“சென்றிடுவீர் எட்டு திக்கும்
கல்விச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் “
என்பதற்கேற்ப இன்றைய நாளில் நம் நாட்டு மக்கள் பல நாடுகளுக்கும் தங்கள் கல்வி அறிவைக் கொண்டு செல்கிறார்கள்.பல நாடுகளுக்குப் படிக்கவும் செல்கிறார்கள்.சிலர் குடியுரிமை பெற்று அங்கேகே தங்கிவிடுகிறார்கள். சிலர் திரும்பி வருகிறார்கள். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்வதும் வருவதும் இன்றைய நாளில் சுலபமாகி விட்டது.அதனால் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் நம் நாட்டுக் கலாச்சாரங்களுக்குள் நுழைந்து பல நவீனத் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பது கண்கூடு. வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் பல மாற்றங்களை அடைந்திருந்தாலும் பண்பாடு என்ற ஒன்றால் நம்முடைய அடையாளங்கள் நமதாகக் காக்கப் படுகின்றன.அதனைச் சொல்வதில் நாவல்கள் முக்கிய இடம்பெறுகின்றன.
மனிதனின் அறிவு வளர வளர சிந்தனைகளும் தேடல்களும் அதிகமாகி அவனுடைய மனத்தை விரியச் செய்கின்றன. குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிராமல் அடுத்தடுத்துச் சென்று பல்வேறு பரிமாணங்களை அடைந்து முழுமனிதனாக வேண்டும் என்பது நம் மண்னின் மகிமையாக சுடர்விடுகிறது. எங்கு சென்றாலும் நம் மண்ணின் வேர் அங்கும் பிடித்து நின்று நம்மை வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதற்கு வாஸந்தியின் நாவல்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.
பத்திரிக்கையாசிரியரும் எழுத்தாளருமான வாஸந்தி பல ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் அதனால் கிடைத்த அனுபவங்களைத் தமது நாவல்களில் பகிர்ந்துள்ளார்.வெளிநாட்டுக் கலாச்சாரங்களைச் சொல்வதில் தனக்கென்று தனியிடத்தைப் பெற்றுள்ளார். பல நாவல்கள் அதற்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் ‘சந்தியா’; ‘காதல் என்னும் வானவில்’ ஆகியவற்றை சிறந்த எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.
அன்னியக்கலாச்சாரங்களைப் பற்றிய மதிப்பீடுகள் நம் கலாச்சாரத்திற்கு மாறுபட்டவை என்றாலும் அவற்றிலும் யதார்த்தமான ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்வியல் நடைமுறைகளும் உள்ளன. இந்தியாவைத் தவிர உலகநாடுகள் அனைத்திலும் கலாச்சாரங்களில் ஒருவித ஒற்றுமையைப் பார்க்கமுடிகிறது. ஒரு இந்திய பிரஜை வெளிநாடுகளில் வாழும் சூழலைப் பெற்றாலும் முடிந்தவரை இந்தியனாக வாழ்ந்து காட்டுகிறான். நம் மண்ணின் கலாச்சாரத்தை விட்டு விலகுவதில்லை. ஆனால் அங்கு இருக்கும்வரை அவர்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்படுவது உண்மை.ஆயினும் அவர்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மேலைநாட்டுக் கலாச்சாரங்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றன. நாம் இப்பொழுதுதான் வெளியுலகைப் நினைக்கத் தொடங்கியிருக்கிறோம். அவர்களோடு ஒப்பிடுகையில் நாம் குழந்தைகளாக உள்ளோம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
பதினெட்டு வயது வரையில் குழந்தைகளைத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கும் பெற்றோர் பின்னர் அவர்கள் விருப்பம்போல் வாழவிடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் தலையிடுவதில்லை. திருமணம் போன்ற சடங்குகளில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.பிடித்தமானவர்களுடன் வாழ்கிறார்கள்.பிடிக்காதபோது விலகிக்கொள்கிறார்கள். தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைப் பற்றிக் கவலைகொள்வதில்லை.இத்தகைய சிந்தனைகளை வாஸந்தியின் நாவல்கள் வெளிபடுத்துவதில் சிறப்பிடம் பெறுகின்றன.
“நமது நாட்டில் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்றனர். ஆனால் மேலை நாடுகளில் ஐந்தாண்டுவரை ஒரு திருமணம் நீடிப்பது அரிதாகவே உள்ளது. திருமணமே செய்துகொள்ளாதவர்க்கு தனி குடியிருப்புகளே ஜெர்மனியில் உள்ளன. இங்கு நமது நாட்டில் திருமணம் செய்யாதவர்களுக்கு வாடகை வீடு கிடைப்பது அரிது. ஆறுமாதம் ஒரு வருடம் என குடும்பம் நடத்துபவர்களும் உண்டு.இது காஸ்மா பாலிட்டன் நகரங்களில் நடைபெறுகிறது.” (மார்க்சிய சிந்தனை: எல்.ஜி. கீதானந்தன்:ப:102)
என்பதுபோல அவரது நாவல்களில் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள் விளங்குவதைக் காணலாம்.’ காதலெனும் வானவில்லில்’ மீரா அமெரிக்காவில் பிறந்துவளர்ந்த தமிழ்ப் பெண்.அவள் பெற்றோர் திடீரென்று இந்தியாவிற்கு-தமிழகத்தில் சென்னைக்கு அழைத்துவந்து அவளையும் அவள் தம்பி மகேஷையும் அங்குள்ள பள்ளியில் சேர்த்தனர். எதையும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் பேசிப் பழகும்படி வளர்த்திருந்தனர். அமெரிக்கப்பிரஜைகளாக வளர்ந்திருந்த அவர்களால் இந்திய கலாச்சாரத்துக்குள் இருக்கப் பிடிக்கவில்லை. ஏன் இங்கு அழைத்துவந்தீங்க என்று கேள்வி கேட்டுத் துளைத்தனர்.தாய்-தந்தையர் இந்தியா நமது நாடு இங்குதான் இருக்கவேண்டும் என்று சொல்லி சமாதானப்படுத்தியிருந்தனர். அமெரிக்கர்களைப்போல உயரமாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருந்த மீரா இந்தியப் பெண்களைவிட அறிவில் முதிர்ச்சிபெற்றவளாக விளங்கினாள். சென்னைக்குக் குடிவந்ததும் கும்பகோணத் திலிருந்து அவள் தாத்தா பாட்டி அத்தை ஆகியோர் வந்திருந்தனர். பாட்டி கதை சொல்வதையும் பாட்டியும் தாத்தாவும் எப்பவும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இருப்பதையும் பார்க்க அவளுக்கு மகிழ்ச்சி ஏற்படிகிறது.அமெரிக்காவில் இப்படியெல்லாம் வயதானவர்களைச் சேர்த்துப் பார்க்க முடியாது. அறுபது ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதிகளை இங்குதான் பார்க்கமுடியும்.இதனை வாஸந்தி
“அமெரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவுக்கு வந்த புதிதில் மீராவுக்கு ஏற்பட்ட ஆச்சரியங்களில் முக்கியமான ஆச்சரியம் இந்த ஜோடி நியூயார்க்கில் அவர்கள் வீட்டுக்கு அருகில் பூங்கா இருக்கும். அதைக் கடந்து தினம் பள்ளிக்குச் செல்லும்போது அங்கங்கே இருக்கும் பெஞ்சுகளில் வயதானவர்கள் தனித்தனியாக அமர்ந்து சூனியத்தை வெறித்தபடி வெயில் காய்ந்து கொண்டிருப்பார்கள். உலர்ந்த சருகுகள் போல் ஒளியே இல்லாத அந்த முகங்களைப் பார்க்க மீராவுக்குப பயமாக இருக்கும்.அடிவயிற்றில் சொல்லத்தெரியாத சங்கடம் ஏற்படும். இந்தியாவுக்குத் திரும்பவேண்டும் என்று அப்பா திடீரென்று ஏன் முடிவு செய்தார் என்று இதுவரை தெளிவாகத் தெரியாவிட்டாலும் இந்தியச் சூழலுடன் சமரசம் செய்துகொள்ள அவளும் அவளுடைய தம்பி மகேசும் சிரமப்பட்ட நேரங்களில் அமெரிக்கக் கிழவர்களுக்கு ஏற்படும் கதி தனக்கும் ஏற்படக்கூடாது என்றுதான் அப்பா வந்து விட்டாரோ என்று சம்சயம் ஏற்படும்” (காதலென்னும் வானவில்:ப:8) என்று கூறுவதன்மூலம் அறியலாம்.
இவ்வாறு அமெரிக்காவில் வயதானதம்பதியை ஒன்றுசேர்ந்து பார்க்கமுடியாது என்றாலும் அங்கும் ஒரு சில தம்பதியர் இருந்திருக்கிறார்கள் என்பதையும் வாஸந்தி குறிப்பிட்டுள்ளார்.
” நியுயார்க்கில் இருக்கும் அவளுடைய சினேகிதன் எரிக்பேக்கருக்கு அவர்களைப் பற்றி எழுதினாள்.’அறுபது வருஷமாயிற்று கல்யாணமாகி ;சேர்ந்து இருக்கிறார்களாம்.’” என்று அவன் வேலைமெனக்கெட்டுத் தன்னுடைய குடும்ப வருஷத்தின் கிளைகளை அனுப்பினான். அதிலும் முப்பது வருஷங்களை யாரும் தாண்டியிருக்கவில்லை.” (மேலது)
இந்தியகலாச்சாரம் குழந்தைகளுக்குத் தெரியவேண்டும் என்ற தந்தையின் பிடிவாதத்திற்காக நியூயார்க்கில் உள்ள ஒரு நாட்டியப்பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றாள். அங்கு கிடைத்த பயிற்சிக்கும் இந்தியாவில்-தமிழகத்தில் கிடைத்தப் பயிற்சிக்கும் சம்பந்தமேயில்லை என்பதை உணர்கிறாள்.இங்கு ஒரு தெய்வீகத் தன்மையிருப்பதை அறிகிறாள்.” நாளும் கிழமையும் முகூர்த்தமும் பார்த்துக் கண்ணை மூடிய நிலையில் கைகூப்பி பிரார்த்தித்து பிறகு தையா-தையா-தைஹூ என்று லலிதாங்கி கம்பீரத்துடன் பாடத்தை துவங்கியபோது மீராவிற்கு உடம்பு சிலிர்த்துப்போயிற்று.தெய்வசன்னிதானத்தில் நுழைந்தது போலிருந்தது” (மேலது:ப: 16) இப்படி நாட்டியத்திலியும் கூட வேறுபாட்டைக் காட்டுகிறார் ஆசிரியர்.
அங்கே என்ன நல்ல விஷயமென்றால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதற்காக நேரத்தை ஒதுக்குகிறார்கள்.தன்னிச்சையாக செயல்படவைக்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் அவ்வப்பொழுது செலவிடுகிறார்கள். நம்முடைய நாட்டில் குழந்தைகளுடன் வெளிப்படையாகப் பேசுவதில்லை. பெண்குழந்தைகளென்றால் அவர்களைத் தனியே விடுவதில்லை. அவர்களுக்குப் பாதுகாப்பாகத் துணைக்கு யாராவது செல்லவேண்டும்.இப்படி ஒருபுறம் இருக்க அம்மா மகளிடமும் மகள் அம்மாவிடமும் நேர்மையுடன் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களை ஏமாற்றிக்கொள்வது போன்ற கருத்துக்களைத் தருகிறார் வாஸந்தி.அதனை மீராவின் மூலம் சொல்லவைக்கிறார். அமெரிக்காவில் சனி ஞாயிறு என்றால் கொண்டாட்டமாக இருக்கும். அநேகமாக எல்லாருமாகச் சேர்ந்து எங்காவது வெளியூர் போவார்கள்.அப்பா அமெரிக்க அப்பாக்கள் போல கோடைக்காலங்களில் அரை டிராயரும் வெற்றுமார்புமாகப் படகு ஓட்டுவார். அவளுடன் மகேஷுடனும் நீச்சல் குளத்தில் நீந்துவார். அம்மாவும் அங்கு பாண்ட்டும் ஷர்ட்டும் போட்டவள்தான். அமெரிக்க இங்கிலீசு பேச முயன்றவள். டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் வேலை பார்த்தாள். திடீரென்று மூட்டைக் கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடத் தீர்மானித்தபோது மகேஷ் வெகுநாட்களுக்கு “வொய் டாட் வொய்? ‘ என்று துளைத்தான்.” (மேலது:ப: 10) மீராவின் நடன ஆசிரியையின்(லலிதாங்கி) காதலர் அமெரிக்கா விலிருந்து வந்து தன் காதலியைப் பார்க்கவந்தபோது மீராவை அறிமுகப்படுத்தும் போது ‘அவர் மீராவின் தந்தை ஸ்ரீனியைத் தெரியும்.அவர் மீராவால்தான் இந்தியாவுக்கு வந்தான்’ என்று சொன்னதும் மீராவினால் புரிந்துகொள்ளமுடிகிறது.பதினெட்டு வயதாகிவிட்டால் போதும் வீட்டைவிட்டுப் பெண்கள் கிளம்பிவிடுவார்கள் என்பதுதான்.மீரா நேரடியாகத் தன் தந்தையிடம் ஏன் இந்தியாவிற்கு அழைத்துவந்தீர்கள்.நாகராஜன் சொன்னது உண்மையா? என்று கேட்கிறாள்.அவர் ஒத்துக்கொள்கிறார். “உனக்கு வயது ஏற ஏற அந்தக் கலாச்சாரத்திலேந்து உன்னைக் காப்பத்தணம்னு தோணிப்போச்சு” (மேலது:ப:66) என்கிறார்.
இந்தியா வந்ததிலிருந்து அவள் பார்த்தசந்தித்த முகங்கள் பொய்முகங்களாக இருந்ததால் இந்தியா எப்படி பாதுகாப்புத் தரும் என்று நினைக்கிறாள்.” கல்யாணமாகாதவளையும் ஏசுகிறார்கள்.விவாகரத்தானவரையும் ஏசுகிறார்கள்.வம்பு பேசும் பெரியவர்களின் கண்ணில் மண்ணைத் தூவும் இளைஞர்கள்- பொய்கள், ஏமாற்றல்கள்-வர்க்க வித்தியாசங்கள், ஜாதிவித்தியாசங்கள், முருகேசனை ஒரு நாள் சோபாவில் உட்கார்த்திப் பேசினதற்கு அம்மா குய்யோ குறையோ என்று கத்தினாள்.திடீரென்று அத்தை பாட்டி நினைவு வந்தது. சூரிய வெளிச்சம் போல இருப்பவர்கள் கூட மகன் காதலித்தப் பெண்ணை வேறு ஜாதி என்பதால் ஏற்கவில்லை. எத்தனை கருணையற்ற சமூகம் இது-இது எப்படி பாதுகாப்பான இடம்?” (மேலது:ப:68)
என்று நினைக்கிறாள். அதற்கேற்ப அவள் தோழி மீனாட்சி ஒரு நாள் ‘கெட்டுகெதர்’ பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கு மீராவிடம் மோசமாக நடந்துகொள்கிறான் மீனாட்சியின் தோழன்.அவனிடமிருந்து தப்பித்து வந்துவிடுகிறாள். ஆயினும்’ நீ அமெரிக்காவில் வளர்ந்தவ’ என்று குத்திக்காட்டியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.’அங்கே வளர்ந்ததால் மானம் கெட்டவளாக இருப்பேன் என்று நினைத்தானா?’ என்று மனதில் அவனைத் திட்டுகிறாள். அத்துடன் “அமெரிக்காவாக இருந்தால் கோர்ட்டுக்கு இழுத்திருப்பேன். நஷ்ட ஈடு வாங்கியிருப்பேன். இஷ்டமில்லாதவளை பலவந்தப்படுத்தினா அது க்ரிமினல் குற்றம்” (மேலது:ப:123) என்று பதினேழு வயது மீரா பேசியது அமெரிக்க வளர்ப்பு என்பது கவனிக்கத் தக்கது.இந்தியாவை விட்டுப் போக வேண்டும் என்று விரும்பிய அவளுக்கு அவள் தந்தை,
“இந்த ஒரு சம்பவத்தினாலே உனக்கு இந்தியா வெறுத்துப் போச்சா?” இதை விட பயங்கர விஷயங்கள் அமெரிக்காவிலே நடக்கிறது.நீ பதினைந்து வயதிலே பார்த்த அமெரிக்காதான் நிஜம்னு நினைக்காதே மீரா.அத்தோடு இந்த இரண்டு வருஷ அனுபவத்தை வெச்சு இந்தியாவை எடைபோடாதே” (மேலது;ப:147) என்கிறார். ஆயினும் இங்கு அம்மாவுக்குத் தெரியாமல் மகளும் மகளுக்குத்தெரியாமல் அம்மாவும் பொய் என்னும் முகத்திரையிட்டு ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்வதை வெறுக்கிறாள்.கணவனுக்குத் தெரியாமல் மனைவி இன்னொருவரிடம் உறவு வைத்துக்கொண்டு வாழ்வது இதையெல்லாம் அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
“இதைப் பற்றி எரிக்கிற்கு(அமெரிக்க சிநேகிதன்) எழுதவேண்டும் என்று தோன்றிற்று.எரிக்கின் அம்மாவிற்கு வேறு ஓர் ஆண் சினேகம் ஏற்பட்டபோது , அவனுடைய தந்தை அவளை விவாகரத்து செய்தார்.”அவர்கள் பிரிந்துபோனது எனக்கு வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை என்று எனக்குத் தெரியும்.” என்றான் எரிக் பதினானகு வயதில்” (மேலது:ப:95-96) அதுபோல நாற்பதுவயதுக்கு மேல் இங்கு கல்யாணம் செய்யப் போவதைச் சொல்வதற்குக் கூச்சப்படுவதையும் நினைத்து அதிசயத்தாள்.
தனது நடன ஆசிரியை லலிதாங்கி காதல்கல்யாணம் செய்வதை ஏற்றுக்கொள்ள வில்லை. அவள் காதலன் இருபது வருஷம் கழித்து அமெரிக்காவிலிருந்து வந்து திருமணம் செய்துகொள்ளவிருப்பத்தைத் தெரிவித்தபோது அப்போதும் சம்மதிக்கவில்லை அவள் குடும்பத்தார். ஆனால் லலிதாங்கி காதலனைத் திருமணம்செய்து கொள்ள சம்மதிக்கிறாள்.
” அவர் கேட்டதும் நீ ஒப்புத்துட்டியான்னு என் தங்கச்சி பழிக்கிறா. ரோசங்கெட்டவங்கரா.எனக்கொண்ணும் அப்படியெல்லாம் தோணல்லே.அவரோட இருக்கும்போது எனக்குசந்தோசமா இருக்கு.ரோசப்பட்டு நா எதுக்கு அதைப் பாழாக்கிக்கணும்? அவவ நல்லபடியா கல்யாணம் கட்டிக்கிட்டுச் சௌகர்யமா இருக்கா.எனக்கு நாற்பத்து மூணு வயசிலே வாழ்க்கை அமைஞ்சா என்னங்கறேன்.? (மேலது:ப:140)
“அமெரிக்காவில் இருந்தவரை அவளுக்கு டேட்டிங் செல்ல வயதாகியிருக்க வில்லை. அவள் சென்றதெல்லாம் பிறந்தநாள் விருந்துகள், கோடைக்கால கேம்ப் விருந்துகள். விளையாட்டும் பாட்டும் ஆட்டமும் சாப்பாடுமாகப் பொழுது பறக்கும்.சாதாரணமாக அம்மாக்கள் கொண்டுவிடுவார்கள்” (மேலது:ப:112)
இப்படி பதினைந்து வயது வரை அமெரிக்காவில் இருந்து அமெரிக்க கலாச்சாரத்துடன் ஒன்றிப்போயிருந்தாள் என்பதையும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்ததால் இந்திய கலாச்சாரங்களுடன் ஒன்றமுடியாமல் தவித்தாள் என்பதையும் காதலெனும் வானவில் காட்டுகிறது.
“சந்தியா” நாவலில் தாய்-தந்தையின் கண்டிப்புப் பிடிக்காமல் நார்வேயிலுள்ள சர்வகலா சாலையில் மேல்படிப்புப் படிப்பதற்காக செல்கிறாள். முதலில் இரண்டு மாத கோடைக் கால பயிற்சி வகுப்புப் பின்பு மேலும் இரண்டு ஆண்டு மேல்படிப்புப் படிக்க ஆசைப்படுகிறாள்.நல்ல அறிவும் துணிச்சலும் கொண்ட சந்தியா டில்லியிலிருந்து தனியாக விமானத்தின் மூலம் நார்வேயிலுள்ள சரவ கலா சாலைக்குச் செல்கிறாள். விடுதியில் தங்கியிருந்த அவள் அமெரிக்காவிலிருந்தும் துருக்கி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இலங்கையிலிருந்தும் படிப்பதற்காக வந்திருந்த பல தேச ஆண்களையும் பெண்களையும் காண்கிறாள். அவளைத் தவிர மற்ற பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்களுடன் சேர்ந்துகொண்டு உல்லாசமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள். இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் இருபத்தியொரு வயதுப் பெண் தனித்து வாழ்வதில்லை. ஆணோடு சேர்ந்து வாழ்கின்றனர். அவர்களைத் தவறாக நினைப்பதில்லை. தன்னுடன் தங்கியிருக்கும் சுதந்திர அமெரிக்காவியிருந்து வந்திருக்கும் ஜூலி முதலில் ஜான் என்பவனுடன் இரண்டு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்துபின் அவனைப் பிடிக்காமல் ஹென்றி என்பவனுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். இருபத்தியொரு வயதுப் பெண்ணான சந்தியா இதுவரை எந்த ஆண்ணொடும் தொடர்பு இல்லை என்பதைக் கேட்டு அதிசயக்கிறாள். ஜூலி மூலமாக அமெரிக்கக் கலாச்சாரத்தை ஓரளவு அறிந்துகொள்கிறாள். ஜுலியின் காதலன் ஜான் சந்தியாவிடம் பேசும்போது, “நானும் அவளும் இரண்டு வருடங்களாகக் காதலர்களாக இருந்தோம்” என்கிறான். ‘பிறகு என்ன ஆயிற்று என்கிறாள்” சந்தியா. அதற்கு அவன் “ எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை.பிரிந்தோம்.இரண்டு வருஷங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு”. “அவளுக்கு இன்னும் திகைப்பு அடங்கவில்லை. ஜுலியின் வயதுதான் இவனுக்கும். இரண்டு வருஷங்கள் என்றால் பதினெட்டு வயசிலேயே கல்யாணமாகாத தம்பதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.” (சந்தியா: ப: 65) அவள் திகைப்பு அடங்கவில்லை.
ஆஸ்லோவிற்கு அருகிலுள்ள ஜோன்ஸ்வான் ஏரிக்குச் சந்தியாவை ஜூலி அழைத்துச் செல்கிறாள். ரயிலில் சென்றால் கட்டணம் அதிகம் என்பதால் ரயிலில் செல்லாமல் நடந்து சென்றபோது ரயில் ஓட்டுபவன் வந்து அமருங்கள்” திரும்பி வரும்போது ரயிலைப் பிடியுங்கள் என்னுடைய கெஸ்டுகளாக என் கேபினில் உட்காருங்கள்”. என்று சொன்னபோது யார் அவன்? என்றாள் ஜூலி. தெரியாது என்கிறாள் சந்தியா. பெயரைப் பார்த்தால் இந்தியனாகத் தோன்றுகிறது. ஆனால் நார்வீஜிய பாஷையை சுலபமாகப் பேசுகிறான் என்று சொல்கிறாள். திரும்பிப் போகும்போது நமக்கு ஃப்ரீ ரைட் கொடுக்கிறேன் என்கிறானே? என்று ஜூலி சொன்னதும் “போய்த் தான் பார்க்கிறது!” என்று சந்தியா சிரிக்கிறாள்.. இந்தியாவில் இப்படியெல்லாம் செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது!” என்கிறாள். ஏன் என்று ஜூலி கேட்டதும் “ ஏன்னா அங்கு சொஸைட்டியே வேறே! முதலாவது ரயில் ஓட்டறவன் இப்படி வழியில் போற பெண்ணைப் பார்த்து என் காபினுக்கு வந்து சவாரி செய்யுங்கள் என்று கூப்பிடமாட்டான். இரண்டாவது அப்படிக் கூப்பிட்டுப் பெண்களும் சென்றால் தவறாகப் பேசுவார்கள்.பெண்களும் சுலபமாகப் போய்விடமாட்டார்கள்.” (மேலது:ப:69) “போனால் என்ன தப்பு என்று கேட்கிறாள் ஜூலி. தப்பொன்னும் இல்லே தான். வழக்கமில்லை “ என்று சொல்கிறாள் சந்தியா. அப்போது ஜூலி தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறாள். அது அவள் குடும்பக் கதையாக மட்டுமின்றி அமெரிக்க கலாச்சாரமாக இருப்பதை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார். அதனைப் பின்வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் அறியலாம்.
“ நான் சின்னவளாயிருந்தபோது எங்கள் வீட்டில் நிறைய பிக்னிக்குக்குப் போவோம்.பாவம். என் தம்பிக்கும் என் தங்கைக்கும் அந்த அதிர்ஷ்டம் இல்லே!” “ ஏன்னா எங்கம்மாவுக்கு வாழ்க்கையிலே முன்னேறணும்னு வெறிவந்துவிட்டது. எங்களுக்காக நேரம் ஒதுக்கமுடியல்லே!” “ எப்படி அதிகப்படியாக சம்பாதிப்பது என்பதில் தான் அம்மாவுக்குக் குறி .எங்களுடைய சௌகர்யமான வாழ்க்கைக்காகத்தான் உழைக்கிறாளாம். வீட்டு வேலை எல்லாவற்றிக்கும் மெஷின் வாங்கிப் போட்டிருக்காள்.என் தம்பி கேட்காமலேயே விளையாட்டுச் சாமானங்கள்.நான் கேட்காத வேண்டாத டிரஸ்கள். அத்தனை கெட்டிக்காரிக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியாது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம்.அம்மாதான் வேண்டும்! ஒரு விஷயம் சொன்னால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாருமாகச் சேர்ந்த க்ரூப் போட்டோ கிடையாது. ஏனென்றால் அம்மாவுக்கு நேரமில்லே!” அப்பா இல்லையா என்று சந்தியா கேட்டபோது “அப்பா இருக்கிறார்.நல்லவேளை அவருக்கு அம்மாவைப்போலப் பேராசை கிடையாது. எங்களுக்காகத் தான் ரொம்பப் பொறுமையாக அம்மாவுடன் சேர்ந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். நானும் என் தங்கையும் தனித்தனியாக வேறு ஊரில் இருக்கிறோம்.என் தம்பியை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும்வரை அம்மாவுடைய பிரியம் வேண்டமா? அம்மாவுக்குப் புரிவதில்லை. உங்களுக்காகத்தான் உழைக்கிறேன் என்கிறாள். இந்த சௌகரியம் எல்லாம் எனக்கு வேண்டாம்.நீயே அனுபவி என்று நான் பதினாறு வயசில் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டேன்.என் தங்கை பதினைந்து வயதிலே கிளம்பி விட்டாள்” தனியாக எப்படி இருக்கமுடியும்? செலவுக்கு என்ன செய்வீர்கள்? என்று சந்தியா கேட்டபோது, ஏதாவது பார்ட் டைம் வேலை கிடைக்காமல் போகாது. வீட்டிலிருந்தும் செலவுக்குக் கொஞ்சம் வாங்கிக்கொள்வோம். படிப்பு இலவசம்தானே! என்கிறாள். விடுமுறைக்கு வீட்டுக்குப் போவீர்களா? என்று கேட்டபோது, “ போவோம்.ஆனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரமிருக்காது.நாங்கள் போவதே அம்மாவுக்குத் தொந்தரவோ என்று எனக்கு வெறுத்துப் போகும்.அமெரிக்காவில் எல்லோரும் சந்தோஷமாய இருக்கிறார்கள் என்று நினைக்காதே.இன்ற்று எல்லா அமெரிக்கக் குழந்தைகளும் அநாதைகள்” (மேலது:ப:71-72) என்று சொன்னபோது சந்தியா அம்மாவுக்கும் தனக்கும் ஒரு தலைமுறை வித்தியாசமென்றால் தனக்கும் ஜூலிக்கும் ஒரு யுக வித்தியாசம் இருக்கும்போலிருக்கிறது என்று நினைக்கிறாள்.” ஜுலியும் ஜானும் இரண்டு வருஷங்கள் காதலர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.உங்க அம்மாவும் அப்பாவும் ஒன்றும் சொல்லவில்லையா? என்று கேட்டபோது ஜூலி “ அம்மாவுக்கு ஜானைக் கட்டோடு பிடிக்கல்லே.மற்றபடி அவர்கள் என்ன சொல்ல முடியும்?இவன் ஒருத்தனுடனே சினேகம் வைத்துக்கொண்டிருந்தது அம்மாவுக்குப் பிடிக்கல்லே!” வேறு நல்ல ஆண்கள் கிடைக்கவில்லையா? இவன் உன்னை உறிஞ்சி விடுவான் என்பாள்.இந்த விஷயத்தில் அம்மா போட்ட எடை சரியாக இருந்தது. இவன் தன் பாரத்தையெல்லாம் என்மேல் சுமத்தப் பார்த்தான். இவன் அழும்போதெல்லாம் நானும் அழணும்.என்னிடமிருந்து ரொம்ப எதிர்பார்த்தான்.எனக்குச் சிரிக்கணும்,பறக்கணும், ஓடணும். இவன் கழுத்தில் கட்டின பாறாங்கல்லைப் போல என்னை இழுத்தான்.இனிமே முடியாதுன்னு கிளம்பிட்டேன்.இனிமே என்னை நெருங்க முடியாதுன்னு” (மேலது:பக்:85-86) என்று சொல்லிவிட்டு மேலும்,
“ இந்த ஆண் பெண் உறவிலே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சந்தியா. முக்கியமா அமெரிக்க ஆண்கிட்ட கவனமா இருக்கணும்.அனேகம் பேர் கோழைகள்.பொறுப்பேற்க யாருக்கும் தைரியமில்லே.படுக்கைக்கு இட்டுச் செல்லத் தயாரா இருப்பான்கள்.அதுக்குமேல் எதுவும் வேண்டாம் அவங்களுக்கு.இங்கு நிறைய அமெரிக்க வாலிபர்கள் வந்து இருக்கிறார்கள். நீ யார் வலையிலேயும் விழுந்துவிடா தே!” (மேலது) என்கிறாள். அப்படிச் சொன்ன அவள் சில நாளிலேயே ஹென்றி என்பவனுடன் சுற்றத் தொடங்கிவிட்டாள். கோடைப்படிப்பு முடிந்ததும் “ஹென்றியும் நீயும் என்னசெய்யப்போகிறீர்கள் என்று சந்தியா கேட்கிறாள்.அதற்கு ஜூலி அலட்சியமாக “நான் என் ஊருக்குப் போகிறேன். அவன் தன் ஊருக்குத் திரும்புகிறான்” (மேலது:ப:137) சேர்ந்து வாழப் போகிறீகளோ என்று கேட்டதற்கு “அந்த தப்பை நான் மறுபடியும் செய்யப் போவதில்லை” (மேலது:138) என்கிறாள் ஜூலி. அது போல அந்தத் துருக்கிப் பெண் இந்த இரண்டு மாதங்களும் ஒரு அமெரிக்கன் தோளைச் சதா அணைத்தபடி திரிந்தாளே அவளும் மற்றவர்களுக்கு டாட்டா சொல்லுவதுபோல் அவனுக்கும் சொல்லிவிட்டு நேற்று தன் தேசத்துக்குக் கிளம்பிப் போனாள். இவர்களுக்கு இது ஒரு நியாயமான இயல்பான விளையாட்டு,சிகரெட்டையோ கொக்கா கோலாவையோ பகிர்ந்து கொள்வதப்போல” (மேலது:ப: 13) என்று நினைத்த சந்தியா நார்வே கலாச்சாரத்தையும் தெரிந்துகொள்கிறாள். கோடைகாலப் பயிற்சி முடிந்ததால் விடுதியிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததால் வேறோரு வீடு பார்த்துப் போகவேண்டியிருந்தது.அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் தங்கியிருந்த ஏவா நோரா என்பவர்களில் ஏவா என்பவள் சந்தியாவிற்குத் தோழியாகிறாள். அவளைப் பற்றிக் கேட்கும்போது அவள், “என்னுடைய அம்மா கதாசிரியை.பிரபலமானவள்.என்னுடைய அப்பா ரொம்ப நல்லவர். அவருடைய நல்லதனம் அம்மாவுக்குப் போர் அடித்துவிட்டது. புதிய அனுபவங்களைத் தேடிப் போய்விட்டாள்.” அப்பா தனியாக இருக்கிறாரா? என்று கேட்டதற்கு “அவருக்கும் வேறு ஒரு துணை கிடைத்துவிட்டது. அம்மாவிடம்ருந்து எப்பொழுதாவது கடிதம் வரும்.அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக உண்மையான் காதலை அனுபவிப்பதாகச் சொல்கிறாள்.” என்கிறாள் ஏவா.அவர்கள் பிரிவு உன்னைப் பாதிக்கவில்லையா? என்று சந்தியா கேட்டதற்கு “ ஓரளவிற்கு! எப்பொழுதாவது மனச்சோர்வு ஏற்பட்டால் விடுமுறையை வீட்டில் கழிக்கவேண்டும் என்று தோன்றினால் போக இப்பொழுது இடமில்லை.அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட நான் விரும்பவில்லை.” எங்கிறாள்.” இங்கே உங்களையெல்லாம் பார்த்தால் ரொம்ப சுதந்திரமாகத் தெரிகிறீர்கள்” என்று சந்தியா சொன்னதற்கு ஏவா “தனித்தனியாக வாழ்வதால் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துவிடாதே” என்கிறாள். சந்தியா “நினைத்தபடி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள்.கல்யாணமாகமலே குழந்தையைப் பெறுகிறீர்கள்.யாரும் ஒன்றும் சொல்வதில்லை…சட்டப்படியும் அது குற்றமில்லை. அரசாங்கம் இளம்தாய்களுக்கு சலுகை தருகிறது.புருஷனின் கையை நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை.” என்று சொன்னவுடன் ,” ஆ, இதில் இருக்கும் விஷயத்தை நீ கவனிக்கவில்லை!” எனு ஏவா குறுக்கிட்டாள். “இங்கு ஜனத்தொகையைப் பெருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.பெண்களைக் குழந்தை பெறும் மெஷினாக நினைக்க ஆரம்பித்துவிட்டது. அரசாங்கம் பெண்ணை ஒரு பிரக்ருதியாகக் கருதுவதில்லை.ஒரு கருவி அவள். குழந்தையைப் பெற்றுக்கொண்டு வீட்டிலேயே இருக்கவேண்டுமென்று நினைக்கிறது.குழந்தைக் காப்பகங்கள் கிடையாது.அது இருந்தால் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டுப் பெண்கள் வேலைக்குப் போய் விடுவார்கள் என்று பயம்” (மேலது:ப:150-153) என்று நார்வேஜிய கலாச்சாரத்தைச் சொல்கிறாள். சந்தியா அங்குள்ள மக்களைக் குறித்துப் பல தகவல்களை அறிந்திருந்தாள்.வீட்டை விட்டு யாரும் வெளியே அதிகம் வருவதில்லை. அமைதியாக மக்கள் நெருக்கம் அதிகமில்லாத தெருக்களை அவ்வூர் கொண்டிருந்தது. யார் என்ன செய்தாலும் கேள்வி கேட்பதில்லை.தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.ஓரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதைக் குற்றமாகக் கருதுவதில்லை.தனிமையாக நிறையப் பேர் இருந்தார்கள்.திருமணம் என்ற சடங்கினை விரும்பாதவர்கள். சேர்ந்து வாழ்வதை விரும்புகிறார்கள்.தனக்கு சூரியாவைப் பிடித்திருந்ததால் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்கிறாள்.அவன் ஒத்துக்கொள்ளவில்லை. “இது சுத்தப் பத்தாம்பசலித்தனமான எண்ணம்.இந்தியா இல்லே இது.சேர்ந்து வாழ்றது இங்கே சட்டப்படி குற்றமில்லாததாலே கல்யாணம் என்கிற சடங்கு இங்கே அவசியமில்லே. உனக்கு எந்தவித குற்ற உணர்வும் இருக்க வேண்டியதில்லே”.(மேலது:ப:223) முன்னபின்னே தெரியாத ஓர் ஆள் முன்னாடிப் போய் சத்தியபிரமாணம் செய்யறது ஒரு கேலிக்கூத்து.நம்ம ரெண்டு பேருக்கும் நடுவிலே இருக்கிய விஷயம் இது. அதுக்கு நம்ம ரெண்டு பேர்தான் சாட்சியா இருக்கணும் மூணாம் மனுஷன் தேவையில்லே.சட்டமே அங்கே அதை ஏத்துகிட்டிருக்கு” (மேலது:ப: 225-226) “இருபது வருஷத்துக்கு மேல் சேர்ந்து வாழற தம்பதிகளை நா இங்கே உனக்குக் காண்பிக்கிறேன்.” (மேலது:ப:237) என்கிறான்.
இவ்வாறு வெளிநாட்டுக் கலாச்சாரங்களை மேற்சொன்ன நாவல்களில் சுட்டிக்காட்டுகிறார் வாஸந்தி. நம் இந்திய கலாச்சாரத்திற்கு அவை அன்னியமானவை.குடும்பம் கட்டுப்பாடு நெறிமுறை என்ற அமைப்பைக் கொண்டவை.சேர்ந்து வாழ்தல் கணவன் மனைவி குழந்தை தனித்தனியாக வாழ்தல் என்ற வெளிநாட்டுப் பழக்கங்கள் நமக்குப் பொருந்தாதவை. சேர்ந்து வாழ்தல் என்று சொல்கின்ற ‘கெட் டு கெதெர்’ என்ற கொள்கையே பிரிதலை எதிர்கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவே உள்ளது. எத்தனை நாட்கள் சேர்ந்து வாழப்போகிறோம் என்பது தெரியாத கணக்கிடப்படாத ஒன்றாகவே இருப்பது நம் தேசத்திற்கு சரிவராது என்பது கருத்தாக இருப்பதை ஆசிரியர் தெளிவாக உணர்த்துகிறார்.அதே சமயத்தில் அங்குள்ள சுதந்திரப் போக்கு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்லி அதிலுள்ள குறைபாடுகளை நமக்குப் புரிய வைக்கிறார். இப்படி வாஸந்தியின் நாவல்கள் வெளிநாட்டுக் கலாச்சாரங்களை உணர்த்துவதில் சிறப்பிடம் பெறுகின்றன.
chithraaruchamy@gmail.com