்தில் மட்பாண்டங்களைப் பயன்படுத்தும் திறனையும் அறிந்தனர். இதுவே புதியகற்காலப்பண்பாடு என்றழைக்கபடுகிறது (நடன.காசிநாதன்,2010:34). நாடோடிகளாக வாழ்ந்தமக்கள் நாளடைவில் கூரைவேய்ந்த வீடுகள் அமைத்து வாழத்தொடங்கினர்; பழையகற்காலக் கருவிகளைப்போல் அல்லாமல் வழுவழுப்பான கூர்மையான கற்கருவிகளைச் செய்யத்தொடங்கினர்; இக்கருவிகளைக்கொண்டு வேளாண்மை செய்யத்தொடங்கினர். தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இப்பண்பாட்டுக் கருவிகள் காணப்படுகின்றன. இவர்கள் வேளாண்மைக்கு உதவும் விலங்கினங்களான ஆடு மாடுகளை வளர்த்தனர்; கேழ்வரகு, பச்சைப்பயிறு, கொள்ளு ஆகிய தானியங்களைப் பயிர்செய்தனர். இக்காலத்தில் இறந்தவர்களைக் குழிதோண்டிப்புதைக்கும் மரபு தோன்றியுள்ளது. இம்மக்கள் இறந்தவர்களின் உடலை வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டிற்கு அருகிலேயே புதைத்தனர் (சீதாராம் குருமூர்த்தி,2008:13).

புதிய கற்காலப்பண்பாடு குறித்த சான்றுகள் தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திலுள்ள பையம்பள்ளி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இப்புதிய கற்காலப்பண்பாடு குறித்த சான்றுகள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியகற்காலப்பண்பாடு குறித்த சான்று முதன்முதலில் சென்னைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சுவாமி என்பவரால் காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள அக்கபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் புதியகற்காலப்பண்பாடு குறித்த சான்றுகள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறையின் உதவித்தொல்லியல் கண்காணிப்பாளர் கோ. திருமூர்த்தி மதுராந்தகம் வட்டத்தில் களஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டபோது ஒரத்தி, பள்ளிப்பேட்டை உள்ளிட்ட பல ஊர்களில் புதிய கற்காலப்பண்பாடு குறித்த சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டன. மேலும், சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் பேராசிரியர் ப.சண்முகம் அவர்களால் பல இடங்களில் புதியகற்காலக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய கற்காலப்பண்பாடு குறித்த தடயங்கள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன: மாகானியம், ஒரத்தி, ஆணைக்குன்னம், சாலமங்கலம், கல்வாய், பழையதாம்பரம், திருப்பெரும்புதூர், கீழ்ப்பட்டு, நிலாமங்களம், பெரமனல்லூர் (நடன.காசிநாதன், 2010 : 34 – 38).

பெருங்கற்காலம்
புதியகற்காலத்திற்கு அடுத்தநிலை பெருங்கற் காலமாகும். மக்கள் இறந்தவர்களைப் புதைக்கும்போது பெருங்கற்களைப் பயன்படுத்தி ஈமச்சின்னங்களை உரு வாக்கினர். அதனால் இக்காலம் பெருங்கற்காலம் எனப் பெயர்பெற்றது. மேலும், இக்காலமக்கள் இரும்பைப் பயன்படுத்தத் தொடங்கியதால் இரும்புக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பலவகையாகக் கிடைக்கின்றன. அவை கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, கல்வரிசை, தொப்பிக்கல், குட்டைக்கல், ஈமத்தாழி, ஈமப்பேழை, குடைவறை, தாழ்வறை என்பவைகளாகும். இவைகள் காஞ்சிபுரமாவட்டத்தில் பெருமளவில் காணக்கிடக்கின்றன. இம்மக்களின் சடங்குமுறைகள் பல இடங்களில் காணக்கிடக்கின்றன. இவர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையில் ஈமச்சடங்கு முறையினைப் பெரிதும்பின்பற்றியுள்ளனர். இவர்கள் கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, கல்வரிசை, ஈமத்தாழி, ஈமப்பேழை போன்றமுறையில் இறந்தவர்களை அடக்கம் செய்துள்ளனர். தொண்டைமண்டலப் பகுதிகளில் இச்சான்றுகள் கிடைத்துள்ளன. இதனைப் பின்வரும் பகுதியில் தெளிவாகக்காட்டப்பட்டுள்ளது:

கல்திட்டை: கல்திட்டை என்பது தரைமட்டத்திற்குமேல் பெரியகருங்கற்களைக்கொண்டு நான்குபுறமும் சுவர்போல் அமைக்கப்பட்டசதுரமான அல்லது நீள்சதுரமானஅறையால் உண்டாக்கப்பட்டது. தரையைக்கற்கொண்டு சமப்படுத்தி மேல்பகுதி ஒரு பட்டைக்கல்லையோ அல்லது இரண்டு மூன்று பட்டைக்கற்களையோ கொண்டு மூடப்பட்டது. இத்தகைய கல்திட்டைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சானூர், பெரும்பேர் ஆகிய இடங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

கல்பதுக்கை: நான்குபுறமும் நான்கு பலகைக்கற்களைப் பூமியில் ஊன்றிநிறுத்தி, ஓர்அறை உருவாக்கப்பட்டது. இப்பலகைக்கற்கள் ஒன்றோடு ஒன்றின் முனையும் ஒருபக்கம் நீட்டி நிறுத்தப்பட்டு ‘ஸ்வஸ்திக்’ வடிவத்தில் இருக்கும். இதன் மேற்பகுதியில் பெரியபலகைக் கல்லால் மூடப்பட்டிருக்கும். இதன்மேல் மண் அல்லது கற்களைக்கொண்டு மேடு எழுப்பப்பட்டது. இத்தகைய ஈமச்சின்னங்கள் கல்பதுக்கை என்றழைக்கப்படுகிறது. இக்கல் பதுக்கை திருவாலங்காடு சிவன்கோவில் அருகில் உள்ள திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது.

கற்கிடை: கற்கிடை என்பது ஆழமான குழியைத்தோண்டி அதனுள் ஈமத்தாழி அல்லது ஈமப்பேழை ஆகியவற்றோடு ஈமப்பொருட்களை வைத்து அதன்மீது மணல் அல்லது கற்கள் குவித்துவைக்கப்படும். இதனைச்சுற்றிக் கற்கள் கொண்டு வட்டமாக அமைக்கப்படும். இவ்வகை ஈமச் சின்னத்தினைக் கற்கிடை அல்லது கல்வட்டம் என்றழைப்பர். இவ்வகையான ஈமச்சின்னங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்னத்தூர், குன்னவாக்கம், சானூர், பல்லாவரம், பெரும்பேர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன.

ஈமத்தாழி: ஈமத்தாழி என்பன கீழ்ப்பகுதி குவிந்தும் மேற்பகுதி அகன்றவாயுடனும் தோற்றமளிக்கும் சுடு மண்ணாலான தாழிகளாகும். இவை ஆழமான குழியில் ஈமப்பொருட்களுடன் வைத்துப் புதைக்கப்பட்டன.

ஈமப்பேழை: ஈமப்பேழை, சுடுமண்ணால் நீண்டபெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இப்பேழையின் அடிப்பகுதி பல கால்களுடனும் மேலுள்ள மூடிப்பகுதி ஆடு போன்ற விலங்கு உருவத்தினைக் கொண்டிருக்கும். இவ்வகை ஈமச்சின்னங்கள் குன்னத்தூர், பெரும்பேர், சானூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. பெருங்கற்காலமக்கள் நாகரிக வாழ்க் கையை மேற்கொண்டனர் என்பதை இந்த ஈமச்சின்னங்களில் கிடைத்துள்ள பொருட்களைக்கொண்டு அறியமுடிகிறது. அவர்கள் சுட்டசெங்கற்களைக் கொண்ட வீடுகளில் வாழ்ந்தனர் என்பது குன்னத்தூரில் மேற்கொண்ட அகழாய்வில் தெரியவருகிறது. அவர்கள் குடிநீருக்காக உறைகிணறுகளைத் தோண்டியும் வீட்டிலிருந்த கழிவுநீரைச் சுடுமண்குழாய்மூலம் வெளியேற்றியுள்ளனர். அகழாய்வுகளில் மட்கலன்கள், இரும்பிலானபொருட்கள் அதிகம் கிடைப்பதால் இம்மக்கள் இத் தொழில்களையே முக்கியத்தொழில்களாகக் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. அவர்கள் கருப்பு சிவப்பு மட்கலன்கள், கருப்பு மட்கலன்கள், சிவப்பு மட்கலன்கள், செம்பழுப்புப்பூச்சு என நான்குவகை மட்கலன்களைப் பயன்படுத்தியுள்ளனர். வேட்டையாடுவதற்குப் பயன்படும் குத்துவாள், வேல்கள், முள்கொண்ட அம்புமுனைகள், ஈட்டிகள் போன்றவையும் வேளாண்மைக்கருவிகளான மண்வெட்டிகள், கொத்துகள், கோடாரிகள், அரிவாள்கள், கடப்பாறைகள் ஆகியவையும் பயன் படுத்தப்பட்டுள்ளன. வேளாண்மைத்தொழில் நாகரிகவளர்ச்சிக்கு அடிப்படையான தொழிலாகும். புதிய கற்காலத்தில் தொடக்கநிலையில் இருந்த வேளாண்மைத் தொழில் பெருங்கற்காலத்தில் சிறப்பான நிலையை அடைந்தது. இதனைக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் இருப்பதன் மூலமும் உறுதிப்படுத்தலாம் (சீதாராம் குருமூர்த்தி,2008:13-15).

தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருங்கற்சின்னங்கள் பின்வரும் இடங்களில் கிடைத்துள்ளன: பெரும்பேர், கடைமலைப்புத்தூர், சானூர், குன்றத்தூர், அகரம், அச்சரப்பாக்கம், அய்யஞ்சேரி, ஆனூர், ஆமூர், ஆலத்தூர், இராசகுளிப்பேட்டை, உத்திரமேரூர், எடர்குன்றம், எருமையூர், ஒழிலூர், கடப்பேரி, கடமலை புத்தூர், கல்வாய், கழனிப்பாக்கம், களத்தூர், கனகப்பட்டு, காரணித்தாங்கல், கிளாம்பாக்கம், குமிழி, குருவன்மேடு, குன்றத்தூர், குன்னவாக்கம், கூடுவாஞ்சேரி, கோட்டமேடு, சாஸ்திரம்பாக்கம், சித்தாலப்பாக்கம், சிறு களத்தூர், சிறுகுன்றம், சிறுதாவூர், செங்குன்றம், செட்டிபட்டு, செம்பாக்கம், தண்டலம், திருசூலம், திருநீர்மலை, திருப்போரூர், திருவடிசூலம், நடுவக்கரை, நத்தம், நத்தம்பாக்கம், நந்திவரம், நன்மங்கலம், நெடுங்குன்றம், நெல்லிக்குப்பம், பரங்கிமலை, பரனூர், பல்லாவரம், பழையசீவரம், பள்ளியகரம், பாஞ்சாலி, பாண்டூர், புதுப்பாக்கம், புலிப்பாக்கம், பூண்டி, பெருங்களத்தூர், பெருநகர், பெரும்பாக்கம், பெரும்பேர், பொத்தூர், பொருந்தவாக்கம், பொன்மார், மடையாத்தூர், மணமை, மயிலை, மலைப்பட்டு, மலைவையாவூர், மாம்பட்டு, மேலக் கோட்டையூர், மூசைவாக்கம், வடக்குப்பட்டு, வண்டலூர், வெங்கிடாபுரம், வெங்கூர், வேதநாராயணபுரம், வேம்பாக்கம், வேம்பேடு, வையாவூர் (நடன. காசிநாதன்,2010:49–54).

பெருங்கற்கால மக்களின் சமூகவாழ்க்கை
பெருங்கற்காலமக்கள் தங்கள் வாழ்வின் பல்வேறு வசதிகளுக்காகப் பல தொழில்களைக் கற்று அவற்றைத் திறம்படச்செய்துள்ளனர். அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட ஈமச்சின்னங்களில் மட்கலன்கள், இரும்பாலான பொருட்கள் போன்றவைகள் அதிக அளவில் கிடைக்கின்றன. இதிலிருந்து சக்கரத்தில் வைத்து வனையப்பட்டமட்கலன்கள் செய்யும் மட்கலத்தொழிலும் இரும்புப்பொருட்கள் செய்யும் தொழிலும் அக்காலமக்களின் முக்கியத்தொழில்களக இருந்திருக்கின்றன என்று தெரிகிறது. அவர்கள் ஊர்களை அமைத்துக்கொண்டு கூட்டமாக வாழ்ந்தனர்; கூரைவீடுகளாக இல்லாமல் செங்கற்களாலான கட்டிடங்களைக் கட்டிக்கொண்டு வாழும் நாகரிக வாழ்க்கையினை மேற்கொண்டிருந்தனர். அவர்களுக்கு வேளாண்மை முக்கியத்தொழிலாக இருந்திருக்கிறது. அவர்கள் ஏரிகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி அவற்றை வேளாண்மைக்கும் அன்றாட வாழ்வின் உபயோகத்திற்கும் பயன்படுத்திக்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ள எல்லா இடங்களுக்கு அருகிலும் ஏரிகள் அல்லது நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. எனவே, ஏரிகளை முதலில் உருவாக்கியவர்கள் பெருங்கற்கால மக்கள் எனலாம். குன்றத்தூரில் அகழாய்வு செய்யப்பெற்ற ஒரு ஈமச்சின்னத்தில் நெல், உமி நிரம்பிய கிண்ணம் கிடைத்துள்ளது. இதிலிருந்து இப்பகுதியின் பெருங்கற்காலமக்கள் நெல்லை பயிரிட்டார்கள் என அறியமுடிகிறது. சானூர் அகழாய்வில் இரும்பு தூண்டில்கள் கிடைத்திருப்பதைக் கொண்டு இம்மக்கள் மீன்பிடிக்கும் தொழிலினையும் மேற்கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. இவர்கள் குதிரைகளை வளர்த்து அவற்றைத் தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கும் போர்செய்வதற்கும் உபயோகப்படுத்தியுள்ளனர். சானூர், குன்றத்தூர் பெருங்கற்சின்னங்களில் இரும்பாலான குதிரைக் கடிவாளங்கள் கிடைத்திருப்பது இதனை உறுதிப்படுத்தும். ஒரு கூட்டத்தைச்சேர்ந்தவர்கள் மற்றொரு கூட்டத்தின்மீது அடிக்கடி போர்தொடுத்தனர். எனவே, இவர்கள் வாழ்க்கையில் போர் முக்கியப்பங்கு வகித்துள்ளது. இம்மக்கள் பல வண்ணக்கல்மணிகளால் செய்யப்பெற்ற அணிகளை அணிந்தனர்; சங்கு வளையல்களைப் பூண்டனர் (நடன. காசிநாதன், 2010 : 47 – 48).

ஈமச்சடங்கு
இவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களின் உடலைத் திறந்தவெளியில் கிடத்திவிட்டு அதனுடைய சதைப்பற்று விலங்குகளாலும் பறவைகளாலும் இயற்கையாலும் அழிக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள எலும்புக்கூட்டை மட்டும் எடுத்துப் பெருங்கற்சின்னங்களில் புதைத்தனர். இதுபோன்ற பழக்கத்தை பார்சி இனத்தவர் இன்றும் கடைப் பிடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்களைத் தீயிட்டு எரித்த பின்னர் சாம்பலைச் சேகரித்து அதனை மூன்று அல்லது ஐந்து கால்களுடைய சிறிய ஈமத்தாழிகளில் இட்டுப்புதைக்கும் பழக்கத்தையும் இவர்கள் கொண்டிருந்தனர். இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில் பெருங்கற்காலமக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்கள் எழுப்பிய ஈமச்சின்னங்கள் இதைப் புலப் படுத்துகின்றன. ஈமச்சின்னங்களின் கிழக்குப்புறத்தில் காணப்படும் இடுதுளை (Port hole) ஞாயிறு வழிபாட்டைக் குறிக்கிறது. சிவ வழிபாடும் முருக வழிபாடும் இக்காலத்தில் பரவலாக இருந்துள்ளது. தாய் தெய்வ வழிபாடு இவர்களிடையே மிகவும் சிறப்புற்றிருந்தது எனலாம் (நடன. காசிநாதன், 2010:48-49).

முதன்முதலில் உலக நாகரிகங்கள் தோன்றிய இடங்கள் ஆற்றங்கரைப்பகுதிகள், கடற்கரைப்பகுதிகள் ஆகும். பண்டைய திராவிடர் நாகரிகம்கூடச் சிந்துசமவெளியில் தோன்றியுள்ளது. இதனைச் சிந்துசமவெளி நாகரிகம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் நைல்நதி ஆற்றங்கரையில் எகிப்து நாகரிகம் தோன்றியது என்பது வரலாற்று உண்மையாகும். பண்டைத்தமிழகத்தில் பொருநை ஆற்றங்கரையில் கொற்கைமாநகரமும் வைகை ஆற்றங்கரையில் மதுரைமாநகரும் பூம்பூகார் ஆற்றங்கரையில் சோழநாடும் ஆன்பொருநை ஆற்றங்கரையில் கொங்குநாடும் வேகவதி, பாலாறு ஆகிய ஆற்றங்கரையில் தொண்டைநாட்டுத் தலைநகரமான காஞ்சிமாநகரும் தோன்றியது என்பது வரலாற்று உண்மையாகும். இவ்வரலாற்று நகரங்களில் கிடைத்த தடயங்கள் பண்பாட்டுச்சின்னங்களாகக் காணக்கிடக்கின்றன.

வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கின்ற பல்லவமேடு என்ற இடத்தில் கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரையிலான நான்கு காலக்கட்டத்தைச்சேர்ந்த கட்டிடங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றுடன் உறைகிணறுகள், பல்வகை மட்பாண்டங்கள், சங்கு வளையல்கள் போன்றவைகள் கிடைத்துள்ளன. தமிழகத்தொல்லியல்துறை அகழாய்வினை மேற்கொண்டதில் மூன்று பண்பாட்டுப்பிரிவுகள் கொண்ட நாகரிகம் இருந்துள்ளதை வெளிப்படித்திக்காட்டியுள்ளது. இங்கு சிவப்பு மட்கலன்களும் பளிங்கு மற்றும் கண்ணாடிகளும் சுடுமண் பொம்மைகளும் கிடைத்துள்ளன. இன்று சுமார் 21/2 கி.மீ. தொலைவில் ஓடும் வேகவதிஆறு அக்காலத்தில் இம்மேட்டுக்கருகில் ஓடியது என்பது அகழாஅய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது. இதனால் வேகவதி ஆற்றின் ஓட்டம் மாறியிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இங்கு கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரையில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது அகழாய்வில் காணப்பட்டுள்ளது. காமாட்சிஅம்மன் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர்கோவில் ஆகிய இரண்டு கோவில்களின் அருகேயுள்ள ஞானப்பிரகாச சுவாமிகள் மடத்தில் 1969 – 1970-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகழாய்வில் கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.16–ஆம் நூற்றாண்டு வரையிலான மூன்று பண்பாடுகளையுடைய நாகரிகக்கூறுகள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் நேர்த்தியாகச்செய்யப்பட்ட கறுப்பு சிவப்பு மட்கலன்களும் சாம்பல்நிற மட்கல்ன்களும் கூம்புவடிவ கூர்முனைச் சாடிகளும் (Conical Jars) ஆகும்.

காமாட்சியம்மன்கோவில் அருகே உள்ள வசந்ததோட்டத்தின் அருகாமையில் நடந்த அகழாய்வில் பெளத்தவிகாரை என்று கருதப்படும் சிதைந்தகட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் சுட்ட செங்கற்களும் வட்டவடிவிலான சிறிய ஸ்தூபியின் அடிப்பகுதி ஒன்றும் காணப்பட்டுள்ளது. பெளத்தஸ்தூபி அமைப்புடைய கட்டிடம் நான்கு வரிசையிலான செங்கற்களைக் கொண்டிருந்தது. கீழ் இரண்டுவரிசை வட்ட வடிவிலும் மேல்வரிசையிலும் கீழ்வரிசைகள் நீண்டசெவ்வக அமைப்பிலும் இருந்தன. இத்தூபி கி.மு. 3-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தைச் சேர்ந்ததாகும். இக்கட்டிடத்தின் கீழ்வரிசை 56 x 23 x 8 செ.மீ. அளவு செங்கற்களையும் மேல்வரிசை 40 x 18 x 6 செ.மீ. செங்கற்களையும் கொண்டதாகும். இதன்கீழ் மண் அடுக்கில் புதலதிச என்ற பழந்தமிழ் எழுத்துப்பொறிப்பு (தமிழ்பிராமி) உடைய சாம்பல்நிற மட்கலஓடு ஒன்று கிடைத்துள்ளது. அது புதலதிச என்பது பெளத்தத்துறவியின் பெயராக இருக்கலாம் எனப் பேராசிரியர் டி.வி.மகாலிங்கம் கூறியுள்ளார். இந்த எழுத்துப்பொறிப்பு கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதப்பட்டுள்ளது. பண்டையநாளில் இப்பகுதியில் பெளத்தவிகாரை ஒன்று இருந்துள்ளதை இவ்அகழாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. இன்றும் இப்பகுதியில் உள்ள வசந்ததோட்டத்தில் புத்தர்சிலை ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. காமாட்சியம்மன்கோவிலின் அருகில் ரெளலட்டட், அரிட்டைன்மட்கலன்களும் சுடுமண் பொம்மைகளும் சுடுமண்ணாலான காசுகளை வார்க்கும் மூன்று அச்சுகளும் (Coin Moulds) கிடைத்துள்ளன. காசின்அச்சு தமிழ்பிராமி என்னும் பழந்தமிழ் எழுத்துக்களையும் உஜ்ஜயின் சின்னத்தையும் மற்றொரு காசின் அச்சு இரட்டைமீன்கள் மற்றும் உஜ்ஜயினி சின்னத்தையும் கொண்டுள்ளன. ஏகாம்பரநாதர்கோவில் குளக்கரை அருகில் சுடுமண்ணாலான அழகிய பொம்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. காமாட்சியம்மன்கோவில் அருகே மீண்டும் 1974 -1975-ஆம் ஆண்டுகளில் நடந்த அகழாராட்சியில் மூன்று பண்பாடுகள் உடைய நாகரிகம் வெளிப்பட்டுள்ளது. கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையிலான பல்வேறு தொல்பொருள்களும் மட்கலன்களும் கிடைத்துள்ளன. இவற்றில் எலும்பிலான சீப்பும் கொண்டைஊசியும் சுடுமண் தாயத்து ஒன்றும் குறிப்பிடத்தக்கவையாகும். 1975-1976-ஆம் ஆண்டில் வரதராசப்பெருமாள்கோவில் அருகில் பல்லவர்காலத்திய மட்கலன்களும் உறைகிணறுகளும் விசயநகரக்காலத்தைச் சேர்ந்த தங்கக்காசு ஒன்றும் கிடைத்துள்ளன. தொண்டைநாட்டுப் பகுதிகளில் பல்வேறு காலக்கட்டப் பண்பாட்டுச்சின்னங்கள் கிடைத்துள்ளன என்பது சான்றுகாட்டத்தக்கதாகும் (நடன.காசிநாதன், 2010 : 64 – 66). பல்வேறு வடிவங்களில் வடிக்கப்பட்ட பானைகள், வண்ணம்தீட்டிய மட்கலங்கள், துளையிடப்பட்டபானைகள், கண்ணாரப்பானைகள், துளையிடப்பட்ட வடித்தட்டுகள், பழுப்புநிறப் பானைஓடுகள், சாம்பல்நிறப் பானைஓடுகள் போன்ற பண்பாட்டுச்சின்னங்கள் தொண்டைமண்டலப் பகுதி மக்களின் வாழ்வியல்முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பண்டையக்கால எழுதுபொருட்கள்
காஞ்சிமாநகரம் பண்டைநாள் முதற்கொண்டே கல்விக்கு முதற்இடம் கொடுத்துவந்துள்ளது. இது தொண்டைநாடு சான்றோர் உடைத்து என்றும் கல்வியிற் கரையிலாக் காஞ்சிமாநகர் என்றும் புகழினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு சங்ககாலத்துக் கல்விமுறையினையும் அதற்கு முந்தைய காலத்துக் கல்விமுறையினையும் காணமுடிகிறது. இப்பகுதிகளில் தமிழ்எழுத்துப் பொறித்த பானைஓடுகளும் எலும்பாலான எழுத்தாணியும் கிடைத்துள்ளன. இத்தகைய எலும்பாலான எழுத்தாணிகள் தசசீலம் (சிர்காப்) பகுதியிலும் கிடைத்துள்ளன. அவற்றுடன் இது ஒப்பிடத்தக்கதாகும். அகழாய்வில் கிடைத்த எழுத்துப்பொறித்த பானைஓடுகளின் காலமும் தமிழகத்து மலைப்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டுகளின் காலமும் ஏறக்குறைய சமகாலத்தவையாகும். எடுத்துக்காட்டாகக் கருவூருக்கு அருகில் ஆர்நாட்டார் மலை, திருக்காம்புலியூர், அழகரை, ஐயர்மலை ஆகியவற்றிலும் இத்தகைய பொருட்கள் கிடைத்துள்ளன. இவை கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவைகளாகும். அகழ்வாய்வில் கிடைத்த எழுத்துப்பொறித்த பானைஓடுகளின் மூலமும் குறியீடுகள் பொறித்த பானைஓடுகளின் மூலமும் சங்ககாலத் தொண்டைமண்டல மக்களின் கல்வியினையும் கலையினையும் காணமுடிகின்றன. தொண்டைமண்டலத்தைப் போன்றே பழந்தமிழ் எழுத்துப்பொறித்த பானைஓடுகள் அரிக்கமேடு, அழகரை, உறையூர், கருவூர், கொற்கை, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. தொண்டைநாட்டுக் காஞ்சிமாநகர் புத்தகோசர், தர்மபாலர், திக்நாகர், போதிதருமர், வாத்சயாயனர் ஆகிய அறிஞர்களின் தொடர்பாலும் சிறப்புப்பெற்றுள்ளது (நடன.காசிநாதன்,2010:67-68). 

காஞ்சிமாநகர் பகுதிகளில் அகழாய்வுகளில் பல வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. வழிபாடு செய்யவேண்டி கட்டியெழுப்பிய விகாரைகள், சுடுமண் உருவம், ஸ்ரீவத்சம் பொறித்த முத்திரைகள், வழிபாட்டிற்குரிய சின்னஞ்சிறு ஸ்தூபம், ஓதிமவிளக்குகள், பிறைவடிவான குறியீடுகள், சங்ககால மகளிர் அணிந்த சங்குவளைகள், சுடுமண் வளைகள், சுடுமண் காதணிகள், இரட்டைமீன்கள், ஆமை ஸ்ரீவத்சம் போன்ற வடிவங்களில் ஆன கழுத்தை அணிசெய்யும் பதக்கங்கள், விலைமிக்க மணிகள், அழகுபடுத்தப்பட்ட அணிகலன்கள், நெசவுத்தொழிலினால் செய்யப்பெற்ற நூலிழைகள்(Fabrics), வட்டச்சில்கள் (Terracotta discs), எலும்பாலான தாயக்கட்டைகள் (Born dice), சுடுமண் சதுரங்கக்காய்கள் (Chesmen), தானியத்தைச் சேர்த்துவைக்கும் பெருமட்கலங்கள், கால்நடைகள் நீர் அருந்துவதற்காக வைக்கப்பட்ட சுடுமண் நீர்த்தொட்டிகள், உமிகலந்த மண்ணால் உருவாக்கப்பட்ட அடுப்புகள், காரைப்பூச்சுடன் கூடிய சுட்ட பெருஞ்செங்கற்கள், உறைக்கிணறுகள், இரும்பாலான அரிவாள், தூண்டில்முள், உண்டபின் எறிந்த எலும்புத்துண்டுகள் போன்ற எச்சங்கள் இப்பகுதிகளில் கிடைக்கப்பெற்றுள்ளன (நடன.காசிநாதன்,2010:67 – 68).

வணிகத்தொடர்பு
பண்டைய இலக்கியங்களில் உரோமானியத் தொடர்பினை வலியுறுத்திக்கூறும் பகுதிகள் பல உள்ளன. இப்பகுதிகளைக் குறித்துப் பல இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் உரோமானிய மதுச்சாடிகளின் எச்சங்கள், அப்பாணியைத் தழுவி உள்நாட்டில் செய்யப்பட்ட மதுக்குடங்கள், படகு உருவம் வரையப்பட்ட பானை ஓடுகள், சாதவாகனர், பல்லவர், சோழர் கால நாணயங்கள் இப்பகுதிகளில் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன், 2010 : 69 – 69).

மணிகளின் உற்பத்தியிடம்
இப்பகுதிகளில் சுடுமண் மணிகள், அகேட் (Agate), ஜாஸ்பர் (Jasper), கார்நீலியன் (Cornelian), சால்சிடெனி (Chalcedonny), படிமமணிகள் (Qurizcrystal) முதலிய விலையுயர்ந்த வண்ணமணிகள் கிடைத்துள்ளன. இவை தமிழ்நாட்டில் அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், திருக்காம்புலியூர், அழகரை, கருவூர், கொற்கை ஆகிய இடங்களில் கிடைத்துள்ளவற்றுடன் ஒப்பிடத்தக்கன. எனினும் மேற்குறித்த இடங்களைவிட கண்ணாடிமணிகளும் ஏனைய மணிகளும் இப்பகுதிகளில் கிடைத்துள்ளன. அடுத்து இம்மணிகள் தயாரிப்பதற்குரிய மூலப்பொருட்கள் காஞ்சி அகழாய்வில் கிடைத்துள்ளன. அவ்வாறு கிடைத்துள்ள பல்வேறு வகையைச்சார்ந்த மணிகளில் செதுக்கப்பட்டனவும் துளை யிடப்பட்டனவும் துளையிடப்படாதனவுமே அதிகமானவை களாகும். இப்படி வேலைப்பாடு முற்றுப்பெறாத மணிகள் அதிகமாகக் கிடைப்பதால், காஞ்சிமாநகரின் இப்பகுதி மணிகளின் உற்பத்திச்சாலையாகவும் வாணிபத்தலமாகவும் இருந்திருக்கவேண்டும். காஞ்சிமாநகரத்தில் விலைஉயர்ந்த கற்களும் அழகியமுத்துக்களும் சங்ககாலத்திலேயே இருந்துள்ளன என்பதை கி.பி. முதல்நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பாங்கோ என்ற சீன நாட்டவர் குறிப்பிலிருந்து அறியலாம். இவை சங்க இலக்கியங்கள் காட்டும் கருத்துகளுக்கு ஆதாரமாக அமைகின்றன (நடன. காசிநாதன்,2010:69-70).

சுடுமண்ணால் ஆன விளக்கு
இப்பகுதியில் சுடுமண்ணால் செய்யப்பெற்ற விளக்கு ஒன்று அகழாய்வில் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது. இது பெளத்தவிகாரம் எனக் கருதப்படும் கட்டிடப்பகுதியின் அருகில் கிடைத்துள்ளது. விளக்கைச்சுற்றிலும் இலைவடிவமும் கூரிய நாக்கு வடிவமும் அணிசெய்கின்றன. தேர் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சுடுமண் விளக்கில் இத்தகைய அலங்காரத்தைக் காணலாம்.

சுடுமண்ணால் ஆன காசு வார்ப்பு
வட்டவடிவமான சுடுமண்காசு வார்ப்பின் நடுவில் வட்டகோட்டினுள் நண்டினுடைய உருவம் ஒன்று பதிக்கப்பெற்றுள்ளது. இவ்வார்ப்பு அக்காலத்தில் பதக்கமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வார்ப்பில் காணப்படும் உருவம் பண்டைய ரோம் நகர வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. சில உரோமானியக்காசுகள் இந்த உருவத்தை முன்புறத்தில் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் உரோமானியக்காசுகள் மிகவும் அறிமுகமானவையாகக் காணப்படுகிறது. நண்டுருவம் பொறித்த உரோமானியக்காசுகள் அதிக அளவில் நாட்டில் புழக்கத்தில் இருந்தமையால், அத்தகைய காசுகளை வார்ப்பதற்கு சுடுமண்ணால் ஆன காசுவார்ப்புகள் உண்டாக்கப்பட்டன. வடஇந்தியாவில் உள்ள உஜ்ஜையினியிலும் உரோமானியப்பேரரசர் அகஸ்டஸ் ஆட்ரிய்ன்ஸ் உருவம் பொறித்த காசு வார்ப்புக் கிடைத்துள்ளதைப் பார்க்கையில் தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியாமுழுவதும் உரோமானியக்காசுகள் புழக்கத்தில் இருந்துள்ளன (நடன. காசிநாதன், 2010 : 69 – 70 – 71).

உறைக்கிணறுகள்
காஞ்சிபுரத்தில் நடந்த அகழாய்வில் பல்லவமேடு, வரதராசப்பெருமாள்கோவில், ஞானப்பிரகாசர்மடம் ஆகிய இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. முதல் இரண்டு இடங்களில் கிடைத்த உறைக்கிணறுகள் கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். காஞ்சி ஞானப்பிரகாசர் மடத்தின் பின்புறம் கண்டுபிடிக்கப்பட்ட உறைக்கிணறுகள் சங்ககாலத்தைச் சார்ந்தவையாகும். இதனைச்சுற்றிலும் பக்கவாட்டிலும் முப்பதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மதுக்குடங்கள் கிடைத்துள்ளன. இவ்வமைப்பை நோக்க ஒருவேளை இந்நீர் நிறைந்த உறைக்கிணறுகள் மதுக் குடங்களுக்கு குளிர்சாதனப்பெட்டியாகப் பயன் பட்டிருக்கலாம். மேலும், மதுவை விரைவில் புளிக்கவைக்க (Fermentation) இக்கூர்முனை மதுக்குடங்கள் உறைக்கிணற்றைச் சுற்றி புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றும் சிற்றூர்ப்புறங்களில் மதுவை புளிக்கவைக்கக் கிணறு, குளம், ஆறு ஆகிய நீர்நிறைந்த நீர்ப்பாங்கான பகுதிகளில் மதுக்குடங்களைப் புதைக்கும் வழக்கத்தைக் காணலாம். பாலாறு கலக்குமிடத்தில் உள்ள வசவசமுத்திரம் எனும் ஊரில் நடந்த அகழாய்வில் உறைக்கிணறுகள், வடிகுழாய்கள், சூட்டடுப்புகள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்டன. அம்போரா (Amphorae) என்ற உரோமானிய மதுக்குடத்தின் கழுத்துப்பகுதி ஒன்றும் உள்நாட்டில் செய்யப்பட்ட கூர்முனை சாடிகளும் கிடைத்துள்ளன. இவை கி.பி. 3 – 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். அப்பகுதிகளில் பண்பாட்டு மண் அடுக்குகளின் மூலமும் கரிமம் 14 காலக்கணிப்பு முறைப்படியும் (C14method) இந்நகரம் கி.மு.5-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியான நாகரிகத்தைக் கொண்டிருந்துள்ளது என்பதும் அயல்நாடுகளுடன் குறிப்பாக உரோமாபுரியுடன் வாணிகத்தொடர்பு கொண்டு விளங்கியது என்பதும் காணப் பட்டுள்ளன (நடன. காசிநாதன், 2010 : 70 – 71). இங்குக் கண் டெடுக்கப்பட்ட இரண்டு உறைக்கிணறுகளும் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்ட உறைக்கிணறுகள் அமைப்பை ஒத்தவையாகும். இவைகள் பெரும்பாலும் குடிநீர் கிணறுகளாகவே பயன்பட்டிருக்கவேண்டும். ஆனால், இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உறைக்கிணறுகளும் அருகருகே இருந்ததுடன் இவைகளின் அருகில் கால்வாய் போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளன. இதேபோன்றுதான் அரிக்கமேடு உறைக்கிணறுகளும் காணப்பட்டன. எனவே, இவைகள் நெசவுத்தொழிலுக்குப் பயன்படும் சாயத்தொட்டிகளாக இருக்கலாம். இப்பகுதி முழுமையாகச்சிதைவடைந்தமையால் கால்வாயின் தன்மையை அறியமுடியவில்லை. இரண்டு உறைக்கிணறுகளின் முதல் கிணறு 11 உறைகளையும் இரண்டாவது கிணறு 5 உறைகளையும் பெற்றுத்திகழ்ந்தன. உறைகள் 60 செ.மீ விட்டத்தினைக் கொண்டிருந்தன. இவற்றின் விட்டம் கீழேசெல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டேயிருந்தது. உறைகளுக்கிடையில் எவ்விதமான மேற்பூச்சும் காணப் படவில்லை. உறைகளின் உயரம் 16 செ.மீ. லிருந்து 43 செ.மீ.வரை மாறுபட்டுக்காணப்பட்டுள்ளது (நடன. காசிநாதன்,2010:82).

மட்கலன்கள்
காஞ்சிபுரப்பகுதிகளில் பலவகையான மட்கலன்கள் கிடைத்துள்ளன. அம்மட்கலன்கள் அப்பகுதிமக்கள் பயன்படுத்தியவைகளாகும். அவைகள் பலநிறங்களிலும் பல வகைகளிலும் காணப்பட்டுள்ளன; தடிமனான சிவப்புநிறப் பானைஓடுகள், சிவப்புவண்ணப்பூச்சுக் கொண்ட பானைஓடுகள், கருப்பு சிவப்பு பானைஓடுகள், வழுவழுப்பான கருப்புநிற ஓடுகள் போன்றவைகளாகும்.

தடிமனான சிவப்புநிறப் பானைஓடுகள்
இவ்வகையான ஓடுகள் தடித்தஅளவிலும் குறைந்த மணலுடன் கலந்த களிமண்ணாலும் செய்யப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் சக்கரத்தின்மூலம் வனையப்பட்ட மட்கலன்களாகும். இவற்றில் சிலஓடுகளில் நெல்லின் அச்சுவடிவங்கள் காணப்படுகின்றன. இவ்வகை மட்கலன்களில் கூம்புவடிவ சாடிகளின் அடிப்பகுதிகளும் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன்,2010:87).

சிவப்பு வண்ணப்பூச்சுக்கொண்ட பானைஓடுகள்
இவ்வகையான பானைஓடுகள் தடிமம் சற்றுக்குறைந்தும் நன்கு சிவந்தநிறம் கொண்டதாகவும் உள்ளன. இவ்வகை மட்கலன்கள் சிறந்தவகையான களிமண்ணைக்கொண்டு நன்குபிசைந்து சுழலும் சக்கரத்தால் செய்யப்பட்டவைகளாகும். அவைகளில் சிவப்புவண்ணம் பாத்திரங்களில் வெளிப்புறத்திலும் மற்றும் உட்புறக்கழுத்துப் பகுதிகளிலும் பூசப்பட்டுள்ளன. இவ் வகை பானைஓடுகளில் விரல் மற்றும் நகங்களால் அலங்காரம் செய்யப்பட்ட சிலபானைகளின் வாய்ப்புறப்பகுதியும் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன்,2010:87).

கருப்பு சிவப்புப் பானைஓடுகள்
இந்த வகையைச்சார்ந்த பானைஓடுகள் சொர சொரப்பான நிலையில் கிடைத்துள்ளன. இவற்றில் கிண்ணங்களின் வாய்ப்பகுதிகள் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன்,2010:87).

வழுவழுப்பான கருப்புநிறஓடுகள்
கருப்புநிறமட்கல வகையைச் சார்ந்த பானைஓடுகளில் கூம்புவடிவ மூடிகளும் அதன் கைப்பிடிகளும் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன்,2010:87).

அம்போரோ சாடிகள்
அரிக்கமேட்டில் கிடைத்தது போன்று அம்போரா சாடி ஒன்றின் கழுத்துப்பகுதி கைப்பிடியுடன் வசவசமுத்திர அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகை சாடி இன்று முதலாவது பண்பாட்டுக்காலப்பகுதியில் பயன்பட்டிருக்க வேண்டும். இவ்அகழாய்வில் கூம்புவடிவ சாடிகள் பெரும் பன்மையாகக் காணப்பட்டுள்ளது. இங்கு இவ்வகை சாடிகளில் கைப்பிடிகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்று கைப்பிடியுடன் கூடிய கூம்புவடிவ சாடிகள் அரிக்கமேட்டில் கிடைக்கவில்லை. இக்கூம்பு வடிவசாடிகளுக்கு அம்போராசாடிகளில் உள்ளதுபோலக் கழுத்துப்பகுதி பொதுவாகக் காணப்படுவதில்லை (நடன. காசிநாதன்,2010:82).

இரெளலட்டட் மட்கலன்
இப்பகுதிகளில் மத்தியதரைக்கடற் பகுதியில் செய்யப்பட்ட இரெளலட்டட் மட்கல ஓடுகள், சிவப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், பழுப்புநிற மட்கலன்கள், பல்வேறு அரிய கல்மணி வகைகளும் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன்,2010:81-82).

வழிபாட்டுக்கோவில்
இப்பகுதிகளில் மக்களின் வாழ்விடங்கள், சமயம் சார்ந்த அரும்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வழிபாடு தொடர்பான கட்டமைப்புகளில் இருநிலைகள் அடையாளமிடப்பட்டுள்ளன. முதல்நிலையான பெளத்த மதக்கட்டமைப்புக்கள் கிறித்தவ ஆண்டுத் துவக்கக்காலத்தைச் சார்ந்தவையாகும். இராண்டாம் நிலை கி.பி.6-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் முற்றிலும் மாற்றமடைந்து சைவ வைணவ சமயங்களைச் சார்ந்தவைகளாயின. அகழாய்வின் மேடானபகுதியில் தரைமட்ட உயரத்தில் இராண்டாம் நிலைக்கோவில் கட்டமைப்பு முழுதும் சிதைவுற்று இடிந்தநிலையில் காணப்படுகிறது. சுவர்ப்பகுதிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. முதல்நிலைக்கட்டமைப்பின் சில பகுதிகள் சைவர்களால் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலபகுதிகளில் தூண் முதலானவைகள் நாட்டுவதற்காக மூலை மற்றும் பக்கங்கள் தோண்டப்பட்டுள்ளன. முதல்நி லைக்கட்டமைப்பு வட்டவடிவில் நீளமான சுட்டசெங்கற்களால் (38 x 28 x 5) உருவாக்கப்பட்டிருந்தன. அவைகள் 70 செ.மீ. பருமனுள்ள சுவராகக் கட்டப்பட்டுள்ளன. முழுச்செங்கற்கள் சுவரின் வெளிப்பகுதியிலேயே காணப்படுகின்றன. உடைந்த மற்றும் ஒழுங்கற்ற வடிவமுடைய செங்கற்கள் வடஇந்திய குப்தர் காலக்கட்டிடங்களைப் போன்று நடுவிலும் உட்பக்கத்திலும் காணப்படுகின்றன. இடைவெளிகள் சிவப்பு, மஞ்சள் நிறமுள்ள மண் மற்றும் செங்கல் துகள்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஓரடுக்குள்ள செங்கல்தரை மத்தியில் மேலெழும்பியதாய் காணப்பட்டுள்ளது. இது பிற்காலத்தில் கோவில்சுவருக்குத் தளமாக ஆக்கப்பட்டுள்ளது. செங்கல்லால் கட்டப்பட்ட நடைபாதைகள் முதல்நிலைக்கட்டமைப்பின் எல்லாப் பக்கங்களிலும் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. சேதமடைந்த சிற்பங்கள் இங்குமங்கும் சிதறிக்கிடக்கின்றன. ஆயினும் வழிபாட்டுக்குரிய சிவலிங்கம் வைக்கப்பட்ட இடத்திலேயே விழுந்தநிலையில் உள்ளது. மேலும், சக்தி சின்னத்தோடு கூடிய ஸ்ரீவத்சம் (திருமறு) பிண்டிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வகைகள் ஆந்திரப்பிரதேசம், மேற்குக்கோதாவரி மாவட்டத்தில் பெத்தவேங்குயிலில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சிற்பம் போன்ற அமைப்பில் இருக்கின்றன. தற்போது இந்த ஆய்விடம் உழவர்களின் வேளாண்மைக்காக மற்றும் அரசின் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆக்கிரமிக்கப்பட்டுச் சிதைவுற்றுள்ளது. செங்கல் தரைத்தளம் தூண்களுக்குரிய துளைகளோடு இரண்டாம் ஆய்விடத்தில் உள்ளது. இவ்விடம் வழிபாட்டிடத்திற்கு 100 மீட்டர் தொலைவில் உள்ளது. முதல் வழிபாட்டிடத்தில் பழைய வாழ்விடங்களும் சிறுவழிபாட்டுத் தலங்களும் கண்டறியப்பட்டுள்ளன. உருள் தாங்கிகளோடு கிண்ணங்களும் கறுப்புநிற வடிவிலான மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ள கிண்ணங்களும் மூன்றாம் ஆய்வுக்குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பல வண்ண மட்பாண்டங்கள், கறுப்புச்சிவப்பு நிற மட்பாண்டங்கள், கறுப்பு மட்பாண்டங்கள், சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்புக் காவிபூசப்பட்ட ஓடுகள், மெருகு ஊட்டப்பட்ட மட்பாண்டங்கள், இரசக்கலவைப் பூசப்பட்ட வண்ண மட்பாண்டங்கள், குறிப்பாகக் கறுப்புச்சிவப்பு நிறத்திலும் பல வடிவுகளிலும் வகைகளிலும் உள்ள அரும்பொருட்கள், இரும்பு, செப்புக்கண்ணாடி, கல் ஆகியவற்றால் செய்யப்பெற்ற பொருட்கள், சுடுமண்பலகை, வார்ப்பு உருவங்கள், குழாய்கள் கிடைத்துள்ளன (நடன. காசிநாதன், 2010 : 76 – 77).

துணைநூல் பட்டியல்

சீதாராம் குருமூர்த்தி., 2008, காஞ்சிபுரம் மாவட்டத் தொல்லியல் கையேடு, சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
காசிநாதன், நடன., 2010, காஞ்சிபுரம் மாவட்டத் தடயங்கள், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

annaiyappan.s.a@gmail.com

*கட்டுரையாளர்  – முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. –