பண்டைத் தமிழரின் திருமணங்கள்!

-நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.

எண்வகை மணங்கள்
காதல் திருமணங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்து வந்துள்ளன. வயது வந்த ஆணும், பெண்ணும் தம்முள் நட்புக் கொண்டு ஒழுகிய காதலை ‘களவு’ என்று அழைத்தனர். களவொழுக்கம் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார். அதில், மறையோரால் வரையறை செய்யப்பட்ட எண் வகை மணங்கள்  பற்றிக்  கூறியுள்ளார்.

           “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
            அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
            காமக் கூட்டங் காணுங் காலை
            மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
            துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே.”– (பொருள். 89). 

மணம்  எட்டாவன:-  (1) அசுரம், (2)  இராக்கதம், (3)  பைசாசம், (4)  காந்திருவம்,  (5) பிரமம்,  (6) பிரசாபத்தியம், (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம்.

இவற்றுள் முதல் மூன்றான அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகியவை கைக்கிளையைச் சாரும் என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.

           “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.” – (பொருள். 102)

இன்னும், இவற்றுள் கடைசி நான்கான பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகியவை பெருந்திணையைச் சாரும் என்றும் கூறுகின்றது தொல்காப்பியம்.

           “பின்னர் நான்கும் பெரும்திணை பெறுமே.” –(பொருள். 103)

எண்வகை மணத்துள் எஞ்சிய ‘காந்திருவம்’ – குறிஞ்சி, முல்லை,, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணையும் முதலாகக் கொண்டு அவற்றோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புடன் பொருந்திய ஐவகை நிலத்தையும் பெறுதலின், அவை யாழோர் கூட்டம் ஐந்தெனப்படும். முதல் என்பது நிலமும் காலமும் ஆகும். ஐவகைக் கூட்டமாவது (1) களவு, (2) கற்பு, (3) உடன் போக்கு, (4) இற்கிழத்தி, (5) கமக் கிழத்தி ஃ காதற்பரத்தை என்பனவாம். இதற்குரிய சூத்திரத்தைத் தொல்காப்பியனார்   அமைத்த பாங்கினையும் காண்க.

           “முதலாகு புணர்ந்த யாழோர் மேன
            தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.”  — (பொருள். 104)

இனி, தொல்காப்பியர் காலத்துக்குமுன் எழுந்த எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும்  வகுக்கப்பட்ட சிறப்பினையும் ஒரு நிரல் படுத்திக் காண்போம்.

 எண்வகை மணங்கள்: (தொல். பொருள். 89)

1. அசுரம் ………… . }……காளையை அடக்கித் திருமணம் புரிதல்.
2. இராக்கதம்      }   கைக்கிளையைச் சாரும்.  (தொல். பொருள் 102)   
3. பைசாசம்       }

4. காந்தருவம்  ………. சடங்கு முறை ஏதுமின்றி இருவரும் ஒத்து மணம்
                        புரிதல். ஐந்திணைக்குரியது. (தொல் பொருள். 89)

5. பிரமம்          }  
6. பிரசாபத்தியம்;   }  பெருந்திணையைச் சாரும்.  (தொல். பொருள். 103)
7. ஆரிடம் ……… }…   முனிவர்கள் தொடர்பானது., ஆகமம்.
8. தெய்வம்       }

மேற்காட்டிய என்வகை மணங்களையும் மகாபாரதத்திலும், மனுநீதி நூலிலும் பேசப்பட்டுள்ளதையும் இங்கு நோக்கற்பாலது.

கரணம்
ஆணும் பெண்ணும் கூடி வாழ்வாங்கு வாழ்வதற்கு, முதல் நிலையாய் இருந்த நிகழ்ச்சியைத் தமிழர் திருமணம் என்று அழைத்தனர். கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வாகும். இதைத் தொல்காப்பியனார்:-

                                  “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னா,;
                ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” – (பொருள். 143)

என்று சூத்திரம் அமைத்தனர். தலைவன் தலைவியரிடையே பொய்யும,; வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்கு முறைகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர். ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்று இருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் தெளிவாகின்றது. இற்றைவரை இக் கரணம் நம் மத்தியில் நிலவி வருவது ஒரு சிறப்பாகும்.

தலைவி பெற்றோரை விட்டுத் தலைவனுடன் ஒன்று சேர்ந்து தனிவழி போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் தமர் (பெற்றோரும், உற்றோரும்) இல்லாதவிடத்தும், சடங்குமுறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் உண்டாம்.

                             “கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
             புணர்ந்துடன் போகிய காலை யான.’ –  (பொருள். 141)

என்பது தொல்காப்பியச் சூத்திரம்.

வதுவை மணம்
கடைச்  சங்ககாலத்தில்  எழுந்த  எட்டுத்தொகை  நூல்களில் ஒன்றான அகநானூற்றில்; 86ஆம் பாடலில் தமிழரின் பண்டைய திருமணமரபு பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. பெண் வீட்டார் பந்தலிட்டு, தரையில் வெண்மணல் பரப்பி, மனை விளக்கேற்றி, எங்கும்  பூமாலை தொடுத்து,  சுபவேளை வந்ததும்,  மகனைப் பெற்ற, தேமல் படர்ந்த  வயிற்றினையுடைய,  புத்தாடையணிந்த மகளிர் நால்வர் கூடி நின்று ‘கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!’ எனக் கூறி வாழ்த்தி, பூக்களையும், நெல்லையும் நீருடன் கலந்து அவள் தலையில் தூவி, அவள் கரிய கூந்தலில் அவை தங்கி நிற்ப, அவளை மங்கல நீராட்டி வதுவை மணமும்  நிகழ்ந்து முடிந்தது.  அதன் பின்னர், தலைவியின் தமர்  விரைந்து வந்து ‘பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்’ என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு தனி அறையில் முதல் இரவும் வந்தது. இது கடைச் சங்ககால முறை.

             “ …  புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
               வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
               ‘கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
               பெற்றோற் பெட்கும்  பிணையை ஆக’ – என
               நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி

               பல்இருங் கதுப்பின்  நெல்லொடு தயங்க
               வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
               கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து,
               ‘பேர்இற் கிழத்தி ஆக’ எனத் தமர்தர:
               ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல் …  – (அகம் 86)

மேலும் அகநானூற்றில் 136ஆம் பாடலிலும் பண்டைத் தமிழரின் திருமண முறைகள் பற்றிப் பேசப்பட்டுள்ள காட்சிகளையும் காண்போம். நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்தோர்க்குக் கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப்பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, மங்கல மகளிர் தலைவியை நீராட்டியபின், வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணூலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்றுகூடி, மழைச் சத்தம் போன்ற மணவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த  சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) ‘நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண்…’  என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது.

            “மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
             வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் ….
             சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
            
             கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்
             படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
             வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
             பூக்கணும் இமையார் நோக்குபு மறைய.
             மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை

             பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத் .…
                             தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
             தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

             மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
             இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
             தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்…….”  —  (அகம். 136)

இராக்கதம்

(i) மகாபாரதம்.
காசி நாட்டு வேந்தன் தன் கன்னியர் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவருக்கும் சுயம்வரம் செய்வதை அறிவித்தான். சுயம்வர மண்டபத்தில் காசி நாட்டு வேந்தனும், அவனது மூன்று இளவரசிகளும், பல நாட்டு மன்னர்களும் கூடியிருந்தனர். இதை அறிந்த பீஷ்மர் அங்கு சென்றிருந்தார். அங்கு பீஷ்மரை அறிமுகம் செய்யும் பொழுது, அவரின் முதிர் வயதையும், பிரமச்சாரி விரதத்தையும் அறிந்த கன்னியர் விலகிச் சென்றனர். மேலும் கூடியிருந்த மன்னர்களும் பரிகாசம் செய்து அவரை அவமதித்தனர். இதனால் பீஷ்மர் கடுஞ்சினம் கொண்டு ‘சுயம்வரம்’ என்ற முறையிலிருந்து தாவிச்சென்று ‘இராக்கதம்’ என்ற முறையில் நின்று: “அரசர்களே!  மணங்களில் எட்டு வகை உண்டு. அந்த எட்டு வகையில் பெண்ணைப் பலாத்காரமாகக் கவர்ந்து சென்று திருமணம் செய்யும் ‘இராக்கதம்’ என்பதே சிறந்தது எனத் தர்ம சாத்திரம் கூறுகின்றது. அந்த இரண்டாவது வகையைப் பின்பற்றி இம் மூன்று மகளிரையும் பலவந்தமாக நான் அழைத்துச் செல்லப்போகிறேன். அரசர்களே! உங்களுக்கு ஆற்றல் இருக்குமானால் இதனைத் தடுத்து நிறுத்துங்கள், பார்க்கலாம்.” என்று அதிகாரத் தொனியில் கூறிவிட்டு, தன்னை எதிர்த்த அரசர்களை வென்று, அம் மகளிர் மூவரையும் அழைத்துச் சென்றார். இது வீரச் செயல் திருமணமாகும்.

பீஷ்மர் வயது முதிர்ந்தவர். அவர் ஒரு பிரமச்சாரியுமாவார். இக் கன்னியர் மூவரையும் தான் திருமயம் புரியக் கொண்டு செல்லவில்லை. தனது சகோதரனான விசித்திரவீரியனுக்கு இம் மூவரையும் திருமணம் செய்து வைக்க விரும்பியே இவர்களைக் கவர்ந்து சென்றார். இவர்களில் அம்பை என்பவள் சௌபல நாட்டு மன்னன் சால்வனை விரும்பியிருந்த காரணத்தால் அவளை அங்கு சென்று அவனைத் திருமணம் செய்ய அனுப்பி விட்டார். மற்ற இருவரான அம்பிகை, அம்பாலிகை என்பவர்களை விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்வித்து வைத்தார்.

(ii) கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணியைக் கவிச் சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடியுள்ளார். இதில் பாட்டுடைத் தலைவன் முதற்குலோத்துங்க சோழமன்னன் (கி.பி.1070 – 1120) ஆவான். இவனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் காரணமாம்.

பரணியில் குலோத்துங்க மன்னன் போர்க்களம் இறங்கினான். பகையரசர் படைகள் அஞ்சிப் பின்வாங்கி ஓடின. இப்படித் தோற்றோடிய பகையரசர்களின் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் கடிமணம் (கண்டதும் காதல்) புரிந்து கொண்டான். இதைக் கண்ணுற்ற தோற்றோடிய அரசர்கள் தங்களுடைய குதிரைகள், ஆண் யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்க மன்னனுக்குச் சீதனப் பொருட்களாகக் கொடுத்தனர். இது எண்வகை மணங்களில் ஒன்றான ‘இராக்கதம்’ என்பதைச் சார்ந்தது.

              “சரி களம்தொறும் தங்கள் சயமகள்
               தன்னை மன் அயன் கைப் பிடித்தலும்
               பரிகளும் களிறும் தன ராசியும்
               பாரிபோகம் கொடுத்தனர், பார்த்திபா.”  — (256)
                
                       (பாரிபோகம் — சீதனப் பொருள்)

சிலப்பதிகாரம்.
இனி, இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணம் பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் காண்போம். யானைமீது மகளிரை அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவித்து, திருமண மண்டபத்தில் முரசு முழங்கி, மத்தளம் கொட்டி, சங்குகள் மங்கல ஓசை எழுப்பி, நல்ல வேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த காட்சியை இளங்கோவடிகள் மூலம் காண்கின்றோம். இங்குதான் பார்ப்பான் திருமண வைபவத்தில் முதன்முதலாகப் புகுந்த முறை கண்டீர்.

           “இருபெரும் குரவரும், ஒருபெரு நாளால்,
            மணஅணி காண, மகிழ்ந்தனர்;  மகிழ்ந்துழி,
            யானை எருத்தத்து, அணியிழையார், மேல் இரீஇ,
            மாநகர்க்கு ஈந்தார் மணம். ……..  (1 : 41–44)
           
            நீலவிதானத்து, நித்திலப்பூம் பந்தர்க் கீழ்,
            வானூர் மதியம் சகடு அணைய, வானத்துச்
            சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்,
            மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
            தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!” – (1 : 49-53)

சிலம்புகழி நோன்பு
தமிழர்கள் மணமாகாத தம் பெண்களுக்குக் காலில் சிலம்பை அணிவித்து, ‘அவர்கள் மணம் ஆகாதவர்கள்;  அவர்கள் திருமணத்தை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்’ என்பதை  அறிவித்து, அவர்கள் மணம் புரிந்து கொள்ளும் பொழுது அச் சிலம்பினைக் கழற்றி ஒரு சடங்கு முறையும் செய்து விடுவர். ‘சிலம்பு காலில் இல்லாதவிடத்து, அவர்கள் மணம் புரிந்த மகளிராயினர், இனி வேறு ஆடவர் அவர்களை மண விருப்புடன் பார்க்கலாகாது’ என்ற மன நோக்குடன் வாழ்ந்து வந்தனர். மணநாளுக்கு முன்னாள் நிகழும் இச் சடங்கு முறையை ‘சிலம்புகழி நோன்பு’ என்று கூறுவர்.

ஐங்குநுறூறு
சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான ‘ஐங்குறுநூறு’ என்ற நூலில் சிலம்புகழி நோன்பு பற்றிப் பேசப்படுகிறது. இது ஒரு பண்டைய மரபு. மணமகளின் காலில் அவள் பெற்றோர்கள் அணிவித்திருந்த சிலம்பை, மணம் புரிவதற்கு முன்னர் நீக்குவதற்குச் செய்யும் ஒரு சடங்காகும். தலைவன் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கொண்டு போனான். அப்போது அவன் தாய் அவளுக்குச் சிலம்பை விலக்கி உரிய சடங்கைச் செய்தாள் என்பதை நற்றாய் கேட்டு அங்கிருந்து வந்தவர்க்கு எடுத்து உரைத்தது.

             “நும்மனைச் சிலம்பு கழீஇய அயரினும்
              எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
              சொல்லின் எவனோ மற்றே – வென்வேல்
              மையற விளங்கிய கழலடிப்,
              பொய்வல் காளையை ஈன்றதாய்க்கே?” – (399)

பண்டைக் காலத்தில் திருமணம் இரு பகுதி கொண்டது. முதற்பகுதி சிலம்பு கழித்தல் என்னும் சடங்காகும். இரண்டாம் பகுதி திருமணம் நிகழ்தலாகும். சிலம்பு கழிக்கும் செயல் மகளைப் பெற்ற நற்றாய் தன் மனையில் நடைபெற வேண்டுமென்று விரும்புவள். உடன் போக்கில் தலைவன் வீட்டில் சிலம்புகழிப்பது நிகழ்ந்தது. அதனால் நற்றாய் வருந்தினள். சிலம்பு கழிநிகழ்வு மணமகன் வீட்டில் நிகழ்ந்ததால் தன் இல்லத்தில் வதுவைமணமாவது நிகழ வேண்டுமென்று நற்றாய் விரும்பினாள். அதனால் ‘நும் மனையில் சிலம்பு கழித் திருமணம் ஆற்றுவையாயினும், எம் மனையில் நண் மணத்தைச் செய்வாயாக!’ என்றாள் மகளைப் பெற்ற தாய்.

மகளிர்க்கு மணமாகாமுன் பெற்றோர் அணிவித்த சிலம்பை ‘கன்னிமைச் சிலம்பு’ என்றும், திருமணம் நிகழும்போது கணவன் அணியும் சிலம்பை ‘கற்புச் சிலம்பு’ என்றும், கணவன் தரும் சிலம்பை அணியும் திருமணம் ‘சிலம்பு கழீ இய மணம்’ என்றும் கூறப்படும்.

நற்றிணை
சிலம்புகழி நோன்பு பற்றி எட்டுத் தொகையில் ஒன்றான நற்றிணையிலும் பேசப்படுகின்றது. கொடும் பாலை வழியில் தலைவனோடு தலைவி உடன்போக்கிற் சென்று விட்டனள். அவள் செயல் அறனொடு பட்டதென்று கருதினாலும், அவளைத் திடுமெனப் பிரிந்ததனால் தாயின் மனம் பெரிதும் வேதனைப் பட்டது. தலைவனை அவள் மணக்கும் காலத்தில் கழிக்க வேண்டிய சிலம்புகழி விழாவின் சிறப்பினை யானும் கண்டு மகிழாது, பிறர் கண்டு மகிழுமாறு அவன் பின்னால் போயினாள் அவள்!. அழகிய கலனணிந்த என் மகளின் அடிகள் அப்பாலை நிலத்திடையே சென்று இதுவரை எவ்வாறு வருந்துகின்றனவோ! என்று பெருந்துயர் கொண்டாள்.

          “…… சிலம்பு கழீஇய செல்வம்
           பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே!” – (279)

ஆற்றல் புரிந்து மணம்
அருச்சுனன் வில்லை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்துச் சுழலும் மீன் வடிவ இலக்கை வீழ்த்தி, திரௌபதையை மணந்து கொண்டான். இதே வண்ணம், இராமரும் சிவதனு வில்லை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, அம்பு தொடுத்துச் சீதையை மணம் புரிந்து கொண்டான்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணும் பெண்ணும் ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பை எதிர்பார்த்தனர். அதையடுத்து ஆண், பெண்ணிடம் அழகு வேண்டும் என்று விரும்பினான். பெண், ஆணிடம் ஆற்றல் வேண்டுமென்று விரும்பினாள். ஆற்றல் காலத்துக்குக் காலம் மாறி வருகின்றது. அன்று உடல் வலிமையை குறித்தது. வில் முறித்தும், ஏறு தழுவியும் திருமணம் செய்தனர். பின், ஆற்றல் அறிவைக் குறித்தது. சோழன் மகள் அமராபதி, புலவர் கம்பனின் மகனாகிய அம்பிகாபதியை விரும்பி வாழ்வை முடித்ததும் இதற்குச் சான்றாகும்.

பனை ஓலைத் தாலி
பழங்காலத்தில் திருமண நாளில் ஊரின் பெரியவர் முன்னிலையில், அவர் ஒரு பனை ஓலையில் மணமக்கள் இருவரின் பெயரையும் எழுதி வாழ்த்தி, அந்தப் பனை ஓலையைக் கயிற்றில் முடிந்து அதுவே திருமணம் ஆனதற்கு ஆதாரமாகவும், எழுத்தாணியால் எழுதப்பட்ட அந்த வாழ்த்தோலையே, அம்மணமக்களின் திருமணத்துக்குச் சாட்சியாகவும் விளங்க திருமணங்கள் நடைபெற்று வந்தன. பனை ஓலைக்குத் ‘தாலபத்திரம்’ என்று பெயர். எனவேதான் மங்கல நாணுக்குத் ‘தாலி’ என்ற பெயர் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல பனை ஓலைக்குப் பதிலாக மஞ்சள் அல்லது பொன்னால் செய்த அணியும் வழக்கில் ஏற்பட்டது.

புலிப் பல் தாலி
பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சி நிலத்து இளைஞர்கள் சீறிப் பாயும் புலியுடன் பொருதி அதனைக் கொன்று, தமது வீரச் செயலை நிரூபித்துத்; தாம் விரும்பிக் காதலித்த பெண்ணை மணந்து கொண்டனர். புலியைக் கொன்ற இளைஞர், தமது வீரத்திற்கு அடையாளமாகத் தாம் கொன்ற புலியின் பற்களை மங்கல நாணிற் கோர்த்து மணமகளின் கழுத்தில் அணிவர். இவ்வழக்கமே நாளடைவில் தாலி அணியும் வழக்கமாக வளர்ந்து ‘தாலி பெண்ணுக்கு வேலி’ என்ற தாரக மந்திரமாக அமைந்தது போலும்.

இதுகாறும் சங்ககாலத்தில் அமைந்த எண்வகைத் திருமணங்களையும், சடங்கு முறைகளையும் பல கோணங்களில் நின்று பார்த்துப் படித்து மகிழ்ந்தோம்.

இற்றைய திருமண முறைகள்

உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.

இனி, இற்றைய நிலையில் நம் மத்தியில் நிலவும் ஒரு சில திருமண முறைகளை நிரல் படுத்திக் காண்போம்.

1. காதல் வயப்பட்டு அன்பினாற் கூடிய திருமணம்.
2. சடங்கொடு கூடிய திருமணம்.
3. மங்கள நீராட்டிய வதுவை மணம்.
4. கண்டதும் காதல் கொண்ட கடிமணம்.
5. சடங்கு முறையற்ற இரு மனம் ஒத்த திருமணம்.
6. பன்மனை மணம.; (ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர்)
7. பல கணவருடைமை (ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்மார்)
8. சம்மதத்துடன் பெண்ணைக் கடத்தி மணம் புரிதல்.
9. வன்முறை மணம்.
10. ஓரினப்பால். திருமணம்.
11. பதிவுத் திருமணம்.
12. வலுக் கட்டாயத் திருமணம்.
13. பேசிப் பொருத்தும் திருமணம்.
14. பணத்தைக் காட்டி மயக்கிய திருமணம்.
15. கன்னி காளையுடன் ஓடிச் சென்ற திருமணம்.

திருமணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் மிக வேண்டப்படுவது. அதனால் ஏற்படும் நன்மைகள் பலப்பல. திருமணக் கோட்பாடுகளுக்கமைய ஆணும் பெண்ணும் வாழ்க்கையை நடத்தினால் குடும்பச் சிறப்பு மேல்நிலையெய்தி இன்ப வாழ்வமையும் என்பது திடம். இன்று திருமணத்தின்பின் ஒற்றுமையின்மை, சச்சரவுகள், சண்டைகள், தனி வழி நடத்தல், பிரிவுகள், மணமுறிவு, பிள்ளைகள் தவிப்பு, குடும்பச் சீர்கேடு, பொருளாதாரக் குறைவு ஆகியன நம் கண்கூடு. இவை எதனால் என்பது ஒரு கேள்வி?

‘ஒருத்திக்கு ஒருவன்: ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது தமிழர் மத்தியில் ஒரு தாரக மந்திரம். திருமணத்தின் பின் ஒருத்தியுடனும், ஒருவனுடனும் வாழ்க்கையை நடாத்துவதுதான் மிகச் சிறந்த அறமாகவும், நல்நெறியாகவும் உலக ஆன்றோர் கணித்துள்ளனர். இதுதான் சமுதாயத்திற்கும், தனி மனித நேயத்துக்கும் உகந்ததுமாகும். இதை மீறியபடியால் நம் மத்தியில் புரையோடி நிற்கும் எத்தனையோ இன்னல்களை நாம் இன்று கண்டும், காணாமலும் தவித்த வண்ணம் உள்ளோம்.

பண்டைத் தமிழர் வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள். அவர்கள் கணவனுக்காகவும், மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், பெற்றோருக்காகவும், உற்றார் உறவினருக்காகவும், சமூகத்துக்காகவும், நாட்டுக்காகவும், அரசுக்காகவும் பிரச்சினைகளை உருவாக்காது விட்டுக் கொடுத்து செம்மையான வாழ்வை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு மணமுறிவு தானும் எழுந்ததாகச் சங்க நூல்களில் செய்தி இல்லை.

பண்டைத் தமிழர்  மேற்காட்டிய பல திருமணங்களையும், பல சடங்கு முறைகளையும் ஏற்படுத்தி அவற்றோடிணைந்த வாழ்க்கையை அமைத்;துச் சீரும், சிறப்புடன் வாழ்ந்து காட்டி, அவர்தம் எச்சங்களை நம்மவர்க்கும் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எச்சங்கள்; எம்மவரை  ஆற்றுப்படுத்தி அமையட்டுமென்று வாழ்த்துவோமாக!.

wijey@talktalk.net