தொழில் நுட்ப வளர்ச்சியினால் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுவதை அவதானித்துவருகின்றோம். கால மாற்றம் நமக்களித்த வரப்பிரசாதங்கள் அநேகம். அதேசமயம் அந்த வரப்பிரசாதங்களை புரிந்துகொள்ளமுடியாமலும் அனுபவிக்கமுடியாமல் திணறுபவர்களையும் அன்றாடம் காணமுடிகிறது. நான் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் வெள்ளீய அச்சு எழுத்துக்கள் கோர்க்கப்பட்டு, பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுத்தான் பத்திரிகைகள் வெளியாகின. அச்சுக்கூடங்களும் கொம்பசிட்டர் என்ற அச்சுக்கோப்பாளர்ளை நம்பித்தான் இயங்கின. சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், எழுத்தாளர் விந்தன் ஆகியோர் தமது வாழ்வை அச்சுக்கூடத்தின் கொம்பசிட்டர்களாகத்தான் தொடங்கினார்கள். ஜெயகாந்தன் அச்சுக்கூடங்களில் ஒப்புநோக்காளராக (Proof Reader) இருந்தவர்.
1988 இற்குப்பின்னர் வீரகேசரி அச்சுக்கூடத்தில் திடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நேர்ந்து, பல அச்சுக்கோப்பாளர்கள் தொழிலை இழக்கநேரிட்டது. கணினியின் அறிமுகம் அவர்களை அங்கிருந்து அந்நியப்படுத்தியது. அச்சமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருந்து அங்கு தொழிலை இழந்தவர்களுக்காக வருந்தினேன். அவர்களுக்கு தெரிந்த ஒரே தொழில் அச்சுக்கோர்ப்பதுதான். திடுதிப்பென அவர்கள் தொழிலை இழந்தபோது மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா? சிலர் வெளிநாடுகளுக்கு பறந்தனர். சிலர் வேறு தொழில்களுக்கு சென்றனர். சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பி, குறிப்பிட்ட அச்சக்கோப்பாளர்களின் நிலையை ஆராய்ந்தேன். ஒருவர் எழுதும் ஆற்றலும் விளையாட்டுத்துறை பற்றிய தகவல்களும் தெரிந்தவராயிருந்தமையால், வீரகேசரி ஆசிரியபீடத்திலேயே விளையாட்டுத்துறை நிருபராகியிருந்தார்.
மற்றும் ஒருவருக்கு ஒளிப்படத்துறையில் அனுபவம் இருந்தமையால், தொடர்ந்து திருமணங்கள் மற்றும் பிறந்த தினக்கொண்டாட்டங்களுக்குச்சென்று படம்பிடித்து வாழ்க்கையை ஓட்டினார். பின்னாளில் சொந்தமாகவே ஒரு ஸ்ரூடியோவை அமைத்துக்கொண்டதுடன், வீடியோ தொழில் நுட்பத்திலும் தேர்ச்சிபெற்றார். அத்துடன் நில்லாமல், தனது மகளை கணினி தொழில் நுட்ப பயிற்சிகளுக்கு அனுப்பி, தேர்ந்த பக்க வடிவமைப்பாளராக்கிவிட்டார். அந்த யுவதி கொழும்பில் ஒரு பிரபல அச்சகத்தில் தனது பணியை மிகவும் சிறப்பாக தொடருகின்றார். பல எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் இதழ்களையும் அழகாக வடிவமைக்கின்றார்.
ஒரு அச்சுக்கோப்பாளர் மலையகத்திலிருந்து பூக்களை வரவழைத்து பூமாலை கட்டி திருமணவீடுகளுக்கும் இதர வைபவங்களுக்கும் கொடுப்பதுடன், மலர்களினாலேயே அழகிய மணவறைகளும் செய்து வாடகைக்கு விடுகிறார். மற்றும் ஒருவர் சைவஹோட்டலில் சர்வராகிவிட்டார். இவ்வாறு தமக்குச்சம்பந்தமில்லாத வேலைகளுக்குச்சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முன்னேற்ற அரும்பாடுபட்டனர்.
பேனையையும் பேப்பரையும் விட்டால் வேறு எந்தத் தொழிலும் தெரியாத நான், திடீரென்று புலம்பெயர முற்பட்டபோது எனது அம்மா, கண்ணீர்விட்டார்கள். அவருடைய கண்ணீருக்கு காரணமிருந்தது. முன்பின் தெரியாத ஒரு அந்நியதேசத்தில் தனது மகன் என்னசெய்து தனது குடும்பத்தை காப்பாற்றப்போகின்றான்? என்ற கவலை அவர்களை அரிக்கத்தொடங்கியிருந்தது.
” அம்மா அழவேண்டாம். அவுஸ்திரேலியாவில் அப்பிள் தோட்டங்கள் இருக்கின்றன. அங்கு சென்று அப்பிள் பிடுங்கியாவது எனது குடும்பத்தை பார்த்துக்கொள்வேன்” என்றேன். ஆனால், இதுவரையில் நான் அந்தத் தொழிலுக்குச்செல்லாமல், இங்கு அப்பிள் சாப்பிடுகின்றேன். அப்படியாயின் என்ன தொழில் செய்தாய் ? என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா? முதலில் ஒரு Australian Textile Printing Company. அதன்பின்னர் பல்வேறு தொழிலகங்களிலும் வேலைசெய்துவிட்டு ஓய்வுபெறும் வயதில் இளைப்பாறிவிட்டேன். எனினும் எனக்கு வீரகேசரியில் வாய்ப்புத்தந்து சோறுபோட்ட தொழிலை மறந்துவிடாமல், இன்றும் எழுதிக்கொண்டே இருக்கின்றேன். ஓய்வூதியம் சோறு தருகிறது. எந்தச் சன்மானமும் கிடைக்காத எழுத்து – ஊடகத்துறை வாழ்க்கை திருப்தியைத் தருகிறது.
காகிதாதிகளுக்கும் பேனைகளுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு, கணினியில் எனது விரல்கள் தொடர்ந்து தட்டப்படுவதனால் எழுத்துக்களும் தேய்ந்து மறைந்துவிட்டன. எதனைத்தட்டினால் எந்த எழுத்துவரும் என்ற தேர்ச்சி பெற்றாயிற்று. கணினி எனக்கு தற்காலத்தில் பெரும் வரப்பிரசாதம்தான். ஆனால், மூத்த எழுத்தாளர்கள் சிலர் தங்கள் முதுமைக்காலத்திலும் – இன்றும் காகிதத்தில் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களுக்கு கணினியும் இணையத்தளங்களும் அந்நியமாகித்தான் இருக்கின்றன.
அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த பல முதிய எழுத்தாளர்களுக்கு தமிழ் உலகில் இயங்கும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் குறித்தெல்லாம் பாடம் நடத்தினேன். அவர்களை அத்தகைய ஊடகங்களை தொடர்ந்து பார்க்குமாறும் அறிவுறுத்தினேன்.
கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி எங்கள் மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களுக்கு 77 வயது பிறந்தது. நேரத்தைக்கணித்து அவருடன் தொடர்புகொண்டு வாழ்த்திப்பேசினேன். நான் அவரை என்றைக்குமே “மாஸ்டர்” என்றுதான் அழைப்பேன்.
” மாஸ்டர் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று உங்களை வாழ்த்திவிட்டு உங்களைப்பற்றிய ஒரு பதிவை எழுதி மின்ஊடகங்களுக்கு அனுப்பவிருக்கின்றேன். எனது கணினியில் தெணியான் என்று அழுத்தியதும் உங்களைப்பற்றிய ஏராளமான தகவல்களும், நீங்கள் சம்பந்தப்பட்ட பல அபூர்வமான படங்களும் கிடைக்கின்றன.” என்றேன். அவர் இதுகேட்டு ஆச்சரியப்பட்டார்.
இவ்வாறு உலகம் சுருங்கிவிட்டது. ஒருகாலத்தில் என்சைக்கிளோபீடியா தொகுப்புகளை வீடுகளில் காட்சிக்கு வைத்திருந்து அவற்றில் தேடுதல் நடத்தினோம். அந்தக்காலம் மலையேறிவிட்டது.
எனினும் இன்றும் தமிழ்த்திரைப்படங்களில் என்சைக்கிளோபீடியா பிரதிகளை வீடுவீடாக எடுத்துச்சென்று விற்பனை செய்யும் பிரதிநிதிகளை பார்க்கின்றோம். என்வசம் இருந்தவற்றை இந்த கணனியின் வருகைக்குப்பின்னர் முல்லைத்தீவு முள்ளியாவளை வித்தியானந்தா கல்லூரி நூலகத்திற்கு ஒப்படைத்துவிட்டேன்.
(இங்குதான் முன்னர் தோழர் வி. பொன்னம்பலம் எழுத்தாளர்கள் நிலக்கிளி பாலமனோகரன், செ. யோகநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள் என்பதையும் மறந்துவிடமுடியாது.)
மாணவர்களும் கைத்தொலைபேசி ஊடாக முகநூலில் சஞ்சரிக்கும் காலத்திற்கு வந்துவிட்டனர். படச்சுருளில் திரைப்படங்களை ஒளிப்பதிசெய்த காலம் மறைந்து, டிஜிட்டல் முறைக்கு வந்தபொழுது, இயக்குநர் பாலுமகேந்திராவும் இந்த புதிய தொழில் நுட்பத்தை கற்கநேர்ந்தது.
அவுஸ்திரேலியாவில் வெளியாகும் அக்கினிக்குஞ்சு இணைய இதழ், வாரம்தோறும் மூத்த ஈழத்து எழுத்தாளர்களின் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை வெளியிடுகிறது. இது இலங்கையில் பலருக்கும் தெரியாத தகவல். இலங்கையர்கோன், வயித்திலிங்கம், சம்பந்தன் முதல் வ. அ. இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப் வரையில் அவர்களின் தேர்ந்தெடுத்த கதைகள் பதிவாகிவிட்டன. இந்தப்பத்தியை எழுதும்வேளையில் தருமு சிவராமின் காடன் கண்டது டொமினிக் ஜீவாவின் பாதுகை ஆகிய சிறுகதைகள் பதிவேற்றப்பட்டுவிட்டன.
தருமு மறைந்துவிட்டார். கொழும்பு மட்டக்குளியாவில் வதியும் எங்கள் ஜீவாவுக்கு இந்தச்செய்தி தெரியாது. அவருக்கு 90 வயதாகிவிட்டது. வயதுக்கேற்ற உடல் உபாதைகளுடன் அவர் ஓய்விலிருக்கிறார்.
இன்றைய நவீன கணினி உலகஅதிசயங்களில், மற்றும் பல வரப்பிரசாதங்களும் பெருகியிருக்கின்றன. ஆனால், அவற்றை எத்தனைபேர் அறிவார்?
சமகாலத்தில் நானும் ஒரு பிரச்சினையை எதிர்நோக்குகின்றேன். என்னை உலகின் பல நாடுகளிலிருந்தும் தொடர்புகொள்பவர்கள், ” முகநூல் இருக்கிறதா..? வாட்ஸ் அப் இருக்கிறதா..?” எனக்கேட்கும்போது, சுருங்கிவிடுகின்றேன். ” என்னிடம் அவை இல்லை” என்றதும், நான் இன்னும் ஒரு கற்கால மனிதன் என்றும் கருதுகின்றார்கள்.
அந்தத் தொழில்நுட்பத்தை சொல்லித்தருவதற்கு பலர் என்னருகில் இருந்தபோதிலும், ஏனோ, புதிய புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மனம் தயங்குகிறது. ஆனால், மின்னல்வேகத்தில் துரிதகதியில் இந்த ஊடகங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.
எனது பேத்திக்கு நான்குவயது. பெற்றவர்கள் வாங்கிக்கொடுத்த ஐபேர்டில் அதற்குரிய Pass Word ஐ தட்டிவிட்டு தனக்கு விருப்பமான இணைப்புகளுக்கு துரிதமாகசென்று புதைந்துவிடுகிறாள். அதனை எவ்வாறு இயக்குவது என்பது எனக்குத்தெரியாது.
“வீட்டில் மின்குமிழ் செயலிழந்துவிட்டால், அதனை மாற்றவும் தனக்குத் தெரியாது ” எனச்சொன்னவர்தான் கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன் பிள்ளை. இத்தனைக்கும் அவர் ஒரு வழக்கறிஞர்! அவருக்கு இந்திய சாகித்திய அகடமி விருது கிடைத்திருக்கும் தகவல் கூட தெரியாமலிருந்தவர்தான் அவருடைய மகள்! இது எப்படி இருக்கிறது?
ஒருசமயம் கவியரசு கண்ணதாசன் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு சோவித் நாட்டுக்குச்சென்றார். அங்கே மாஸ்கோவில் பணியிலிருந்த தமிழகத்தவர் ஒருவர், இவர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். அங்குசென்றபோது, அவர் தாம் மாஸ்கோவில் பொறியியலாளராக இருப்பதாகச்சொன்னதும், விஸ்வநாதன், இரகசியமாக கண்ணதாசனிடத்தில், ” அண்ணே எங்க ஊரிலிருந்து இவ்வளவு தொலைவு வந்து சைவஹோட்டலில் பொறிக்கிற வேலையை பார்க்கிறாரா இந்த மனுஷன்!?” எனக்கேட்டாராம்.
பொறியிலுக்கும் – பொறிக்கும் உணவுக்கும் பேதம் தெரியாத மெல்லிசைமன்னருக்கு ருஷ்யாவின் தேசிய கீதம், குறிப்புகள் ஏதும் இன்றி மாஸ்கோ மியூசியத்தில் இசைக்கத்தெரிந்திருக்கிறது!
இவ்வாறு கற்றதையும் பெற்றதையும் கல்லாததையும் கற்கவிரும்பாததையும் பட்டியல் இட்டுக்கொண்டே செல்லமுடியும். தமது படைப்புகள் வெளிநாடுகளில் இணைய இதழ்களில் வரும் செய்தியை அறியவே முடியாமல் பல மூத்த படைப்பாளிகள் இலங்கையில் இருக்கின்றபோது, முகநூலிலும் ட்விட்டரிலும் வாட்ஸ் அப்பிலும் மூழ்கியிருக்கும் இளம் தலைமுறையினரிடம் நான் அந்நியமாகி இருப்பதும் சுகமான அனுபவம்தான்.!
(நன்றி: யாழ்ப்பாணம் ‘ஜீவநதி 125 ஆவது இதழ்)