முன்னுரை
தங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதைகளாக வடித்தெடுப்பதில் சங்ககாலக் கவிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதற்குச் சங்கப்பாக்களே சான்று. ஏதேனும் ஒரு பாவகையில் அக்கருத்துகள் பாடல் வடிவில் வெளிப்படும் பொழுது தாங்கள் கூறவந்த கருத்துக்களுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவது புலவரின் மாண்பு. அப்பாடல்களுள் பெரும்பான்மை பலநூறு ஆண்டுகளைத் தாண்டி இன்றும் கிடைக்கின்றன என்றாலும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்களையும் அவை பெற்றுள்ளன என்பது இயற்கைத்தன்மைத்து. இயற்கையான நிகழ்வு சிற்சமயம் செயற்கையாய் அமைவதும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக ஆராயும் ஆய்வே மூலபாட ஆய்வு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு அடித்தளமிட்டவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களுக்குப் பின் ஏடுகளில் இருந்த இலக்கண, இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கிய பொழுது இத்திறனாய்வுப் பார்வை இன்னும் வலுப்பெற்றது. குறிப்பாக ஒரே நூல் பலரால் உரை மற்றும் பதிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது பல்வேறுவகையான கருத்துக்கள் தோன்றின. பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பெனப்பட்ட சொற்களை மூலபாடம், பாடம் என்றும், ஏற்பில்லாதவற்றைப் பாடபேதம், பிரதிபேதம் என்றும் கூறத்தொடங்கினர். ஆயினும் பதிப்பாசிரியர், உரையாசிரியர் ஆகியோரைத் தாண்டி அப்பிரதியை வாசிக்கும் வாசகர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை ஆராய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்நோக்கில் சங்கஇலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையின் 167 ஆம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்த அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” – குறுந்.167
கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட இப்பாடல் “கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது” எனும் துறையில் அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவி தலைவனுடன் இல்லறம் நடத்தி வந்த பொழுது அதைப் பார்த்துவிட்டு வந்த செவிலித்தாய், நற்றாயிடம் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கினை எடுத்துக்கூறும் சூழலில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது . இப்பாடலின் மூன்றாம் அடியாக அமைந்துள்ள “குவளை உண்கண் குய்ப்புகை கமழ” எனும்அடி மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. இவ்வடியின் இறுதிச் சொல்லாக அமைந்த ‘கமழ’ எனும் சொல் ஆய்வின் மையப்பொருளாக அமைகின்றது.
‘கமழ’ என்னும் சொல்லிற்குப் பதிலாக ‘கழும’ எனும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கமழ’, ‘கழும’ எனும் இரண்டு சொற்களுள் எது சரியான பாடமாக அமையும் என்பதை பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.
குறுந்தொகையின் முதற்பதிப்பாசிரியரான சௌரிப்பெருமாள் அரங்கன், விரிவான உரை கண்ட உ.வே.சாமிநாதையர், கழக உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார், விளக்கவுரை கண்ட ரா.இராகவையங்கார், செம்பதிப்பென மூலத்தை வெளியிட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை, பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்வுப் பதிப்பாக வெளியிட்ட மு.சண்முகம்பிள்ளை ஆகியோரின் பதிப்புகளும், பிற்காலத்தில் தமிழண்ணல்லை உரையாசிரியராகக் கொண்டு வெளிவந்த கோவிலூர் மடத்துப் பதிப்பு, வி.நாகராசனின் உரையொடு வெளியான என்.சி.பி.எச் பதிப்பு ஆகிய பதிப்புகள் இங்கு ஆய்வுக்கு எடுத்தக்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கூறிய பதிப்புகளில் இவ்வடி பயின்று வந்துள்ள விதம் பின்வருமாறு ,
“குவளை உண்கண் குய்ப்புகை கமழ”- சௌரிப்பெருமாள் அரங்கன்
“குவளை உண்கண் குய்ப்புகை கமழ” – உ.வே.சாமிநாதையர்
“குவளை உண்கண் குய்ப்புகை கழும” – மு.சண்முகம்பிள்ளை
“குவளை உண்கண் குய்ப்புகை கழும” – பொ.வே.சோமசுந்தரனார்
“குவளை உண்கண் குய்ப்புகை கழும”- எஸ்.வையாபுரிப்பிள்ளை
“குவளை உண்கண் குய்ப்புகை கழும”- ரா.இராகவையங்கார்
“குவளை உண்கண் குய்ப்புகை கமழ”- தமிழண்ணல்
“குவளை உண்கண் குய்ப்புகை கழும”- வி.நாகராசு
மேற்கூறியவர்களுள் சௌரிப்பெருமாள் அரங்கன், சாமிநாதையர், தமிழண்ணல் ஆகியோர் ‘கமழ’ என்பதைப் பாடமாகவும், இவர்கள் மூவரைத் தவிர்த்த ஏனையோர் ‘கழும’ என்பதைப் பாடமாகவும் கொண்டுள்ளனர்.
“முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவையாமல் உடுத்துக்கொண்டு, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பை உடைய குழம்பைத் தலைவன் இனிதென்று உண்டதால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்தன்று” என்று ‘கமழ’ என்பதைப் பாடமாகக் கொண்டு உ.வே.சா உரை எழுதியுள்ளார்.
உ.வே.சா.வைப் போன்று ‘கமழ’ எனப் பாடங்கொண்டவர்களான சௌரிப்பெருமாள் அரங்கன், தமிழண்ணல் ஆகியோர் முறையே “தாளிப்பினது மணக்க, புகைநெருங்கிப்பரவ ” என்றும், ‘கழும’ எனப் பாடங்கொண்டவர்களான பொ.வே.சோமசுந்தரனார். உள்ளிட்ட ஐவர் முறையே “தாளிப்பினது புகை கண்களில் நிறைய, புகை நிரம்ப, புகைபொருந்த ” என்றும் பொருள் எழுதியுள்ளனர்.
‘கழும’ எனும் பாடம்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட எட்டு பதிப்புகளுள் பெரும்பான்மையாக ஐந்தில் ‘கழும’ என்பதே பாடமாகக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுள் வையாபுரிப்பிள்ளையைத் தவிர்த்த நால்வர் உரையும் எழுதியுள்ளனர். அவர்களுள் தங்களுடைய உரையில் ‘கமழ’ என்பது பொருந்தாப்பாடம் என்பதை உறுதி செய்தவர் பொ.வே.சோமசுந்தரனார் மட்டுமே. அவர்,
“கமழ எனப் பாடமோதி கண்களில் புகை மணப்ப என்பாருமுளர். இதனினும் ‘கழும’ எனும் பாடமே சிறப்புடைத்தாதலுணர்க” (குறுந்தொகை,2007,ப.301) என்று கூறி அவருக்கு முன்னால் உரை எழுதிப் பதிப்பித்த சௌரிப்பெருமாள், உ.வே.சா. ஆகிய இருவரின் கருத்தையும் வெளிப்படையாக மறுக்கின்றார்.
இராகவையங்கார் “குய்ப்புகை கமழ என்பதும் பாடம்”(1993,ப.254) என்று மட்டும் கூறியுள்ளார். வீ.நாகராசு “கமழ – பாடபேதம்” (2007,ப.387) என்று பாடபேதத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய இருவரும் எதுவும் கூறவில்லை.
‘கழும’- அகராதி தரும் பொருள்கள்
சங்க இலக்கிய அகராதி “ கழுமல் – கலத்தல் (வ.எண்.3245), கழும – மயங்கும் படி(வ.எண்.3244)” என்றும், தமிழ் தமிழ் அகரமுதலி ‘கழும’ என்பதன் தொழிற்பெயரான ‘கழுமுதல்’ என்பதற்குக் “கழுமுதல் – சேர்தல், பொருந்தியாதல், திரட்சி, கலத்தல், நிறைதல், மிகுதல், மயங்குதல்” (ப.291) என்று பதப்பொருள் பகர்ந்துள்ளது. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலியும் (ப.622) கழகத் தமிழகராதியும் மேற்கூறிய ஏழு பொருள்களை அப்படியே வழிமொழிகின்றன.(2004,ப.305)
இவ்வகராதிகள் கூறிய பொருண்மைகளுள் ‘பொருந்தியாதல், நிறைதல்’ ஆகிய இருபொருள்கள் மட்டுமே உரையாசிரியர்களால் கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய சொற்கள் ஒன்றற்கொன்று தொடர்புடையவை என்றாலும் அவை உரையாசிரியர்களால் எடுத்துக்கொள்ளப் படவில்லை.
‘கமழ’ – அகராதி தரும் பொருள்கள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, ‘கமழ’ என்பதன் வேர்ச்சொல்லான ‘கமழ்’ என்பதற்குக் “ கமழ்-தல் – நறுமணம் வீசுதல், தோன்றுதல், பரத்தல்” என்றும், கம் – கமழ் – கமழ்தல் -கம் – நிறைதல், பெருகுதல், பரவுதல், மணம் பரப்புதல்” என்றும் பொருள் தந்துள்ளது. (ப.377) சங்க இலக்கிய அகராதி ‘கமழ்தல் – தோன்றுதல், பரத்தல், மணத்தல்” (ப.26) என்றுரைத்த பொருளையே தமிழ் தமிழ் அகரமுதலியும் (ப.267) தந்துள்ளன. கழகத்தமிழ் அகராதியில் “கமழ்தல் – மணத்தல், தோன்றுதல்” (2004, ப.281) என்று பதப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளன.
இங்குக் கூறப்பட்ட பொருள்களுள் ‘மணத்தல், பரத்தல்(பரவ) ‘கமழ’ எனப் பாடங்கொண்டவர்களின் விளக்கமாக அமைந்துள்ளன. இங்கு கவனிக்கத்தக்க ஒன்று, ‘கழும’ எனப் பாடமோதியவர்கள் கொண்டுள்ள ‘நிறைதல்’ என்னும் பொருளும் ‘கமழ’ என்னும் சொல்லுக்கு உண்டு என்பதை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் மூலம் தெரிந்து கொள்ளமுடிகிறது.
சங்க இலக்கியங்களில் ‘கமழ’, ‘கழும’
சங்க இலக்கியச் சொல்லடைவின் அடிப்படையில், ‘கழும’ என்னும் சொல் நற்றிணை, கலித்தொகை ஆகிய இரு நூல்களில் மட்டுமே வந்துள்ளதை அறியமுடிகிறது. அவை “கழும -நற்றிணை,60;6, கலி.56;3” (ப.477) ஆகிய இரு இடங்கள் மட்டுமே.
சொல்லடைவு குறிப்பிட்டுள்ள இடங்களில் ‘கழும’ என்னும் சொல் எப்பொருண்மையில் வந்துள்ளது என்பதைக் காணுதல் இன்றியமையாதது.
“ கவர்படு கையை கழும மாந்தி” – நற்றிணை,60;6
எனும் அடிக்குப் பின்னத்தூரார் “விருப்பமிக்க கையையுடையையாய் மையக்கமேற உண்டு” (நற்றிணை,2007,ப.78) என்று உரை எழுதியுள்ளார்.
“ கழும முடித்துக் கண்கூடு கூழை” – கலித்தொகை.56;3
எனும் அடிக்கு நச்சினார்க்கினியர் “பூவும் மயிரும் தம்முள் மயங்கும்படி முடித்து” (கலித்தொகை,2007,ப.165) என்று உரை கொண்டுள்ளார். இவ்விரண்டு உரைகளிலும் ‘கழும’ எனும் சொல் ‘மயங்குதல்’ எனும் பொருளிலேயே வந்துள்ளதை அறியமுடிகிறது.
அடுத்தாகச் சொல்லடைவின் வாயிலாகக் ‘கமழ்’, ‘கமழ’ எனும் சொல் இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளதை அறியமுடிகிறது. (ப.447-448) அவை பெரும்பான்மை ‘மணம், நறுமணம், மணத்தல், நாறுதல்’ ஆகிய பொருள்களில் பயின்று வந்துள்ளன. சான்றாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளைக் குறிப்பிடலாம்.
“கமழ் – கமழ்ஐம்பால் (மலை.30), கமழ்கண்ணி (கலி.28;3,103;4), கமல்குலை (நற்.313;7), கமழ்ஞாழல் (கலி.131;18), கமழ்தேறல் (நற்.388;8,புறம்;56;18) கமழ்நறும்பூ (மது.423), கமழ்மார்பு (கலி.100;13), கமழ்மடல் (மலை.336)” – (ப.448) முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
“கமழ – பெரும்.177, மது.447,561,564, நெடு.41, குறி.108, மலை.181,454, புறம்.50;13, குறுந்.167;3…..” – (ப.448) என வரும் பல இடங்களைச் சுட்டலாம்.
“அந்நு ணவிற்புகை கமழக் கைம்முயன்று – பெரும்.177
“மணங்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ” – மதுரை.447
“வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ” – மதுரை.561
“போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ” – மதுரை.564
“அவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்து” – நெடு.41
“தண்ணறுந் தகரங் கமழ” – குறி.108
“வழையமை சாரற் கமழ” – மலை.181
“கண்புமலி பழனங் கமழ” – மலை.454
“எக்கற் ஞாழந் செருந்தியொடு கமழ” – ஐங்.141;1
“நனையுறு நறவி னாகுடன் கமழ” – பதிற்று.51;18
“வீசியோடே வியலிடங் கமழ” – புறம்.50;13
“ திகைமுழுது கமழ” – பரி.10;74
இவையே சங்க இலக்கியத்தில் ‘கமழ’ எனும் சொல் பயின்று வரும் இடங்களாகச் சொல்லடைவு குறிப்பிடும் இடங்கள் ஆகும். இங்குக் கூறபட்டவற்றுள் பெரும்பாணாற்றுப்படை தவிர்த்த அனைத்து இடங்களிலும் ‘கமழ’ எனும் சொல் “மணம்வீசுதல், பரத்தல், தோன்றுதல்” ஆகிய பொருள்களில்தான் நேரடியாகப் பயின்று வந்துள்ளது. மேற்கூறப்பட்டவற்றிலிருந்து பண்டை இலக்கியங்களில் ‘கமழ், கழும’ எனும் சொல் அதிகமாகவும், ‘கழும’ எனும் சொல் மிகக் குறைவான இடங்களில் மட்டுமே பயின்று வந்துள்ளதை அறியமுடிகின்றது.
‘கமழ’ எனும் பாடம்
தலைவி குழம்பு சமைக்கிறாள். கட்டித் தயிரைப் பிசைந்து, புளிப்பை உடைய குழம்பானாலும் அது தலைவியின் கைப்பக்குவத்தினால் தித்திப்பாக இருக்கிறது என்பதைக் காட்டவே ஆசிரியர் ‘தீம்புளிப் பாகர்’ எனும் சொல்லைப் பதிவிட்டுள்ளார். அவ்வாறு பக்குவமாகச் செய்யும் குழம்பு சுவையை இன்னும் கூடுதலாக்குவது தாளிப்பு. இன்றைய காலகட்டங்களிலும் தாளிப்பின்றி சமைக்கப்படும் பொருளுக்குச் சுவை சற்று குறைவு என்பது அனைவரும் அறிந்ததே. தாளிக்கும் போது நெய்யும், தயிரும், தாளிப்புப் பொருள்களும் சேர்ந்து நல்ல மணத்தைக் கொடுக்கிறது. அம்மணம் முதலில் தலைவியன் மூக்கைத் துளைக்கும். அன்பின் மிகுதியால் அவளே அதை முகர்ந்தும் பார்ப்பாள். எனவே புகை கண்ணில் படும் முன்பாகவே அதன் மணம் மூக்கைச் சென்றடையும். எனவே உ.வே.சா. போன்றோர் தாளிப்பினது புகை ‘மணப்ப, மணக்க’ என்று பொருள் கொண்டுள்ளனர்.
சங்க இலக்கியச் சொல்லடைவில் ‘கழும’ எனும் சொல் இடம்பெற்றுள்ள பகுதியில் குறந்தொகைப் பகுதி இறம்பெறவில்லை. ஆனாhல் ‘கமழ’ எனும் சொற்கள் இருக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும் பொழுது சொல்லடைவைப் பதிப்பித்தோர்க்கும் “கழுவுறு உண்கண் குய்ப்புகை கமழ” என்பதே ஏற்புடைத்தாக இருந்துள்ளதை அறியமுடிகின்றது.
புகை மணம் பரப்புதல்
பெரும்பாணாற்றுப்படையில் வரும் ‘கமழ’ எனும் சொல் ‘தோன்றுதல்’ எனும் பொருள்தரும் ‘பிறப்ப’ எனும் பொருளில் வந்துள்ளது. அடி இடம்பெறும் சூழலை வைத்து நச்சினார்க்கினியர் ‘முற்படப் பிறக்கும் படி’ (2017,ப.272) என்று உரை செய்துள்ளார். பொ.வெ.சோமசுந்தரனாரும் இவ்வாறே பொருள் எழுதியிருந்தாலும் (பத்துப்பாட்டு.2007,ப.97) அவர் கருத்துரையிலும், விளக்கவுரையிலும் தரும் தரவுகள் இங்கே குறிப்பிடத்தக்கதன.
பொ.வே.சோ. கருத்துரையில் “கன்றுகளைப் பெரிதும் விரும்புகின்ற பசுத்திரளோடே காட்டிலே தங்கி அழகிய நுண்புகை கமழும்படி”(பத்து.பெரும்,2007,ப.97) என்றும், விளக்கவுரையில் “புகை கமழ்தல் என்றது தீக்கடையும் பொழுது தீத்தோன்று முன்னர் மணக்கும் புகை மணத்தை, கட்புலனாகிருந்து பின்னர்க் கட்புலனாகத் தடித்து விளங்குதலின் நுண்அவிர் புகை என்றார்” (பத்து.பெரும்,2007,ப.98) என்றும் விளக்கம் தந்துள்ளார்.
குழலைத் துளையிடுவதற்குக் காட்டில் கிடைக்கும் கட்டையை வைத்துத் தீக்கடைகோல் உண்டாக்கி, அதன் மூலம் குழலில் துளையிடுவது ஆயர்களின் வழக்கம் என்பதே இங்கு வெளிப்படும் செய்தி. தீக்கடைகோல் செய்யப்பட்ட பொழுது வராத மணம், அக்கடைகோல் தீ மூட்டப்படும் பொழுது மணம் பரவி பின்பு தீ பற்றுகிறது. எனவே தான் ‘முற்படப் பிறக்கும் படி’ என உரை கூறப்பட்டது.
அதாவது கட்டையில் இருந்த மணம், அக்கட்டை தீ மூட்டப்படும் பொழுது வெளிப்பட்டு நறுமணம் பரப்புகிறது. இதைப்போல் அகிற்கட்டை தீ மூட்டப்படும் பொழுது மணம் கமழும் என்பதைச் சங்க இலக்கியங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளமுடியும்.
இவற்றைப்போலவே, முற்றிய தயிர், நெய் முதலான சமயல் பொருள்களுக்கு இயல்பாகவே இருக்கும் மணம், அவை அனைத்தையும் சேர்த்துச் சமைத்து, இறதியில் தாளிக்கும் பொழுது இன்னும் அதிகரிக்கின்றது. எனவே கண்ணில் புகை படுவதற்கு முன்பாகவே அதிலிருந்து வரும் நல்மணம் மூக்கைச் சென்றடைகிறது. சமையல் பொருளுக்கே உரிய நறுமணம் இயல்பாக இருந்தாலும் சமைக்கப்படும் பொருள் பக்குவமாக வந்துள்ளதா என்பதை தாளிதம் செய்யும் பொழுது வரும் புகையை வைத்தே கண்டுபிடித்துவிடாலாம். இது இன்றும் நடைமுறையில் உள்ள ஒன்று. புகையாகவே சென்று கண்ணில் நிறைந்தாலும் அது நறுமணத்தோடே நிறையும் என்பது தான் அன்பின் மிகுதியை வெளிப்படுத்தும் இப்பாடலின் சூழலுக்குப் பொருத்தமாக அமையும்.
“ கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட
விளரூண் அம்புகை எறிந்து நெற்றி” – நற்.7;10 (2009,ப.320)
என்று உ.வே.சா. காட்டியுள்ள ஒப்புமைக்கருத்தும் மேற்கூறிய கருத்தை வலுப்படுத்தும். எனவே புகைமணப்ப என்னும் பெர்ருள்கொண்டு அமைந்த ‘கமழ’ எனும் பாடமே ‘கழும’ எனும் பாடத்தை விடப் பொருத்தமாக அமையும் எனலாம்.
முடிபுகள்
“குவளை உண்கண் குய்ப்புகை கமழ? கழும? – மூலபாட ஆய்வியல்நோக்கு” எனும் தலைப்பில் அமைந்து இவ்வாய்வின் முடிபுகள் பின்வருமாறு அமைகின்றன.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட எட்டு பதிப்புகளுள் பெரும்பான்மைப் பதிப்புகள் ‘கழும’ என்பதைப் பாடமாகக் கொண்டாலும், சங்க இலக்கியங்களில் இந்த ஒரு பாடலைத் தவிர்த்த ஏனைய இரு இடங்களில் ‘கழும’ எனும் சொல் ‘மயங்குதல்’ எனும் பொருளில்தான் வந்துள்ளது.
சங்க இலக்கியச் சொல்லடைவு ‘கழும’ எனும் பாடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இவ்வாய்வின் வழி அறியமுடிகிறது.
குழம்பைத் தாளிக்கும் பொழுது புகை ஏற்பட்டாலும், அப்புகையின் நறுமணமே சமைத்தலின் பக்குவத்தை வெளிப்படுத்துவதால் புகை நிறைந்து மணக்கிறது என்பதை விட புகை மணந்து நிறைகிறது என்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
எனவே ‘மணப்ப, மணக்க’ எனும் பொருள் பட அமைந்த ‘கமழ’ எனும் பாடமே, ‘கண்ணில் நிறைய’ எனும் பொருள்தரும் ‘கழும’ எனும் பாடத்தை விட பொருத்தமானதாக அமைகின்றது.
துணைநின்ற நூல்கள்
1. இராகவையங்கார்,ரா.,(உ.ஆ) – குறுந்தொகை விளக்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதற்பதிப்பு – 1993
2. சண்முகம் பிள்ளை,மு.,(ப.ஆ) – குறுந்தொகை மூலமும் உரையும் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 1994
3. சாமிநாதையர், உ.வே.,(உ.ஆ) – குறுந்தொகை மூலமும் உரையும் டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம் பெசன்ட் நகர், சென்னை – 600090 பதிப்பு -2009
4. சாமிநாதையர், உ.வே.,(ப.ஆ) – பத்துப்பாட்டு மூலமும் நச்சினாக்கினியர் உரையும் டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் 2, அருண்டேல் கடற்கரைச் சாலை, பெசன்ட்நகர், சென்னை-600 090, எட்டாம் பதிப்பு, 2017.
5. சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.)- குறுந்தொகை மூலமும் உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு, 2007
6.சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.)- பத்துப்பாட்டு பகுதி I,II திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு, 2007
7.சோமசுந்தரனார், பொ.வே., (உ.ஆ.)- பரிபாடல் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு, 2007
8. சௌரிப்பெருமாள் அரங்கன்,(உ.ஆ),- குறுந்தொகை விளக்கம் சந்திரசேகரன், நா., (ப.ஆ) முல்லைநிலையம், 9, பாரதிநகர் முதல்தெரு, தி.நகர், சென்னை-600017, மறுபதிப்பு,2008
9. தமிழண்ணல் (உ.ஆ) – குறுந்தொகை (மக்கள் பதிப்பு) கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630307 முதற்பதிப்பு, ஏப்பிரல்,2002
10. துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு., (உ.ஆ.) – பதிற்றுப்பத்து மூலமும் உரையும் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை,சென்னை. மறுபதிப்பு, 2007.
11. துரைசாமிப்பிள்ளை, ஒளவை சு., (உ.ஆ.) – புறநானூறு பகுதி I,II திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை,சென்னை. மறுபதிப்பு, 2007.
12. நச்சினார்க்கினியர் (உ.ஆ.) – கலித்தொகை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு, 2007
13. நாகராசன், வி.,(உ.ஆ), – குறுந்தொகை விளக்கம் நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 41பி,சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098 மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி, 2007
14. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.) – நற்றிணை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு, 2007
அகராதி மற்றும் இணையதளம்
15. கழகப்புலவர் குழுவினர் – கழகத் தமிழ் அகராதி திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக லிமிடெட், 522, டி.டி.கே.சாலை, சென்னை-18 17 ஆம் பதிப்பு, 2002
16. இணையதளம் – Tamilvu.org ( சங்க இலக்கியச் சொல்லடைவு, செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி, சங்க இலக்கிய அகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி ஆகியவற்றின் பார்வைக்கு மட்டும்)
மின்னஞ்சல் – sendoordasan@gmail.com
* கட்டுரையாளர்: – முனைவர் ச.கண்ணதாசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை- 625004 –