தெப்பக் குளத்தின் தென்புறத்தில்,
திண்டில் அரச மரநிழலில்,
செப்பற் கடங்கா அருள்சுரக்கும்,
சிவனார் உமையாள் முதற்குமரர்,
தொப்பை வயிற்றார் : துதிக்கை யார்,
தூங்கா மல்தினம் கண்விழித்து,
குப்பைக் குணத்தார் செயல்கண்டு,
குமுறு கின்றார் குழம்புகின்றார் !
“ஆற்றங் கரையோ குளக்கரையோ,
அதிலோர் அரச மரநிழலோ,
ஏற்றம் பெறவே இனிதுநின் றால்,
என்னை ஏனதில் இருத்துகின்றார்?
வேற்று மதத்தார் கோவிலெல்லாம்,
விண்புகழ் சேர்க்கும் மேன்மைபெற,
நாற்றம் பிடித்த இடத்திலெல்லாம்,
நமையேன் வைத்து நசிக்கின்றார் ?
காலைப் பொழுதில் அபிஷேகம் : பின்,
கடமைக் கெனவொரு சிறுபூஜை !
மாலைப் பொழுதிலும் இதுதொடரும்,
மதிப்பாய் தினமும் இருவேளை !
வேலை என்று இதைத்தொடர்ந்து,
வெறுப்பை உளத்தில் ஏற்றுகின்றார் !
நாலு தலையார் நம்மாமர்,
நமக்கென ஏனிதை எழுதிவைத்தார் ?
இரவுப் பொழுது வந்துவிட்டால்,
இதயம் துடித்தே இடியிடிக்கும்!
பரவும் செறிவாய் ஒருகூட்டம்,
பார்க்கையிலே நிலம் இழிவடையும்!
தெருவும் ஓரமும் சாக்கடைபோல்,
தெரியும் திரியும் மாறிவிடும்!
இரவுப் பொழுது விலகுமட்டும்
இருப்பேன் : வீசும்துர் நாற்றத்திலே!
பொழுது விடிந்தால் அப்போதும்,
போவோர் வருவோர் மட்டுமன்றி,
தொழுவோர் கூடத் தம்மூக்கை,
துரிதாய் பொற்றித் துதிக்கின்றார் !
அழுகல் துணிகள் : அசிங்கங்கள்,
அனைத்தும் குளத்தில் கழுவுகின்றார் !
அழுதும் பயன்தா னேதெனக்கு ?
அந்நீ ரினில்தான் அபிஷேகம் !
இருகை கூப்பி வணங்கவரும்,
இந்துப் பக்தர் என்முன்னே,
ஒருகை விரலால் மூக்கடைத்து,
ஒருமன தின்றித் தொழும்செயலை,
சிரமத் துடனெதிர் கொள்கின் றேன் !
சிந்தை நொந்தே வெதும்புகின்றேன் !
பரமன் மகனார் எந்தனுக்கே,
பரிதவிப் பென்றால் பிறர்க்கெப்படி ?
அவ்வை சொல்லிய வெண்பாபோல்,
அரிசி பருப்பு பொரிகடலை,
ஒவ்வும் இனிமை உடன்சேர்த்து,
ஒன்றாய்ப் படைத்தால் சனங்கூடும் !
அவ்வா றெனக்குப் படைக்குமதை,
அன்புட னேநான் உண்டிருந்தால்,
எவ்வா றிருக்கும் எதிர்காலம் ?
எவர்பின் படைப்பார் பிரசாதம் ?
தெப்பக் குளத்தைக் கட்டியவன் தனை
தினந்தினம் நினைத்தே ஏங்குகின்றேன் !
எப்பேர்ப் பட்ட நிர்வாகம் : அன்று
எனக்கென இருந்தது குருயோகம் !
தெப்பத் திருநாள் தனில்மட்டும்,
திரள்வார் : அவர்தான் மெய்யடியார் !
குப்பைத் தனம்:தினம் குளிக்கும்இவர்,
குணத்தில் சிறிதும் மெய்யறியார் !
bairaabaarath@gmail.com