பெண் மென்மையானவள், அமைதியானவள், அடக்கமானவள், சிந்திக்கும் தகுதியுற்றவள், ஆணைச் சார்ந்தே வாழ வேண்டியவள் என்று உருவாக்கி வைத்த கருத்தாக்கங்களும் அதனை நடைமுறைப்படுத்திய சமூகமும் இன்று மாற்றம் அடைந்து வருகின்றன. மக்கள் வாழ்வை வெளிப்படுத்துவதில் மற்ற இலக்கியங்களைக் காட்டிலும் நாவல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே சமுதாயத்தில் மகளிரின் நிலை குறித்தும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தாயுமானவன் நாவலில் கூறும் செய்திகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றன.
பாலகுமாரனின் பெண்ணியச்சிந்தனை
பாலகுமாரன் அடிப்படையில் பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கிறார். அவருடைய எல்லாப் படைப்புகளும் பெண்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவைகளாக இருக்கின்றன. பெண்கள் தம் வாழ்வில் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கல்கள் பல உள்ளன. பெண் என்பவள் குடும்பத்தைத் தாங்கும் தூண் போன்றவள். அவளாளையே குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் தூய்மையானதாகவும் பாசத்தின் பிறப்பிடமாகவும் நம்பிக்கையின் தாயகவும் விளங்குகின்றது. இதனை, பாலகுமாரன்.
”யப்பா…! வேலை செய்யற இடம் முன்ன பின்ன இருக்கலாம் சரசு.வீடுன்ற இடம் நெஞ்சுக்கு இதமா இருக்கணும்.வீடு இதமா இருந்துச்சுன்னா எத்தினி துக்கமும், எவ்வளவு கஷ்டமும் சமாளிச்சுட முடியும். வீட்டை வீடா வச்சுக்கற பொம்பளை இருந்தா போறும், ஆயிரம் யானை பலம்.”( பாலகுமாரன், தாயுமானவன். பக்.127)
இவ்வாறு தம் ‘தாயுமானவன்’ எனும் நாவலில் கூறியுள்ளார். வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அவைத் தொடர்ந்து வருகின்றன. சிக்கல்களை அவர்கள் எதிர்க்கும் போது அவர்கள் ஆடவருக்கு எதிராகப் போராடுகின்றனர் எனும் நிலையும் உருவாகியது. மேலும், பெண் கணவனை நினைத்து தினமும் பயப்படுகின்றாள் என்பதை, ”உங்களையும் சுருட்டி கைக்குள்ள போட்டுக் கிட்டாங்களோன்னு பயம்தான்.” (மேற்படி. பக்.237) என்று கூறுகின்றார். பெண்களின் சிக்கல் என்பது வெறுமனே பெண்களின் சிக்கல்களாகா. அவை வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருந்து வந்தவைகள் தான். அவற்றை பாலகுமாரன் தன் நாவல்களில் கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.
“வாழ்க்கை நாடகம்தான். எல்லாரும் எங்கோ ஓரிடத்தில் நடிக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான்.ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம்.அந்த உணர்வுக்குப் பெயர்தான் மென்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.”(மேற்படி. பக்.66)
“மேல மேலன்னு போறவனுக்கு இடறத்தான் செய்யும்.கைபிடிச்ச பிடி நழுவிரத்தம் வரும்.சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும்.பல்லைக் கடிச்சுக்கிட்டு மேலே ஏறணும்.மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக் கூடாது சரசு.”(மேற்படி. பக்.125)
”சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும்.சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும்.வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.”( (மேற்படி. பக்.140)
வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பாலகுமாரன் குறிப்பிடுவதைப்போல மிக லாவகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் நாவல் இலக்கியங்கள் பொதுமைப்படுத்துகின்றன.
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்புக்கான அவசியம் இன்று மிகவும் குறைந்து வருகிற சமூகமாக நம் தமிழ்ச்சமூகம் மாறிவருகிறது.இன்று குழந்தைகள் தானாக வளர்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு அன்பும் பாசமும் அளவற்றதாக கிடைப்பது கிடையாது.எல்லாம் காலமும் நேரமும் கைக்கூடும் சூழல்களில் தான்.இன்று குழந்தைகளுக்கான ஏக்கம் பெற்றோரிடையே அதிகரித்திருக்கிறது. காரணம் இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தம் குழந்தைகளை வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் பார்த்து பேசிவிட்டு வரும் ஒரு அவசர கதியானச் சூழலில் சிக்கி இருக்கிறார்கள். இந்த மாதிரியான சூழலில் வளர்வதை விட ஒரு குழந்தையைப் பிறக்கும் தருணத்திலேயே கொன்றுவிட்டு பெற்றோர்கள் அவர்கள் வேலையைப் பார்க்கலாம் என்கிறார் பாலகுமாரன்.
“சரசு வேலைக்குப் போகிறேன்” என்கிறாள். குழந்தைகளுக்கு டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டு, ஆறு மணிக்கு சூரியன் சரிகிறபோது வந்து சமையல் துவங்கப் போகிறாள். பசித்துத் தவிக்கிற குழந்தைகளை, “பத்து நிமிஷம் உக்காருங்க“ என்று அதட்டிவிட்டு, அதுகளைத் தட்டோடு காத்திருக்க வைத்து, அடுப்பிலிருந்து அரைவேக்காடாய் இறக்கிப் பரிமாறப் போகிறாள். சாய்திரம் பசிச்சா, ஆளுக்கு நாலணா பிஸ்கட் சாப்பிடுங்க என்று முடித்துவிடப் போகிறாள். குழந்தைகள் பசிக் கடுப்பில் மோதிக் கொள்ளும்.ஒன்றையொன்று பிறாண்டும்.ஆத்திரமாய் வளரும்.
இப்படிக் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதில் கொன்று போடலாம். “நீ பாட்டி வீட்ல இருந்து படி“ என்று பிரித்துப் போடலாம்.
“மூலைக்கு ஒருவராய்ப் பிரிந்து, ஒருவரையொருவர் நொந்து கொள்ளலாம்.குற்றம் சாட்டலாம்.பிரிந்து நெடு நாளைக்குப் பிறகு கூடுகிறபோது கூடப் பொருமல் தாங்காமல் குறை சொல்லி அழலாம். வாழ்க்கை அழுகையாய், ஆபாசமாய்ப் போக இதை விடச் சிறந்த வழி எதுவுமில்லை.” (மேற்படி. பக்.154)
குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடாத சமூகம் நிச்சயம் பாலகுமாரன் குறிப்பிடுவதைப் போல அழுகையும் ஆபாசமும் நிறைந்து வழியும் சமூகமாகத்தான் இருக்க முடியும்.
கற்பு
பாலகுமாரன் தம் நாவலில், ”கற்பு என்பது பெண்ணுக்குக் கைவிலங்காய் இருக்கலாம்.தலையில் ஏற்பட்ட சுமையாய் இருக்கலாம்.ஆனால் அதைக் களவாட எவனும் முற்படின், தலைச் சுமையில் கை வைக்கத் துணிந்தபின் தரம் அடி தவறாது விழும்.இங்கே பிராது சொன்னவளே பலமான சாட்சி.அவள் புலம்பலே பெரும் சாதகம்.அவள் கண்ணீர் முக்கியமான வாக்குமூலம். அவள் அபயக் குரல் கொடுக்க, உடனே போர் மூளும், வழக்கு பொய்யாய்ப் போடப்பட்டாலும் இந்த வலுவான உதவிகள் குற்றம் சுமத்தப்பட்டவனை அதல பாதாளத்தில் தள்ளும்”( (மேற்படி. பக்.217) என்று பெண்ணின் பெருமையினை பெண்ணுக்கான ஆதாரங்களாக மாற்றியமைக்க இந்த சமூக முன்வரவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
திருமணமும் பெண்கள் நிலையும்
சமூக வளர்ச்சிக்கும் பண்பட்ட புதிய தலைமுறை உருவாகவும் காதல் வாழ்வில் ஏற்படும் குற்றம் குறைகள் நீக்கப்படவும் உருவானது திருமணம்.ஆனால், இன்று திருமணமோ பெண்கள் வாழ்வில் ஒரு புதிராகவே அமைந்துவிட்டது.புதிய சூழலும் புதிய மனிதர்களும் அவளுக்கு வியப்பினையே ஏற்படுத்துகின்றனர். அதுவும் சில நேரங்களில் அத்திருமணம் மனநிறைவையும் பொருளாதாரத் தேவையையும் நிறைவு செய்யாதபோது பெண்ணின் நிலை இரக்கத்திற்கு உரியதாக மாறி விடுகிறது என்பதை பாலகுமாரன் தன் நாவல்களில் வரும் உரையாடல்களால் விளக்குகிறார். ”நாப்பது சவரனுக்கு ரெடி நாங்க. எங்க பக்கத்துல பசங்க யாரும் இப்படி படிச்சவங்களா இல்லை.வெளியூர் ஆளும் எம்.ஏ.வான்னு தயங்கறாங்க. ஆறாவது படிச்ச பொண்ணு போறுங்கறானுங்க!” (மேற்படி. பக்.200)
”சரசு நிச்சயம் சொல்லுவாள். “அடுத்த வீட்டு சாப்பாடு, தெரிஞ்ச சிநேகிதி புடவை, கூடப் பிறந்தவள் நகை, தம் பெண்ணின் அழகு இது நாலும் உத்துப் பார்க்கக் கூடாது. நமக்கு உறுத்தவும் கூடாது” (மேற்படி. பக்.202)
ஒரு குடும்பத்தின் வாழ்வியல் வெற்றி, மதிப்பு, செயல்திறன் அனைத்துமே பெண்களாலேயே காப்பாற்றப்படுகின்றன எனும் கருத்தினைச் சமூகம் உருவாக்கி இருப்பதால் பெண்ணின் ஒவ்வொரு நடவடிக்கையும் சமூகத்தால் கண்காணிக்கப்படுகிறது.எனவே, எத்தகைய துயரைப் பெண் சந்தித்தாலும் குடும்பம் எனும் கோட்டையில் இருந்து வெளியேறுவதைச் சமூகம் ஏற்றுக் கொண்டதில்லை.மேலும், சமூக அமைப்பைப் பொறுத்தரையில் அது பெண்களுக்குத் திருமணம், குடும்பம் என ஒருவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது.பெண்களுடைய வாழ்வில் திருமணம் தோல்வியுறும்போது அதை மீண்டும் உருவாக்கிக் கொடுத்தல் என்பது அரிதான செயலாகவே காணப்படுகின்றது.திருமணம் என்பது இறப்பு வரை ஏற்படும் உறவாகவே கருதப்படுவதால் விரிசல் ஏற்படும்போது, பெண்ணே பெரும்பாதிப்புக்கு உள்ளாகிறாள்.திருமணச் சிக்கலில் அகப்பட்டுள்ள பெண்களை வெளிக்கொணர அவள் குடும்பமே தயங்குகிறது.அதங்குக் காரணம் குடும்பத்தினருக்குப் பெண்ணைவிடச் சமூக பயம் அதிகம் உள்ளமையே ஆகும்.எனவே, எந்த ஒரு நிலையிலும் அப்பெண் அடங்கிப் போக வேண்டும் என்றே சமூகம் எதிர்பார்க்கிறது. சமூகத்தில் நிலவும் இக்கருத்திணை வாசந்தி தனது எல்லைகளில் விளிம்பில் எனும் புதினத்தில் இடைப்பிறவால் கதை மாந்தராக வரும் கலாவின் வாழ்வின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார். அதுபோல பாலகுமாரன், மகளிரைப் பொறுத்தவரை திருமணம் என்பது அவிழ்க்க முடியாத சிக்கல்கள் கொண்ட நூல் உருண்டையாகக் காணப்படுவதால் நாம் நன்குச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதனை பேய்கரும்பு என்னும நாவலின் மூலம் விளக்குகின்றார்.
”மனைவி என்பவள் என்ன என்று தெரிந்தால், மனைவியை வெறும் போகப் பொருள் என்ற எவனும் நினைக்கமாட்டான்.கூடலை போகப் பொருள் என்று நிறையபேர் தவறாகச் சொல்கிறார்கள்.சந்தோஷமான கூடலுக்குப் பெயர்தான் போகம்.இரவு நேர சந்தோஷம், விடியலில் ஒரு நிறைவை அமைதியை, அற்புதமான ஒரு கண் கிறக்கத்தைத் தருமின், அதற்குப் பெயர்தான் போகம்.இரவு விஷங்கள் அயற்சியை ஏற்படுத்துமாயின் அதற்கு வேறு பெயர்தான் சொல்ல வேண்டும்.” (மேற்படி. பக்.207)
என்கிறார்.திருமணம் பெண்ணின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பதைவிடச் சமூகச் செல்வாக்கிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.ஆணைச் சார்ந்தே சமூகம் இயங்குவதால் திருமணம் பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தடையினை ஏற்படுத்துகிறது.ஆண் உயர்ந்தவன் அவனை அடைவதற்குப் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது. புதிதாக மணம் முடித்து கணவன் வீட்டிற்குச் செல்லும் பெண் எல்லோரையும் அனுசரித்துப் போக வெண்டியிருப்பதால் பொறுமையும் தியாகமும் பெண்ணிற்குத் தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அச்சத்துடனும் எதிர்பார்புடனும் அந்த வீட்டிற்குச் செல்கிறாள்.அங்கே அவள் நிலை என்னவாக இருக்கிறது என்பதை மற்றொரு இடத்தில் காட்டுகிறார் பாலகுமாரன்.
உன் கண்ணெல்லாம் தூக்கம் வழிகிறது.விழுந்து நமஸ்காரம் செய்து செய்து உனக்கு முதுகும் வலிக்கும் என்று தோன்றுகிறது.இன்னும் சிறிது நேரத்தில் விடிந்து விடும்.நீ தூங்கு.மற்றவைகளை நாளை பார்த்துக் கொள்ளலாம்.
“இல்லை… நீங்கள் தூங்காமல் நாங்கள் தூங்கக் கூடாது.அது மரியாதை இல்லை.” என்று பூங்குழலி சொல்ல, கமலக்கண்ணன் தூங்கப் போனான்.கமலக்கண்ணன் தோளில் கை வைத்தபடியே பூங்குழலி இதற்குப் பெயர்தான் சமர்ப்பணம்.இதற்குப் பெயர்தான் அன்பு செயதல். இதற்கு பெயர்தான் குடும்பம் தன்னை ஒருவன் விரும்பி பெண் கேட்கிறான் என்று தெரிந்ததும் அவனைத் தெரிந்து கொள்ள அவன் இடத்திற்குப் போய் ஆராய்ந்து, அவன் இடத்தின் சூழ்நிலையை வைத்து அவனைப் புரிந்து கொண்டு, அவன் அந்தத் தொழிலின் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து யோசித்திருக்கிறாளே, இவளுக்குப் பெயர் தான் மனைவி” (மேற்படி. பக்.206)
என்று அமையும் இவ்வுரையாடல் குடும்ப அமைப்புச் சார்ந்த பெண்ணுக்கான அடிமை தனத்தினையும், அவளுக்குள்ளான மனப் போராட்டங்களையும் பதிவு செய்யும் தன்மையில் அமைந்திருக்கிறது.
நம்பிக்கை நட்சத்திரமாய் பெண்
சமுக அரங்கில் சில இடங்களில் பெண்கள் நம்பிக்கையானவர்களாக நடந்துக்கொள்கிறார்கள்.அதோடு அவர்கள் நம்பிக்கைக்கான உதாரணங்களாக முன்னிருத்தப்படுகிறார்கள்.இன்னும் கூட ஒரு குடும்பத்தில் பெண் படித்திருந்தால் அந்த குடும்பமே கல்வி அறிவில் கட்டாயம் உயர்ந்திடும் என்று நம்பப்படுகிறது.இது போல சில நம்பிக்கைகளுக்குப் பாத்திரங்களாக இருக்கும் பெண்களையும் பாலகுமாரன் தன் நாவல்களில் ஆங்காங்கே படம்பிடித்திருக்கிறார்.உதாரணமாக தாயுமானவன் நாவலில் வரும் கீழ்க்காணும் உரையாடல்களைக் கூறலாம்.
”சரசுதான் அவன் நம்பிக்கை, அவள் தான் வாய் ஓயாது, ”வரும்… நல்ல காலம் வரும்” என்று பேசியவள். அயர்ந்த போதெல்லாம் தேற்றியவள். பெய்யாய்த் தேற்றுகிறாள் என்று நினைத்ததெல்லாம் பழங்கதையாய்ப் போய் விட்டது. உண்மையிலேயே நல்ல வேலை கிடைத்து விட்டது” (மேற்படி. பக்.7)
சத்யபாமா மாதிரி ஓட்டுனா, கிருஷ்ணன் சரிஞ்சிட்ட பிறகு பல்லுல குதிரை லகானப் புடிச்சுகிட்டு இடது கையில் வில்லும் வலது கையில் அம்புமா. அடேங்கப்பா! என்ன போராட்டம்.எத்தனை காயம்.எவ்வளவு வலி.என்ன வெல்லாம் வேதனை.
ஐயோ! கோயில்ல வச்சுக் கும்புடணும்.தேர் ஓட்டறவளா சரசு.நேரா ஓட்டினா.”நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம். உங்களுக்கு வேற வேலை கிடைக்கிற வரைக்கும் நான் பொறுப்பெடுத்துக்கறேன், கவலைப் படாதீங்க, நான் இல்லாத நேரம் பசங்க ஸ்கூல் விட்டு வந்ததும் பசங்களைப் பார்த்துக்கங்க… போறும்..” (மேற்படி. பக்.10)
இவ்வுரையாடலில் பெண்ணின் நம்பிக்கை மட்டும் குறிப்பிடப் படவில்லை. அவளுக்கான சம்யோகித புத்தியும் வெளிப்படுத்தப்படுகிறது.
ஆண் ஆதிக்கச்சிந்தனை
பெண்ணடிமை, பெண்ணியம், பெண் நிலைவாதம் என்றெல்லாம் நாம் பேசத்தொடங்கும் பொழுது அதன் கருத்தாக்கங்களில் ஆணிவேராய் இருப்பது ஆதிக்கச் சிந்தனையும், ஆணுக்கான சமூக கட்டுமானமும்தான்.ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் நாம் பெண்ணடிமை என்னும் கருதுபொருளை முன்னெடுக்க வேண்டும். பொதுவாக ஆண்களிடமிருந்துதான் பெண்களுக்கு சுதந்திரம் வரவேண்டி இருக்கிறது.இதுதான் இருபது ஆண்டு கால போராட்டத்தின் தேவை.அதனடிப்படையில் பாலகுமாரன் தன் தாயுமானவன் நாவல்களில் கீழ்க் கண்டவாறு இடம் பெரும் உரையாடல் ஒரு ஆணுக்கான அதிகாரத்தொணியின் உச்சத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
”நீ என்னடி சொல்றது, நான் என்னடி கேக்கறதுன்னு வீம்பா… குடிங்க. குடிக்கிறவன்தான் கெட்டவன், அயோக்கியன், அல்பன், பொம்பளை மேல மரியாதையே இல்லாதவன்.” (மேற்படி. பக்.204)
”உங்க பேர்ல தப்பு இல்லியே”
”தப்பு இருந்தா என்னாடி பண்ணுவே” பல் கடித்து முஷ்டி மடக்கும் கோவம் வந்தது.பிசகு.பெண்ணைக் கொண்டாடியது பிசகு.மனைவியை மதித்தது பிசகு. “ஏய்“ என்கிற அங்காரக் கூச்சல்தான் உயர்வு. அதிகாரம் கொடி கட்டிப் பறக்காமல் அனுசரணை… அனுசரணை என்கிற மயக்கம் பொய்.” (மேற்படி. பக்.226)
ஆணின் விருப்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு – அவனை சந்தோஷப்படுத்தவே பெண் தேடுவது என்பது முழுக்க ஆணிண் விருப்பதைப் பொருத்தே இந்த உறவு இன்னும் சண்டைக்கானதாகத் தான் நீளுமே தவிர அங்கு பெண் சுதந்திரத்துக்கு வாய்ப்பேயில்லை.
சரசு என்னும் பெண் தான் வேலைக்குப் போனதைத் குற்றமாகக் கருதும் சூழலில் அவளுக்கு ஆருதலாக வரும் உரையாடல்கள் இன்றையச் சூழலில் குடும்ப அமைப்புச் சார்ந்த பெண்களுக்கு இருக்கும் இரு மாதிரியான மனப் போராட்டத்துக்கான விளக்கங்கலாக அமைந்திருக்கின்றன.
“என்ன பேசறது.ஒரு பக்கம் “அப்பாடா” ன்னு சந்தோஷமா இருக்க. ஒரு பக்கம் “ஐயோ“ன்னு இருக்கு, பசங்களை யாராவது பார்த்துக்கிட்டா நானும் கூடவே கிளப்பிடுவேன்.இப்ப ஒண்ணுமில்லை. காலைல நீங்க வண்டில ஏறி நகர்ந்தவுடனே “ஓ“ ன்னு வெக்கமில்லாம நடு ஸ்டேஷன்ல உக்காரந்து அழுவப் போறேன். நிச்சயம்.”…சரசு இன்னொரு நாற்காலியை இழுத்து அவனெதிரே போட்டு அவன் முழங்கால் உரச உட்காரந்தாள், அவன் மடியில் கவிழ்ந்து கொண்டாள்.
”சும்மா கதை வுடாதே.அழற பொம்பளையா நீ. உன் தைரியம் ஊர்ல எந்தப் பொம்பளைக்கும் இருக்காது”
”அதெல்லாம் நீங்க கிட்ட இருக்கற வரைக்கும் தான்.பொட்டியத் தூக்கிட்டு நீங்க போய்ட்ட பிறகு நெஞ்சமே கழண்டு வுழுந்துரும்.”
இனிமேதான் நீ தைரியமா இருக்கணும் சரசு. இது வரைக்கும் செஞ்சதை விட இனிமேதான்..”
”என்ன செஞ்சுட்டேன்.வேலைக்குப் போனது ஒரு பெரிய விஷயமா? நூத்துக்குத் தொண்ணூறு பொம்பளைங்க வேலைக்குப் போறாங்க. புருஷன், பெண்டாட்டி ரெண்டு பேருமா ரிடையராகிற வரைக்கும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறாங்க.”
”ஆனா, உன்னை மாதிரிப் புருஷனை வீட்டல உக்கார வச்சுட்டு வேலைக்குப் போனவ ஆயிரத்துல ஒண்ணு.” (மேற்படி. பக்.13)
இவ்வுரையாடல் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஆணும், பெண்ணும் வேலைக்குப் போகும் தன்மை பெருகிவிட்டதையும், அதில் ஒன்றும் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுவதில்லை என்பதையும் இந்த சமூகம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் விளக்கியுள்ளார்.
பாலகுமாரன் தன் நாவலில்.
”கணவனை இழந்த பெண்களும் பிரிந்த பெண்களும் முதலில் எதிர்நோக்கும் பிரச்சனை பொருளாதாரப் பிரச்சனை விதவைத் திருமணம் என்பது இன்றும் விவாதத்திற்கு உரியதாக இருப்பதால் பெற்றோருக்குச் சுமையாக வாழ்வது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.” (மேற்படி. பக்.258) எனும் கருத்து முன்னெடுக்கிறார்.உண்மையில் குடும்பத்திலிருந்து தன் கணவனை இழந்துவிட்டு வாழ முற்படும் பெண்ணின் மிக அடிப்படையான பிரச்சனை பொருளாதாரப் பிரச்சனையாகும்.ஏனெனில் கணவனை இழந்த பெண் பிறந்த வீட்டில் வாழ்வதா? இல்லை புகுந்த வீட்டிலேயே வாழ்வதா..? என்பதைக் கூட கிட்டத்தட்ட அவளுக்கான பொருளாதார நிலைதான் தீர்மானிக்கும்.இந்த இக்கட்டானச் சூழலுக்கும் ஆணாதிக்கச் சமூகம்தான் காரணம் என்பதை பாலகுமாரன் தன் கேள்வி ஞானத்தால் விளக்குகிறார்.
சமூக நோக்கில் குடும்பம் என்னும் அமைப்பு
குழந்தையின் வளர்ச்சி பெற்றோரையும் மற்றோரையும் சார்ந்து இருப்பதால் குடும்பம் சமுதாயத்தின் இன்றியமையாத காரணியாகப் போற்றப்படுகின்றது.பெற்றோரின் நடத்தையே குழந்தையின் நடத்தையாகச் சமுதாயத்தின் நடத்தையாக அமைவதால் பண்பட்ட குடும்பமே சமுதாயத்தின் தேவையாக நோக்கமாக உள்ளது. மனிதனின் கல்வி, பண்பாடு, பொருளாதாரம், உறவுநிலை, என அனைத்திற்கும் முதல் காரணியாக, முக்கிய காரணியாக விளங்குவது குடும்பமாகும் அக்குடும்பம் சிக்கலற்றதாக மன வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். குடும்பம் என்பது கணவன்-மனைவி, குழந்தைகள், தந்தை, தாய், உடன் பிறப்பினர் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.இவர்களிடையே ஏற்படும் அன்பு பிணைப்பே குடும்பம் நன்னெறியில் செல்லக் காரணமாகிறது.கணவன்-மனைவி பிள்ளைகள் எனும் கூட்டு முயற்சியே குடும்பமாக உருவெடுக்கிறது.
பெரும்பாலான நாவல் ஆசிரியர்கள் தத்தம் நாவல் ஆசிரியார்களின் குடும்பம் – அதில் தோன்றும் உளவியல் சமூகவியல் பொருளாதார சிக்கலை எடுத்துரைப்பதில் தனி கவனம் செலுத்தியுள்ளனர். அந்த வகையில் பாலகுமாரன் சிறப்பிடம் வகிக்கின்றார்.அதனை உணர்த்தும் வகையில் அவரது தாயுமானவர் எனும் நாவலில் காதல் பாசம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை.இல்லையேல் அது ஏது?ஏன வினவுகின்றார். இந்தப் பண்டமாற்றில் காதல் எங்ஙனம்? காதல் என்பது எங்கே இங்கு பிள்ளைக்கு உப்புமா கிளறி பள்ளிக்கு அனுப்பி, வரவழைத்து, பெரியவனாக்கி, பெரியவனாகி அவன் போடுவதற்குக் கையேந்தி “நான்“ சோறு போட்டேன். நீ போடு“ என்று வலியுறுத்தி… இதில் பாசம் எங்கே?
காதல், பாசம் இல்லையெனில் எதற்கு இந்தக் கூட்டு?எங்கோ, எவரோ கொடுத்த நீராகாரம் உண்டு விட்டு ஏப்பம் விட்டுப் போகலாம். கால் போன போக்கில் போய் என்ன செய்ய.. எங்கேயாவது மறுபடி நீராகாரம் கேட்க வேண்டுமில்லையா.. ஞானிக்குக் கூடப் பசிக்குமே. (மேற்படி. பக்.14)
கல்வியும் காரிகையும்
பாரதியார், பாரதிதாசன், பெரியார் போன்ற சமூக விழிப்புணர்வாளர்கள் பெண்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்த போதிலும் பாலியல் பலாத்காரம், காதல் மணம், உடற்கூறு சார்ந்த சீண்டல்கள் போன்றவை பெண்கல்விக்குத் தடையாக நிற்கின்றன. திருமணத்திற்குப் பிற்பாடு விரும்பும் வரை படிக்கட்டும் என்ற கருத்தும் எண்ணத்திற்குக் காரணம் ஆண் பெண் நட்புறவினை சமூகம் சரியான நோக்கில் எடுத்துக் கொள்ளாமையேயாகும். ஆண் பெண் நட்புறவே காதலாக முத்திரை குத்தப்படுவதால் பெண் கல்வி பெற்றோருக்கு அச்சத்தைக் கொடுப்பதாக அமைகிறது.பாரதிதாசன் பெண் கல்வி, பொருளாதாரச் சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் வேண்டியவள் என்னும் கருத்து நிலவுவதால் பெண் கல்வி ஒரு வரைமுறைக்கு உட்படுத்தப்படுகிறது.
”ஒரு பெண்ணைக் கல்வியறிவு இன்றி வீட்டிற்குள்ளேயே அடைத்து விட்டு, குலம், சாதிகளுக்கேற்ற சடங்கு முறைகளையும் அவை கூறும் கட்டுப்பாடுகளையும் முன் வைத்து கோடிட்டுக்காட்டி காவல் புரியும் கட்டுக்காவல் நிறைந்த சமுதாயம்” (தான்யா. கோ. பண்பாட்டுப் படிகள், பக்-64) எனக் கோ.தான்யா குறப்பிடுவது நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களுக்கு ஏற்புடையதாகத் திகழ்கிறது.இந்நிலை மாற வேண்டுமென்றால், பெண் திருமணத்திற்காகவே வளர்க்கப்படுகிறாள் எனும் கருத்து மாற வேண்டும்.பெண்ணுக்கான கல்வி வரையறை நீங்க வேண்டும்.பெண் விடுதலையில் கல்வியும் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.பெண் விடுதலையில் கல்விக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணரும்படி செய்ய வேண்டும்.இம்மாற்றங்கள் சமுதாயத்திலே நிலைபெற்றால் பெண் விடுதலை என்பது வலிந்து மேற்கொள்ளப்படுவதாக இல்லாமல் இயல்பாகப் பெறும் நிலை உருவாகும்.ஏனெனில் சமூகச் சீர்திருத்தம் எதுவும் வெளியில் இருந்து திணிக்கப்படக் கூடாது. அது இயலபாகவே நடை பெற வேண்டும்.
அறியப்படுவன……..
குடும்பம் என்பது சிறப்புற திகழ வேண்டமானால் பின்வரும் செல்பாடுகள் அமைய வேண்டும்.உயர்ந்த கல்வி பெற வேண்டும்.பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டும். மரபு வழிப்பட்ட சிந்தனைகள் மாற்றம்பெறுவதற்குச் சமுதாயம் துணை புரிய வேண்டும்.சட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.மணவிலக்கு, மறுமணம் இருவருக்கும் பொதுவானவை என்பது உணர்த்தப்பட வேண்டும்.வரதட்சணை மறைய வேண்டும். கணவன், மனைவி குழந்தைகளிடையே அன்பின் பிணைப்பு காணப்பட வேண்டும்.கணவன், மனைவிக்கிடையே ஆண்டான் அடிமை மனோபாவம் விலகித் தோழமையுணர்வு பெருக வேண்டும்.இருவருக்கிடையே தோன்றும் சிக்கல்களைத்தனிமையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.எத்தனை பணிகள் இடைவிடாது இருந்தாலும் இருவரும் தமக்கென்று நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும்.சகோதர உறவை வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும்.மகள், மனைவி, தாய், மருமகள், மாமியார் எனும் நிலையில் பெண்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள குடும்பம் துணை புரிய வேண்டும்.
periyaswamydeva@gmail.com