ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியலில் “பாம்பெ உல்லு”

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி எனும் உயிர்ச்சூழல் மண்டலம் உணவுச் சங்கிலிக்கும், உணர்வு சங்கிலிக்கும் ஒத்திசைத்து நிற்கும் அட்சயப்பாத்திரம்.  ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பி.யரின் கூற்று பொருட்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கும் பொருந்தும். பொருட்களுக்கு இடப்படும் பெயர்கள் அப்பொருட்கொண்ட குணத்தின் அடிப்படையில் காரணமாகவோ, இடுகுறியாகவே அமையும். பெரும்பாலும் இயற்கைசார்ந்த பொருட்கள் இடுகுறிப்பெயராகவே அமைவன. வாழ்களத்தைச் சுற்றியுள்ள இயற்கையைப் புரிந்துக்கொண்டு, அதன் கொடைகளான செடி, கொடிகளைப் பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கில் அதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் பொதுவாக காரணப்பெயராகவே விளங்குகின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகரின மக்கள் ‘பாம்பெ உல்லு’ என்று அழைக்கும் காரணப்பெயர் கொண்ட ஒரு புல்வகை சூழல், பண்பாடு, பயன்பாடு போன்ற பல்வேறு பரிமாணங்களில் தன்னை முன்னிறுத்தும் போக்கு சூழலியல் நோக்கில் காணத்தக்கதாகும். தேவை, தேர்வுக்கருதி இவர்களின் வழக்காறுடன் ஒன்றியப் பொருளாகவும், முடிமுதல் அடிவரை பயன்பாட்டு நிலைக்கொண்டதாகவும் இந்த ஓரறிவு உயிர் விளங்குகின்றது.

உயிரிகளின் தொகுப்பாக விளங்கும் இப்புவியில் ஆறறிவு உயிரியான மனிதனின் வாழ்வில் சடங்குகள் புரிதலாலும், பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. சடங்குகள் சார்ந்த புழங்குபொருட்களும் காரணகாரிய அடிப்படையில் அமைக்கப்படுபவை. படகரின மக்களின் பெரும்பாலான சடங்குகளில் பல்வேறு பண்புகளைக்கொண்ட தாவரங்கள் இடம்பெறுகின்றன. அத்தாவரங்களுள் ‘பாம்பெ உல்லுவும்’ ஒன்று.

பயன்பாட்டு நோக்கில் சடங்கு, மருத்துவம், உறைவிடப் பயன்பாடு போன்ற பல பரிமாணங்களைக் கொண்டதாக விளங்கும் இந்த ஒருவித்திலை தாவரத்தினை இவர்கள் ‘நஞ்சு உல்லு’, ‘பெஸ்த்தி உல்லு’ என்றும் பலபெயர்களிலும் அழைக்கின்றனர். இதன் தாவரவியல் பெயர் “Lemongrass Cymboprgon” என்பதாகும். தமிழில் எலுமிச்சைப்புல் என்றும் கொடைக்கானல் வாழ் பளியர் இனமக்களால்  போதைப்புல் என்றும் இப்புல் அழைக்கப்படுகின்றது.  மீண்டும் மீண்டும் நுகரத்தோன்றும் ஒரு விதமான நறுமணத்தைக்கொண்ட இப்புல் தோற்றத்திலும் அதன் நறுமணப்பண்பிலும் அனைவரையும் கவரும் நிலையில் இயற்கையாக மட்டுமே வளரும் இயல்புடையதாய் விளங்குகின்றது.

வாழ்வியல் மற்றும் மருத்துவத்தில் –

மலைகளின் முகடுகளின்மேல் வளர்கின்ற இளம்பச்சை நிறம்கொண்ட சற்று கரடுதன்மைக் கொண்டதாக விளங்கும் இப்புல்லின் வேர்ப்பகுதி தரையோடு நன்குப் பற்றிக் கிடக்கும். இதனை  நெருப்புப் பந்தமாக ‘திரி பாம்பெ’ என்ற பெயரில் இம்மக்கள் பயன்படுத்துகின்றனர். 4 அல்லது 5 அடி உயரம்வரை வளரும் இப்புல் முற்றிய நிலையில் சிறு கோலினைப்போல மாறும் இதனை இவர்கள் ‘அசணிக்கோலு’ என்று அழைக்கின்றனர். உடலில் தோன்றும் அசணி என்ற புண்ணிற்கான மருத்துவத்திற்குப் பயன்படுத்துவதால் இதற்குப் இப்பெயர் இட்டு வழங்குகின்றனர்.

உடலில் தோன்றும் ‘ஆனேகிசி’ என்ற அசணிப்புண்ணிற்கு அலோபதி மருத்துவர்களே பரிந்துரைக்கும் படுகர்களின் மருத்துவமுறைக்கு தயாரிக்கின்ற மருந்துக் களிம்பினை இக்கோலினால் எடுத்து புண்ணிற்குப் பூசுகின்றனர். மேலும் முதுகில் ஏற்படும் ‘ஓப்பு’ என்ற வாயு பிடிப்பிற்குச் செய்கின்ற ஒருவிதமான மந்திர மருத்துவத்திலும் இக்கோலினைப் பயன்படுத்துகின்றனர். இக்கோலினை அம்பாக பாவித்து சிறியவர்கள் வில்லமைத்து எய்து விளையாடுவதும் உண்டு. மேலும் இக்கோலின் முனைப்பகுதியைக் கற்களால் இடித்து அதைக்கொண்டு வீட்டிற்குச் சுண்ணாம்பும் பூசுகின்றனர்.

விண்ணை புனிதநிலைக்குரிய குறியீடாகக் கொள்வது இனக்குழு மக்களின் பொதுப்பண்பு. படகர்கள் விண்ணை ‘பானு’ என்றழைக்கின்றனர். இன்று வெற்றிலையை விண்ணிலிருந்து தேவதைகள் கொண்டுவந்ததாகக் கருதும் நாட்டுப்புறம்சார்ந்த கதைவழக்குண்டு. இதைபோல இந்தப் புல்லும் விண்ணிலிருந்து வந்ததாகக் கருதி ‘பானு உல்லு’ என்று பெயரிட்டு அப்பெயர் ‘பாம்பெ உல்லு’ என்று திரிந்திருக்கலாம். பொதுவாக நாம் உயரத்திற்கு  வானத்தினை அடையாக வைப்போம். இப்புல் பெரும்பாலும் மலையின் உச்சியில் விளைவதால் உயரம் கருதியும் இப்பெயரிடப்பட்டதா என பல்வேறு பெயர்க்காரணங்களை உள்ளடக்கிடக்கியதாக விளங்கும் இப்புல்லினைக் கொண்டு படகர்கள் தம் இல்லங்களுக்குக் கூரை வேய்ந்தனர். இன்றும் இவர்களின் வனத்தில் உள்ள கோவிலுக்கு இப்புல்லினைக் கொண்டு மட்டுமே கூரை வேய்கின்றனர்.

மருத்துவ நிலையில் இப்புல்லின் பயன்பாடு இன்றியமையானது. உடலில் தோன்றும் ‘பெஸ்தி’ எனும் ஒருவிதமான ஒவ்வாமைக்கும் இப்புல்லினை நீர்சேர்த்து களிம்பாக்கியோ, வெறுமனவோ அரிசிவடித்த நீரில் ஊறவைத்து உடலின்மேல் ஊற்றுகின்றனர். இவ் உபாதைக்கு இம்மருத்துவத்தினைத்தவிர வேறு மருந்துவம் கிடையாது.

சடங்கியலில் –

சடங்கியல் நிலையில் இப்புல்லின் பயன்பாடு இன்றும் தவிர்க்கவியலாத ஒன்றாக விளங்குகின்றது. இப்புல்லின் மீது இவர்கள் கட்டமைத்துள்ள குறியீட்டு நிலையினை இப்புல்லினைக் கொண்டு நிகழ்த்தப்படுகின்ற சடங்குகள் வெளிப்படுத்துகின்றன. இவர்களின் மிக முக்கியமான சடங்குகளில் இப்புல் அங்கம் வகிக்கின்றது.  தீட்டு என்ற வழக்கு எல்லா இனக்குழு மக்களிடமும் நிலவும் ஒன்று. படுகரின மக்கள் வெளியிலிருந்து பெறும் எல்லாப் பொருட்களையும் தீட்டுக்கழிக்கின்ற வழக்கினைக் கொண்டுள்ளனர்.

தொன்றுத்தொட்டு நீலகிரியில் வாழ்கின்ற மக்களின் பொருட்சார் தேவை என்பது பண்டமாற்று முறையோடு நிகழ்ந்து வந்தது. தோடர் இன மக்கள் மூங்கில்சார்ந்த பொருட்களையும், கோத்தர் இன மக்கள் உலோகம் மற்றும் மட்பாண்டம் சார்ந்த பொருட்களையும், குறும்பர் இன மக்களும் கூடை போன்ற மூங்கில் சார்ந்த பொருட்களையும் உற்பத்தி செய்பவர்களாக விளங்கினர். இப்பொருட்களை அவ்வின மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட படகர்கள் அதற்கு மாற்றாக அவர்கள் விளைவிக்கின்ற தானியங்களை அளிக்கின்றனர்.

மனிதர்களின் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சிக்கும், கலையுணர்விற்கும் வித்திட்ட இடமாக உற்பத்திசமூக வாழ்களம் விளங்கியது எனலாம். சமைப்பதும், சமையல் கலங்களும் மனித பண்பாட்டின் செம்மையினை எடுத்துக்காட்டுவன. நீலகிரி மலையில் கோத்தர்கள் மட்டுமே இந்த மட்பாண்டம் வனைகின்ற மரபார்ந்த திறன்பெற்றவர்களாக விளங்குகின்றனர். இவர்களிடமிருந்து பெறுகின்ற மட்பாண்டத்தினைப் படகர்கள் ‘கோத்த மடக்கெ’ என்றழைக்கின்றனர். சமையலுக்கு உகந்த அளவுடைய மட்பாண்டத்தினை ‘மடக்கெ’ என்றும் அழைக்கும் படகர்கள் சிறியளவிலான ‘குடுக்கெ’, பெரியளவிலான ‘அவிரி;’ போன்ற மட்பாண்ட வகைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த ‘மடக்கெ’ என்பது ‘குடுக்கெக்கு’ அடுத்த நிலையது: இடைப்பட்ட அளவுடையது. இதை சமைப்பதற்கும், பொருட்களை வைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

படகர்களின் பெரும்பான்மையான வாழ்க்கைவட்டச் சடங்குகளில் இந்த மட்பாண்டம் இடம் வகிக்கின்றது. மரபார்ந்து கோத்தர்களிடமிருந்து மட்பாண்டத்தினைப் பெற்றதால் இன்றும் குறிப்பிட்ட ஒரு சில செயல்பாடுகளில் மரபுநிமித்தமாக கோத்தர்களிடமிருந்து பெற்ற மட்பாண்டத்தினையே இவர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுநிலையில் புறத்திலிருந்து பெற்றுவந்த பொருளைக் கழுவினால் அதன் தீட்டு விலகும் என்ற இவர்களின் வழக்கு மட்பாண்டத்தில் மட்டும் வேறுபடுகின்றது. மட்பாண்டத்தினைத் தீட்டுக்கழிப்பதில் ‘பாம்பெ உல்லு’ முதன்மை வகிக்கின்றது.

படகர்கள் தம் இல்லத்தில் பால்சார்ந்த பண்டங்களை வைக்கப் பயன்படுத்துகின்ற ‘ஆகோட்டு’ என்ற பால்மனை, வீட்டின் சமையல், உப்புப் போட்டு வைத்தல் போன்ற அன்றாட வழக்காறுகளிலும், சடங்குநிலையில் பூப்புச் சடங்கு, திருமணம், வழிபாட்டுச் சடங்குகள், இறப்புச் சடங்கு போன்ற முக்கியமான சடங்குகளிலும் இவர்கள் மட்பாண்டத்தினைப் பயன்படுத்துகின்றனர். இந்த இரு பயன்பாட்டு நிலைக்கேற்ப பம்பெ உல்லினைக் கொண்டு தீட்டுக்கழிக்கும் செயல்முறையானது வேறுபடுகின்றது.

அன்றாடப் பயன்பாட்டிற்காகக் கோத்தர்களிடமிருந்து பெற்றுவருகின்ற மட்பாண்டத்திற்குள் பாம்பெ உல்லினைப் போட்டு அதை வீட்டின் முற்றத்தின் அருகிலுள்ள புதரிற்குள் வைக்கின்றனர். மூன்று நாட்கள் கழிந்தபிறகு அதனுள் இட்ட ‘பாம்பெ  உல்லினை’ எடுத்து, கழுவியப்பின் பயன்படுத்துகின்றனர். வெளியில் எடுத்த இப்புல்லினை நெருப்பிட்டு எரிக்கின்றனர். இதைத் தரையில் வீசுவதையோ, மிதிப்பதையோ புனிதக்குறைப்பாடாகக் கருதுகின்றனர். மேலும் பெண்களும் இப்புல்லினைத் தொடுவதிலிருந்து விலக்கினைக் கட்டமைத்துள்ளனர். சில வளமைசார்ந்த சடங்குகள் அல்லாமல் வீட்டிற்குள்ளும் இப்புல்லினைக் கொண்டுச் செல்வதில்லை.

சடங்கார்ந்து மட்பாண்டத்தினைத் தீட்டுக்கழிக்கும் நிகழ்வினை இவர்கள் ‘மடக்கெ கனப்பது’ என்கின்றனர். ‘கனப்பது’ என்றால் படகமொழியில் தீயில் வாட்டுவது என்று பொருள். இந்நிகழ்வின்போது ‘பாம்பெ உல்லினைக்’ கொண்டுவந்து வீட்டின் முற்றத்தில் வைத்து, திருமண நிகழ்வாயின் திருமணத்திற்கு முந்தையநாள் ஆண்வீட்டிற்கு, ஆண் மற்றும் பெண்வீட்டாரின் தாய் மற்றும் தந்தைவழி மாமன் முறையினரால் கொண்டுவரப்படும் மண்சட்டிகளையும், ஆண் வீட்டின் சார்பாக கொண்டுவரும் மண்சட்டியினையும் ஆண்வீட்டின் மூத்தஆண் தன் வலதுகையினால் வாங்கி வீட்டிற்குள் வைக்கின்றார்.

மணமகன் வீட்டு மூத்த ஆண் வீட்டிற்குள் வாங்கிவைத்த மண்சட்டிகளை தம் வலது கரத்தால் ஒவ்வொன்றாகக் கொண்டுவந்து வீட்டின் முற்றத்தில் இச்சடங்கிற்காகக் கற்களைக்கொண்டு அமைக்கப்பட்ட அடுப்பின் அருகில் வரிசையாக வைக்கின்றார். பின்னர் அவர் அடுப்பினைப் பற்றவைத்து தம் வலதுகையில் பாம்பெ உல்லினை எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு மட்பாண்டத்தையும் அப்புல்லுடன் பற்றிக்கொண்டு மட்பாண்டத்தைக் கொண்டுவந்த மாமன் முறைக்காரார்களை அழைத்து அவர்களை அவர்களது வலது கரத்தினால்; அம்மண்சட்டியினைப் பிடிக்கச்செய்து அவ்வடுப்பில் எரியும் தீயில் மாணமக்களை ஆசிர்வதித்துக்கொண்டே வலதுபுறத்திருந்து இடதுபுறமாக மூன்றுமுறை வாட்டுகின்றனர். அவ்வாறு வாங்கிவைத்த எல்லா மட்பாண்டங்களையும் வாட்டியப்பின்னர் கையில் வைத்திருக்கும் பாம்பெ புல்லினை அடுப்பில் எரியும் நெருப்பில் இட்டு எரிக்கின்றார். பின்னர் எல்லா மண்சட்டிகளுக்கும் மாட்டின் சாணத்தினைப் பூசி, தண்ணீரால் கழுவி, ஆண்வீட்டாரின் மண்பாண்டத்தினை அவ்வுலையில் வைத்து அதில் பாதியளவு தண்ணீர் ஊற்றுகின்றனர்.

இச்சடங்கிற்கு மட்பாண்டத்தினை வாங்கிவந்த அனைவரும் அதனுள் இவர்கள் ‘கள்ளெ’ என்றழைக்கும் உலர்பட்டாணியையும் ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து அம்மட்பாண்டத்தினுள் இட்டு கொண்டுவருகின்றனர். அம்மட்பாண்டங்களை வாட்டுவதற்காக வெளியில் வைக்கும் பொழுது அதனுள் இருக்கும் பட்டாணிக்கடலைகளை ஒன்றாக சேர்த்து ஒரு கலனில் இட்டு அதில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பின்னர் இச்சடங்கினை நிகழ்த்தியவர் அப்பட்டாணிக் கலனிலிருந்து தம் வலது கையினால் சிறிதளவு பட்டாணியை எடுத்து உலையில் வைத்த மட்கலனுள் தம் குலதெய்வத்தினை வணங்கிக்கொண்டே இடுவார். அவரைத்தொடர்ந்து அங்கிருக்கும் அனைவரும் இவ்வாறு இடுகின்றனர்.

பட்டாணி படகர்களின் முக்கியமான எல்லா சடங்குகளிலும் இடம்பெறும் பொருளாகும். அவர்கள் உண்ணும் உணவுவகையுள் உயர்ந்த நிலையிலும், உற்பத்தி நிலையில் மரபுநிலைக் கொண்டதாகவும் இதை கொள்கின்றனர். முதல்முதலில் படகர்கள் உற்பத்தி செய்த தானியம் பட்டாணியாக இருக்கலாம் என்பது பல்வேறு தகவலாளர்களின் கருத்தாகும். பின்பு அச்சடங்கினை நிகழ்த்தியவர் வெளியில் அமைத்த அடுப்பிலிருந்து நெருப்பினைத் தன் வலது கரத்தினால் கொண்டுச்சென்று வீட்டிற்குள் அடுமனையில் உள்ள அடுப்பினைப் பற்றவைக்கின்றார். பின்னர் வெளியிலுள்ள அடுப்பிலுள்ள மண்சட்டியினைக் கொண்டுவந்து வீட்டின் அடுமனையிலுள்ள அடுப்பின்மேல் வைக்கின்றார்.

ஒரே நேரத்தில் வீட்டின் இரண்டு இடத்தில் அடுப்பு எரிவதை இவர்கள் அல்நிமித்தமாகக் கருதுகின்றனர். வெளியில் அமைத்த அடுப்பினைக் கலைத்துவிட்டு அதை கால்மிதிபடாத இடத்தில் வைக்கின்றனர். பின்னர் மண்சட்டியிலிட்ட பட்டாணி நன்கு வெந்தபிறகு அங்கிருப்பவர்களுக்கு அளிக்கின்றனர். இதை இவர்கள் ‘நனெக் கள்ளெ’ என்றழைக்கின்றனர். படகர்களின் தொன்மையான கோயில்களில் பிரசாதமாக இந்த ‘நனெ கள்ளெயே’ இன்றும் விளங்குவது இவ்வுணவின் மரபினைக் காட்டுகின்றது. இவ்வுணவு மகிழ்வின் குறியீடாகவும் விளங்குகின்றது.

அமங்கலச் சடங்கார்ந்து இந்தச் சடங்கானது அதன் செயல்முறையில் வேறுபடுகின்றது. இறப்புச்சடங்கின்போது இறந்தவரின் சகோதர முறைக்காரர் முதலில் வாய்க்கரிசி எடுப்பவராகவும், இறப்பார்ந்த அனைத்து சடங்குகளையும் முன்னின்று நிகழ்த்துபவராகவும் திகழ்கின்றார். அவரை இச்சடங்கு நிலையில் ‘தலையக்கி எத்தோமா’ (தலையக்கி எடுப்பவர்) என்றழைக்கின்றனர். இவர் ஆற்றங்கரைக்குச் சென்று இறப்பின் இறுதிநிலைச் சடங்கான ‘இண்டெகூ’ என்ற உணவினைத் தயாரிப்பதற்கான மட்பாண்டத்தினைப் பாம்பெ உல்லினைக் கொண்டு தடவி, நெருப்பில் வாட்டி, ஆற்று நீரில் கழுவி, ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுச் செல்வார். ஒருசிலர் இந்தச் சடங்கிற்கான மட்பாண்டத்தினை இறந்தவரின் இல்லத்திலேயே நிகழ்த்துகின்றனர். இதில் பாம்பெ உல்லினைப் பயன்படுத்துவதில்லை. வெறுமென அடுப்பில் எரியும் தீயில் சடங்கு நிகழ்த்துபவர் அம் மண்சட்டியை தன் வலது கையில் பிடித்து வாட்டி தீட்டு கழிப்பார். அமங்கல சடங்கார்ந்து புனிதத்தன்மை வாய்ந்த இப்புல்லினை இழவு நடந்த இல்லத்திற்குள் படகர்கள் கொண்டு செல்வதில்லை.

புதுமனைப்புகுவிழாவின் போது வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ள அடுப்பில் முதலில் வைக்க, புதுமனை உரிமையாளரின் மாமன்முறையினரால் கொண்டுவரப்பட்ட மடக்கெயினை அப் புது அடுப்பில் தீ மூட்டி, பாம்பெ உல்லினைக் கொண்டு வாட்டுகின்றனர். பின்னர் அப்புல்லினை அவ்வடுப்பிற்குள்ளேயே இட்டு எரிக்கின்றனர். இவர்களின் புதுமனைப்புகுவிழா சடங்கில் மட்டுமே இப்புல்லினை தம் இல்லத்திற்குள் கொண்டுச்செல்கின்றனர்..

கோயில்களிலும் வழிபாடுசார்ந்து பயன்படுத்தப்படும் மடக்கெக்கும் கோயிலில் இப்புல்லினைக் கொண்டு இச்சடங்கினை நிகழ்த்துகின்றனர். சடங்குகள் சார்ந்து பயன்படுத்திய மண்சட்டிகளைப் படகர்கள் ஒருவருடம்வரை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மரபினைக் கொண்டுள்ளனர். அதை ஒருவருடம்வரை உடையாமல் பாதுகாக்கின்றனர்

ஓர் இனத்தைச் சார்ந்த மக்கள் மேற்கொள்ளும் சடங்குகளில் பயன்படுத்தப்படும் இயற்கைசார்ந்த கூறுகளே அவர்களின் இயற்கைப் புரிதலுக்கும், பண்பாட்டு நிலைகளுக்கும் எடுத்துக்காட்டாகும். படகர்கள் தொன்மையார்ந்து பயன்படுத்திவரும் பாம்பெ உல்லு இவர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கும், சூழலோடான உணர்வுநிலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. இயற்கையை மிகப்பெரும் அழிவுக்கு உட்படுத்திவரும் இன்றைய நிலையில் தம் முன்னோர்களின் மரபின் கைப்பிடித்து, கால்களில் மிதிக்காமல், பாதுகைகள் அணிந்துப் புழங்காமல் பாதுகாக்கும் படகரின மக்களின் இந்தப் பாம்பெ உல்லின் வழக்காறு உறுதிப்படுத்துகின்றது நீலகிரி ஒரு பல்லூயிர் காப்பகம் என்பதை.

பார்வை நூல்கள் –

1. தென்னிந்திய குலங்களும் குடிகளும் – எட்கார்ட் தர்ஸ்டன்.

2. நீலகிரி பொரங்காடு சீமை படகர் இன மக்களின் மூலிகை மருத்துவம்,  கோ.சுனில்ஜோகி ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. (2012)

3. நீலகிரி படகர் இன மக்களின் மரபு சார் பண்பாட்டுப் புழங்கு பொருள்கள், கோ.சுனில்ஜோகி, முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. (2015)


நிழற்படங்கள் –

பாம்பெ உல்லு' புல்லின் படம் -
– 1.’பாம்பெ உல்லு’ புல்லின் படம் –

 பாம்பெ உல்லின் வேரினைத் திரியாக்கி வெளிச்சம் பெரும் நிலையில் உள்ள இப்புல்லின் காய்ந்த 'திரி பாம்பெ' நிலை.
– 2. பாம்பெ உல்லின் வேரினைத் திரியாக்கி வெளிச்சம் பெரும் நிலையில் உள்ள இப்புல்லின் காய்ந்த ‘திரி பாம்பெ’ நிலை. –

மங்கலச் சடங்கில் பாம்பெ உல்லுவினை வைத்து தீட்டுக் கழிப்பது.
– 3. மங்கலச் சடங்கில் பாம்பெ உல்லுவினை வைத்து தீட்டுக் கழிப்பது. –

Suniljogheema@gmail.com