சர்வதேச ஆண்கள் தினம்

குறிப்பாகச் சமூகத்தினதும் குடும்பத்தினதும் மேம்பாட்டுக்குச் சிறுவர்களும் ஆண்களும் வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக சர்வதேச ஆண்கள் தினம் உள்ளது. எதிர்மறையான விடயங்களில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றின் அதிகரிப்புக்கு வழிகோலுவதை விடுத்து, நேர்மறையான பண்புகளில் கவனம்செலுத்துவதன் மூலம் அவற்றை ஊக்குவிப்பது எப்போதுமே சிறப்பானது. அவ்வகையில் முன்மாதிரிகள் மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குதல், இந்த வருட ஆண்கள் தினத்தின் கருப்பொருளாக இருக்கிறது.

ஆணாதிக்கத்தால் உருவாகும் பல்வகையான பிரச்சினைகளுக்கெல்லாம் சமூகமே அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை எப்போது நாங்கள் அனைவரும் உணர்கிறோமோ, அப்போதே இதற்கான தீர்வும் உருவாகும் என்பதே யதார்த்தமாகும்.
அவதானிப்பு, பிரதிபண்ணல், மற்றும் முன்மாதிரி ஒன்றைப் பின்பற்றல் என்பனவே சமூகத்தில் நிகழும் கற்றலின் தோற்றுவாய்களாக அமைகின்றன என்கிறார் உளவியலாளர் Albert Bandura. குழந்தைப் பருவம் முதல் அவரவர் பாலினத்தின்படி, அவர்களது சகாக்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அவர்கள் செயல்படவேண்டிய வழிவகைகளைப் பற்றிச் சிறுவர்கள் அறிந்துகொள்கிறார்கள். அடிப்படையில் ஆண் ஒருவன் தைரியசாலியாக இருக்கவேண்டும் எனவும், பெண்கள் எப்போதும் அழகாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் எனவும் சமூகம் அவர்களுக்குக் கற்பிக்கிறது.

ஒவ்வொருவருக்கும் பொருத்தமானவை எவை என்பது குறித்து, அவரவர் பாலினத்தின் அடிப்படையில் குழந்தைகள் மேல் வேறுபட்ட எதிர்பார்ப்புகள் சுமத்தப்படுகின்றன. பிறந்தவுடனேயே இளஞ்சிவப்பு நிறம் சிறுமிகளுடனும், நீல நிறம் சிறுவர்களுடனும் தொடர்புபடுத்தப்படுவதில் ஆரம்பிக்கும் பாலியல் வேறுபாடு அதன் அடிப்படை பற்றிய விளங்கமின்றியே பெற்றோர்களால் சமூகமயமாக்கப்படுகிறது.

பின்னர், குழந்தைகள் வளரும்போது, அவர்களுக்காகத் தெரிந்தெடுக்கப்படும் விளையாட்டுப் பொருள்களும் பெரும்பாலும் அவ்வாறானவையாகவே அமைகின்றன. எதிர்காலத் தாய்மார் வேடங்களுக்குப் பெண்களைத் தயார்படுத்தும் சமூகமயமாக்கல் முயற்சி சிறுமிகளுக்குப் பொம்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு, வாகனங்களும், ஆக்கிரமிப்புப் போக்குகளை வெளிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட உருவங்களும் (action figures) கொடுக்கப்படுகின்றன.
மனித குலத்தின் ஆரம்பத்தில் வாழ்வுக்காக வேட்டையாடுவதற்காகவும் மிருகங்களுடன் போட்டியிடுவதற்காகவும் ஆக்ரோசமாக இருந்த ஆண்களும், வீட்டுக்குள் இருந்து பிள்ளைகளை வளர்க்கும் கடமையைச் செய்வதற்காக அமைதியாக வாழ்ந்த பெண்களும் அந்தச் சூழல்களால் பெற்றுக்கொண்ட இயல்புகளை இவ்வகையான பிள்ளைவளர்ப்பு மேலும் வளர்த்தெடுக்கிறது. சிறுவர்கள் தைரியமானவர்களாக, வலியைத் தாங்கக்கூடியவர்களாக, ஆபத்தை எதிர்கொள்ளக்கூடியவர்களாக, அவர்களின் அன்புக்குரியவரைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டுமென ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் சிறுவர்கள் அவர்களது வலிகளைப் பற்றியோ அல்லது காயங்களையோ பற்றியோ அதிகம் சிரத்தையெடுக்க வழியில்லாமல் போகிறது, அவற்றைத் தாங்கிக்கொள்ளவேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஆண் பிள்ளை அழக்கூடாதென்றும், நீ என்ன பொம்பிளைப் பிள்ளையா அழுவதை நிறுத்து என்றும் மீள மீளவும் பெற்றோர் கூறும்போது, அவர்களின் உணர்ச்சிகளை மறைப்பதற்கும், வலிகளை மனதின் ஆழத்தில் புதைப்பதற்கும், உதவியை நாடாமல் இருப்பதற்கும் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் (அத்துடன் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணக்கருவையும் இது சிறுவர்களின் மனதில் விதைக்கிறது). அத்துடன் புராதானக் கதைகள் மூலம் ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை என்பது ஒரு மனிதனாக இருப்பதன் ஒரு பகுதியாகும் என்பதும் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக, வீரச் செயல் ஒரு ஆணின் சாதனை என்று போற்றப்படுகிறது. இதனால் கோபத்தைத் தவிர வேறு எந்த உணர்ச்சியும் இல்லாதவர்களாக, முக்கியமாகப் பயமில்லாதவர்களாக இருக்கவேண்டுமென்ற நியதியுடன் சிறுவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

ஊடகங்களும் இந்த வகையான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆண்களின் மனப்பாங்கில் எதிர்மறையான செல்வாக்கைச் செலுத்துகின்றன. ஆண்கள் தசைகளின் வளர்ச்சிமிக்கவர்களாகவும், விளையாட்டில் சிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என முன்னுதாரணங்கள் காட்டப்படுகின்றன. அத்துடன், எதிரிகளை வெல்வதற்கு அவர்கள் கொலை செய்யும் வல்லமையும் பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்ற எண்ணக்கருவைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், வீடியோ விளையாட்டுக்களும், திரைப்படங்களும் காட்சிப்படுத்துகின்றன.

இவ்வகையான எதிர்பார்ப்புகள் சிறுவர்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது. சவால் விட்டு வெல்ல முடியாதபோது அல்லது தோல்வி ஒன்றைத் தழுவும்போது மனவழுத்தம், நித்திரை கொள்வதில் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு உருவாகின்றன. இவற்றை மேவுவதற்கு வழிதெரியாத சிறுவர்கள், மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களாகி போதைப் பொருள் பாவனை, குடிப்பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையாகி, முடிவில் மனச்சோர்வுக்குள் அமிழ்ந்து போகிறார்கள். மேலும், சிலவேளைகளில் இது தற்கொலையை அவர்களில் விளைவாக்குகிறது. அத்துடன், ஆண்களில் இதய நோய்கள், சுவாசப்பைப் புற்றுநோய் என்பன ஒப்பீட்டளவில் அதிகமாக ஏற்படுத்துவதுடன் இறப்பும் விரைவில் ஏற்படுவதற்கும் இவ்வகையான சமூகமயமாக்கலே காரணமாகிறது.

மேலும் ஆண்களே வழிநடத்தக் கூடியவர்கள், அவர்கள் சொல்வதைப் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள்; ஆண்கள் வலிமையானவர்கள், பெண்கள் பலவீனமானவர்கள்; பெண்கள் குறைந்த மதிப்புள்ளவர்கள், அவர்கள் ஆண்களின் சொத்து மற்றும் பாலியல் இன்பத்துக்காகப் படைக்கப்பட்டவர்கள் என்ற சமூகக் கற்பிதம், பாலியல் வன்புணர்வு, குடும்ப வன்முறை, கொலை என்பவற்றுக்கு வித்திடுகிறது.

எனவே பாலின அடிப்படையில் குழந்தைகளை வளர்க்காமை, ஆண்கள் என்றால் இப்படித்தான் என்ற போக்கை மாற்றல், ஏற்றுக்கொள்ளப்படாத நடத்தைகளைச் சகித்துக்கொள்ளாமை, வரையறைகளை வகுத்தல், நல்ல பண்புகளைக் கொண்டாடல் என்பன மூலம் ஆண்கள் மற்றும் சிறுவர்களில் மாற்றமொன்றை உருவாக்குவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

sri.vije@gmail.com