ஜூன் 2016இல் நான் ஃபேஸ்புக்கில் என்னை இணைத்துக் கொண்டபோது எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. காரணம், நான் எப்போதுமே என்னுடைய ‘nutshell world’ க்குள்ளாகவே வாழ்பவள். அதையே அதிகம் விரும்புபவள். நான் இந்த நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்….? ஆனால், விரைவிலேயே எங்கிருந்தெல்லாமோ நட்பினர் கிடைத்தனர். அவர்களில் பலர் தமிழில் கவிதை எழுதிவருபவர்கள். அவர்கள் தங்களுடைய கவிதைகளை( தங்கள் நட்பினருடைய கவிதைகளையும் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளையும்கூட) அவரவர் டைம்-லைனில் பதிவேற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாசிக்கக் கிடைத்த கவிதைகளின் மொழிநடை, உள்ளடக்கம், ஆழம், விரிவு, பாசாங்கற்ற தன்மையெல்லாம் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தன. அப்படி எனக்கு வாசிக்கக் கிடைத்தவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவேற்றத் தொடங்கினேன். இதற்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. ஃபேஸ்புக் நட்பினர், தங்கள் கவிதை மொழிபெயர்க்கப் பட்டதோ, இல்லையோ, பதிவேற்றப்பட்ட மற்றவர்களின் கவிதைகளையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் மனமாரப் பாராட்டினார்கள். இந்த வரவேற்பு தந்த உத்வேகத்தில் பல கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றினேன். ஏறத்தாழ 600 கவிதைகளை மொழிபெயர்த்திருப்பேன். இரவு நேரத்தில் ஒரு நல்ல கவிதையைப் படிக்கக் கிடைக்கும்போது அந்தக் கவிதை தரும் வாசிப்பனு பவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதற்குப் பொருத்தமான படத்தை கூகுளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பதிவேற்றுவது வழக்கமாகியது. அப்படி மொழிபெயர்ப் பதற்காக எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் 100க்கு மேல் இருக்கும்.
என்னுள்ளிருக்கும் கவிஞர், வாசகர், மொழிபெயர்ப்பாளரின் துணையோடு நான் எனக்குப் பிடித்த கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மொழிபெயர்ப்பில் குறையிருக்கலாம். மூல கவிதையோடு ஒப்பிட என் மொழிபெயர்ப்பு ஒரு மாற்று குறைவானதாகவே இருக்கலாம். ஆனாலும், என் முகநூல் நட்பினரின் கவிதைகளை மொழுபெயர்ப்பதும் பதிவேற்றுவதும் எனக்கும், என் நட்பினருக்கும் வரவாக்கும் நிறைவுணர்வு என்னை மேலும் மொழிபெயர்க்கத் தூண்டுகிறது என்பதே உண்மை.
என் முகநூல் நட்பினரின் கவிதைகள் எனக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கு நன்றி சொல்வதாய் அவர்களுடைய கவிதைகளையும் அவற்றின் என்( ஆங்கில மொழிபெயர்ப்பையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். இந்த என் விருப்பத்தை என் டைம்-லைனில் பகிர்ந்துகொண்டபோது எல்லோரும் அதைப் பெரிதும் வரவேற்றார்கள்.
பொருளாதார நெருக்கடி, நேர நெருக்கடி காரணமாக இந்த நூல் தயாரிப்பு காலதாமதமாகிக் கொண்டே போயிற்று. இப்போது ஒருவழியாக, ஒரு கவிஞருடைய ஒரு கவிதையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் என்ற அளவில் 139 கவிஞர்கள் இடம்பெறும் இத்தொகுப்பு வெளியாகிறது. இதில் மூத்த கவிஞர்கள், தமிழ்க்கவிதையுலகில் தமக்கென இடம் கொண்டவர்கள், விருதுபெற்ற கவிஞர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டிருப் பவர்கள், மிக நவீனமாக மொழியைக் கையாள்பவர்கள், புதிதாக எழுத ஆரம்பித்திருப்பவர்கள், பலகாலமாக எழுதிவந்தும் தொகுப்பாக தங்கள் கவிதைகளை வெளியிட்டி ராதவர்கள் என பலதரப்பட்ட கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். அவர்களைப் பற்றிய சிறுவிவரக்குறிப்புகள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அடுத்த தொகுப்புகளில் இக்குறை சரிசெய்யப்படும்.
அவர்கள் எல்லோருக்கும், தங்களுடைய எந்தக் கவிதையை வேண்டுமானாலும் நான் மொழிபெயர்க்க என்னை அனுமதித்ததற்காகவும், அவர்கள் இந்தத் தொகுப்பாக்க முயற்சிக்கு அளித்த உத்வேகத்திற்காகவும் என்னுடைய மனமார்ந்த நன்றி உரித்தா கிறது.
இந்தத் தொகுப்பிற்கு FLEETING INFINITY Vol I என்று தலைப்பிட்டிருக்கிறேன். இதுபோல் இன்னும் தொகுப்புகள் உருவாக்க விருப்பம்.
அதேபோல் தனித்துவம் வாய்ந்த நவீன தமிழ்க்கவிஞர்கள் சிலரைப் பற்றிய சிறு அறிமுக நூல்களை – கவிஞரின் மூலக்கவிதைகள் 10 அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு, கவிஞரைப் பற்றிய சிறுகுறிப்பு, கவிஞரிடம் ஒரு நேர்காணல், அல்லது கவிதை குறித்த அவருடைய சிறு கட்டுரை, ஒரு கவிதை எவாறு உருவாகிறது என்ற அவருடைய கூற்று ஆகியவையும் ஆங்கிலம்- தமிழ் ஆகிய இருமொழிகளில் இடம்பெறும் விதத்தில் 32 அல்லது 40 பக்க நூல்கள் உருவாக்கவும் விருப்பமுண்டு.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பார்கள். எனக்கு மனமிருக்கிறது. வழி தெரியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
பிரதிவேண்டுவோர் தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: lathaa.r2010@gmail.com
ramakrishnan latha <ramakrishnanlatha@yahoo.com>