மனக்குறள் (1 – 8) – குறள் வெண்பா –

மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!

பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?

நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

கற்புக்குக் கண்ணகியாள் காதற் தமயந்தி
பொற்காவி யங்கள் பிறப்பு !

தமிங்கிலங்கள் மண்ணைத் தறிக்கவென வந்த
திமிங்கிலங்க ளாலேதான் தீ !

கற்பை அழிப்பதுவும் கன்னிகொலை யாவதுவும்
அற்பன் மொழியறிவே யாகும் !

இரத்தப் பிசிறேந்தி எஃகுப் பொறியில்;
மரத்த மனத்;திருக்கும் வன்மம்!

குற்;றவியல் நீதிக் கொடுமை உலகாளும்
முற்றும் பறந்த முதல்!

நல்லதமிழ் சொல்லான் நனியுறவை எண்ணாதான்
அல்லல் கொடுப்பான் அவலம்; !

நல்ல தமிழ்நாடே நந்தா விளக்கெல்லாம்
இல்லா தொழிப்பான் எதிரி !

காமம் மொழிச்சாடல் கன்னற் தமிழோடும்
தீமை பயப்போர் திருடர் !

 


மனக்குறள்-2 மாறுதலும் மாற்றமும் !

வருவார் தருவார் மதத்தின் பெயரால்
செருவைத் திடுவார் செகம் !

நல்லூரின் கண்ணே நரியாகிச் சதிசெய்யும்
பொல்லார் உலகப் புதர் !

சைவம் இளகும் சரக்கென்று எண்ணியே
கைவைத்தார் மாற்றுக் கணக்கு!

மாறுதல் மானிடம்! மாற்றிடுங் கூட்டமோர்
கூறிடும் வன்மம்ஏன் கொள் !

மணிவாச கத்தின் மணிவாச கத்தால்
மனதினைத் தொட்டார் பலர் !

மதமாற்றம் என்று வருவோர்கள் எல்லாம்
புதிரேதான் பொல்லாப் பொறி !

தமிழை அழித்தாற் தரணிக் குறளும்
அழியுமென நின்றார் அறி!

எம்மதம் ஆயினும் நல்மதம் ஆகவே
சம்மதம் கொண்டார் அறம் !

வன்முறை யாலே மடக்க நினைத்தார்க்குக்
கொன்முறை நோக்கம் கெடும் !

தமிழ்மொழி சொல்லும் தவமுறை வேதம்
அமிழ்தென வாக்குமாம் அன்பு !


 

மனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும்

தொல்காப் பியம்எனும் தொன்தமிழ் நூலேதான்
விள்ளும் இலக்கண வித்து !

முதற்சங்கம் கார்கோளில் மூழ்கி யழியச்
சிதையாய் எரிந்தது தேசம் !

ஆயிர மாயிரம் அற்புத நூல்கள்
போயின தெல்லாம் பொங்கி !

எழுத்தர் இலக்கியர் இன்செய லாளர்
விழுந்தனர் நூலெலாம் விட்டு!

போன இலக்கியம் புதுச்சுனை யாகவே
ஆனசங்கம் ஆக்கினர் அடுத்து !

இயலொடுஞ் சங்கம் இரண்டாவ தாக
இயக்கமே கண்டார் இனிது !

வாழுந் தமிழொடு வாழ்வின் இலக்கணம்
ஆழம் இணைத்தார் அறி !

இன்னோர் மொழியில் இலக்கணங் காணாத
சொல்நூல் இதுவே சிறப்பு !

இலக்கணம் சொல்லும் இதுநூல் முதலாய்;ச்
செகத்திற் கிடைத்தநூல் செப்பு !

தொல்காப் பியர்தம் திகழ்நாள் இரண்டெனும்
சங்கநாட் காலமே சான்று !


 

மனக்குறள் – 4: தொல்காப்பியமும் தமிழும்

இன்தமிழ் மேவி இலக்கணம் ஆய்வென
நின்றதொல் காப்பியமே தேர்!

பயிரொடுஞ் செம்மொழிப் பண்பொடுந் தொன்நூல்
உயிரெனக் காணும் உலகு !

கையிற் கிடைத்த கருநூல் மரபொடும்
வையம் தொடுத்த வரம்!

நூற்பா நிலங்கள் நிரையாகும் ஐந்திணைக்

கூர்ப்பாகும் காதற் குரல் !

இதயம் நெறியார ஈர்த்துவரும் தொன்னூல்
எதுகையுடன் மோனை இணைந்து !

தொல்காப் பியனார் தெளிந்தவோர் சொல்லாண்மை
ஒல்காப் பெருமைதரும் ஓர் !

ஒழுக்கம் விழுப்பம் இயற்கையும் போற்றும்
அழுத்தமே காக்கும் அபயம்!

உலகமித் தொன்மை உளநூல் பொறுக்கார்
கலப்பாக்கி  வைப்பார் கரி !

முப்பால்; அதிகாரம் மூன்றோடும் ஒன்பதுவாய்ச்
செப்புந்தொல் காப்பியமாம் சொல்!

தரணிக் கொருநூல் தமிழர்க் கொருநூல்
மரபுக் கிதுநூல் மதிப்பு !


மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்

நாவலந் தீவாய் நவிலுங் குமரிகண்டம் 
நீருக்குட் போன நிலம்!

இருந்தமிழோர் கூறும் லொமூரியா மண்ணே
பெருங்குமரி நாடாம் பெயர் !

முதல்மனிதன் தோற்றமொடு முற்தமிழும் பூத்த
பதியே குமரிகண்டம் பார்!

தென்னா பிரிக்கா இலங்கை அவுஸ்தியெனக்
குன்றுகளாய்க் கண்டாள் குமரி !

மேலாம் முதற்சங்கம் மூழ்கியதே முன்கிறித்து
நாலாயி ரத்துநானூ றே!

முதுநாரை இன்னும் முடுகுருக்கி போச்சு
அதிகாரம் போல்நூலும் அற்று !

கிறித்துமுன் மூவாயி ரத்தெழு நூற்றில்
இரண்டாம் தமிழ்ச்சங்கம் என்பர் !

பாண்டிய மன்னன் பணித்த அருஞ்சபையில்
தோன்றியதே தொல்காப் பியம்!

மாபுராணம், பூதபுரா ணத்தும் அகத்தியரார்
மாநூல்கள் போச்சே மறைந்து!

காலம் கணிக்கக் கனிந்த தமிழ்மொழியின்
சீலந்தொல் காப்பியமே சொல் !


மனக்குறள்-6: அனல்வாதம்

மனக்குறள்

அய்யகோ மண்ணின் அருநிலம் விற்பவர்
பொய்யாம் இனத்தோன் புரி!

தமிழ்தம் மொழியன்று தாமோர் அழிக்கும்
திமிரே என்றனன் தேர்!

பாவம் பழிபட பண்ணேர் மொழிகெட
கூவமாய்ப் போவார் குதர்க்கர்!

தமிழர் சமுதாயம் தன்னே(ர்) ரழிப்பில்
உவர்களாய்ப் போன உயிர்ப்பு!

மதம்மாற்றி வேறோர் மதப்பிடி யாகி
மதத்தோடும் குண்டுற்றாள் மாது!

மாற்று மதத்தில் மணம்செய்து கொண்டபின்
ஈற்றில் முடிந்தாள் இலவம்!

காளிகோ வில்லொடும் காணி நிலங்களில்
மாடுவெட்டும் சந்தையிட்டார் மல்லர்!

பேசா மொழியும் புரியா நெறிகளும்
பூசைசெய லாகாத பித்தம்!

ஆதிக்கம் தேட்டம் அரிச்சனை காசென்று
வாதிப்பார் வள்ளல் பலர் !

தேவாரம் வாசகம் தெய்வத் துதிபாடும்
கோவில் இயற்பே கொடை!


மனக்குறள்-7 கணக்கு: காமமும் கற்பும்

இயற்கை கனிப்பொருள் இன்பமும் காமம்
பயில்வன அன்பின் பகுப்பு!

காமத்தைப் பேசுவான் கண்டதைக் கூறுவான்
வாழ்வில் அவனே வதை!

தர்மம் திருமணம் தாங்கிய வாழ்வறம்
நல்லவை காட்டும் நயம்!

தூசணம் என்று திருப்பா அழைப்பவன்
பூசனை தெரியாப் புறம்!

வள்ளுவன் சொல்லும் மணிவா சகத்தொடும்
நல்லறம் காமம் நயக்கும் !

அரைகுறைக் கல்வி அழகொடும்; வாழான்
தெளிவுரை சொல்லான் தெரிக!

யாரை யவர்க்கென யாப்பொடும் பார்க்கிலான்
தேரை யலம்பும் தெரி!

வள்ளுவம் காப்பியம் வாசகன் தேற்றமும்
விள்ளத்; தெரியான் விசர்ப்பு!

காப்பெனத் தெரியான் கனத்தைப் புரியனாய்
யாப்புரை சொல்லான் அறி!


மனக்குறள்-8  தொல்காப்பியம் தொடர்மலர்

நிலந்திருப் பாண்டியன், ஆசான் அதங்கோட்டார்
நேர்சபை யிட்டார் நிறுத்து!

ஜந்திரவி யாகரணம் இந்திரன் நூல்;கற்றார்
எந்தைதொல் காப்பியனார் என்க!

இராமா யணத்துமுன் ஏராழிக் கோளிற்பின்
தோராயெ ழுந்ததொல் காப்பு!

ஆயிரத்து ஆறுநூற்று ஈரென்க நூற்பாவும்
தாயெனவே கொண்ட தரு!

எழுத்துசொல் லோடுபொருள் யாப்பும் அணியும்
பழுத்துள்ளே இருந்;தே பயிலும் !

பனம்பா ரணனார் படைத்தபாயி ரத்தும்
கனத்தபா ருள்ளுதனி நூல்

இலக்கிய மாயிருக்கும் (இ)லக்கண நூலாம்
உலப்பிய செம்மொழியென் றோர்!

அதிகாரம் ஒவ்வொன்றும் ஆக்கமொன்;ப தாகும்
இதிகாசம் ஈதென்று ஏர்!

மரபென்றும் வாய்க்குரலு மாக்கும் மரபின்
பரலென்கத் தோன்று மவை!

இயலும் மரபும் இலக்க ணத்தும்
அயலும் நிலத்தும் திணை!

* நிலந்தருதிருவி – இரண்டாம் தமிழ்ச்சங்க பாண்டியமன்னன்

Rajalingam Velauthar <vela.rajalingam@gmail.com>