ஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.

தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப்  பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத்  “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.

ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.

நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.

சங்கப்பாடல்கள் தன்னுணர்ச்சிப் பாடல்களாகப் போற்றப்பெறுவதற்குக் காரணம் அதன் கூற்றுமுறையாகும். ஒவ்வொரு பாடலும் கூற்று அடிப்படையிலேயே பொருண்மை உருவாக்கம் அமைக்கப்பெற்றிருக்கிறது. பாடலின் கூற்று முறையிலேயே பாடலின் செய்தி கலந்துரையாடப்படுகிறது. கூற்றும், கூற்றுநரும் இயைபுற்ற வழியே பாடலின் கட்டமைப்பு (வடிவம் மற்றும் உள்ளடக்கம்) சிறப்புறுகின்றது. கூற்று நிகழ்த்துகின்ற பாத்திரம் தன்னைப்பற்றிய அறிமுகத்தைத் தானாக நிகழ்த்துவதில்லை. தான் கூற்று நிகழ்த்துகின்ற நபரை முன்னிலையில் விளித்தும், படர்க்கையால் சுட்டியும் அறிமுகப்படுத்திக் கொள்கிறது. கூற்று நேரடியாகவும், மறைமுகமாவும் நிகழ்த்தப்படுகிறது. அவற்றுள் பொதுமைச்சுட்டும், பன்மைச்சுட்டும், கொண்டெடுத்து மொழிதலும் ஆகியவை இலக்கிய உத்தியாகவும், அக்காலத்து சமூகமொழி இயங்கியலாகவும் இருந்ததை வெளிப்படுத்துகின்றது.

கூற்று நிகழ்த்துநரும், கேட்போரும்
தலைவன், தலைவி, தோழி, தாய், பரத்தை, கண்டோர், பாகன் ஆகியோர் தாமாகவே கூற்று நிகழ்த்துகின்றனர். கூற்று நிகழ்த்தாமல் கூறுவதைக் கேட்பவராகப் பாங்கன், பாணன், விறலி முதலானோர் குறிப்பிடப்படுகின்றனர். நேரடியாகக் கூற்றுநிகழ்த்தும் பாத்திரம் நிகழ்த்துகின்ற கூற்றுகளின் பொருண்மைக்கு ஏற்ப பிற பாத்திரங்களையும் குறிப்பிடுகின்றன. அவை தந்தை, தமையன், புதல்வன், அலருரைக்கும் பெண்டிர், ஊர்ப்பொதுமக்கள், பூவிற்கும் பெண், இடைச்சுரத்தில் எதிர்ப்பட்ட விருந்தினர் முதலானோர் ஆவர். உயர்திணை மனிதர்களைப் போன்றே அஃறிணைகளாகிய பறவையினங்களும், விலங்கினங்களும் கேட்கும் பாத்திரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.நற்றிணைப் பாடல்களின் திணை, கூற்று முதன்முதலில் நற்றிணையைப் பதிப்பித்த அ.பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்களால் வகுக்கப்பட்டது என்பது ஆய்வுலகம் உடன்பட்ட கருத்து.அவற்றின் அடிப்படையில் கூற்றுநரை முதன்மைப்படுத்தி பாடலின் எண்ணிக்கை குறிப்பிடப்படுகின்றது.

இவை தவிர, பிறபாடல்களில் கூற்றுநர் இன்னார்தான் என்று ஒருவரை வரையறுக்க முடியாத இரண்டு கூற்றுநர்களை உள்ளடக்கிய பாடல்கள் உள்ளன. இரண்டு கூற்றுப் பாடல்கள் பெரும்பான்மை முதன்மை கூற்றுநரை (தோழி அல்லது தலைவி, தோழி அல்லது தலைவன், தலைவி அல்லது தலைவன்) அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஒரு சில பாடல்கள் முதன்மை கூற்றுநரையும், இரண்டாம் கூற்றுநரையும் (தலைவி அல்லது பரத்தை: தோழி அல்லது பரத்தை: தலைவன் அல்லது கண்டோர்: தோழி அல்லது கண்டோர்) அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவையும் கூற்றுநர் மற்றும் பாடல் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு கூற்றுப் பாடல்களில் எந்தக் கூற்று, பாடலுக்குப் பொருத்தமாக உள்ளது என்பது பற்றியோ அல்லது ஏன் இரண்டு கூற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது பற்றியோ தொகுப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்கள் காரணம் குறிப்பிடவில்லை. இங்கு நற்றிணையிலுள்ள தலைவன் கூற்று பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பெறுகின்றன.

தன்மை, முன்னிலை படர்க்கை சுட்டுகள்
ஒரு பாடலின் கூற்று யாரால் நிகழ்த்தப்படுகின்றது என்பதைக் கூற்று நிகழ்த்துபவரின் தன்மைச்சுட்டு வெளிப்படுத்தும். தன்மைச்சுட்டு இல்லாதவழி முன்னிலை,  படர்க்கைச் சுட்டுகளால் உய்த்துணரக் கூடியதாக இருக்கும். ஒரு பாடலில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று சுட்டுகளும் இடம்பெற்றுவரின் அப்பாடலின் கூற்றுநரை எளிதாக அடையாளங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு தலைவன் கூற்றுப் பாடல்களின் குறிப்புகளைப் “பாடலில் கூற்று நிகழ்த்துவது தலைவன்தான் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் குறிப்புகள் பாடலில் பேசப்படும் கருத்து, கூற்று நிகழ்த்தப்படும் பின்னணி, கூற்று நிகழ்த்துவோர் குறிப்பிடும் முன்னர் நடந்த நிகழ்ச்சி, கூற்று நிகழ்த்துபவர் குறிப்பிடும் தனது அனுபவம், படர்க்கையில் சுட்டப்பெறும் பாத்திரங்கள், பிறிதொரு நபரின் செயல், தனக்கும் பிறிதொரு பாத்திரத்திற்கும் இடையே உள்ள உறவு, கூற்று நிகழ்த்துபவர் மேற்கொண்டுள்ள வினை, கூற்று நிகழ்த்துபவரின் மனஉணர்வு முதலியன ஆகும்.”3 என்று ஆலிஸ் விளக்குகின்ற கருத்து பொருத்தமுடையதாகும்.

பாடல் 160இல் பாங்கனை விளிக்கின்ற ‘நும்மினும் அறிகுவென்மன்னே’ என்கிற முன்னிலைச் சுட்டும் தலைவியை விளிக்கின்ற ‘இவள் அரிமதர்மழைக்கண் காணா ஊங்கே’ என்கிற படர்க்கைச் சுட்டும் தன்னைப்பற்றி உரைக்கும் ‘நயனும் நண்பும் நானு நன்கு உடைமையும்’ என்ற குறிப்புகளும் கூற்று நிகழ்த்துவது தலைவன்தான் என்ற குறிப்பினை வெளிப்படுத்துகின்றன.

தன்மை முன்னிலை சுட்டுகள்
தன்மை, முன்னிலைச் சுட்டு சொல்பவர் மற்றும் கேட்பவரைப் பற்றி புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன. தன்மை, முன்னிலை இரண்டுக்கும் இடையிலான உறவினை ஒன்றிணைத்தும், வேறுபடுத்தியும் படர்க்கைச் சுட்டுகளை உய்த்துணரலாம். அதன்வழி கூற்றுநர் இன்னார் என்பதை அடையாளப்படுத்தலாம். பாடல் 82 இல் தலைவன் தலைவியை உடன்போக்கு வலிக்க முயன்றதைத் தலைவனின் தன்மைச் சுட்டும், முன்னிலைச் சுட்டும் குறிப்பிடுகின்றன. இதனை ‘வேய்வனப்புற்ற தோளை நீயே’ என்ற முன்னிலைச்சுட்டும் ‘என் உயவு அறிதியோ நல்நடைக் கொடிச்சி’ என்ற தன்மைச்சுட்டும் தலைவன் கூற்று என்பதை வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் முன்னிலைச்சுட்டுகின்ற நபர் தோழி அல்ல என்பதைத் தலைவியின் வனப்புற்ற தோள்களைக் குறிக்கின்ற உவமையும், தலைவியின் வனப்பு தலைவனுக்குத் தாங்கவியலாத காமநோய் அளிப்பதையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு சசூரின் வேறுபடுத்தல் கொள்கை வழி தோழி அல்லாத காரணத்தினால் தலைவன் கூற்றாக உறுதிப்படுத்தப்படுகிறது.

முன்னிலைச் சுட்டு கூற்றுகள்
நற்றிணையின் சில பாடல்களில் தன்மை, படர்க்கைச் சுட்டுகள் இன்றி முன்னிலையில் மட்டும் கூற்று நிகழ்த்தப்படுகின்றன. இந்தக் கூற்றுமுறையில் 3 பாடல்கள் உள்ளன. பாடல் 126இல் ‘நில்லாப் பொருட்பிணிச் சேறி, வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே’ என்னும் பாடல்வரியில் பொருள் வலிக்க நினைத்த நெஞ்சத்தை நீ மட்டும் சென்று வருவாயாக என்று கூறும் கூற்று தலைவனுக்கு மட்டுமே உரியது. ஏனெனில் பொருள்வயின் பிரிதல் தலைவனுக்கு மட்டுமே உரியது. தோழி அல்லது தலைவிக்கு உரியது அல்ல. எனவே இப்பாடல் தலைவன் கூற்று என்பதை அறியமுடிகின்றது.

முன்னிலை படர்க்கை சுட்டுகள்
பாடலில் இடம்பெற்று வருகின்ற முன்னிலை, படர்க்கைச் சுட்டுகள் வழி கூற்று நிகழ்த்துபவர் யார் என்பதை உய்த்துணரலாம். பாடல் 139இல் தலைவியுடன் புணர்ந்து மகிழ்ந்ததற்கு உதவிசெய்த மழையை வாழ்த்துவதாக உள்ளது. இப்பாடலில் மழை முன்னிலைச்சுட்டாக இடம்பெற்று வருவதைப் ‘பெருங்கலி எழிலி எழீஇயன்ன உறையினை’ என்ற பாடல் வரி குறிப்பிடுகின்றது. மேலும் தலைவியுடன் இன்பம் நுகர்வதற்கு உதவியதை ’வணர்ந்துஒலி கூந்தல் மாஅயோளொடு, புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர், இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே’ என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. இலக்கிய மரபில் இன்பநுகர்வு பெறுபவர்களாகத் தலைவனும் தலைவியும் குறிப்பிடப்படுகின்றனர். எனவே தான்பெற்ற புணர்ச்சி இன்பத்தினைத் தலைவி அல்லது தலைவன் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும். தலைவி படர்க்கையில் சுட்டப்பெறுவதனால் தலைவன் கூற்று என்று வரையறுக்கப்படுகின்றது.

படர்க்கை சுட்டுகள்
வினைமுற்றி மீட்சியுறும் தலைவன் பாகனிடம் கூறியதாக மூன்று பாடல்கள் (142,346,371) அமைந்துள்ளன. இவ்வனைத்துப் பாடல்களிலும் பாகனை விளித்ததற்கான முன்னிலைச் சுட்டும், தன்மைச்சுட்டும் இடம்பெறவில்லை. தலைவியை மட்டுமே படர்க்கையில் சுட்டுகின்றன. இதனை ‘முல்லை சான்ற கற்பின், மெல்இயற் குறுமகள் உறைவின் ஊரே’ (பாடல் 142) என்னும் பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன. மேலும் இப்பாடல்களில் கார்காலம் வந்ததைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. இவ்விரண்டு குறிப்புகளுடன் தலைவி விருந்து அயரும் நிலையும் சுட்டப்பெறுகின்றன. இத்தன்மைகள் யாவும் தலைவன் வினைமுற்றி வரும் வழியில் பாகனிடம் உரைத்ததற்கான தன்மை, முன்னிலை, படர்க்கைச் சுட்டுகின்ற  பாடல்களுடன் இயைபுற்றிருக்கின்றன. எனவே உறவுபடுத்தல் கொள்கையின் வழி தலைவன் கூற்று என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

பொதுமைச்சுட்டு
பாடல் 352இல் ‘பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது’ என்று துறை வகுக்கப்பட்டுள்ளது. தலைவன் பொருள் அல்லது போர்க் காரணமாகப் பிரிந்துவந்ததற்கான குறிப்புகள் இல்லை. மேலும் சுரத்தின் கடினத் தன்மையைக் கூறி வருவதற்கு அஞ்சுகின்ற வழியில் தலைவி வந்தது பற்றிய மாட்சிமையைக் குறிப்பிடுகின்றது. இதனை ‘அருஞ்சுரக் கவலை வருதலின் வருந்திய நமக்கு அரிய ஆயின’ என்கிற பாடல்வரியில் இடம்பெற்றுள்ள தன்மைப் பன்மைச்சுட்டு கூற்று நிகழ்த்துபவரைப் பொதுமையில் சுட்டுகிறது. மேலும் கடத்தற்கரிய வழியில் தலைவி கடந்து வந்ததை ‘மாண்புடைக் குறுமகள் நீங்கி, யாங்கு வந்தனள்கொல் அளியள் தானே’ என்னும் பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன. தலைவி உடன்போக்கு வலித்தச் சூழலை இப்பாடல் விளக்குகின்றது. எனவே தலைவன் உடன்போகும் சூழலில் உடன்வந்த தலைவியின் மாட்சிமையைத் தன்நெஞ்சிற்கு உரைத்தான் என்று கொள்ளப்பெறுகிறது. இருப்பினும் ‘குறுமகள் நீங்கி யாங்கு வந்தனள் கொல் அளியள் தானே’ என்ற பாடல்வரி தலைவி உடன்போனபோது சுரத்திடைத் தேடிச்சென்ற நற்றாய் அல்லது செவிலியின் கூற்றாகவும் வரையறுப்பதற்கான சூழலைப் பெற்றிருக்கின்றது. எனவே இக்கூற்று தலைவனுக்கு மட்டுமே உரியதாகக் கொள்ளாமல் தலைவன் தாய் இருவருக்குமான பொதுநிலை கூற்றாகக் கொள்ளப்பெறுகிறது.

இரண்டு கூற்று வகுக்கப்பட்டுள்ள பாடல்கள்
நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி, தாய், பரத்தை, பாகன், கண்டோர் போன்ற பாத்திரங்களின் பொருண்மைச் சூழலுக்கு ஏற்ப கூற்றுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் பல்வேறு பாடல்களுக்குக் கூற்றுநர் பொதுநிலையிலும், பன்மை நிலையிலும் வகுக்கப்பட்டுள்ளன. அவை ஒரு பாடலுக்கு ஒரு தனித்த கூற்றுநரை உறுதியாக வரையறை செய்ய முடியாத சிக்கலை, மொழியின் தன்னிறைவு அற்ற தன்மையை, ஒற்றைப் பொருண்மை இன்மையை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இந்நிலையில் தொகுப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்களால் வெளிப்படையாகவே ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் வகுக்கப்பட்டுள்ளன. இரண்டு கூற்றுகள் அமைந்துள்ள பாடல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


என்று இரண்டு கூற்றுகள் வகுக்கப்பட்டுள்ளன.
இரண்டு கூற்றுகள் அமைந்துள்ள பாடல்கள் பெரும்பான்மை இரண்டு துறைக் குறிப்புகளைப் பெற்றனவாக உள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது இரண்டு கூற்றுகளினால் இரண்டு துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டுள்ளனவா அல்லது பாடலின் சூழல் இரண்டு கூற்று மற்றும் இரண்டு துறைக்குறிப்புகளை உள்ளடக்கியிருக்கின்றனவா என்கிற ஐயமும், சிக்கலும் எழுகின்றன. இத்தகைய சிக்கல்களுக்குப் பாடலின் பொதுநிலை கூற்றுமுறை அடிப்படையாக அமைகின்றது.

இரண்டு கூற்று இரண்டு துறை

பாடல் 220இல் 1.குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம்புக்கது. 2.பின்னின்ற தலைமகன் ஆற்றானாய்த் தோழிகேட்பச் சொல்லியாதூஉம் ஆம் என்று இரண்டு துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இப்பாடலின் துறைக் குறிப்புகள் ஒரே பொருண்மையில் வேறுவேறான பெயரில் இருக்கின்றன. கூற்று தலைவன் தோழியிடம் உரைப்பதாகவும், தோழி தலைவியிடம் கொண்டெடுத்து மொழிவதாகவும் உள்ளன. தலைவன் தோழி கேட்ப மொழிந்ததற்கான குறிப்புகள் நேரடியாக உள்ளது. தோழி தலைவியிடம் கொண்டெடுத்து மொழிந்ததற்கான முன்னிலைக் கிளவியும், படர்க்கைச் சுட்டும் இடம்பெறவில்லை. இதனை ‘உண்ணாநல் மாப்பண்ணி எம்முடன், மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள், தாமே ஒப்புரவு அறியின், தேமொழிக் குறுமகட்கு அயலோர் ஆகல், என்று எம்மொடு படலே’ என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. எம்மொடு என்ற தன்மைப் பன்மைச் சுட்டும், தலைவியைப் பற்றிய படர்க்கைச் சுட்டும், மடலேறும் நிகழ்ச்சியை விவரித்தலும், தோழி, தலைவிக்குத் தன்னை அயலவன் என்று மொழிந்ததைக் கூறுதலும் தலைவன் கூற்று என்பதை உறுதிப்படுத்துகின்றன.

முடிவுரை
ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுநர் அல்லது இரண்டு மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் கூற்று விளிக்கின்ற முறை, இடம், சூழல் மற்றும் பேசுபொருள், கேட்போர் ஆகிய பின்னணிகளை வைத்து குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட கூற்றுநர் குறிப்பிட்ட கேட்போரை முன்னிறுத்துவதை உறுதிப்படுத்தலாம் என்பதை இக்கட்டுரை விளக்கியுள்ளது.

குறிப்புகள் :
இராச., திருமாவளவன் – கையுறை மறுத்தலா? கடவுள் வாழ்த்தா? புதுமைத்திறனாய்வு,  ப. 32.
எல். இராமமூர்த்தி, – தமிழ் இலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கட்டமைப்பும், பக். 40-41.
அ ஆலிஸ் , – கட்டமைப்பு ஆய்வில் அகநானூறும் புறநானூறும்,  ப. 9.

kamalichitra4@gmail.com