எனை ஈன்ற மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!
வீட்டைப் பாரு : நாட்டைப் பாரு
என்பார்கள் !
வீட்டைப் பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப் பார்க்கின்றேன் !
பெற்ற சுதந்திரத்தைப்,
பெருமையுடன் காத்துவிட ,
பெறற்கரிய குடியரசின்,
பேரதனை நிலை நிறுத்த,
நாட்டைக் காப்பதற்காய்,
எல்லைப் புறத்தில்,
இராணுவப் படையில்,
இன்று நானும் ஒருவன் !
பனிபடர்ந்த மலைகளின் சாரலில்,
மரணத்தின் விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும் எனக்குள் சுழல்வது,
உந்தன் நினைவுகளே !
நாட்டுக்காக நான்
கொடுக்கின்றேன் : உயிர் !
வீட்டுக்காக நாடு
கொடுக்கிறது சம்பளம் !
கூலிக்கு மாரடிக்கும்
கூட்டம் என்றுகூட ,
குறை சொல்வோர் வாழும்
குவலயத்தில் நாங்கள்….
கூலியைப் பெற்று
வேலியைக் காக்க…. எங்களின்,
வாலிபத் துடிப்பை
வழங்கிக் கொண்டிருக்கின்றோம் !
அடிக்கடி உன்னை
வாட்டி வதைக்கின்ற நோய்…. !
நடக்க முடியாமல்
படுத்துக் கிடக்கும் அப்பா….!!
பற்றாக் குறைகாட்டும்
அவரது பென்சன் பணம்…. !!!
திருமண வயதை எட்டி
தினமும் பெருமூச்சுடன்
சீர்குலைந்த பதுமைகளாகத்
தங்கைகள் இருவரும்….!!!!
சேவல் கூவி எழுப்புகின்றதோ
இல்லையோ : தினசரி
பூபாளம் இசைத்திடும்
கடன்காரர் வரிசை….!!!!!
கேட்டுக் கேட்டுக்
காது புளித்ததால் தான்
கேளாத தூரத்துக்குப்
போய்விட்டேன் என்று
எண்ணிவிடாதே அம்மா !
இவையெல்லாம் : எங்களை
வளர்ப்பதற்காக நீங்கள்
பட்டுக்கொண்ட வடுக்களின்
வலிகள் அல்லவா !
அறிவேன் அம்மா !
நாளை திருமணச் சந்தையில்
விற்பனையாகப் போகின்ற
என் உடன் பிறப்புகள்…..
அவர்கள் வாழப்போகின்ற
இல்லங்கள் : அனைத்திலேயும்
இந்தக் கடன் சாக்கடை
நாற்றம் வேண்டாம் : நல்ல
சந்தன வாடை வீசட்டும்!
தன்னைத் தேய்த்து
பிறருக்கு வாசனை கொடுக்கும்
சந்தனக் கட்டையாய் நான்
சமர்ப்பணம் ஆகுகின்றேன் !
படித்தவன் : பட்டம் பெற்றவன்
பார்வையானவன் : ஆனாலும்,
பயனற்றவனாக அன்று நான்
தெரு சுற்றும் வேளையில்,
கிட்டப் போனாலும் எட்டிச் சென்ற
சுற்றங்கள் : பேசக்கூசிய
நண்பர் கூட்டங்கள்……
அனைவரும் இன்று,
தொட்டுத் தொட்டு உறவு சொல்லி
ஒட்டி ஒட்டி வருவதை,
உந்தன் கடிதந்தான்
உரைத்ததே அம்மா !
வரவேற்போம் : ஆனால்
வளைக்கரம் கொடுக்க வேண்டாம் !
புன்னகைப்போம் : ஆனால்
போற்றித் துதிக்க வேண்டாம் !
நாட்டுக்காக உயிரைவிடும்
எங்களை : நாளை இங்கு
நாய்களும் நரிகளும்
அடக்கம் செய்தாலும்,
உங்கள் தேவைக்கேனும்
நாலுபேர் இருக்கட்டும் !
யுத்தமுனையில் கேட்கின்ற
பேரிகையின் முழக்கங்கள்
ரத்த நாளங்களை
உடைப்பெடுக்க வைத்தாலும்,
என் சித்தத்தைக் குளிர்விப்பது….
என் தங்கைகளுக்காக ஒலிக்கின்ற
கெட்டி மேளங்கள் தானம்மா !
நான் திரும்பவும் : வருகின்றேனோ
இல்லையோ : தங்கைகளிடம்
சொல்லி வையம்மா…..
பிறக்கப் போகின்ற : மருமக்கள்
ஒவ்வொருவரை : இந்திய
மண்ணுக்காகத் தரும்படி !
ஆலமரத்தின் நிழலில்
ஆயிரம் ஜீவன்கள்
இளைப்பாறினாலும் : அதனின்
அடியினில், ஆணிவேர் ஒன்று
ஆதாரம் தருகிறதல்லவா!
யுத்தங்கள் வேண்டாம் என்று,
யோகிகள் சொல்லக் கூடும் !
ஆனால் …. சுட்டுச் சுட்டு
வந்து ஆறும் : காயத்தின்
அடையாளங்கள் தான்
சுதந்திரத்தின் பெருமையினைச்
சொல்லாமல் நினைக்க வைக்கும்….
மரம் இருக்கும் காலம்வரை
அதற்கு : உரமும் இருக்க
வேண்டும் என்பது,
உனக்குத் தெரியாததல்ல!
நன்றியுள்ள ஜீவன்
நாய்கூட : தனக்கு
இரண்டு குட்டிகளே பிறந்தாலும்,
முதல் குட்டியைத் தனக்கு
பத்திய உணவாக்குவதில்லையா ?
அதுபோல இந்நாட்டின்,
நன்றியுள்ள தாய்க்குலங்கள்
நாடுவாழத் தம்குட்டி…. ஒன்றைத்
தருதல் : தவறல்லவே !
இத்துடன் முடிக்கின்றேன் !
அதோ எதிரிகளின்,
பீரங்கி முழக்கங்கள் : எங்களை
உக்கிர மாக்குகின்றன !
தாய், தந்தை, தங்கை உறவுகள்,
அவுட்-அப் போக்கஸாய்
எடுத்த புகைப்படம் போல,
கண்ணை விட்டுப் போகிறதே !
சா(ர்)ப் போக்கஸில் : நமது
துருப்புக்களின் வரிசையே
தெரிகின்றது !
வாழ்ந்தாலும் சரி,
மார்பில் துளைபட்டு,
வீழ்ந்தாலும் சரி,
உன் மகனை,
நாளை இம்மண்….
சான்றோன் என்றே
சாற்றுகின்ற மொழிகேட்டு,
ஈன்ற பொழுதைவிட,
பெரிதுவக்கப் போறவளே….!
பரந்து விரிந்த
பாரத மாதா
இரந்து என்னை
அழைப்பதன் முன் : நான்
விரைந்து செல்கின்றேன் அம்மா !
வந்தே மாதரம்….!
வந்தே மாதரம்….!
bairaabaarath@gmail.com