– கவிஞர் தமிழ்க்கனல், கவிஞர் இளசை அருணா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு, நவம்பர் – 2004 ல், எட்டயபுரம் – பாரதியார் மணிமண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்ட, “கரிசல் காட்டுக் கதைகள்” சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்த சிறுகதை இது.) –
பெளர்ணமி நிலவின் ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு பகலை உருவாக்கியிருந்தது. பனிக்காலத் தொடக்கத்தின் மெல்லிய வருடலினால், உடம்பை இலேசாக நெளித்துக்கொண்டேன்.
என்னைத் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டிருந்த தாத்தாவின் கம்பீரம் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது.
தெற்கே இரண்டு மைலுக்கப்பால், ரயில் பாதையில் புகையைக் கக்கிக்கொண்டு குமுறிச் செல்லும் “கூட்ஸ்” வண்டியின் ஒலி தெளிவாகக் கேட்டது.
“பேராண்டி…. மணி ரண்டு ஆயிடுச்சுல…. சினிமா முடிஞ்ச உடனே கிளம்பியிருக்கணும்…. ரொட்டிக்கடைக்குப் போனதால லேட்டாயிடிச்சு…. சரி…. சரி…. நல்லா கெட்டியா உக்காந்துக்க…. தூங்கிக் கீங்கி விழுந்துடாதல…. இன்னும் சத்துநேரத்தில வீடு வந்திடும்…. சரியா…..”
“ நான் ஒண்ணும் தூங்கல்ல தாத்தா….” பதில் கூறினேன் நான்.
இலேசாகத் திமிறினார் தாத்தா. அவர் பேச்சிலே சிறிது கோபம் அடுத்து வெளிவந்தது.
“என்னலே…. தாத்தா, பூத்தாண்ணுகிட்டு…. பேராண்டியிண்ணு கூப்பிடச் சொல்லிக்கிட்டு வர்றேன்…. நீ என்னமோ ஓம்புட்டு இஷ்டத்துக்கு இழுத்து உட்டுக்கிட்டே போறே…. சொல்லுலே….”
“சரிலே…. பேராண்டீ………………..” சத்தமாகச் சொன்னேன் நான்.
“கெக்கெக்கே….” என்று தனது பொக்கை வாயால் சிரித்துக்கொண்டார் தாத்தா. தன்னோடு சரிக்குச் சரியாக நான் பேசுவதில் அவர் கண்ட இன்பம் என்னவோ!
“பேராண்டி…. எனக்கொரு சந்தேகம்….” மெதுவாகக் கேட்டேன்.
தாத்தா உற்சாகமானார்.
“கேளுல…. கேளு…. என்னா சந்தேகம்…. எப்ப உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு கேக்கப்போறியா…. இருலே…. தாத்தா மொதல்ல ஒண்ணு கட்டிக்கிட்டு, அப்புறமா உனக்கு ஒண்ணு கட்டி வெக்கிறேன்….”
சொல்லிவிட்டு மீண்டும் “கெக்கெக்கே….” சிரிப்பு தாத்தாவுக்கு.
மீண்டும் நெளிந்தேன் நான். பதிலடி கொடுக்க நினைத்தேன்.
“எதுக்கு பேராண்டி ஆளுக்கு ஒண்ணு…. பேசாம நாம ரண்டுபேருமா ஒரு பொண்ணையே கட்டிக்குவோம்….”
தாத்தாவுக்கு பெரிய குஷி. அவர் சிரித்த சிரிப்பின் குலுக்கலால் என் அடிவயிறு கலங்கியது.
எனக்கு சிறிது கோபம். பேசாமல் இருந்தேன் நான். தாத்தா என்னை உலுக்கினார்.
“பேராண்டி…. என்னலே உம்முண்ணு இருக்கே…. நீ கேக்கவந்த விசயத்தை மறந்திட்டியா…. சரிசரி…. இப்ப கேளு….”
“இப்ப உம்பேரு என்ன உண்டோ…. அதே பேருதான் எனக்கும் வச்சிருக்கு…. இல்லியா…. அது ஏன்….?”
“அப்பிடிக் கேளு…. ஆடு,மாடு,பண்ணி,கழுதை, நாய்ண்ணு மிருகங்கள் மட்டுமில்லை…. எல்லா சீவராசிகளும் காலங்காலமா குழந்தை பெத்துக்கிட்டுத்தான் இருக்கு…. ஏதோ சாப்பிட்டுத் தூங்கிறமாதிரி, அதெல்லாத்தையும் ஒரு வேலைபோல செஞ்சுகிட்டிருக்கு…. ஆனா, மனுசன் மட்டும் அப்பிடி இல்ல….”
“பின்ன எப்பிடி பேராண்டி….”
நுணுக்கமாகக் கேட்டேன் நான்.
தனது வலது கையினை என் முதுகுக்குப் பின்னால் எடுத்துத் தட்டிக்கொடுத்தார் தாத்தா.
“மனுசன் வாழுற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு பேராண்டி…. ஒரு குழந்தையைப் பெத்து, வளத்து, படிக்க வெச்சு, இல்லே வேற ஏதாச்சும் தொழிலைக் கத்துக் குடுத்து, அவனை ஆளாக்கி விடுறது, அவன் தன்னோடசொத்துக்களை மட்டும் காப்பாத்தணும்னு இல்ல…. அத்தோட தன் பேரையும் காப்பாத்துவாங்கிற நம்பிக்கையோடுதான்….”
தாத்தா சொல்வது புரிவது போலவும் தெரிந்தது. புரியாதது போலவும் இருந்தது.
பெரியவங்க பேசிற புதுப்புது வார்த்தைங்க கூட, அர்த்தம் புரியாவிட்டாலும், சின்னவங்க நெஞ்சில ஆழமா பதிஞ்சிடும்னு சொல்லுவாங்க…. என்னைப் பொறுத்தவரை உண்மை அது.
தாத்தா சொல்லிக்கொண்டே நடந்தார்.
“புள்ளையா பொறந்தவன், அப்பன் சொத்தை வெச்சு காப்பாத்திற மாதிரி, அப்பன் பேரையும் தொடர்ந்து காப்பாத்தணும்ங்கிற அடிப்படையிலதான், தனக்குப் பொறக்கிற பையனுக்குத் தன்னோட அப்பன் பேரை வச்சுக்கிறான்…. அவன் பேரை இவன் ஏத்துக்கிட்டதால, அவனுக்கு இவன் பேரன்…. இவனுக்கு அவன் பேரன்….”
கால்வாய் ஓரமாக தூரத்தே தெரிந்த “தகனப்பிறை” தகரக் கொட்டகையில், பிணம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. நிறையப் பேர் கூட்டமாக அங்கு நின்றுகொண்டிருந்தனர்.
ஆச்சரியமாகக் கேட்டேன் நான்.
“என்ன பேராண்டி…. இந்த நேரத்தில பாத்து, தகரக் கொட்டகையில எரிச்சுக்கிட்டிருக்காங்க….”
“சாகிறவனுக்கு நேரம், காலம்னு ஒண்ணு இருக்காலே….”
“இல்ல…. இந்தப் பனிக் குளிரோட எத்தனைபேரு சங்கடப்படுறாங்க….” இரக்கமாகப் பேசினேன் நான்.
பதில் பேசாமல் சிலகணங்கள் மெளனமாகவே நடந்தார் தாத்தா. ஒரு பெருமூச்சு விட்டபடி மெதுவாகக் கேட்டார்.
“ நீ சொல்றதைப் பாத்தா, நாளைக்கு ஒரு நாள் இப்பிடியான டயிம்ல நான் செத்துப்போயிட்டாலும், என்னய இங்கை கொண்டுவர மாட்டே போல இருக்கே…. பேரப்பிள்ளை செலவுபண்ணி மேளதாளத்தோட கொண்டுவருவேயிண்ணில்லியா நெனைச்சேன்….”
தாத்தா பேச்சிலே கவலை தெரிந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பக்கத்துத் தெருவில் ஒரு தாத்தா இறந்தபோது, அவரை மேளதாளத்துடன் கொண்டுவந்து தகனம் செய்தார்கள்.
வந்தவர்களுக்கெல்லாம் பூந்தி, பொரி கொடுத்து, ஒரு திருவிழாபோலவே கொண்டாடினார்கள்.
இவை அனைத்தையும், இறந்தவரது பேரப்பிள்ளைகளே நட்த்தினார்கள். இதற்கு “பேரப்பிள்ளை செலவு” என்ற பெயர் வேறு.
தன் பெற்றோரைப் பெற்றவர்கள் இறந்தவேளை, பெற்றோர்கள் அழுகின்றார்கள். பேரர்கள் கொண்டாடுகிறார்கள்.
சில நடைமுறைகளை சீரணித்துக்கொள்ள முடியாமல் தடுமாறினேன் நான்.
இதுபற்றியும் தாத்தாவிடம் கேட்டிருந்தேன். அவரும் சிரித்தபடியே பதில் கூறினார்.
“பேராண்டி…. ஒரு மனுசன் அற்ப வயசிலயோ, நடு வயசிலயோ போகாம, பேரப்பிள்ளை காணுறவரைக்கும் வாழ்ந்து செத்துப் போறப்போதான், அவன் முழுசா வாழ்ந்தான்னு சொல்லுவாங்க…. அப்பிடி முழு வாழ்க்கை வாழ்ந்து, மத்தவங்களுக்கெல்லாம் செய்யவேண்டிய கடமைகளை முடிச்சிட்டு, நிம்மதியாத்தான் எங்க தாத்தா போயிருக்காண்ணு எடுத்துக்கிட்டு, அவாளை சந்தோஷமா அனுப்பி வைக்கிறோம்னு அர்த்தத்திலதான் பேரப்புள்ளைங்க அதை பண்ணுறாங்க….”
என் மனதுக்கு அதுவும் திருப்தியான பதிலாகப் படவில்லை. தாத்தாவின் காதோடு நெருங்கி குனிந்தேன்.
“பேராண்டி…. எங்கம்மா எனக்கு சோறு ஊட்டி விடுது…. எங்கப்பா அப்பப்போ துட்டு குடுக்குது…. ஆனா, எனக்கு பாடம் சொல்லிக் குடுக்கிறதிலயிருந்து, எனக்குத் தெரியாத எல்லாக் கதைகளையுமே…. தெரியவைக்கிறது நீதானே…. நீ மட்டும் செத்துப் போயிடாத…. ஏன்னா…. நான் பாவமில்லியா பேராண்டி….”
என் தாத்தாவின் கண்கள் பனித்தன.
(2)
பள்ளிக்கூடத்தில் கூட என்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. எப்போது வீட்டுக்குப் போகலாம், சாயந்திரமானதும் தாத்தாவோடு கை கோர்த்துக்கொண்டு பஜார் பக்கம் ஒரு ரவுண்டு போய்வரலாம் என்பதிலேயே எண்ணம் நிலைகொண்டது.
மதியம் சாப்பாட்டுமணி அடிப்பதற்குச் சற்று நேரத்தின் முன்பு, எச்.எம்.சாரின் ஆபீஸ் பியூன் எங்கள் வகுப்பிற்கு வந்தார். எங்கள் கிளாஸ் டீச்சரிடம் ஏதோ பேசினார். டீச்சரின் பார்வை என்மீது விழுந்தது.
அருகே வந்து என்னை அனுதாபத்தோடு நோக்கினார்கள். புரியாமல் எழுந்து நின்றேன்.
ஆதரவாக என் தலையில், தன் கையால் தடவி விட்டார்கள்.
“பயப்பிடாத…. ஒண்ணுமில்ல…. உங்க தாத்தாவுக்கு உடம்புக்கு என்னமோ சரியில்லையாம்…. உன்னய பாக்கணும்னாங்களாம்….”
“தாத்தாவுக்கு என்னாச்சு….”
பதறினேன் நான். என் தலை சுற்றியது.
நானாக வீட்டுக்கு வந்தேனா, அல்லது என்னை யாராவது வீடுவரை கொண்டுவந்து விட்டார்களா என்பது பற்றியே எனக்குத் தெரியவில்லை.
தாத்தாவின் ரூமுக்குச் சென்றேன். சோர்ந்து படுத்திருந்த தாத்தாவின் முகம் என்னைக் கண்டதும் மலர்ந்தது.
வெகு சிரமத்துடன் தனது வலது கையைத் தூக்கி, என்னை அருகே வரும்படி சைகை செய்தார்.
அருகே சென்று கட்டிலின் ஓரம் அமர்ந்தேன் நான். என் குரல் மெதுவாக வெளிவந்தது.
“பேராண்டி….”
தாத்தாவின் பார்வை ஒருகணம் ஏனையோர் மீது விழுந்தது. குறிப்பறிந்து கொண்டு அனைவரும் ரூமை விட்டு வெளியேறினர்.
தாத்தா வெகு சிரமத்தோடு பேசினார்.
“பேராண்டீ….”
மூச்சு வாங்கியது தாத்தாவுக்கு.
தாத்தாவின் நெஞ்சோடு சாய்ந்தபடி பேசினேன் நான்.
“பேராண்டி…. உனக்கு ஒண்ணுமே ஆகாது…. உனக்கு அம்மாவும், அப்பாவும் வைத்தியம் பண்ணப் போறாங்க….”
தாத்தாவின் நெற்றி சுருங்கியது.
“என்ன வைத்தியம்…?” என்பது போல தலையசைத்தார்.
புரிந்துகொண்டேன் நான்.
“சாயந்தரம்போல உனக்கு நல்லெண்ணெய் தேச்சுக் குளிப்பாட்டிட்டு, செவ்விள நீர் தரப்போறாங்களாம்…. அப்புடீன்னா நீ நாளைக்கே எந்திரிச்சு உக்காந்துக்கலாமில்லியா பேராண்டி….”
தாத்தாவின் வாயிலிருந்து சிரிப்பும், கண்ணீரும் ஒரே நேரத்தில் வெளிவந்தன.
புரியவில்லை. விழித்தேன் நான். தாத்தா என்னை நோக்கினார்.
“பேராண்டி…. நான் இனி இந்த ஒலகத்தில வாழுறதால பலபேருக்கு சிரமம்பா…. அடுத்தவங்க கையால சாகிறதுக்கு முன்னாடி ஒம்மடியில சீவனை விடணும்பா…. கொஞ்சம் பக்கமா நெருங்கி உக்காரு…. ஒம்மடியில நான் படுக்கணும்….”
கண்ணிலே நீர் திரண்டது எனக்கு. தாத்தாவின் மடியில் எத்தனையோ தடவைகள் படுத்திருக்கிறேன். ஆனால், தாத்தா இப்படிச் செய்வது இதுவே முதல்தடவை.
கேட்டபடி நானும் செய்தேன். இப்போது எனக்கு ஏதோ கொஞ்சம் புரிவதுபோல இருந்தது.
“பேராண்டி…. நீ என்ன சொல்றே…. மத்தவங்க கையால சாகாமைண்ணா…. முடிக்காமல் இழுத்தேன்.
தாத்தா மெளனமாக இருந்தார். நானே பேசினேன்.
“புரியிது பேராண்டி…. இந்த நல்லெண்ணைக் குளிப்பும், இளநீர்க் குடிப்பும் உன்னய காப்பாத்திற மருந்து இல்லை…. அப்பிடித்தானே….”
பதில் இல்லை.
எனக்கு எல்லாமே தெளிவாகப் புரிந்துவிட்டது. சீறினேன் நான்.
“பேராண்டி…. உன்னய கொண்ணுபுட்டு இவனுங்க மட்டும் இருந்திட முடியுமா….? எங்கப்பனுக்கு நான் உசிரோடையே கொள்ளிபோடுறேன் பாரு….” துள்ளி எழுந்தேன்.
தாத்தாவுக்கு எங்கிருந்து வேகம் வந்ததோ தெரியவில்லை…. என் கையைப் பிடித்து பலமாக இழுத்து, என் வாயைப் பொற்றித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
“பேராண்டி…. எம்மேல நீ இத்தனை நாளா வெச்சுக்கிட்டிருந்தது உண்மையான பாசமா இருந்தா, அதுமேல ஆணையா எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடு….”
விறைத்தேன். விக்கித்தேன். வேறு வழியில்லை. விழுந்துவிட்டேன்.
“ஆகட்டும் பேராண்டி…. சொல்லு….”
தாத்தா சொல்லத் தொடங்கினார்.
“என்னதான் இருந்தாலும், உங்கப்பன் நான் பெத்த புள்ளைப்பா…. என்னால எதுவுமே ஆகாத நிலையில, நானும் செரமப்படாம, தன்னையும் செரமப்படுத்தாம இருக்கணும்னுதாம்பா அவன் இந்த முடிவுக்கு வந்திருக்கானே தவிர, அவன் ரொம்ப நல்லவம்பா…. நெறைய கிராமங்களில அப்பப்ப இது ரகசியமாக நடந்துகிட்டுத்தான் இருக்கு…. இதுக்கெல்லாம் பயந்துதான் எத்தினையோ வயசாளிங்க, தாங்களாகவே விரும்பி , அனாதை விடுதிக்கும், முதியோர் இல்லத்துக்கும் போய்க்கிட்டிருக்காங்க….”
பேசிக்கொண்டிருந்த தாத்தா ஒருகணம் நிறுத்தினார்.
“அடடா…. நல்ல வேளை…. ஞாபகம் வந்திடிச்சு….”
என்று கூறியபடி தனது மடிக்குள் சொருகி வைத்திருந்த ஒரு சிறு பார்சலைப் பிரித்தபடி பேசினார்.
“பேராண்டி…. உனக்கு ரொம்பவும் புடிக்குமே பூந்தி…. நல்ல வேளையா வயலுக்குப் போறப்போ வாங்கினேன்…. இந்தா லபுக்கிண்ணு வாயில போட்டு முழுங்கு….”
வழக்கம்போல என் வாயிலே ஊட்டிவிட்டார். என்னால் சாப்பிட முடியவில்லை. கண்ணீர் வழிந்தது.
“எதுக்குலே அழுற…. அழுவாம தின்னுலே….”
அதிலே கொஞ்சம் எடுத்து, தாத்தாவின் வாயிலே ஊட்டினேன் நான்.
“பேராண்டி…. நீயும் கொஞ்சம் தின்னுக்க….”
தாத்தா ஒருகணம் வைத்தகண் வாங்காமல் என்னை நோக்கியபடியே சாப்பிட்டார்.
“இந்த நேரம் ஓங்கையால சாப்பிடல்லைன்னா…. என் கட்டைகூட வேகாதப்பா…. நீ பேரப்புள்ளை செலவுண்ணு எந்தப் பயலுக்கும் பூந்தி வாங்கிக் குடுக்காத…. உம் பேரனுக்கே குடு….”
கூறிவிட்டு என் கையால் இன்னுமொரு வாய் வாங்கிக்கொண்டு, “கெக்கெக்கே….” போட்டு சிரித்தார்.
வெறித்துப் போய் முகட்டு வளையைப் பார்த்தேன். ஒரு சிறு பூச்சி, பல்லியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, எவ்வளவோ முயன்றும் முடியாமல், பல்லி வாயில் அகப்பட்டுத் துடித்தது. சற்று நேரத்தில் அமைதியானது.
பெருமூச்சொன்றை விட்டபடி தாத்தாவை நோக்கித் தலையைத் தாழ்த்தினேன்.
என் மடியிலே கண்ட சுகத்தோடு, சொர்க்கத்தையும் கண்டிருந்தார் அவர்.
என்மீது நிலைகுத்திய பார்வையோடு படுத்திருந்த, அவர் கண்ணின் விழிகளில் என் உருவம், அசையாத படமாக பதிந்திருந்தது.
என்னால் இப்போது அழ முடியவில்லை.
அமைதியாக, கையினால் அவரது கண் இமைகளை மூடிவிட்டேன். நெற்றியைத் தடவியபடி தாத்தாவின் தலையிலே என் கையை அழுத்தினேன்.
மனதிலே எழுந்த வார்த்தைகள் சத்தியமாக வெளிவந்தன.
“பேராண்டி…. எனக்கு எங்கம்மா, அப்பாவைப் புடிக்கிதோ இல்லியோ…. ஆனா எந்தக் காலத்திலயும் அவுங்களைப் பழிவாங்க மாட்டேன்…. நல்லபடியா கவனிச்சுக்குவேன்…. இது அவங்களுக்காகவோ, எனக்காகவோ, ஆண்டவனுக்காகவோ இல்லை…. எல்லாம் உனக்காகத்தான் பேராண்டி….”
bairaabaarath@gmail.com