– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர் –
கனடாவில் 05-06-2005ல் ஸ்காபறோ சிவிக் சென்ரரில் (scarborough sivic Center ) எனது ‘மீண்டும் வரும் நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீடீடு நிகழ்வும் விமர்சன உரைகளும் ரதன் தலைமையில் நடைபெற்றன. அங்கு நான் சமூகமளிக்காத நிலையில் கவிதைத் தொகுப்பின்மீதும் என்மீதும் முன்வைக்கப்படீட விமர்சனங்களுக்கு பதிலாக இதனைப் பயன்படுத்திக் கொள்கிறேன். சம்பிரதாயமான தலைவா¢ன் ஆரம்ப உரை எதுவுமின்றி கூடீடம் ஆரம்பமாகியது. அதிகாரங்களையும் மரபுகளையும் மீறுதல் இலக்கியத்தில் இனைந்த அம்சமாதலால் அதன் வெளிப்பாடாக முதலில் இதனைக் கருதினேன்.ஒவ்வொருவர் உரைக்குப் பின்னும் தலைவர் உதிர் உதிரியாக தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் என்மீது வைக்கப்பட்டவைகள் இவை:
– நான் கனடா வந்தபொழுது ஒரு தடவைகூட தங்களைச் சந்திக்கவில்லை. செல்வத்திடம் கேட்டபொழுது அவர் விடுதலைப் புலி ஆதரவாளர் என்றார். அது இப் புத்தகத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. –
‘அலை’ வெளிவந்த காலத்தில் தீண்டாமை பற்றிய போராட்டம் மிகத் தீவிரமடைந்திருந்தது. ஆது பற்றி வந்த கட்டுரைகளைவிட மார்க்சிய எதிர்ப்புக் கட்டுரைகளே அலையில் கூடுதலாகக் காணப்பட்டது. –
இதில் எனது கவிதை சார்ந்து ஒரே ஒரு கருத்துத்தான். அது நான் புலி ஆதரவாளன் என்பது எனது கவிதையில் அடிநாதமாக ஒலிக்கிறது என்பதே.
எனது கவிதைகளை அவ்வாறு குறுக்கிவிட முடியாது என்பதுதான் எனது பதில். தவிரவும் ஒவ்வெருவருக்குமான ஒரு அரசியல் நிலைப்பாட்டின் சாத்தியதிதை மறுக்கும் போக்கிலிருந்தே இது எழுகிறது. அதன் அரசியல் தன்மைகளுக்கு அப்பால் அவை கவிதைகளாக இருக்கின்றனவா என்பதே முக்கியமானது. எனது முன்னுரையில் இதனைக் கூறியுள்ளேன். ரதன் அவ்வாறான எதனையும் முன் வைக்கவில்லை.
கனடா வரும்போது அதன் மோசமான காலநிலையையும் மீறி கலை இலக்கிய ஆர்வலர்களை அவர்கள் எந்த மாற்றுக் கருத்துக் கொண்டவர்களாக இருந்தாலும் சந்தித்திருக்கிறேன். இதில் எந்த மனத்தடையும் எனக்கு இல்லை.
1975ன் கார்த்திகையில் ‘அலை’யின் முதலாவது இதழ் வெளிவந்தது. தீன்டாமைக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்த காலம் 1968, 69களிலாகும். 1968ஆடியில் மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டம் அரம்பமாகியது. இதனால் இதற்கு முன்னும் பின்னும் எதுவுமில்லை என்று அர்த்தமல்ல. இன்றைய போராட்ட காலத்திலும் நிலத்திற்கடியில் நீர்போல் ஓடிக்கொன்டுதான் இருக்கிறது. சமயத்ததில் அது மேலாலும் ஓடுகிறது. எனவே ரதனின் காலப் பிரக்ஞை என்பது முற்றிலும் தவறானது. அலை’யில் மார்க்சிய எதிர்ப்புக் கடீடுரைகள் வெளிவந்தால் அதை ஆதாரங்களுடன் முன்வைக்கவேன்டும். ‘அலை’யில்தான் றேமன்டீ வில்லியம்சின் ‘மார்க்சிய பண்பாட்டுக் கோட்பாட்டில் அடித்தளமும் மேற்கட்டுமானமும்’ ,மைக்கல் லோவியின் ‘மார்க்சியவாதிகளும் தேசிய இனப் பிரச்சனையும்’ கட்டுரைகள் மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்தன. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முற்பட்ட விடயங்களை இன்று பிழையாக அர்த்தப் படுத்துவது ரதன் தன்னை ஒரு மார்க்சியவாதி என நிறுவ காரணம் கண்டுபிடிக்கிறாரா? சரி அவர் மார்க்சியவாதியாக இருந்துவிட்டுப் போகட்டுமே அதற்காக பிழையான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதில்வையே. கூட்டம் முழுவதும் இவர் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கையில் அசல் ‘Eugene Ionesco’வின் ‘The Leader’ ஆகவே இருந்தார்.
திருமாவளவன் எனது கவிதை சார்ந்து சில கருத்துக்களையும் கவிதைக்கு அப்பாற்பட்டு எனது நியாயப்பாடு எனத் தான் கருதுவதையும் கேள்விக்கு உட்படுத்துகிறார். எனது சிறிய கவிதைகளைத் தவிர மீதிக் கவிதைகள் கவிதை அனுபவத்தைத் தரவில்லையெனக் கூறினார். அவ்வாறு கூறுவதற்கான அவருக்குள்ள உ¡¢மையில் நான் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் எனது கவிதைகளின் பாடுபொருளுக்கப்பால் எனது அரசியல் நிலைப்பாட்டைத் தானே வகுத்துக் கோண்டு பின் வரும் கேள்விகளை முன்வைக்கிறார்:
– முஸ்லிம்கள் துரத்தப்பட்டபோது, சகோதரப் படுகொலைகள் நடந்தபோது, நாங்களே அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றபோது, இன்றைய ஏகப் பிரதிநிதித்துவம் சர்வாதிகாரம் அப்போதெல்லாம் இந்தக் கவிஞனால் எப்படி மெளனம் சாதிக்க முடிந்தது?-
இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்திருந்தபோது அராலிக் கடலூடாகத் தப்பியோடிய எனது இரத்த உறவினர்கள் ஆண்கள்,பெண்கள் சிறுவர்,சிறுமியர் உட்பட பலர் இந்திய ஹெலியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனது குருநகர் ஊரைச் சேர்ந்த முப்பத்தியிரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடலில் வைத்துக் கொல்லப்பட்டனர். இலங்கை இராணுவத்தால் மணலாற்றிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப் பட்டபோதும்,அம்பாறை மாவடீடதிதின் தீபகவாவியிலிருந்து முஸ்லிம் மக்களால் தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்ட போதும், யாழ் நூல்நிலயம் எ¡¢க்கப்பட்டபோதும் பிந்துனவெவவில் புனர்வாழ்வு முகாமிலிருந்த சிறுவர்கள் கொல்லப்பட்டபோதும் (இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்) நான் இவைகள் பற்றிய கவிதைகள் எதனையும் எழுதிவிடவில்லை. கவிதைத் தொழிலாளர்களுக்குச் சாத்தியமாகலாம். கவிதை சில கணங்களில் பற்றிக்கொள்வதை இயல்பாகச்சொற்களில் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. சிலவேளை நினைத்த வற்றை இன்றுவரை எழுத முடியாமலுமிருக்கிறது. நிலவின் தேஜசை மொழிக்குள் கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன். எங்கள் ஊ¡¢ன் மீன்சந்தையின் உயிர்ப்பின் வேகத்தை எழுதும் முயற்சி கைகூடாமலே காலம் நீடிக்கிறது. எனவே எழுதியதற்கும் எழுதாமைக்கும் திட்டவட்டமான அரசியல் காரணங்களைக் கண்டுபிடித்தல் என்பது அபத்தமானது. எழுதியதால் ஆதரவு என்பதோ எழுதாததால் எதிர்ப்பு என்பதோ அல்ல.
கவிதைக்கு அப்பால் எழுதப்படாத விடயங்களை கேள்விக்கு உள்ளாக்கத்தான் வேண்டும் (விவாதத்தின்போது இக்கருத்தை மீண்டும் அழுத்தினார்) என்பதைத் திருமாவளவன் உண்மையாக நம்புவதாக இருந்தால் அவர் அதற்கு விசுவாசமுள்ளவராக இருக்க வேண்டும் எனவே பின்வரும் கேள்விகளை அவர்முன் வைப்பதற்கு¡¢ய வாசலை அவரே திறந்துவைத்துள்ளார்.
சிறுவர்கள் பற்றியும் அவர்கள் தவறாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் எனக் கவிதை எழுதிய தாங்கள் இலங்கைப் படையினரால் வடகிழக்கில் கொல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி ஏன் எழுதவில்லை? ‘பு¢ந்துனுவெவ’வுக்கு முன் எந்தச் சிறுவர்களும் கொல்லப்படவில்லையென நினைக்கிறீரா? யுத்தத்தில் அனாதைகளாக்கப்படீட சிறுவர்கள் உங்கள் கண்களுக்குத் தொ¢யவில்லையா? சமூகத் தளத்தில் யுத்தம் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றியும் முழுஇலங்கை அளவிலும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும்போதும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தீபகவாவியிலிருந்து முஸ்லிம்களாலும் மணலாற்றிலிருந்து இராணுவத்தாலும் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டபோது உங்களால் எப்படி மெளனம் காக்க முடிந்தது? இந்தப் பட்டியலை நீடித்துக்கொண்டே போகலாம். அதென்ன ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே அப்பிடியா?
திருமாவளவனால் கேட்கப்பட்ட கேள்விகள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை குறிவைத்து முன்வைக்கப்பட்டவைகள் என்பதை வெகு இலகுவாகக் கண்டுகொள்ளலாம். எல்லாவகை அநியாயங்களும் புத்திஜீவிகள், சாதாரண மக்கள் படுகொலைகள், இவற்றின் இரத்தக்கறை விடுதலையென்று பேசி வந்த எல்லா இயக்கங்களின் முகங்களிலும் கழுவ முடியாத அளவு ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி விட்டோம் என்று சொல்பவர்கள்கூட இன்றுவரை கொலைகளை விட்டுவிடவில்லை. இதுவொண்றும் அறியப்படாத இரசியமுமில்லை. நிலமை இவ்வாறு இருக்க ஒரு இயக்கத்தினரை மட்டும் அரசியல்வாதிகள்போல் சுட்டுவது அவற்றின் நியாப்பாடுகளுக்கு அப்பால் உள்நோக்கம் கொண்டிருப்பது ஒரு கலைஞருக்கு¡¢ய நியாயப்பாடு அல்ல.
அடுத்தது எனது ‘வெல்பவர் பக்கம்’ கவிதை பற்றி ‘வெல்பவர் பக்கம்’ கவிதையைப்போல் இவர் கடைசிவரையும் வெல்பவர் பக்கம் நின்று தனது உயிரைக் காப்பாற்ற முனைந்துள்ளார்’ எனக் கூறுகிறார். அக்கவிதை 1987ம் ஆண்டு எழுதப்படீடது. அக்காலத்தில் இந்திய இராணுவமும் அதனேடு சேர்ந்து இயங்கிய ஏனைய இயக்கங்களுமே வென்றவர்களாகும் இந்திய இராணுவ வெளியேற்றத்திற்குப் பிறகு விடுதலைப்புலிகள் வென்றவர்களாகும். ‘சூ¡¢யக்கதிர்’ இராணுவ நடவடிக்கை கு;குப்பிறகு விடுதலைப்புலிகள் காட்டுக்குள் முடக்கப்பட்ட பின்னர் தோ;தல்மூலம் தொ¢வானவர்கள் எனச் சொல்லப்படும் ஈ.பி.டி.பி யினர் வென்றவர்கள். ‘ஓயாதஅலை’ மூன்றுக்குப் பின்னர் மீண்டும் விடுதலைப் புலிகள் வென்றவர்களாவர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வென்றவராவார். இதுதான் களநிலமை இந்தக் காலங்களிலெல்லாம் நான் வென்றவர் பக்கம் நின்றுள்ளேன் என திருமாவளவன் கருதுகிறாரா? அப்படியானால் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்? எனது கவிதைகளை ஒரு கட்சி சார்ந்த கவிதைகளாகக் குறுக்கியிருப்பது இவா¢ன் கவிதை உணர்திறன் பற்றிய போதாமையையே காட்டுகிறது. ஆக நான் நிலவைச் சுட்டிக்காட்டும்போது என் விரலைப் பார்த்தவராகவே நிற்கிறார் திருமாவளவன்.
தேவகாந்தன் எதை உரைநடையில் சொல்ல முடியாதோ அதைத்தான் கவிதையில் சொல்லவேண்டும் எதை உரைநடையில் செல்லமுடியுமோ அதைக் கவிதையில் சொல்லவேண்டிய அவசியமில்லை என் கறாரான ஒரு பிரிப்பு முறையை முன்வைக்கிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை எதில் சொல்லவேண்டும் என்பது படைப்பாளியின் சுயம் சார்ந்தது. ஆயினும் தேவகாந்தனது பிரிப்பு முறைக்கு எதிராக உலக,தமிழக,ஈழத்து இலக்கிய படைப்புக்கள் தம்மை முன்நிறுத்தக் கூடியவைகள். டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ (THE WAST LAND ,அன்னா அக்மத்தோவாவின் ‘இரங்ற்பா’ (REQUIEM) அலெக்சான்டர் ப்ளொக்கின் ‘பன்னிருவர்’ (THE TWELVE),ஜெவ்ரு செங்கோவின் ‘சிமா ஜங்சன்’ (ZIMA JUNCTION) தமிழகத்தில் சி.மணியின் ‘நரகம்’ , தர்மு சிவராமுவின் E=MC2 ,சுந்தர ராமசாமியின் ‘பல்லக்கு தூக்கிகள்’, ‘உன் கை நகம்’, ஈழத்தில் மகாகவியின் நெடும் பாடல்கள், சன்முகம் சிவலிங்கத்தின் ‘ஆக்காண்டி’ ,’மண்ணில் முளைக்கும் ஒரு வால்நட்சத்திரம்’ எம்.ஏ.நு:.மானின் ‘அதிமானுடன்’ இன்னும் பலஸ்தின் கவிதைகளையெல்லாம் படித்த எங்களுக்கு என தேவகாந்தன் தன்னைப்பற்றிக் குறிப்பிடுவதனால் மொகமடீ தர்வீஸ், ரஜுடீ ஹீசைன், அந்தொய்னே ஜபானா போன்ற பெயர்களையும் முன்வைக்கிறேன்.
இப்பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போகக்கூடியது. ஆக சொல்லப்பட்ட விடயம் கவிதையாக மாறி கவிதை அனுபவத்தைத் தரவில்லையா என்பதுதான் அதன் சாராம்சம். ஆனால் மு.பொன்னம்பலத்தின் ‘பொறியில் அகப்பட்ட தேசம்’ பற்றி அது சொல்லப்பட்ட விதத்தில் அது கவிதையாகி இருக்கிறது எனக் கூறும்போது அவர் தன்னில்தானே முரன்பட்டு எதைச் சொல்ல வருகிறார் என்பதில் தெளிவற்றவராகவே தெரிகிறார்.
‘இக் கணத்தில் வாழ்ந்துவிடு’ கவிதையின் முதலிரு வரிகளையும் கடைசிச் சில வரிகளையும் சேர்த்தாலே கவிதையாக இருந்திருக்கும் எனக் கூறுகிறார். அவர் விருப்பப்படி பார்த்தால் அது இவ்வாறு அமையும்
‘யசோதரா
இக் கணத்தில் வாழ்ந்துவிடு
இவையெல்லாம்
இயல்பாய் நீங்கள் அளித்த
வாக்குமூலங்களாய்
முனை முறிந்த தராசில்
நிறுக்கப்பட்டு
தீர்மானித்த இலக்கு நோக்கி
நகர்த்தப்படுவீர்.’
இதில் ஏன் இக்கணத்தில் வாழவேண்டும் என்பதற்கான பதில் இல்லை. இவையெல்லாம் என்பதில் எவை எவையெல்லாம் இல்லாமல் போயிருக்கிறது? 1983ம் ஆண்டுக்காலப் பின்னணியில் தமிழர்கள் வாழ்வுநிலை எவ்வாறு நிச்சயமற்று இருந்தது. சட்டம், சிறை, நீதி ஆகியவைகளின் நம்ப கமற்ற தன்மை எதுவுமற்று மூளியாகி நிற்பதையா தேவகாந்தன் கவிதையாக இருக்கும் என்றார்? அவர் அவ்வாறு கருதினால் நாமென்ன சொல்ல முடியும் நமது ஒப்புக்கொள்ளாமையை முன்வைப்பதைத் தவிர.
இறுதியாகத் தேவகாந்தன் விரும்பியபடி(‘இந்தளவு விசயங்களும் மு.புஷ்பராஜனுக்கு தெரியவேண்டுமென விரும்புகிறேன் இந்த விமர்சனத்தை அவரிடமே சேர்க்க வேண்டுமென்பது எனது விருப்பம்’) D.V.D.மூலம் இவையெல்லாம் வந்து சேர்ந்துள்ளன. எனது கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தை அவர் கருத்து என்ற அளவில் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கவிதைபற்றி அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள எனக்கு எதுவுமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
mpushparajan@btopenworld.com