மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள் தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்காக அனைவரும் போரடிக்கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஆழ்துளக்கிணறுக்கருகில் இன்னுமொரு துளையிட்டுச் சென்று காப்பாற்றும் வகையில் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. குழந்தையை விரைவில் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்; வேண்டுதல் செய்வோம்.
இது போன்ற எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகையில் அவற்றை எதிர்கொள்வதற்கு இன்னும் இந்தியா போதிய தயார் நிலையிலில்லை என்பதையே இதுவரை இக்குழந்தையைக் காப்பதற்காக முன்னெடுக்கப்படும் மீட்புப்பணி நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன. எதிர்க்காலத்தில் இவ்விதமான சம்பவங்கள் எவையாயினும் ஏற்படுகையில் அவற்றை விரைவாக எதிர்கொண்டு மீட்புப்பணியாற்றுவதற்குத் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவையினையும் இவை வலியுறுத்துகின்றன.
இருளில் அகப்பட்டு ஒளியை நோக்கிப்போராடிக்கொண்டிருக்கும் இக்குழந்தையின் வாழ்வில் ஒளி வீசட்டும். மீட்புப்பணியினரின் முயற்சி பூரண வெற்றியினை அடையட்டும். இவையே அனைவர்தம் எண்ணங்களும், வேண்டுதல்களும்.
இதே சமயம் இரண்டு வயதுக்குழந்தை சர்ஜித் எவ்விதம் அக்குழாய்க்கிணறினுள் விழுந்தான் என்பதும் கேள்விக்குரியது. அக்குழந்தை அதனுள் விழுவதற்கான சூழல் ஏன் ஏற்பட்டது என்பதும் கேள்விக்குரியது. குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோரின் கவனத்தின் தேவையினையும் இது வேண்டி நிற்கின்றது. குழந்தைகளைக் கண்ணுங் கருத்துமாக அவர்கள் சுயமாகச் செயற்படும் வகையில் பாதுகாப்பது பெற்றோரின் கடமை; பெரியவர்களின் கடமை. இது பற்றிய புரிதல் முக்கியமானது என்பதையும் இச்சம்பவம் வேண்டி நிற்கின்றது.
ngiri2704@rogers.com