வாசிப்பும் , யோசிப்பும் 337: செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ பற்றி…

அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய 'எழுதித்தீராப் பக்கங்கள்'அண்மையில் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) எழுதிய ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ வாசித்தேன். தன் புகலிட அனுபவங்களுடன் சிறிது புனைவினையும் கலந்து , அங்கதச்சுவை மிக்க படைப்பாக்கியிருக்கின்றார் காலம் செல்வம். இந்நூலிலுள்ள பாத்திரங்களின் உரையாடல்கள், சம்பவங்கள் சில இந்நூல் புனைவும் கலந்ததென்ற உணர்வினையே எனக்குத் தருகின்றது. இந்நூலின் முக்கிய பலம் நூலாசிரியரின் அங்கதச்சுவை மிக்க எழுத்து. வெறும் நகைச்சுவை எழுத்தென்றில்லாமல் , நகைச்சுவையினூடு சமூகத்தையும் கிண்டலடிக்கின்றது. அதனாலேயே அங்கதச்சுவை மிக்க படைப்பாகியிருக்கின்றது இந்நூல். நூல் சுவைப்பதற்கு இன்னுமொரு காரணம் நூலில் காணப்படும் ஓவியங்கள். ஓவியங்களுடன் நூலை வாசிக்கையில் பல இடங்களில் அடக்க முடியாமல் சிரிப்பு வெடிக்கின்றது. நூலாசிரியரின் நடையும், ஓவியங்களும் இந்நூலின் சிறப்புக்கு முக்கிய காரணங்கள்.

இந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை இந்நூலைத் தொடராக வெளியிட்ட ‘தாய்வீடு’ பத்திரிகையின் ஆசிரியர் டிலிப்குமார் இந்நூலுக்கு எழுதிய அறிமுகக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் ஈர்த்தன. அவை வருமாறு: “புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினரது துயர வாழ்வு ஒரு தொடராக எழுதப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்” ” முதல் தலைமுறையினரது அனுபவங்கள் செவிவழிக் கதைகளாக இருந்தனவேயன்றிப் பதிவுகளாகத் தெரிந்திருக்கவில்லை”

இவை தவறான கூற்றுகள். காலம் செல்வத்தின் ”எழுதித்தீராப் பக்கங்கள்’ நூல் அண்மைக்காலகட்டத்தில்தான் ‘தாய்வீடு’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இந்நூல் புகலிடத்தமிழர்களின் வாழ்வினை ஆவணப்படுத்துமொரு சிறப்பான நூல் என்பதில் மாற்றுக்கருத்துகளில்லை. ஆனால் இவ்விதமான நூலொன்று வெளியானது இதுவே முதல் தடவையாகும் என்பது தவறானது. இந்நூல் வெளியாவதற்குப் பல வருடங்களின் முன்னரே , தொண்ணூறுகளில் வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா’ கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியானது. இதுபோல் 2007 காலகட்டத்தில் திண்ணை, பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளியான வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலும் தொடராக திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. இவையெல்லாம் முறையே இலங்கைத்தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வையும், நியூயார்க் மாநகரத்தில் அலைந்து திரிந்த வாழ்வையும் பதிவு செய்தவை. இவையிரண்டுமே உண்மை அனுபவங்களின் அடிப்படையில் உருவான புனைவுகள்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியான ‘அமெரிக்கா’ புலம் பெயர்ந்த முதல் தலைமுறையினர்தம் துயர வாழ்வினை காலம் செல்வத்தின் ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ எழுதப்படுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே வெளிப்படுத்தியது. இவ்வாறே சட்டவிரோதக் குடிமகனாக நியாயார்க் மாநகரத்தில் அலைந்து திரிந்த இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் வாழ்வினைக் குடிவரவாளன் நாவல் பதிவு செய்தது. இவையிரண்டுமே ‘செவிவழிக் கதைகளாக இருந்த புகலிடத் தமிழர்களின் முதல் தலைமுறையினரது அனுபவங்களின் பதிவுகள்’. செல்வம் அருளானந்தத்தின் ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ நூலே இவ்வகையில் முதலாவது என்பது தவறான கூற்றே. இது போல் பொ.கருணாகரமூர்த்தி, மான்ரியால் மைக்கல், இ.தியாகலிங்கம் போன்றோரின் படைப்புகளும் புகலிடத்தமிழர்களின் முதல் தலைமுறையினரது வாழ்வைப் பதிவு செய்த படைப்புகளே. இவையும் ‘எழுதித்தீராப் பக்கங்கள்’ நூலுக்கு முன்னர் எழுதப்பட்டவை.

ngiri2704@rogers.com