‘ஞானம்’ சஞ்சிகை குறுநாவலான ‘சுமணதாஸ பாஸு’ம், அது பற்றிய கடிதங்கள் சிலவும்……

இம்மாத ‘ஞானம்’ சஞ்சிகையில் வெளியான எனது குறுநாவலான ‘சுமணதாஸ பாஸ்’ பற்றி எழுத்தாளர்கள் குரு அரவிந்தனும், முருகபூபதியும் கடிதங்கள் அனுப்பியிருந்தார்கள். முதலில் இக்குறுநாவலைச் சிறப்பாகப் பிரசுரித்ததற்காக ”ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரனுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இக்குறுநாவல் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன், முருகபூபதி ஆகியோருக்கும் நன்றி.


1. குரு அரவிந்தனின் கடிதம்:


Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>

Aug. 1 at 10:03 p.m.


அன்பின் கிரிதரன், வணக்கம். ஞானம் இதழில் வெளிவந்த தங்களின் சுமணதாஸ் பாஸ் பல விடயங்களை எடுத்துச் சொல்லும் குறுநாவலாக இருக்கின்றது.இயற்கை சார்ந்த மரம், குளம், மிருகம், பறவை என்று அந்த மண்ணில் வாழ்ந்தவர்களோடு இணைந்த அத்தனையும் பாத்திரங்களாகி இருக்கின்றன. கதையில் வருவது போல, அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்குவது அனேகமான சிறுவர்களின் பழக்கமாக அக்காலத்தில் இருந்தது. நானும் இப்படித்தான் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு இருட்டியதும் தென்னிந்தியாவில் இருந்து தெற்கு நோக்கி பறக்கும் மாம்பழ வெளவால்களை நிலவு வெளிச்சத்தில் எண்ணியிருக்கின்றேன். இலுப்பம்பழக் காலத்தில்அதிகமாக பறந்து வரும் இவை காலையில் திரும்பிச் சென்று விடுமாம். குறுநாவல் மூலம் பல விடயங்களைத் தெரிய வைத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


அன்புடன்

குரு அரவிந்தன்.


2.எழுத்தாளர் முருகபூபதியின் கடிதம்:

Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>

Aug. 2 at 3:27 p.m.


அன்புள்ள நண்பர் கிரிதரன் வணக்கம். இன்று அதிகாலை 4.30 மணிக்கு எழுந்ததும், நான் படித்த முதல் கதை உங்களதுதான். ஞானம் இதழில் இம்மாதம் வௌியான உங்கள் சுமணதாஸ் பாஸ் குறுநாவல், உங்களது நினைவாற்றலையும் வியக்கவைக்கிறது. அந்த குறுமண்காடு நான் அடிக்கடி செல்லும் பிரதேசம். நீங்கள் எழுதியிருப்பதுபோல் அது இன்று சிறிய நகரமாகிவிட்டது. உங்கள் கதையின் மூலம் அக்காலப்பகுதியின் இயற்கையை ரசித்தேன். நீர்நிலைகளும், பறவைகள், தாவரங்கள், மிருகங்கள், ஊர்வனங்களையும் நினைவிலிருத்தி எம்மையும் அங்கே அழைத்துச்சென்றிருக்கிறீர்கள். கனடாவிற்கு புலம்பெயர்ந்து பலவருடங்களின் பின்னரும், உங்கள் நினைவுக்குகையில் நிரந்தரமாக தங்கியிருந்த காட்சிகள் வாசகர்களுக்கு சித்திரமாகியிருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.


அன்புடன்,

முருகபூபதி


ஞானம் சஞ்சிகையில் வ.ந.கிரிதரனின் 'சுமணதாஸ பாஸ்'வணக்கம் முருகபூபதி, சுமணதாஸ பாஸ் என்னுமிக் குறுநாவல் பிறந்தது எவ்வாறு என்பதைக் கூற விரும்புகின்றேன். தொண்ணூறுகளில் தாயகம் (கனடா) பத்திரிகையாகவும், பின்னர் சஞ்சிகையாகவும் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்பட்டு வந்தது. அது பத்திரிகையாக வெளியானபோது அதில் எனது நாவல்களான கணங்களும், குணங்களும், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் ஆகியவை வெளியாகின. பின்னர் சஞ்சிகையாக வெளியானபோது வன்னிமண், 1983 (முற்றுப்பெறவில்லை) மற்றும் நவசீதா ஆகிய நாவல்கள் வெளியாகின.


இவற்றில் அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதல் விடுதலை அமைப்புகளுக்கிடையில் நடைபெற்ற உள்புற முரண்பாடுகளை, சமுதாயச்சீர்கேடுகளைக் களையெடுப்பு என்னும் பெயரில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை விமர்சித்திருந்த அதே சமயம் தமிழ் மக்களின் நியாயமான உரிமைப்போராட்டத்தின் தேவையினையும் வலியுறுத்தின.


இது போல் வன்னி மண் நாவல் என் வன்னி மண்ணில் வாழ்ந்த பால்ய காலத்து அனுபவங்களைப்பதிவு செய்தது. அதில் அக்கால வன்னி பற்றிய சமூக, அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்திருந்தது. அந்நாவலில் அக்காலகட்டத்தில் எம் அயலவர்களில் ஒருவராக வாழ்ந்த சிங்கள பாஸ் பற்றியும் கூறிருந்தேன். அவர் ஒருமுறை நான் அங்குள்ள பட்டாணிச்சுப்புளியங்குளத்தில் மூழ்கியபோது காப்பாற்றியவர். பின்னர் எண்பதுகளில் விடுதலை அமைப்பொன்றினால் அவரும் , அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டதாக அறிந்தேன். அச்சமயம் அவரைப்பற்றியும், என் வன்னிமண் அனுபவங்களையும் பதிவு செய்ய நாவலொன்றினை எழுத வேண்டுமென்று எண்ணியதன் விளைவாக உருவாகியதே வன்னி மண் நாவல்.


என் ஆரம்ப காலத்து நாவல்களான மண்ணின் குரல், அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும், வன்னி மண் & கணங்களும், குணங்களும் ஆகியவை ஒரு தொகுப்பாகத் தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 1998இல் வெளியாகியது. அண்மையில் மீண்டும் வன்னி மண் நாவலை வாசித்தபோது அதில் விபரிக்கப்பட்டிருந்த வன்னிமண் பற்றிய அனுபவங்களையும், சுமணதாஸ பாஸாக உருப்பெற்றிருந்த சிங்கள் பாஸ் பற்றிய அனுபவங்களையும் பிரித்தெடுத்துத் தனியாக சுமணதாஸ பாஸ் என்னும் பெயரில் குறுநாவலாக எழுதினால் அது சிறப்பாக இருக்குமென்று தோன்றியது. அவ்விதம் உருவானதே சுமணதாஸ பாஸ் என்னும் இக்குறுநாவலாகும்.


இந்நாவல் பலரையும் ஈர்த்திருப்பது மகிழ்ச்சியைத் தருவது. அதற்காக இதனைச் சிறப்பாக வெளியிட்ட ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரனுக்கு மீண்டுமொருமுறை நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.


இச்சமயம் இன்னுமொரு விடயமும் நினைவுக்கு வருகின்றது. தொண்ணூறுகளில் எழுத்தாளர் மாலன் கனடாவுக்கு வருகை தந்திருந்தபோது எழுத்தாளர்களான ரதன், கடல் புத்திரன் ஆகியோருடன் அவரைச் சந்தித்திருந்தேன். அப்பொழுது அவர் கேட்டார் இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களாவது போர்ச்சுழலால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் பற்றி எழுதியுள்ளார்களா என்று. அப்பொழுது தாயகம் (கனடா) சஞ்சிகையில் வன்னிமண் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது, அதனைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். ஆனால் அச்சமயம் அவ்விதம் செய்யவில்லை. தற்போது மாலன் அவர்கள் என் முகநூல் நண்பர்களிலொருவராக உள்ளார். அவருக்குரிய பதிலாக இக்குறுநாவலான சுமணதாஸ பாஸினை இன்று நான் தருகின்றேன்.


மேலும் முருகபூபதி அவர்கள் தனது கடிதத்தில் //சுமணதாஸ் பாஸ் போன்று பல சிங்களவர்கள் எல்லைக்கிராமங்களில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், அக்காலப்பகுதியில் அச்செய்திகளை படைப்பிலக்கியத்தில் பதிவுசெய்ய முடியாமல் பலரும் சூழ்நிலையின் கைதிகளாகத்தான் வாழ்ந்தார்கள். எழுதியிருந்தாலும் எமது தமிழ் இதழ்கள் அப்போது வெளியிட்டிருக்காது. உண்மைச்சம்பவம் ஒன்றை பின்னணியாகக்கொண்டு நான் எழுதிய மனப்புண்கள் – ஆண்மை முதலான சிறுதைகளை அக்காலப்பகுதியில் எமது தமிழ் இதழ்கள் வெளியிடமறுத்தன. இன்று காலம் மாறிவிட்டது. அதனால் எழுதமுடிகிறது// என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் நாடிருந்த சூழலில் அங்கு அவ்விதமான சூழல் நிலவியதென்றாலும், புகலிடத்தில் வெளியான சஞ்சிகைகள் , பத்திரிகைகள் பலவற்றில் நாட்டில் நிலவிய சமூக, அரசியற் சூழலை விமர்சித்துப் பல ஆக்கங்கள் வெளியாகின. அவை பெரும்பாலும் கட்டுரைகளாகவே இருந்தன. புனைவுகளில் வெளிவந்தவை அதிகமில்லை. ஆனால் அவ்விதம் வெளிவந்தவற்றில் நிச்சயமாக ‘வன்னிமண்’ நாவலிருக்கும். அதனை வெளியிட்டதற்காக ஜோர்ஜ் இ.குருஷேவுக்கு நன்றி.


மேற்படி முருகபூபதியின் கடிதத்துக்குப் பதிலாக நான் அனுப்பிய பதிலுக்கு முருகபூபதி அவர்கள் அனுப்பிய பதிற் கடிதத்தினை ஒரு பதிவுக்காகக் கீழே தருகின்றேன்:


Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>

Aug. 3 at 12:25 a.m.


வணக்கம் கிரிதரன். உங்கள் தகவல்கள் எனக்கு புதியது. நீங்கள் குறிப்பிடும் அந்த நவீனங்கள் எனக்கு படிக்கக்கிடைக்கவல்லை. எனினும் உங்கள் துணிவைப்பாராட்டுகின்றேன்.


தாயகமும் அழுத்தங்களை சந்தித்திருக்கலாம். நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழில் எனது இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் என்ற கட்டுரையால், அவரும் அழுத்தங்களை சந்தித்தார். அதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் அந்த இதழ்களை விற்பனை செய்யவிடாமல் ” அவர்கள் ” தடுத்தார்கள். காக்கா என்ற புனைபெயர்கொண்ட ஒரு போராளி (?) நவத்திற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியதாகவும் அறிந்தேன்.


அச்சுவேலியில் ஒரு பிராமணக்குடும்பத்தின் கதை: இந்திய இராணுவத்திலிருந்த சில சைவபோசன சிப்பாய்கள் உணவு கேட்டுக்கொடுத்தமைக்காக அந்த பிராமணத்தம்பதியர் “அவர்களால் ” சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களின் குழந்தைகள் ஆனாதைகள் ஆயினர். அதில் ஒரு குழந்தையை நாம் பொறுப்பெடுத்து படிக்கவைத்தோம். ஆனால், இலங்கையில் அல்ல. அந்த கொல்லப்பட்ட பிராமணத்தாயின் தங்கைதான் தமிழ்நாடு மண்டபம் முகாமிற்கு குழந்தைகளை எடுத்துச்சென்று வளர்த்தார்.


ஓமந்தையில், பண்டா என்ற விவசாயி இராணுவத்திற்கு காட்டுப்பன்றி வேட்டையாடி கொடுத்த குற்றத்திற்காக சுட்டுக்கொல்லப்பட்டு, ஓமந்தை பாடசாலை முகட்டில் கட்டித்தொங்கவிடப்பட்டான். அவனது குழந்தைகள் அதனைப்பார்த்து, ” தாத்தே… தாத்தே…. ” என்று புலம்பி அழுதகாட்சியை கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. இப்படி பல கதைகளைச் சொல்லமுடியும். நாம் இரண்டு தரப்புக்கும் நடுவில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்போம். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதுதான் படைப்பாளியின் தர்மம்!


தொடர்புக்கு மிக்க நன்றி.

அன்புடன்

முருகபூபதி


மேலும் சில தகவல்கள் :


எண்பதுகளில் குருமண்காட்டு பகுதியில் பாஸ் தனது குடும்பத்தினருடன் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமானவர் அப்பகுதியைச் சேர்ந்த அமைப்பொன்றின் பொறுப்பாளரென்றும், அவர் பின்னர் இன்னுமொரு அமைப்பொன்றினால் 1987 காலப்பகுதியில் கொல்லப்பட்டதாகவும் அறிந்திருக்கின்றேன்.ஆயினும் போதிய சான்றுகளற்ற நிலையில் அவற்றின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை.


‘சுமணதாஸ பாஸ்’ குறுநாவலைப் பின்வரும் இணைப்பில் வாசிக்கலாம்:http://www.geotamil.com/index.php?option=com_content&view=frontpage&Itemid=17
ngiri2704@rogers.com