பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச் சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! – அந்த,
நல்லவர் பேருலகில்…….. தந்தை….!
ஓர்பது மாதந் தன்னில் : ஒருத்திதன் வயிற்றிற் கொளினும்,
யார் அதன் வேரை இட்டார்……. முதலில் ? – அவர்,
பேர் அது தந்தையாகும்…… உலகில்….!
வானது பெய்தால் தானே : வையகம் பசுமை காணும்,
வானைப்போல் வழங்கிடுவார்…… வாரி ! – அந்த,
வான்புகழ் கொண்ட தந்தை ……. பாரி…!
அன்பெனும் அமளி மேலே : அன்னைதான் துயிலச் செயினும்,
நன்புகழ் அறிவை ஏற்றும்……. ஜோதி ! – அது,
நானிலம் புகழும் தந்தை……. ஜாதி…!
எதை எதோ நினைத்து நெஞ்சம் : ஏங்கிய போதும் மழலை,
உதையினைக் கண்டபோது…… மலரும் ! – அந்த,
உத்தமர் தந்தை என்பார் ……. பலரும் !
துள்ளியே திரியும் நாளில் : துடுக்கினை அடக்கி வைத்தே,
பள்ளிக்கே அனுப்பிவைக்கும்……. முறைமை ! – அந்த,
பக்குவம் தந்தை கொண்ட …….. கடமை !
தன்மகன் படிப்பில் தேறித் : தரமானோர் சபையின் முன்னே,
முன்னிலை வகிக்க எண்ணும்……. நெஞ்சம் ! – அந்த,
முறையாளன் தனையுலகே…… கொஞ்சும் !
பெற்றதாய் சுற்றத் தோர்கள் : பெருமையாய் மகனைச் சொல்ல,
மற்றவர் முன்னே புகழா…….. மெளனம் ! – அவனை,
மனதுக்குள் புகழ்வதில்தான்……. கவனம் !
அன்னையைக் கண்ட பின்தான் : அப்பனைக் காண்போம் எனினும்,
முன்நிலைப் பெயரில் நிற்பார்…….. தந்தை ! – அந்த,
முறையோனைப் பணியட்டுமே…….. சிந்தை !
நெஞ்சின்மேல் தூங்க வைத்து : நிம்மதி கொள்வார் நாமும்,
துஞ்சிடும் அழகில் காண்பார்…….. வையம் ! – அவர்,
தூய்மையில் சிறிதும் இல்லை……. ஐயம் !
உப்பது தீர்ந்த பின்தான் : உப்பின் சுவை அறிவார்,
அப்பனும் போனபின்தான்……… அழுவார் ! – அதனை,
அறிவால் உணர்ந்தவரே……. எழுவார் !
bairaabaarath@gmail.com