‘டிசம்பர்’ – ‘ஜனவரி’ மாதக் கவிதைகள் – 2

  மழைத்துளியாய் நீ வீழ‌!

– சக்தி சக்திதாசன் –
 
மழைத்துளியாய் நீ வீழ‌
மண்துகளாய் நான் ஏந்த‌
சுகந்தமொன்று உருவாகும்
மண்வாசம் எனைக் கவ்வும்
 
ஆதவனின் ஒளிக்கீற்றில்
நிழலாக நீ மாறித்
தரையான என்மீது
மெதுவாகப் படர்வாயே
 
கனவொன்று கலைந்திடவே
நினவுலகில் நிஜம் காண‌
கவிதந்த தமிழ் கொஞ்சும்
மனம் தனை மெதுவாய் வருடும்
 
ssakthi@btinternet.com


சுனாமி ஞாபகார்த்தமாக ….

– ஜுமானா ஜுனைட், இலங்கை –
            
அதோ –
வெகு தூரத்தில்…
யாரும் வாழ்ந்திராத
தரைகளாக……
 
முருகைக் கற்பாறைகள்
ஏதோ ஜெபிக்கின்றன……
கள்ளிச் செடிகள்
ஏதோ கதை சொல்கின்றன……
 
கடற்கரை மணலில்
ஏதேதோ கால் தடங்கள்…
கண்டு பிடிக்கப் படாமல்
உக்கிய என்புத் துண்டுகள்..
 
8.31ல் நின்றுவிட்ட
கடிகாரங்கள்..…
என்றோ பசுமை பேசி
பாழடைந்த கிராமங்கள்..…
இன்னும் கண்ணீர் விடுகின்ற
சுறாமீன் முட்கள்..…
 
இன்னமும் மூச்சுவிடும்
கடல் நீர்த்துளிகள்……
எல்லாமே

என்ன மாயைகள்…?
சென்ற தலைமுறையின்
சரித்திரத்தைப்
புரட்டிப் பார்ப்போம்
வா…!…                    
 
jjunaid3026@yahoo.com.


 முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) கவிதைகள்!

1. பாட்டாளியின் பாடல்

தங்கமே தில்லாலே ஏலே
தங்கமே தில்லாலே

நாடுபோற நிலயப் பாரு
தங்கமே தில்லாலே
நாமெல்லாம் எப்டி வாழ?
தங்கமே தில்லாலே

விலைவாசி ஏத்தத்தால்
தங்கமே தில்லாலே
வெறும்வயிறு பட்டினிதான்
தங்கமே தில்லாலே

விவசாயம் நாங்க செய்றோம்
தங்கமே தில்லாலே
விலைய எவனோ நிர்ணயிப்பான்
தங்கமே தில்லாலே

நாளெல்லாம் நாம் உழைக்க
தங்கமே தில்லாலே
நாணயஸ்தன் போல்நடிப்பான்
தங்கமே தில்லாலே

உண்டுறங்க இடமில்லை
தங்கமே தில்லாலே
ஊழலிலே திளைக்கின்றான்
தங்கமே தில்லாலே

இலவங்கள் தருவதெல்லாம்
தங்கமே தில்லாலே
இளிச்சவாயன் ஆக்கத்தான்
தங்கமே தில்லாலே

2. தமிழர் திருநாள்!

காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால் 
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும் 
தமிழனின் நற்குணங்கள்!!

3 . தைமகளே வா!

வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!

இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!

பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!

வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!

சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!

உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! – மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!

எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!

ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!

‘என்ன காரணம்?’
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
‘இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!’

உடலெங்கும் புத்துணர்ச்சி! – இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!

கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!

இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! – நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!

4. தை சொல்லும் பாடம்!

அம்மா கருவில் சுமந்ததை
அப்பா கொஞ்சம் அதட்டியதை
ஆசான் சொல்லிக் கொடுப்பதை
நண்பன் கைகொடுத்து உயிர்காத்ததை
உழவன் உழக்கொடுத்ததை
ஐந்தறிவின்மேல் அன்புகாட்டுவதை
இயற்கை இரசிக்கக் கொடுத்ததை
வெற்றி தரும் சந்தோசத்தை
தோல்வி தரும் மனப்போராட்டத்தை
தியாகிகள் சிந்திய உதிரத்தை
தேசியக்கொடி தந்த தேசத்தை
பிரிவில் தெரியும் உண்மைப்பாசத்தை
இளமை தந்த வேகத்தை
அனுபவம் தந்த பாடத்தை
என்தாய்த்தமிழ் தந்த வீரத்தை
மரணம் கொடுக்கும் அச்சத்தை
மன்னிப்பு கொடுக்கும் மனிதத்தை
புதுக்கவிதை தந்த புளகாங்கிதத்தை
சுனாமி தந்த சீற்றத்தை
காலங்கள் தரும் மாற்றத்தை
மொத்தத்தில்…
வாழ்க்கை தரும் பூடகத்தை
என்றும் நெஞ்சில் வைத்துத் தை!
இத்தனை பாடங்கள் சொல்வதும் தை!
இனிப்புப் பொங்கல் தருவதும் தை!
இதுதான் என் தமிழ்மாதம் தை!!

5. இளைஞர்கள் தினம்!

இலட்சியக் கதவுகளை 
இரும்புக்கரம் கொண்டு திறந்தால்
தீப்பொறி விழிகளில் 
திருப்பூர்குமரன் குதிப்பான்!
சாந்தமுள்ள மனத்தில்
காந்தி கண்விழிப்பான்!
போராட்ட குணத்தில் 
நேதாஜி வாழ்வான்!
நம்பிக்கை பூமியில் 
நரேந்திரனும் பிறப்பான்!
விவேகமுள்ள இளைஞனும் 
விவேகானந்தனாய்  மாறுவான்!

எம்மிளைஞனின் உள்ளம்! 
இதில் நாளும் அன்புவெள்ளம்!!
இளைஞர்படை தோற்கின்
எப்படி வெல்லும்??!!
எதிர்கால இந்தியா 
இளைஞன்பேர் சொல்லும்!!

6. கொடிகாத்த குமரன்!

வந்தே மாதரம் 
வளர்க பாரதமென்று
இறுமாப்புடன் கொடியைப் பிடித்து…
இந்தியனுக்கு விடியலைத்தந்து…
அந்நியனால் தடியடிபட்டும்…
விடாமல் பிடித்தும் – கொடியை
விழாமல் பிடித்தும் – மண்ணில்
உதிரம் உதிர உயிர் நீத்தவன்!

திருப்பூர்குமரனின்
திருவுடல் சாய்ந்தாலும் 
திருந்திய இந்தியாவில் – நம்
தேசக்கொடி திக்கெட்டும் பறக்கிறது!

கொடிதனை ஏற்றுவோம்! – தேசக்
கொடிதனை ஏற்றுவோம்! – மனித
மதங்களை தூற்றுவோம்! – குமரனின்
கொள்கைகளை போற்றுவோம்!!

7. சுனாமியின் நினைவால்…

ஆழிநீர் பொங்கியதால்
விழிநீர் தேங்கியதோ…!
வழிகாட்ட வருகிறான்! – புது
ஒளியேற்ற வருகிறான்
எம்மிளைஞன்!
சீற்றம் ஓய்ந்தாலும் – சுனாமியின்
தாக்கம் ஓயவில்லை!
துன்பம் வேண்டாம்
தமிழ்ச்சிங்கங்களே!
கவலை வேண்டாம்
கடலோரக் கவிதைகளே!!
நம்பிக்கைப்படகிலே
வியர்வைத்துடுப்பெடுத்து
முயற்சிவலை வீசி – சுனாமியின்
நினைவலைகள் தாங்கி – மன
மகிழ்ச்சிமீன்களை பிடித்து
தைமகளை வரவேற்போம்! – வருந்
தைமகளை வரவேற்போம்!!

8. இயேசுபிரான்!

அன்பெனும் உணர்விலே அகிலமே திளைத்திட

அன்பெனும் உணர்விலே அகிலமே திளைத்திட
ஆதவன் தோன்றிவிட்டான்! – எங்கள்
ஆண்டவன் தோன்றிவிட்டான்!! – எங்கள்
துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட
தூதுவன் தோன்றிவிட்டான்! – இறைத்
தூதுவன் தோன்றிவிட்டான்!!

மாட்டுக் குடிலிலே மரியன்னை மடியிலே
மனிதனாய்ப் பிரந்துவிட்டான்! – இயேசு
புனிதனாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
தொட்டிலில் துயில்கையில் தேவர்கள் வாழ்த்தினர்
தேவனே பிறந்துவிட்டான்! – எங்கள்
ஜீவனாய்ப் பிறந்துவிட்டான்!!

விண்மீன்கள் வாழ்த்திட விண்ணிலே இரவிலே
வின்மீனாய்ப் பிறந்துவிட்டான்! – புது
விடியலாய்ப் பிறந்துவிட்டான்!! – இந்த
மண்ணிலே அன்பின் மகிமையை உணர்த்திட
மெசியாவே பிறந்துவிட்டான்! – இயேசு
மெசியாவே பிறந்துவிட்டான்!!

தச்சனின் மகனாகத் தத்துவ ஞானியாய்
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்! – இயேசு
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
பச்சிளங் குழந்தையாய்ப் பாவங்கள் நீக்கிட
பாரினில் பிறந்துவிட்டான்! – இயேசு
பாரினில் பிறந்துவிட்டான்!!

கல்வாரி மலையிலே கண்ணீரும் சிந்தினான்
கல்லால் அடித்தனரே! – அவனைக்
கல்லால் அடித்தனரே!! – அவனை
சிலுவையில் அறைந்தனர் சவுக்கால் அடித்தனர்
சித்ரவதை செய்தனரே! – அவனைச்
சித்ரவதை செய்தனரே!!

தட்டினால் திறக்குமே கேட்டாலே பெறுவீரே
தேடினால் கிடைக்குமென்றான்! – இயேசு
தேடினால் கிடைக்குமென்றான்!! – அவன்
பட்ட துயரினைப் பார்த்த கணத்திலே
பாவிகள் வருந்தவில்லை! – அந்தப்
பாவிகள் திருந்தவில்லை!!

மேய்ப்பராய் வளர்ந்தான் மேதினியில் வாழ்ந்தான்
மிருகங்களை நேசித்தானே! – இயேசு
மிருகங்களை நேசித்தானே!! – அவன்
தூய்மையாய் வாய்மையாய் உண்மையாய் நேர்மையாய்
தெய்வமாய் வாழ்ந்திட்டானே! – இயேசு
தெய்வமாய் வாழ்ந்திட்டானே!!

அன்பால் கருணையாய் அகிலத்தை மாற்றியே
ஆண்டவனாய்த் தோன்றினானே! – இயேசு
ஆண்டவனாய்த் தோன்றினானே!! – அவன்
முன்பாக மன்றாடி முகந்தாழ்த்தி வணங்குவோம்
மெசியாவே மன்னிப்பாயே! – இயேசு
மெசியாவே மன்னிப்பாயே!!

9. இறைத்தூதன் இயேசு!

அன்பெனும் உணர்விலே அகிலமே திளைத்திட

மாட்டுத்தொழுவத்தில்
பிறந்து – மரியன்னையின்
மடியில் தவழ்ந்த
மகான்!

அன்பின் மகத்துவத்தை
அன்பினால் உணர்த்த
விண்ணிலிருந்து பிறந்த
வீரத்திருமகன்!

மக்களோடு மக்களாய்
மனிதருள் மாணிக்கமாய்
எக்காலமும் பேர்போற்ற
ஏசுவாய்ப் பிறந்த
மெசியா இவன்!

ஆதவன் உதிப்பது
அகிலம் சிறக்கத்தான்!
பிதாமகன் பிறந்தது
பேருலகம் உய்யத்தான்!!

10. ஞானகவி!

கவி பிறந்தான்! - மகா

செறுக்குநடை
செந்தமிழ்க்கவிஞன்!
முறுக்குமீசை
முண்டாசுக்கவிஞன்!

அகத்தில் சினம்பிறக்க…
முகத்தில் அனல்பறக்க…
விழிகளில் கனல்தெறிக்க…
ஜாதிகளை சாய்க்கத்துடித்தான்!
மதங்களை மாய்க்கத்துடித்தான்!

மாற்றிவிட்டான் மனிதமனத்தை!
ஏற்றிவிட்டான் உள்ளொளியை! – உயிர்கட்கு
காட்டிவிட்டான் நல்வழியை!!

முண்டாசை இறுக்கிக்கட்டி
மீசையை முறுக்கித்தட்டி
பாடிவிட்டானே பரம்பொருளைப்பற்றி!

பிரபஞ்சத்தில் நீ!
உன்னில் பிரபஞ்சம்!
உணர்த்திவிட்டான் ஞானகவி!!

11. பொய் சொல்லட்டுமா

உன்னிடத்தில் 
பொய் சொல்ல 
விருப்பமில்லை எனக்கு!

ஆனாலும் 
ஒரு பொய் சொல்லட்டுமா?

‘நான்
நலமுடன் வாழ்கிறேன்’!!

11. புத்துலகு செய்குவோமே…!

பல்லவி:
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!

அநுபல்லவி:
யுத்தமில்லா உலகுகாண…
இரத்தமில்லா உலகுகாண…
(புத்துலகு)

சரணங்கள்:
புத்தம்புது காலையிலே புதுவிடியல் கண்டிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
கத்துங்குயிலின் கீதம்கேட்டு கலைகளையே வளர்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

நோய்களில்லா நாளினையே நாமும்எதிர் பார்த்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
வாய்மையுள்ள உள்ளத்தினை வரமாய்நாமும் பெற்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

கல்வியறிவும் கலவியறிவும் கலந்தேநாமும் வாழ்ந்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
இல்வாழ்வையே இனிதாக்கவே இனிதேகாதல் செய்திடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

பாட்டில்நாமும் பாரதியாகி பாரினையே வென்றிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
ஏட்டிலுள்ள ஒழுக்கமெல்லாம் இயற்கைநியதி ஆகிடவே
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!
(புத்துலகு)

பல்லவி:
புத்துலகு செய்குவோமே!
புத்துலகு செய்குவோமே!!

12. கவி பாடுகிறேன்!

அத்தையவள் பெற்றமகள் அழகாகப் பூத்தமலர்
தத்திவந்து என்னருகே தளிராடை காட்டிநின்றாள்
புத்தனாக இருந்தநானும் பூமொட்டு முகம்பார்த்து
மொத்தமாய் வீழ்ந்தேனடி மூர்ச்சையாகிக் கிடந்தேனடி!

எத்தனையோ அழகுண்டு இயற்கையெனும் படைப்பினிலே
அத்தனையும் உனைப்போல அழகில்லை அழகில்லை
நித்திலமே உன்வதனம் நெஞ்சோடு வாழுதடி
சத்தியமாய் உன்நினைவு செத்தபின்பும் நீளுமடி!

தென்னவளே என்னவளே மன்னவளே சின்னவளே
கண்களிலே அன்புகாட்டி கைகளிலே வளையும்பூட்டி
கொண்டையிலே தாழைசூட்டி கோதைமகள் மதுவூற்றி
என்னருகே வந்துநின்றாள் எழில்கொஞ்சும் முகம்காட்டி!!

முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய் சித்திரமாய்
கத்திவிழி போர்செய்தாய் கவிதையெனப் பத்திரமாய்!
மெத்தையிலே வந்தமர்ந்து முத்தங்கள் நீதந்து
தத்தையவள் விழிமூட தந்தனத்தோம் கவிபாட…!!

மோனமாக வந்துவந்து மோகமதைக் கூட்டிவிட்டாய்
தேனொழுக நீபேசி தெள்ளமுதைத் தந்துவிட்டாய்
ஆனவரை ஆனதடி ஆவிபறி போனதடி
ஆணாக நான்பிறந்த அர்த்தமின்று விளங்குதடி!!

13. பாரதி!

கவி பிறந்தான்! - மகா

கவி பிறந்தான்! – மகா
கவி பிறந்தான்! – தமிழ்க்
கவி பிறந்தான்!!

அரிதாய்ப் பிறந்தவன் இவன்! – தமிழனின்
அச்சம் சாகப் பிறந்தவன் இவன்!!

பூமியில் உயர்ந்தவன் இவன்! – தமிழனின்
சாமியாய் வந்தவன் இவன்!!

செவி நனைத்தவன் இவன்! – கவித்தேனால்
செவி நனைத்தவன் இவன்!!

சிறுவயதில் சென்றானே பாடசாலை!
சென்றும் எழுதினானே கவிச்சோலை!!

வடமொழி தாய்மொழி என்றாலும்
விடவில்லை தொன்மொழி தாய்த்தமிழை!!

‘காலத்தை மீறி கனவுகாணாதே…! – புதுக்
கோலக் கனவிலினி மிதக்காதே…!!
சொன்னானே இவன்தந்தை அறிவுரை! – சொல்லியும்
செய்யவில்லையே இவனுக்குள் பரிந்துரை!!

முடிந்தது இவன்தந்தை மரணஓலை! – முடிந்ததும்
தொடங்கியதே இவனுக்குத் திருமணமாலை!!

வந்தாளே மங்கையொருத்தி!  – பணிவிடை
செய்தாளே உடல்வருத்தி! – குடும்பத்தைக்
காத்தாளே வழிநடத்தி!!

கவிதையும் பாடினான் இவன்! – தெருவில்
கழுதையும் சுமந்தான் இவன்!
அந்நியனை பயமுறுத்தியன் இவன்! – பாரினில்
இந்தியனை செயல்படுத்தியன் இவன்!!

கழியெடுத்தவன் இவன்! – தமிழுக்கு
ஒளிகொடுத்தவன் இவன்!!

இவனை ஊர்சொன்னதே…
கிறுக்குப் பிடித்தவனென்று!
இவன் இருந்தானே
முறுக்குமீசை கொண்டு!!

பார்வை கொண்டவன் இவன்! – நேர்கொண்ட
பார்வை கொண்டவன் இவன்! – புதிய
பார்வை கொண்டவன் இவன்! – பேரும்
பகைவனையே எரித்தவன் இவன்!
சூரியனையே சுட்டெரித்தவன் இவன்!!

கவிநூல் பலபடைத்தான் இவன்! – புதுப்
பூணூல் அணிவித்தான் இவன்! – தமிழனுக்கு
பூணூல் அணிவித்தான் இவன்!!

மதங்கொண்டான் இவன்! – மனித
மதம் கொன்றான் இவன்!!

களிறு அடித்துச் சாய்ந்தான் இவன்! – எனினும்
பிளிறவில்லையே இவன்!!

பணிசெய்தான் இவன்! – தமிழ்ப்
பணிசெய்தான் இவன்! – வறுமையால்
பிணிகொண்டான் இவன்!!

சாய்ந்துவிட்டான் இவன்! – புவியில்
சாய்ந்துவிட்டான் இவன்!!
சாய்ந்ததா ஜாதி?

மடிந்துவிட்டான் இவன்! – மண்ணுக்குள்
மடிந்துவிட்டான் இவன்!!
மடிந்ததா மதம்?

இவன் மரணம்
விதி செய்த சதியா?
சதி செய்த புதுவிதியா?
தமிழன்
தனிமதி கொண்டு
இவன்போல்
இனியொரு புதுவிதி செய்வானா?

பாருக்கு அதிபதியாய்…
புரட்சிக்கு பாரதியாய்…
பூவுலகில் சாரதியாய்…
ஜாதிகளை சாய்த்தால்…
மதங்களை மாயத்தால்… – மனித
மனங்களை மாற்றினால்… – புனித
குணங்களை ஏற்றினால்…
மனிதனாய் மாறுவான் தமிழன்! – பூவுலகின்
புனிதனாய் மாறுவான் தமிழன்!!

munaivendri.naa.sureshkumar@gmail.com 


அடிபோல் உதவ யாருமில்லை

பிச்சினிக்காடு இளங்கோ   

ஒன்பது கிரக
தலங்களும் இங்குதான்

மீனாட்சி
காமாட்சி
விசாலாட்சி போன்ற
அம்மன் திருக்கோவில்கள் எத்தனை?

பாடல்பெற்றத் சிவத்தலங்களுக்கு
என்னகுறை?

அய்யனார் வீரனார்
கருப்பண்ணன்
முனீஸ்வரன் மின்னடியான்
பைரவன்
காவல்தெய்வங்களுக்கு
கருனையில்லையா?

வைணவத்தலங்கள்
போதாதா?

சின்ன திருப்பதியும்
இங்குதான

நாகூர் ஆண்டவர்
அன்னை வேளாங்கண்ணி
ஆகாதா?

ஆறுபடை வீடும்
போதவில்லையா?

தீபம் பார்ப்பதற்கு
திருவண்ணாமலை வேண்டாமா?

மலைநாடு போகிறார்கள்
மாறவில்லை இப்பழக்கம்

இங்கெல்லாம்
தெய்வமென்ற சிலையா இல்லை?
இதற்கெல்லாம் அருள்புரிய
மனமா இல்லை?

என்னய்யா வேடிக்கை
தமிழனுக்கு அறிவே இல்லை

என்னசெய்வது
அடிஉதவுவதுபோல்
யாரும் உதவுவதில்லை

19.12.2011 (அய்யப்ப பக்தர்களுக்கு அடி)

elango@mdis.edu.sg


தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

 – எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) –

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

mrishansha@gmail.com


காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(3)           

– ஜுமானா ஜுனைட், இலங்கை –
 
உண்மைக்கு
உயர்வளி 
உயிருக்கு
உணர்வளிக்கும்…
 
நீதிக்கு
உரமூட்டு
உன் வாழ்வுக்கு
மெருகூட்டும்…
 
கார்மேகமாய் இரு
இடமறிந்து பொழி… 
உன் பாதைகளோ
பல்வேறு
அறிந்து செல் வழி…
 
வார்த்தையில்
உண்மை வை..
நெஞ்சத்தை
நிஜங்களால் நிரப்பு..
வஞ்சகத்தை விட்டு
நீங்கிவிடு…
 
மலைகளில்
ஊற்றெடுக்கும்
நீர் வீழ்ச்சியாய்
நில்லு…
அருவி போல்
பாய்ந்து போ…
சூர்யன் ஈர்த்தாலும்
வானில் சென்று
முகிலாகு…
உன்னை ஈன்ற
பூமிக்கே
திரும்பி வா
மழையாய்… 
வாழை வேருட் சென்று
வெளி வா
குலையாய்…!

jjunaid3026@yahoo.com


 அமுத இசை.   

– வேதா. இலங்காதிலகம் ஓகுஸ்,  டென்மார்க். –                   
 
தென்றல் நுழைந்த புல்லாங்குழலால்
மன்றம் நிறைந்த உல்லாசச் சூழல்.
அன்றும், இன்றும், என்றும் ஒன்றாக
குன்றாய் மனதில் ஊன்றிய இசை.

கையேந்தும் இசைக் கருவி இனிமையில்
நாவேந்தும் கன்னற் பா சுவையில்,
மூவேந்தரும் ஆராதித்து ஆதரித்த இசை.
நோவேந்தும் உடலும் உணரும் இசை.

தேனமுத பான ரசப்பிணைவு இசை.
கானமெனும் சாரல் நனைக்கும் இசை.
மோனநிலை கானத்தின் அமுத அதிர்வு.
ஊனங்களும் இசை உணர்வால் களைவு.

அன்னையின் கருப்பை அசைவிருளில்
நின்னை நெருங்கிய முதலொலி அலைகள்,
பின்னைத் தாலாட்டிய ஆராரோ இசைகள்
பின்னுகிறது எமைத் தூயதாய் இசையுள்.

வாழ்வில் நிறைந்த ரசனை தரும்.
சூழ்ந்த கர்ப்பத்தில் ஐனனம் இசை.
மனிதனின் பூலோக இன்ப சொர்க்கம்.
மனநிலை மாற்றும் மந்திரம் இசை.

kovaikkavi@gmail.com


 நூல்களும்….

– முல்லைஅமுதன் –

நூல்கள் எனக்குச் சொந்தம்.
எதை இழப்பினும் அவற்றை இழக்கச் சம்மதமில்லை.
உனக்கு எப்படியோ?
எனக்குள் வலி எடுத்தது.
யாரோ வாள் எடுத்துச் செருகியதாய்
குருதி கொட்டுகிறது.
சுலபமாய்-
சொல்ல உனக்கு முடிந்திருக்கிறது.
அன்பை அறுப்பது போல ..
முன்னரும்-
உறைவாளைச் செருகுவது போல
நூலை இடுப்பில் செருகிச் சென்றான் நண்பன்.
இப்போது நி…
இதயத்தை தருமாப் போல நூலை உன் கையில் சேர்த்தேன்.
தொலைந்து விட்டதாய் சொல்கையில் மொத்தமும் இழந்ததாய்…
உயிர்ப்பென எழ வைப்பதே நூல் என்பதை எப்போது உணரப் போகிறாய்…?
இப்படிச் சொல்லி எவரையும் ஏமாற்றிவிடாதே….
என்னைப்போல இறந்து விடுவார்கள்…!

mullaiamuthan_03@hotmail.co.uk