எழுத்தாளர் கண மகேஸ்வரன் மறைந்த செய்தியினை முகநூற் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதுடன் , அஞ்சலியாக செப்டம்பர் 16, 20118 அன்று முகநூலில் நான் அவர் பற்றி எழுதியிருந்த பதிவொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
கிழக்கில் சுடர்விட்ட தாரகை!
எழுத்தாளர் கண மகேஸ்வரன் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர். இவ்வளவுக்கும் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால் வாசித்ததில்லை. இப்பொழுது அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் பிறந்திருக்கின்றது.
இவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று கூறினேனல்லவா. அதற்குக் காரணம் ஒன்றுள்ளது. நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் ஈழநாடு மாணவர் மலர் நடாத்திய ‘தீபாவளி இனித்தது’ என்னும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொன்டிருந்தேன். ஆனால் அதில் என் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அதில் அப்போது உயர்தர மாணவராக இருந்த கண மகேஸ்வரனின் கட்டுரை தெரிவாகிப்பிரசுரமாகியிருந்தது. ஆனால் மாணவர் மலரில் என் கட்டுரையைப்பற்றிக் குறிப்பிட்டு, என்னைப்பற்றியும் நான் படித்துக்கொண்டிருந்த பாடசாலையைப்பற்றியும் குறிப்பிட்டு வாழ்த்துக்கூறியிருந்தார்கள். கட்டுரை பிரசுரமாகாவிட்டாலும் அவ்வாழ்த்துரை என்னை அவ்வயதில் உற்சாகமூட்டியது. அவ்வுற்சாகத்துடன் அடுத்து வந்த பொங்கல் தினத்தை முன்னிட்டுக் கவிதையொன்றினை எழுதிச் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பினேன். அது ‘சுதந்திரன்’ பத்திரிகையின் பொங்கல் இதழில் பிரசுரமானது. அதுவே நான் எழுதிப் பிரசுரமான முதலாவது படைப்பு. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன்.
ஆணால் அண்மையில் ‘நூலகம்’ தளத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பிலிருந்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான ‘தாரகை’ சஞ்சிகையின் சில பிரதிகளைக் கண்டேன். அவற்றை வாசித்தபோது அதன் ஆசிரியர்களாக விளங்கியவர்களைப்பற்றிய விபரம் என் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் அதன் ஆசிரியராக சி.சங்கரப்பிள்ளையும், கெளரவ ஆசிரியராக டாக்டர் இ.மதனகோபாலன் என்பவரும், ஆசிரியர் குழுவில் கண.மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை ஆகியோரும் இருந்துள்ளார்கள். பின்னர் கண மகேஸ்வரனே அதன் ஆசிரியராக அதனைக்கொண்டு நடத்தியிருக்கின்றார். ஓரிதழில் செ.ரவீந்திரன் ஆசிரியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தாரகை’ சஞ்சிகை வெளிவந்த காலத்தில் காத்திரமான இதழ்களிலொன்றாக வெளிவந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதில் தாமரைச்செல்வி, எஸ்.கே.விக்னேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை, காவலூர் எஸ்.ஜெகநாதன், தாழை செல்வநாயகம், செல்வி பரமா சண்முகம், நீள்கரை நம்பி . இரா ரவி ஆனந்தன், செங்கதிர் என்று பலர் சிறுகதைகள் எழுதியுள்ளார்கள். எழுத்தாளர் கதிர்காமநாதன் நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்ற தேவி பரமலிங்கத்தின் சிறுகதை வெளியாகியுள்ளது. மேலும் அக்காலகட்டத்தில் ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகள் பற்றிய மாதாந்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
சோலைக்கிளி, செ.குணரத்தினம், வேலணையூர் சு. கருணாநிதி, வடகோவை வரதராஜன், அன்புநெஞ்சன், கமலினி முத்துலிங்கம், கருணையோகன், வ.ஐ.ச.ஜெயபாலன், அ.கெளரிதாசன், தமிழ்ப்பிரியன், கவிஞர் நீலாவணன், மணிமணாளன் (கண மகேஸ்வரன்), சம்மாந்துறை ஈழக்குயில் இத்ரீஸ், கங்காதரன், ஶ்ரீ தேவிப்பிரியா , சியாமளா, நல்லை அமிழ்தன், நற்பிட்டிமுனை பளீல், ஈழத்து மகேஸ்வரி, பரிபூரணன் என்று பலர் கவிதைகள் எழுதியுள்ளார்கள். கவிஞர் நீலாவணனின் ‘வட மீன்’ குறுங்காவியம் பிரசுரமாகியுள்ளது. சாருமதி, கோகிலா மகேந்திரன், வடகோவை வரதராஜன், வேலணையூர் சு.கருணாநிதி, நற்பிட்டிமுனை பளீல், வள்ளிநாயகி ராமலிங்கம் (குறமகள்), ஞானரதன் என்று பலரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ச.முருகானந்தனின் ‘நியாயமான போராட்டங்கள்’ என்றொரு குறுநாவல் தொடராக வெளிவந்துள்ளது. ரவிப்பிரியாவின் ‘சின்னச் சின்ன மேகம்’ குறுநாவலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்பொ, டானியல் ஆகியோருடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்து எழுத்துக்கலைஞர்கள் பலரை அறிமுகப்படுத்தும் தொடரொன்று வெளியாகியுள்ளது. இவ்விதம் காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்துள்ள ‘தாரகை’ சஞ்சிகை ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று என்று நிச்சயமாகக் கூறலாம். அந்த வகையில் எழுத்தாளர் கண மகேஸ்வரனின் இலக்கியப்பங்களிப்பு முக்கியமானது.
கண மகேஸ்வரன் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு பின்வருமாறு கூறுகின்றது: “கண. மகேஸ்வரன் ஈழத்துப் புதின எழுத்தாளர். இவர் 1970களில் இருந்து எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் போன்ற துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சொந்தப் பெயரிலும், வீகேயெம், மணிமணாளன் போன்ற புனை பெயர்களிலும் எழுதி வருகிறார். கண. மகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அரச எழுது வினைஞர் சேவையில் பணிபுரிந்த இவர் தற்போது சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, ஈழநாதம், மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், உதயன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. முன்னர் வெளிவந்த “தாரகை’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் சிரித்திரன் சஞ்சிகையிலும் பணிபுரிந்தார். “எல்லை வேம்பு’ என்ற பெயரில் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. “
இவரது படைப்புகள் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்தவர்கள் அவற்றைப்பற்றிப் பகிர்ந்துகொள்ளலாம்.
‘தாரகை’ சஞ்சிகைப்பிரதிகளை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88
‘நூலகம்’ தளத்திலுள்ள சஞ்சிகைகள் பலவற்றில் வெளியான இவரது ஆக்கங்களைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்: http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Search&limit=100&offset=0&profile=default&search=%E0%AE%95%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
‘தாரகை’ வெளியீடாக இவரது ‘மலரும் வாழ்வு’ என்னும் குறுங்காவியம் வெளியாகியுள்ளது. அதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/616/61553/61553.pdf இந்நூலுக்கப் பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் சிறப்பான முன்னுரையொன்றினை எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைத்தொகுப்பான ‘தீர்வினை தேடும் நியாயங்கள்’ 2017இல் கரவெட்டியில் வெளியானது. ‘ஞானம்’ , ‘ஜீவநதி’ சஞ்சிகைகளில் இவரது குட்டிக்கதைகள் பல வெளியாகியுள்ளன. ஞானம் சஞ்சிகையில் கவிதைகள் பலவும் வெளியாகியுள்ளன. எழுத்தாளராக, இதழாசிரியராக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்பும் முக்கியமானது. இவரது படைப்புகள் பற்றிய விரிவான ஆய்வுகள் இவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்.
புகைப்பட உதவி: நூலகம் – http://aavanaham.org/islandora/object/noolaham%3A13568?fbclid=IwAR002czKzjVQogvo29kj7zlmOsHSFWU3IyuF0ndkzWuFoo24T08qMh-oSkc
ngiri2704@rogers.com