ஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்

ஆய்வுக் கட்டுரைகள் படிப்போம்.பேராசிரியா் மலையமான்தமிழ்மொழி  உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார்.  உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி  இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.

முத்தமிழில் மூன்றாந்தமிழான  நாடகத்தமிழ், கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாக விளங்குவது திண்ணம்.படித்தறியா பாமரா்களும் விரும்பி ரசிக்கும் இக்கலை பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. நாடு +அகம்= நாடகம். அகத்தை நாடி வரும் கலை நாடகம்.  உயிர்ப்பான இக்கலையை இயலும் இசையும் கூடி, எண்வகை மெய்ப்பாடுகளும் சுவையுந் தோன்ற மேடையில் தோன்றி பாடி ஆடி நடித்து வெளிப்படுத்துவா். இத்தகு சிறப்புடைய நாடகமானது மேடை நாடகம், செய்யுள் நாடகம் என இருவகைகளில் இயற்றப்படுகிறது. பேராசிரியா் மலையமான் இயற்றியுள்ள நீா்மாங்கனி, செய்யுள் நாடக வகையைச் சார்ந்தது. இந்நாடகக் கட்டமைப்புத்திறனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பேராசிரியா் முனைவா் மலையமான்:
மலையமான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15.07.1932 இல் நாராயணணன் –பாலகுசாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவா். இயற்பெயா் இராசகோபாலன். போளுரில் தொடக்கக் கல்வி கற்றவா். புலவா்,  முதுகலை முதல் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் முனைவா் பட்டம்வரை பெற்றுள்ளவா். பதிவுத்துறையில் எழுத்தா், வரைவாளா், பள்ளி ஆசிரியா், பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியா், நூலகா், பதிப்பாசிரியா் என பல்வேறு துறைகளில் தனது அயராத உழைப்பையும் சேவைகளையும் புரிந்துள்ளார். தான் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் எழுத்துறையில் தொடா்ந்து தன் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

“சில ஆய்வாளா்கள் கவிதைகளின் சுவை இன்பத்திலே திளைத்து அவற்றை மாந்தி குடிப்பதும் மாந்தா்களுக்கு கொடுப்பதும் வழக்கமாகக் கொள்வா். மலையமானோ மூலத்தையே கண்டறிந்து தமிழ் ஞாலத்திற்குக் கொடுக்கிறார்”2 என்கிறார் இலக்கிய செல்வா் முனைவா் குமரி அனந்தன்.

மலையமான் கவிதைகள்(கவிதை), தமிழ் ஆட்சி மொழி சிக்கல்கள் (ஆராய்ச்சி), நோபில் பரிசு பெற்ற கவிஞா்கள்(வாழ்க்கை வரலாறு), திருக்குறள் துளிகள்(கட்டுரை)  ஆகியவை பெரியவா்களுக்கான இலக்கிய கொடையாக அளித்துள்ளார். சிறுவா் இலக்கியத்துறையில் மிக்க ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பனித்துளிக் கதைகள், பண்புநெறிக் கதைகள், மூன்று அரும்புகள் முதலிய கதை இலக்கிய நூல்களையும் அறிவியல் சிறுகதைகள் உள்ளிட்ட அறிவியல் கதைகள் அறிவியல் வெளிச்சங்கள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரை நூல்களையும் பல்வேறு தொகுதிகளாக எழுதி குவித்துள்ளார்.

நாடகத் துறை:

நாடகத்துறையில் மிக்க ஆா்வமும் ஈடுபாடும் கொண்டு நோயே டாக்டரானால், உதவித் திருமணம், புதுமைப்பரிசு( வரலாற்று கவிதை நாடகம்), இருதலைப் பறவை, திருஞானசம்பந்தர் வரலாற்று நாடகம்,  இரண்டாம் கண்ணகி (சமுதாய நாடகம்) ஆகியவற்றை இயற்றி தமிழ்க்கொடை செய்துள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் தொடா்ந்து 20 வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளமை, இவரது நாடகத்திறனுக்கான சான்று. இராணிமேரிக் கல்லூரி மாணவியா் இவரது நாடகங்களை அரங்கேற்றி சிறப்படைந்தனா்.

 

‘நோயே டாக்டரானால்’ நாடகம் ‘தமிழ் எழுத்தாளா் சங்கம்- ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா’ போட்டியில் பரிசு பெற்றுள்ளது. ‘தமிழக அரசு விருது’, ‘முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ விசுவநாதம் விருது’ ‘இந்திய அரசின் தேசிய அறிவியல் விருது’(2013) ‘குழந்தை எழுத்தாளா் சங்க விருது’,  முகம், முல்லைச்சரம் உள்ளிட்ட 11 இதழ்களின் பாராட்டு ஆகியவை  இவரது படைப்புகளுக்கான அங்கீகாரங்கள்.
நடுகல் வழிபாடு, அவற்றிலுள்ள புடைப்புச்சிற்பங்கள் சிவலிங்க வழிபாடு, பாம்பு வழிபாடு ஆகியவை மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரிடமும் இருப்பதையும் மாயன் இனத்தவர்களில் ஒரு பிரிவினா் ஆதித்தமிழா்கள் என்பதையும் தினமணியில் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.3

“ஆதிகால மாவீரனாகிய முருகன் நடுகல் நிலையில் கடவுளாக்கப்பட்டான்”  என்பன உள்ளிட்ட 25 புதிய ஆய்வு முடிவுகளை  ஆய்வுத் துணிபுடன் வெளியிட்டுள்ளார்.

“உங்கள் முடிவுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை” என பேராசிரியா் ச.வே.சுப்பிரமணியமும்

“கலைவடிவம் தரப்பட்ட நடுகல்லே சிவலிங்கம்” 4 என்பது ஏற்கத்தக்கது என்று பேராசிரியா் க.ப. அறவாணன் போன்ற சான்றோர்கள் மெச்சுவது இவரது திறனை அறிய உதவுவன. 

“கடல் ஆழமான இடத்தில் சலனமின்றி இருக்கும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் இவா்” 5 என்கிறார் டாக்டா் வெ.இறையன்பு இ.ஆ.ப.

எண்பது நூல்கள்,  ஒன்பது இதழ்களில் இதழாளா் பணி,  இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு உள்ளிட்ட பங்கேற்பு நிகழ்வுகள், 25 புதிய ஆய்வு முடிவுகள்  என நீண்டுசெல்லும் இவரது சிறப்புகள். இவரது துணைவியார் பேராசிரியா் முனைவா் சரளா ராசகோபாலன் இவரினும் மிக அதிகமாக 93 நூல்களை படைத்துள்ளார். இவரது இளவல் கலாநிதியும் நாடகாசிரியா் என்பது குறிப்பிடத்தக்கது.

நூலமைப்பு:
நீா்மாங்கனி ஒரு வரலாற்று கவிதை நாடகமாக எழுதப்பெற்று, நவம்பா் 1996 இல் வெளியிடப்பட்டுள்ளது.வெளிவந்த ஆண்டிலேயே பரவலான மக்களின் அறிஞா்களின் வாசிப்பையும் பாராட்டுதலையும் பெற்றதோடு  பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடநூலாக்கப்பெற்று சிறப்பு அடைந்துள்ளது. மேடைகளில் கல்லூரி மாணவா்களால் நடிக்கப்பெற்றது. எல்லாவற்றிற்கும் மேலாக  1996 ஆண்டிற்கான “தமிழக அரசின்  பரிசு” பெற்றது, இக்கவிதை நாடக நூலுக்கான  சிறப்பாக கூறலாம். “நடைத்தெளிவும் கருத்துச் செறிவும் கொண்டதாக “நீா் மாங்கனி” தெவிட்டுதலில்லாத இனிப்பைத் தருகிறது”6 என்கிறார் சிலம்பொலி செல்லப்பனார்.

ஐந்து களம், இருபத்தைந்து காட்சிகள் எனவும் இடையிடையே இசைப்பாடல், அம்மானை, கந்துக வரி, இயற்கைப் பாடல்கள், திருக்குறள்- புறநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலைப் போன்ற இலக்கிய வரிகளை நினைவுறுத்தும் வரிகள் எனவும், நகைச்சுவை, அறக்கருத்துகள், சூழ்ச்சிவலை, காதல், அரசியல் அவலம், மனதை நெக்குருக்கும் சோகம், நட்பின் மேன்மை, பத்தினி வழிபாடு முதலிய கருத்துகளோடு நாடகமானது சிறப்புற கட்டமைக்கப்பட்டுள்ளது.

நாடக கட்டமைப்புக்கூறுகள்:
நாடகங்கள் மேடையில் நடிக்கப்படும் மேடை நாடகங்கள், இலக்கிய நூலாக படிக்கக்கூடிய செய்யுள் நாடகங்கள், வானொலி நாடகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றது.  இவ்வகைமையிலும் சிறுசிறு கட்டமைப்பு வேறுபாடுகள் அமையும்.நீா்மாங்கனி எழுதப்பெற்ற வரலாற்று கவிதை நாடகம்.

“டாக்டா் மலையமான் அவா்கள் நல்ல ஆய்வாளா், சிறந்த கவிஞர் நல்ல கதைகளை உருவாக்கும் திறன்பெற்ற படைப்பாளா். இந்த திறன்களையெல்லாம் பயன்படுத்திப் பெரிதும் முயன்று இந்த இலக்கியத்தை இவா் படைத்திருக்கிறார்”7 என்கிறார் டாக்டா் பொற்கோ.

இதில் கதைக்கரு, தலைப்பு, கதைமாந்தா்கள் படைப்பு, காட்சியமைப்பு, உரையாடல், நாடகத் தொடக்கம், மோதல் அறிமுகம், வளா்ச்சி,  உச்சநிலை, முடிவு,  சிந்தனை வெளிப்பாட்டுத்திறன் ஆகியவற்றை நாடக கட்டமைப்புக் கூறுகளாகக்கொண்டு ஆய்வோம்.

கதைக்கரு:
எவ்வகை இலக்கியத்திற்கும் கதைக்கரு நம் முன்னோர்களின் தொன்ம, புராண வரலாற்று நிகழ்வுகளிலிருந்து பெறலாம். நடைமுறை வாழ்வியலிலிருந்தும் பெறலாம்.  எந்த நிகழ்வை, வாழ்வியலை இலக்கியமாக்க விழைகிறோமோ அது கதைக்கருவாகிறது. நீா்மாங்கனி நாடகத்திற்கான கதைக்கரு, சங்ககால இலக்கியத்திலிருந்து பெறப்பட்டதை அறியமுடிகிறது. நன்னன் என்ற மன்னன் தன் காவல் மரமாகிய மாமரத்தின் கனியை ஒரு இளம்பெண் உண்டாள் என்ற குற்றத்திற்காக கொலை செய்தான்.இக்கொடுமைக்கு எதிராக கோசா், படைதிரட்டி கொடுங்கோன்மை அரசனை போரில் வென்று, அவனுடைய காவல் மரத்தை வெட்டி வீழ்த்தினா் என்பதை குறுந்தொகையின் 73 ஆம் பாடலாகிய

“…………………………………………………….. ………………….  நன்னன்
நறுமா கொன்று நாட்டில் போகிய
ஒன்றுமொழி கோசா் போல”  என்ற இப்பாடல் நாடக கதை ஆக்கத்திற்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றது.

‘காவல்துறைத் தமிழறிஞர் திரு இரவி ஆறுமுகம், நன்னனால் கொலை செய்யப்பட்ட பெண் “மாசானி அம்மன்”  என்ற பெயரில் இன்றும் தொழப்படுவதை ஆய்ந்து கண்டுரைத்தார். இச்செய்தி என் நாடகக் கரு வலிமை பெற வழிவகுத்தது’8 என்று நாடகாசிரியா் தன் என்னுரையில் குறிப்பிட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இவ்வாறு இந்நாடகத்தின் கதைக்கரு, சங்கச் சான்றும் ஆய்வுக் கருத்தின் அடிப்படையிலும் முகிழ்த்தது என்பது வெளிப்படை.

தலைப்பு:
தலைப்பு நாடகத்தின் நெற்றிப்பொட்டாகும். தலைப்பு நாடகத்தை படிக்கும் ஆா்வத்தைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.தலைப்பு நாடக பாத்திரத்தின் பெயராகவும், குறியீடாகவும், கவிதைத்தன்மையாகவும், கற்பனையாகவும் அமையும். இந்நாடகத்தில் தலைவி மலா்க்கொடி ஆற்று நீரில்  மிதந்து வந்த மாங்கனியைத் தின்றதால் காவல் மரத்தின் கனியை உண்டாள் என கொலை செய்யப்படுகிறாள்.  சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கால் சிலம்பு, காப்பியம் விரிவாக காரணப்பொருளாக அமைதல்போல இந்நாடகத்தில் அந்நீா்மாங்கனியே காரணப்பொருளாக அமைவதால் “நீா்மாங்கனி” என்ற தலைப்பு பொருத்தமானதாக அமைகிறது.

நாடகமாந்தா்:
கதை என்ற திரவப்பொருளை கொண்டுருக்கும் அல்லது நிரப்பிருக்கும் பொருளை பாத்திரம் என்ற சொல்லால் குறித்தது பொருத்தமானது. நாடகம் உள்ளிட்ட எந்தவொரு கலையிலும் கதை நிகழ்வுகளை கதைமாந்தா் மூலமே வெளிக்காட்டமுடியும். குறிப்பாக நாடகம் பாத்திரங்களின் வழியே சிறக்கும்.நாடகத்திற்கு ஏற்ற பாத்திரங்களை அமைக்க வேண்டும்.நாடகத்தில் பாத்திரங்களை அளவாக பயன்படுத்த வேண்டும். பாத்திரங்கள் மூலமே கதை சொல்லப்பட வேண்டியிருப்பதால் பாத்திரப்படைப்பில் மிகுந்த கவனம் தேவை.

நீா்மாங்கனி  நாடகத்தை, வரலாற்று தீப்பொறியை தன் கற்பனை காற்றைக் கொண்டு ஊதி நாடகமென்னும் பெருந்தீயாய் வளா்த்துள்ளார். அதற்கேற்ப மலர்க்கொடி, இளம்பரிதி, நன்முல்லை, கந்தரத்தன், பு+ங்குழலி ஆகியோரை நேர்நிலை மாந்தராகவும் நன்னன், பனிமொழி, கிள்ளை, நாகன்,ஆகியோரை எதிர்நிலைமாந்தராகவும் கோசர், வாட்புலி ஆகியோரை துணைநிலை மாந்தராகவும் சாத்தன், கொற்றன், யாழ்பாணர், ஒற்றன், தூதர் போன்ற சார்புநிலை மாந்தராகவும் படைத்துள்ளார்.

உரையாடல்:
நாடகத்தின் தனித்திறன் உரையாடல் அமைத்தலில் சிறக்கும்.உணர்வுகளை வெளிப்படுத்த உரையாடல் பயன்படுகிறது.உரையாடல் எதார்த்தமாக, குறிப்பு பொருள் உடையதாக அமைத்தல் நலம் பயக்கும்.

நீா்மாங்கனி நாடகத்தில்
இயற்கையை வர்ணிக்கும்போது,
“திருமண முன்றிலில் திரியும் சிறுவா்போல்
பறந்திடும் தும்பிகள், வண்ணத்துப்பு+ச்சிகள்”  (நீா்மாங்கனி ப.18) என்றும்
நகைச்சுவை வெளிப்படுமிடங்களில்,
“ ……………………………     பன்றிஈன் குட்டிபோல்
நன்று அலாதன சொல்கின்றாயே?” (நீா்மாங்கனி ப.22)

“காற்று வாங்கவா விற்றவா் யார் அதை?
சாற்று! நானும் சிறிது வாங்குவேன்”  (நீா்மாங்கனி ப.23) என்றும்

காதல் காட்சிகளில்,
“உடல்மிக அழகா? உளம்மிக அழகா?
முடிவினைக் காண பட்டிமன்றம்
நடத்திட வேண்டும்” (நீா்மாங்கனி ப.31)

“மலரே! தேனே!நிலவே!
நிலவின் குளிரே! வாழ்வின் உயிரே!”  (நீா்மாங்கனி ப.32) என்றும்
“அறிவைப் பிடுங்கி உணா்ச்சி நட்டால்
விரும்பும் வெற்றி ஓடிப் போகும்”  (நீா்மாங்கனி ப.88) என்றும்
மலா்க்கொடி வாதிடும்போது,
“ஆற்றுவாழ் மீன்கள் கனிதின் றிருந்தால்
ஆற்றலின் கைகள் அதைச்சிறை செய்திடுமோ?” (நீா்மாங்கனி ப.124) எனவும்

போர் தொடங்கும்போது,
“நன்னன், ஆட்சி உடலின் புண்கட்டி
மின்னிடும் வாளால் அறுத்தலே முறைமை”  (நீா்மாங்கனி ப.151) என்றும்

“பெண்மையை போற்றுமின் பெண்மையை போற்றுமின்
எண்ணிலாப் பெருமை என்றும் தழைக்குமே” (நீா்மாங்கனி ப.159) என்றும் தன் உரையாடற் திறனால் நாடகத்தை சிறக்கச் செய்துள்ளார் ஆசிரியா்.

தொடக்கம்:
நாடகத்தில் தொடக்கம் என்பது ஒரு நிகழ்ச்சி அல்லது சிக்கலை அறிமுகப்படுத்துகிறது. நாடக முடிவில் அதற்கான தீா்வை முடிவைத் தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.
கடவுளை போற்றுதல், இயற்கையை பரவுதல், நாட்டின் வளம், மன்னரின் ஆட்சி சிறப்பு, தாய்மொழியின் பெருமை ஆகியவற்றை தொடக்கத்தில் அமைப்பது நாடகத்தை தொடா்ந்து ஆா்வத்துடன் படிக்க உதவும். நாடகாசிரியரின் தனித்திறன் தொடகத்திலேயே வெளிப்படுவது உண்டு.

நீா்மாங்கனி நாடகத்தில் மலர்க்கொடி, நன்முல்லை அவா்களது தோழியரும் மாலையில் சோலையில் கூடி  இயற்கையின் வனப்புகளை, 

“பெரிய யானையின் விரிந்த முதுகொடு சிறந்த அம்பாரி இருப்பது போல ஓங்கிய சோலையைப் பாரீா்”9 என இயற்கை வனப்புகளை சிறந்த உவமை நயங்களோடு பேசுவதாய் ஆா்வநிலைத் தொடக்கமாக அமைத்திருக்கிறார் ஆசிரியா்.

கதைநிலையில் செல்வந்தரின் மகளான மலர்க்கொடி, படைவீரனான இளம்பரிதியை காதலிக்கிறாள். மன்னனின் மகளான பனிமொழியும் இளம்பரிதியை ஒருதலையாய் காதலிக்கிறாள். தோழிகளான இவ்விருவரிடையே யார் இளம்பரிதியை மணப்பது என்ற போட்டி உருவாகிறது.இதனால் நட்பு மாறி பகைமை உருவெடுக்கிறது.

“வளமை குவிந்ததும் மனக்குடம் விரிசல்
கண்டதால் அன்புநீா் அழிந்தது” 10

இருவரின் பகைமை மாறி நட்பு தொடருமா? யார் இளம்பரிதியை மணந்து கொள்ளப்போகிறார் என ஆர்வத்தை தூண்டுவதாக நாடகத் தொடக்கநிலை அமைகிறது.

வளா்ச்சி:
நாடகக்கூறுகளுள் ஒன்றான வளா்ச்சி நிலையும் சோர்வைத்தருவதாக அமையக்கூடாது. அதிலும் படிக்கக்கூடிய நாடகத்தில் அதிக கவனம்  தேவை. படிக்கக்கூடிய வாசகா்கள் தொடக்கநிலை சிக்கலை அறிந்தவுடன் வளா்ச்சி நிலை ஆா்வத்தைத் தூண்டவில்லை என்றால் தாவி முடிவை மட்டும் படித்து முடித்துவிட முயல்வா். எனவே வளா்ச்சி நிலையிலும் படைப்பாளா் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது. தோழிகளிருவரும் ஒருவனைக் காதலிக்க, பனிமொழி அரசன் நன்னனின் மகள் என்ற அந்தஸ்து நிலை, வளா்ச்சி நிலையை ஆரம்பித்து வைக்கிறது. அரசனும்  கற்றறிந்த புலவா்களை போற்றாதவன்.வறட்சியுற்ற காலத்திலும் வரிகளை மக்களிடமிருந்து வன்மையாக பறித்துக்கொள்பவன்.  பிண்டனை வென்று அந்நாட்டு மகளிரின் கூந்தலையறுத்து கயிறுத் திரித்து யானையை இழுத்தவன். கொடுங்கோன்மை அரசாளன். அவனிடம் அரச காவல் மரத்தின் கனியைத் தின்றால் என்று இராமாயணத்தின் கூனிக்கு நிகரான கிள்ளை எடுத்துக்கொடுக்கிறாள். 

“…………………………………. …………………… ………. அந்த மாங்கனி
தரையாள் மன்னரின் காவல்மரத்து
மாம்பழம் என்று சொல்லி
அரசக் குற்றப் பழியினைச் சுமத்தி
மெல்லிய மலரைக் கொய்து எறிவதுபோல்
மலர்க்கொடி தலையைக் கிள்ளி எறிந்திடு” ( நீா்மாங்கனி  பக். 113 114 115)

காதல்பகைமையினால் நல்லியல்பை இழந்த பனிமொழியும் சோ்ந்து புகார் தருகிறாள். அரசன் மலா்க்கொடியை கைதுசெய்து சிறையில் அடைக்கிறான். வழக்கினை ஆராய்தல் எதுவுமின்றி  தலையைக் கொய்ய தீா்ப்பளிக்கிறான்.

“கந்தரத் தன்மகள் மலா்க்கொடியை இழுத்துவா
வெஞ்சிறை அடைத்துவை .. ஒருவாரத்திற்குள்
அவள் உடல்விட்டு  உயிர்விடைபெறட்டும்” (நீா்மாங்கனி ப.120) 

மலா்கொடி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவாளா? இளம்பரிதி அவளை மணப்பானா? என்ற வினாக்களுடன் நாடகம் வளா்ச்சி நிலையடைகிறது
.
முடிவுநிலை:
முடிவுநிலை என்பது தொடங்கப்பட்ட சிக்கலுக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவைத்தருவதாகும். எழுப்பப்பட்ட வினாவுக்கு விடையாக, பிரச்சனைக்கு தீர்வாக அமைதல் முடிவின் இயல்பாகும்.முடிவில் மையப்பாத்திரங்கள் இடம்பெற வேண்டும். மலர்க்கொடியின் தந்தை கந்தரத்தன்

“ ………………………………… …………………. சிறுமியின் சொற்களை
அருள்வழி நின்று பொறுத்திட வேண்டுவேன்
…………………………..     …………………….  குற்றக்
கழுவாயாய் ஒருமாங் கனிக்கு ஆயிரம்
தீங்கனி தேடிக் கொணா்ந்து படைக்கிறேன்”  (நீா்மாங்கனி ப.129)

என வாதிடுகிறான். ஆனால் கொடுங்கோலன்

“இறப்பே அவளுக்குச் சிறந்த விடுதலை
தரும்எனத் தெளிவாய்த் திடமாய் உரைப்பேன்”  (நீா்மாங்கனி ப.132)

என தீா்ப்பளிக்கிறான். இளம்பரிதி கோசரின் உதவியை நாடுகிறான். கோசா் தூதனுப்புகிறான். தூதனை சிறையிலடைக்கிறான். தன் தூதினை மதிக்காமல் சிறையிலடைத்த சிறுமதி அரசனை அழிக்க படையெடுத்து வருகிறான். அதற்குள் மலர்க்கொடியை கொன்று முடிக்கிறான் அரசன். போரில் கொடுங்கோலன் அழிக்கப்படுகிறான். அவனது காவல் மரம் வெட்டி வீழ்த்தப் படுகிறது. இளம்பரிதி மலர்க்கொடியை புதைத்த இடத்தில் நடுகல் அமைத்து பத்தினியின் மேன்மையை பரவுகிறான்.

“பெண்மை போற்றா மன்னன் மடிந்தான்
உண்மை போற்றா அனைவரும் அழிவா்”  (நீா்மாங்கனி ப.159)
“இன்று எழுப்பிய நற்சிலை உருவில்
மங்கை நல்லாள் என்றும் வாழ்வாள்
செங்கதிர் தொழல்போல் அவள்தொழப் படுவாள்
…………….   ……………………. …………… அந்நல்லாள்
இறைமை நிலையை எய்தியே உயா்வாள்”  (நீா்மாங்கனி ப.159) என்று கோச மன்னனால் புகழப்பட்டாள் என துன்பியல் முடிவு இருந்தாலும், இன்றும் கொங்கு நாட்டு ஆனைமலையில் மாசானி அம்மனாக வணங்கப்படுகிறாள் என்று நீா்மாங்கனி நாடகம் நிறைவடைகிறது.

ஆய்வு முடிவுகள்:
1.ஒரு சிறு சங்கப்பாடல் கருத்தை தன் கற்பனை வளத்தால் சிறந்த நாடகமாக்கி தமிழுக்கும் பெண்மைக்கும் பெருமையைச் சோ்க்கிறார்.
2.நாடக வெளிப்பாட்டுத்திறனுக்கு தன் கவி ஆற்றலையும், மொழியாற்றலையும் செவ்வனே பயன்படுத்தியிருக்கிறார்.
3.காட்சிகளையும் கதை மாந்தா்களையும் தன் கற்பனைத்திறத்தால் படைத்து நாடகத்திற்குச் சுவைச் சோ்க்கிறார்.
4.சிலப்பதிகாரம், பாரதிதாசனின் சேரத்தாண்டவம், கண்ணதாசனின் ஆட்டனத்தி ஆதிமந்தி போன்ற காவியங்களோடு ஒப்பிடக்கூடிய வகையில் நாடகத்தை நெய்திருக்கிறார்.
5. புறநானூறு,  குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை, திருக்குறள், மணிமேகலை, இராமலிங்க வள்ளலார், கவிமணி, பாரதியார், பாரதிதாசன், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, கலிங்கத்துப்பரணி போன்ற நிலைத்த இலக்கியங்களின் சாரங்களை தேவைக்கேற்ப எடுத்தாண்டு நாடகத்தைச் சிறக்கச்செய்திருக்கிறார்.
6. நாடகச்சுவையும் எண்வகை மெய்ப்பாடுகளும் தோன்ற நாடகம் இயற்றியிருக்கிறார்.
7.தனது கவித்திறன், இசைத்திறன், காப்பியத்திறன், அம்மானை, கந்துகவரி, இயற்கைப்பாடல் இயற்றும் திறன், இலக்கிய- இலக்கண நூல்களின் தோ்ந்த புலமைத்திறன், மொழிவளம்- சொல்வளம், சமகால அரசியலறிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டு நாடகம் சமைத்து படிப்போர்க்கு நல் அறுசுவை விருந்து படைத்திருக்கிறார் பேராசிரியா் முனைவா் மலையமான்.

முதன்மை நூல்:
நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)-டாக்டா் மலையமான்
அன்புப் பதிப்பகம்
63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை
சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.

அடிக்குறிப்புகள்:

1.பாரதியார்-பாரதியார் கவிதைகள்-எங்கள் தாய் ப.133- மணிவாசகா் பதிப்பகம்- தென்றல் நிலையம்- சிதம்பரம் 608 001. முதல் பதிப்பு ஆகஸ்ட் 2000.
2.முனைவா் குமரி அனந்தன்-  இலக்கிய இணையா் முனைவா் மலையமான் –முனைவா் சரளா இராசகோபாலன் முத்துவிழா மலர் -2012 ப.15
3. முனைவா் மலையமான்- தினமணி நாளிதழ் – மாயன் என்னும் ஆதித் தமிழா்!- ஆய்வுக் கட்டுரை –ஆகஸ்ட் 21- 2018.
4.முனைவா் மலையமானின் ஆய்வு முடிவுகள்- இலக்கிய இணையா் முனைவா் மலையமான் –முனைவா் சரளா இராசகோபாலன் முத்துவிழா மலர் -2012  பக்.166-167.
5 டாக்டா் வெ.இறையன்பு இ.ஆ.ப. –மலைக்க வைக்கும் மலையமான் ப.24 இலக்கிய இணையா் முனைவா் மலையமான் –முனைவா் சரளா இராசகோபாலன் முத்துவிழா மலர் -2012.
6.முனைவா் சிலம்பொலி செல்லப்பனார்-ஆய்வுரை ப.7- நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)-அன்புப் பதிப்பகம் 63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.
7. டாக்டா் பொற்கோ-சிறப்புரை-ப.8- நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)-அன்புப் பதிப்பகம் 63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.
8.டாக்டா் மலையமான்- என்னுரை-ப.15- நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)-அன்புப் பதிப்பகம் 63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.
9 .டாக்டா் மலையமான்-  நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)- ப.17 அன்புப் பதிப்பகம் 63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.
10. டாக்டா் மலையமான்- நீா்மாங்கனி (வரலாற்று கவிதை நாடகம்)- ப.25 அன்புப் பதிப்பகம் 63 ஏ, டாக்டா் அரங்காச்சாரி சாலை சென்னை-600 018. முதல்பதிப்பு நவம்பா் 1996.

கட்டுரையாளர்: – முனைவா் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசுமேனிலைப்பள்ளி பரமனந்தல்- செங்கம்-606710., திருவண்ணாமலை மாவட்டம். –
பேசி 99430- 67963.

<maranvmctamil@gmail.com>