பதிவுகளில் அன்று: சத்திய யுகத்தை அகத்தில் இருத்திய கவிஞன், சு.வில்வரெத்தினம்!

- என்.கே.மகாலிங்கம் -– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜூலை 2008 இதழ் 103

[ சு.வில்வரெத்தினத்தின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை , 22 ஜூன் 2008, மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. .]

சு.வில்வரெத்தினம்என்.கே.மகாலிங்கம்சுப்புரெத்தினத்துக்கு, பாரதிதாசன் என்று தன் புனைபெயரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு, பாரதியாரை ஒரு கல்யாண விழாவில் தற்செயலாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. சுப்புரெத்தினம் ஏற்கெனவே பாரதியாரின் சுதேசிய கீதங்களைப் படித்து, அவற்றால் கவரப்பட்டிருக்கிறார். பாரதியாரை அவர் தெருக்களில் கண்டிருக்கிறார். அவரை ஓவியர் ரவிவர்மாவின் ‘பரமசிவம்’ என்று மட்டும் மனதில் பதிவும் செய்திருந்திருக்கிறார். அவரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் தான் அந்தத் தேசிய கீதங்களைப் பாடியவர் என்று சுப்புரெத்தினத்திற்குத் தெரியாது. அந்த விழாவில் சுப்புரெத்தினம், ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ’ என்ற பாடலைப் பாடுகின்றார். பாரதியாh,; ‘யார் இவர்? இவர் பாடல்களை உணர்ந்து பாடுகிறார்’ என்கிறார். அவரைத் தன் வீட்டுக்குக் கூட்டி வரச் சொல்லித் தன் நண்பருக்குக் கூறுகின்றார். சுப்புரெத்தினம் அங்கு போன போது பாரதியார் இன்னொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சந்திப்பு சுப்புரெத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது என்பது வரலாறு. இரண்டு கவிஞர்களுமே பாடல்களை வாய் திறந்து இசையுடன் பாடக் கூடியவர்கள் என்பது மேலதிகச் செய்தி.

பாரதியார் பாடுவார் என்பதை யதுகிரியம்மாள், வ.ரா. பத்மநாதன் போன்றோர் பதிவு செய்துள்ளனர்;. ஒருமுறை, தற்செயலாக பாரதியாரை வழியில் சந்தித்த வையாபுரிப்பிள்ளை கூட தன் அறைக்கு அவரைக் கூட்டிப் போய் பாட வைத்தார் என்பதும் இன்னொரு செய்தி.

கவிதைகளைப் பாடுவதும் இசையுடன் பாடும் வழக்கமும் இருந்திருக்கிறது. எம் சங்கப் பாடல்கள் பாடப் பட்டவையே என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் கூறுவார், அதன் ஏகார முடிவுகளை வைத்து. வாய் மொழிக் கவிதை இலக்கிய வரலாற்றுக் காலத்தில் அதை நம்புவதற்கு அதிக இடமும் இருக்கிறது.

பாரதியார், தனது பாடல்கள் பலவற்றுக்கு ராகம், தாளம் என்னென்ன என்றும், பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்றும், சிந்து, கும்மி, வகைப் பாடல்கள் என்றும், நந்தனார் வர்ண மெட்டு, ஆனந்தக் களிப்பு மெட்டுப் பாடல் போல பாட வேண்டும் என்றெல்லாம் எழுதியுள்ளார். அதேபோல சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் கூட இப்படியாகப் பாடப்பட்டுள்ளன. எம்மூர் சோமசுந்தரப் புலவர் கூட அப்படிப் பாடப்படக் கூடிய பாடல்களையே பாடி உள்ளார். ஓசை நயமுள்ள எதுகை, மோனைகளில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகளை இசை அமைத்துப் பாடுவது சாத்தியம். அதேபோல, தாலாட்டு, ஒப்பாரி போன்ற பாடல் வகைகளிலும் பாடப்பட்டுள்ளன. செய்யுளில் எழுதுவது மனனம் செய்ய இலகுவானது மட்டுமல்ல, பாடுவதற்கும் வசதியானதே. அதிக அளவில் ஏடுகளோ நூல்களோ இல்லாத காலத்தில் அதற்கு இடமிருக்கிறது. ஆனால் புதுக் கவிதைகளை அப்படிப் பாடுவதற்கு அதிக சாத்தியமில்லை. ஓசை நயக்குறைவு காரணமாக. மலையாளக் கவிதைகளை 1990 கள் வரை இசைப்பாடல் போலவே அவர்கள் பாடினார்கள் என்று மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட, தமிழில் எழுதும் ஜெயமோகன் சொல்கிறார். ஆகவே கவிதைகளை இசையுடன் பாட முடியுமா? பாடுவது சரியா என்ற வாதம் ஒன்றும் இருக்கிறது. பாடினால் பாடல் என்றும் வாசித்தால் கவிதை என்றும் முன்பு சொல்லப்பட்டது. அதில் உண்மையும் இருக்கிறது. கவிதையை வாசிப்பதால், மனதால் வாசிப்பதால், பல வகையான வாசிப்பு அனுபவங்களையும், கவிதை இன்பங்களையும், கற்பனைகளையும் மற்றவர்கள் காணாத காட்சிகளையும் காண முடியும். பாடுவதால் செவிப் புல இன்பம் கிடைக்கிறது. உடனடியாக, நேரடியாக. சிக்கல்களின்றி, கிடைக்கும் உணர்ச்சி அனுபவம் கிடைக்கிறது. கவிதை புரிகின்றது. ஆனால் கவிதையின் பல உள்ளடுக்குகளை உணருவதை, புரிவதை, அனுபவிப்பதை அது தடுக்கிறது என்று விமர்சிக்கவும் இடம் இருக்கிறது. இசையுடன் கூடிய பாடல் பலரைச் சென்றடைகின்றது என்ற ரீதியில், மனதில் அப்பாடலை திரும்பவும் திரும்பவும் ரீங்கரித்து அனுபவிக்க இடம் அளிக்கின்றது என்ற ரீதியில் அதன் பயனையும் ஏற்றுக் கொள்ளலாம்.


அதிகமாகக் கவிதைகளே எழுதிய சு.வில்வரெத்தினம் சில இசைப்பாடல்களையும் எழுதி இருக்கின்றார். அத்துடன் சிலவற்றை அவரே இசையமைத்துப் பாடியும் உள்ளார். அவரின் குரலில் சில பாடல்களை நான் கேட்டும் இருக்கிறேன். தன் பாடல்களை மட்டும் அல்ல, மஹாகவியின் ‘வெறுவான வெளிமீது மழை வந்து சீறும்’, மு.பொ.வின் ‘மார்கழிக் குமரி கார்முகச் செல்வி’, நீலாவணனின் ‘ஓ ஓ வண்டிக்காரா’ சண்முகம் சிவலிங்கத்தின் ‘ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்’ போன்ற பாடல்களையும் தன் இனிமையான குரலால் எங்களுக்காகப் பாடியுள்ளார். அப்படிக் கேட்டு ரசித்திருக்கிறோம் என்று மு.புஸ்பராஜன், ஜீவகாருண்யம், மு.பொ., கிருஷ்ணகுமார் போன்றவர்கள் எழுத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவரின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது.

அந்த இசைத் தட்டில் வரும் ஒரு பாடலின் சில வரிகள்;:

பூமியம்மா, பூமியம்மா, உன் புன்னகையை எங்கொழித்தாய்
நீ சிரிச்ச வயல்கள் எல்லாம் நீறு பூத்துக் கிடக்குதம்மா

பொன்னாய் விளைஞ்ச பூமி பொலியாய் பொலிஞ்ச நிலம்
போகம் தோறும் நிறைவாய் ஈன்றளிச்ச அன்னை வயல்
தரிசு பற்றிக் கிடக்குதம்மா எங்க வயறு போல காயுதம்மா
சூடுடிச்சு பொலிஞ்ச களம் சுடுகாடாய் போச்சுதம்மா
புத்தம் புதிசெடுத்தோம் புதுப்பானை பொங்கலிட்டோம்
எழுவான் கதிரவற்கு இலைபோட்டு மடை விரிச்சோம்
பழுதில்லா வாழ்வெமக்கு அந்தப் பச்சை வயல் அம்மை தந்தாள்
தொழுதடிமை செய்வோமோ தூயவளே கண்பாரும் அம்மா- பூமியம்மா பூமியம்மா

கவிஞர் சு.வில்வரெத்தினத்தின் இப்பாடலில் உள்ளோடி இருக்கும் துயரம் எங்கள் புலன்களையும் தாக்குகின்றது. எம்மை எம் ஊருக்கு மானசீகமாக எடுத்துச் செல்கின்றது. வாடிக் கிடக்கும் பயிரையும், தரிசாய்ப் போய் அழிந்து கிடக்கும் வயல்களையும், வெயில் சுட்டெரிக்கும் வெளிகளையும் காட்டுகின்றது. கடலம்மா, கடலம்மா என்ற நெய்தல் திணையின் துயரத்தை பெண்ணாக உருவகப்படுத்திப் பாடும் பாடலைப் போன்றே இப்பாடலும் வயலும் வயல் சார்ந்த மருதத் திணையின் -நில மக்களின் – துயரத்தைக் காட்சிப் படுத்திப் பாடுகின்றது. சிறந்த கவிஞன் நிலக் காட்சியைப் பெண்ணை விளித்துப் பாடுவதாகப் பாவனை செய்து கண் முன்னே நிறுத்தும் திறமை வாய்ந்தவன். சு.வி க்கு அது கைவந்திருக்கிறது. அப்பாடலைக் கேட்பவர்களின் அகத்தை விழிக்கச் செய்கின்றன அக் காட்சிகள். சுடுகாடு, தரிசு நிலம், நீறு ப+த்துக் கிடத்தல், புன்னகை ஒழிப்பு போன்ற சொற்கள் கனதியானவை. பாலை நிலத்தின் பண்புகள். பாலை நிலம் இரண்டு திணைகளுக்கிடையில் தரிசாகக் கிடப்பது தானே? ஆகவே, எமது மருத நிலமும் பாலையாகிக் கிடக்கின்றது என்று கவிஞர் சொல்கிறார்.

இன்னொரு பாடல்:

நீள நடக்கின்றேன் நீள நடக்கின்றேன்
கீற்று நிலா பொன் விளக்கேற்றிய பொழுதில் கிளர்வுற
எங்கள் தெருக்களின் மீதில் காதல் உலாவந்த காலமதில் -நீள நடக்கின்றேன்
தேரசைகின்றது போல இளந்தென்றல் நடக்கையிலே
இதயக் கூடல் நரம்புகளில் தேன்பிழி யாழின் மீட்டியதார்
தேறல் பருகி நின்றேன் அடடா தித்திப்பின் சுகம் என்ன சொல்வேன் -நீள நடக்கின்றேன்

மெல்லிது மெல்லிது காதல் இசைவுற மீட்டி விட்டால்
இன்பக் கூடல் கூடல் வெளியினிலே நிமிர்ந்த பனைகளின் கூந்தலிலே
காற்றின் விரல்கள் கூடும் கனவுகள் குருத்தீனும் -நீள நடக்கின்றேன்.

நிலாக் காலங்களில் கைகோர்த்து நடந்து காதல் செய்த அனுவம் எங்கே என்பதைக் கேட்கத் தோன்றுகின்றது இன்றுள்ள நிலை. அது வருமா?


வில்வன் என்று நாம் அன்புடன் அழைக்கும் வில்வரெத்தினத்தை அவர் மகா வித்தியாலய மாணவனாக இருந்தபோதே அறிவேன். ஆசிரியர் மு.தளையசிங்கத்தின் அன்புக்குரிய மாணவர். ஆசிரியரின் இலக்கிய, ஆத்மீக ஆளுமையால் கவரப்பட்டு அவரைத் தேடி அடிக்கடி அவரின் வீட்டுக்கு வருவார். ஆசிரியர், வில்வரெத்தினத்திற்கு ஆன்மீகக் குருவையும் வழியையும் காட்டினார். ஆசிரியரின் தம்பி கவிஞர் மு.பொன்னம்பலம் அவருக்கு கவிதை உலகையும் கவிதை எழுதும் வழியையும் காட்டினார்.

வில்வரெத்தினத்தை நான் சந்தித்தபோது, அவர் இனிமையாகப் பாடும் ஒருவராகவே அறிவேன். அவர் அப்பொழுது கவிதை எழுத ஆரம்பிக்கவில்லை. ஆசிரியர் தளையசிங்கத்தின் வீட்டில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் அவரே பிரர்த்தனைப் பாடல்களைப் பாடியவர். மற்றவர்கள் அவர் பாடியதைத் திருப்பிப் பாடியவர்கள்.

பாரதியாரின், ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி அம்மா’, ‘தேச முத்துமாரி’, ‘காளி ஸ்தோத்திரம்’ ‘ஓம் சக்தி சக்தி என்று சொல்லு’ என்ற ‘சிவசக்தி புகழ் பாடல்’ போன்ற பாடல்களை பிரார்த்தனைக் கூட்டத்தில் மிக அழகாக, உணர்ந்து, உணர்ச்சியுடன் பாடுவார். நாங்களும் பாடுவோம்.

பின்னர், ‘சர்வோதயம், சர்வோதயம் சகலதற்கும் சுயம் என்று கேட்கும் தத்துவம், சத்தியமே அச்சுயமாய் நிற்கும் தத்துவம்’ என்ற பாடலை சர்வோதய அரசியல் மேடைகளில் அழகாய்ப் பாடி கூட்டத்தை ஆரம்பித்து வைப்பார், சு.வி. தன் இளம் வயதில் ப+ரண சர்வோதய அரசியல் முன்னணியின் ஆஸ்தான பாடகர் அவரே. அரசியல் கூட்டங்கள் முடிந்து வீடுகளுக்குச் செல்லும்போது எங்கள் தாளத்துடன் அவர் பல சினிமாப் பாட்டுக்களைப் பாடுவார். அவரின் குரல் ஜேசுதாசின் குரல் போன்றது. அவர் பாட எங்கள் அனைவரின் களைப்பும் தீர்ந்து விடும்.


மு.தளையசிங்கம்மு.பொன்னமபலம்‘என்னோடு கூடவே இளைய பரம்பரையின் கலைஞனான சு.வில்வரெத்தினமும் இருந்தான்’ என்றார் மு.தளையசிங்கம் ‘கலைஞனின் தாகம்’ என்ற நூலில். மு.த.வுடன் தாழ்த்தப்பட்டவர்களை கிணறுகளில்; தண்ணீர் அள்ள விட வேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்தபோது, அவரும் ஆசிரியரும் பொலிசாரினால் நையப் புடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுக் கிணறுகளைச் சேறு எடுக்கும் சிரமதானங்களில் சர்வோதய முன்னணியில் முழு மூச்சாக மு.த. மு.பொ. மற்றும் இளைஞர்களுடன் ஈடுபட்டவர். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நடந்த காந்தி ஜனன நூற்றாண்டு விழாவில் பங்கு கொண்டு காந்தியின் கொள்கைகளுக்கான தன் ப+ரண அர்ப்பணத்தை பகிரங்கமாகத் தெரிவித்தவர்.

சு.வி யின் கவிதைகள், ‘ஆத்மார்த்த தளத்துக்குரியவை என்றே நினைக்கிறேன்’ என்கிறார் அகமும் முகமும் என்ற சு.வில்வரெத்தினத்தின் முதலாவது கவிதைத் தொகுதி முன்னுரையில் கவிஞர் மு.பொன்னம்பலம்.

‘வன்முறை மேலும் மேலும் வன்முறையையும் துயரத்தையுமே கொண்டு வரும் என்பதால் எங்களுடைய போராட்டம் வெறுப்பு இல்லாத அகிம்சைப் போராட்டமாகவே இருக்கும். எங்களுடைய போராட்டம் எங்களுடைய மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டு வரத்தானே ஒழிய மற்றவர்களுக்குத் துயரத்தை விளைவிக்கவல்ல’ என்றார் தன் நோபல் பரிசு ஏற்புரையில் தலாய் லாமா. அதையே தன் கோட்பாடாகவும் கொண்டவர் தான் நான் அறிந்த சு.வில்வரெத்தினம்.

விடுதலையைப் பாடியவன் சு.வி. மண், மொழி, தேசம் என்று எல்லா எல்லைகளையும் கடந்து சிட்டுக் குருவியைப் போல பறக்க விரும்பியவர் அவர். அவர் தளம் ஆத்மீகம், அவர் வழி சாத்வீகம். எந்தக் கலைஞனும் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் அடங்கி நடக்க மாட்டான். ஆத்மீக விடுதலை அனைத்து விடுதலையையும் அடக்கியது. வெறுப்புக்கும் வன்முறைக்கும் அங்கே இடமில்லை. விடுதலையை வேண்டிப் பாடாத எந்தக் கவிஞனும் உண்மையான கவிஞன் அல்ல. அறிவொழிந்த, உணர்ச்சிக்கு மட்டும் இடம் கொடுப்பவன் கவிஞனுக்குரிய உள்ளொளியையும் உள்ளுணர்வையும் இழந்து விடுவான். உள்ளொளியை நிறைவாகப் பெற்ற கவிஞன் மானிட அறத்திற்கு முரணாகப் பாட மாட்டான். மானிட அறமே அவனுடைய அடிப்படைத் தர்மம். அது சாதி, இனம், மொழி, தேசம், சமயம் என்ற பாகுபாடுகளைக் கடந்த சத்தியத்தையே அடிப்படையாகக் கொண்டது.

பாரதியைப் போல், அந்தச் சத்தியத்தையே தன் இலட்சியமாகக் கொண்ட ஒரு கவிஞனை சாதி, இனம், மொழி, தேசம் என்ற சிறைகளுக்குள் அடக்கிப் புரிந்து கொண்டால் அவன் வாழ்க்கை முழுவதும் தேடிக் கண்ட ஆத்மீகத் தளத்தை நிராகரிப்பதாகும். நான் வில்வரெத்தினத்தை அப்படித்தான் நினைவு கூற விரும்புகிறேன். அவனுடைய கவிதைகள், பாடல்கள் அத்தனையுமே சத்திய யுகத்தை அகத்தில் இருத்தியவனின் வெளிப்பாடுகளாகத் தான் இருக்கின்றன, இருக்கும் என்பதே என் எண்ணம்.

என்.கே.மகாலிங்கம்
mahalingam3@hotmail.com