அருளரின் ஆளுமை: அறிந்ததும், அறியாததும்!

அருளர்அமரர் அருளரை அவரது ‘லங்காராணி’ மூலம் மட்டுமே இதுவரை அறிந்திருந்தேன். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களிலொருவர் என்றும் அறிந்திருந்தேன். அவரது நாவலான ‘லங்கா ராணி’ மூலம் அவர் சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒருவர் என்றும் எண்ணியிருந்தேன். இலங்கைத் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தைத் தீவிரமாக ஆதரிக்கும் ஒருவராகவும் எண்ணியிருந்தேன். அவரது மறைவு முகநூலில் அவர் பற்றிய பல்வகைப்பட்ட பலரது கருத்துகளையும் வெளிப்படுத்தியது. அதன்பின்னரே அவரது எழுத்துகள் பற்றி கவனத்தைத் திருப்பினேன். எழுத்தாளர் சரவணன் கோமதி நடராசா தனது முகநூற் பதிவொன்றில் அருளரை அவரது லங்கா ராணிக்காகப்பாராட்டிய அதே சமயம் அவர் பாவிக்கும் சாதிரீதியிலான சொல்லாடல்களைத் தனது “தலித்தின் குறிப்புகள்” கட்டுரையில் விமர்சித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் “இந்த விமர்சனங்களுக்கு அப்பால் அவர் ஈழப் போராட்டத்துக்கு ஆற்றிய பங்களிப்பு மரியாதைக்குரியவை. அவர் எழுதிய லங்காராணி நாவல் இன்றும் ஒரு முக்கிய இலக்கியமாகவும், பதிவாகவும் போற்றப்படுகிறது. தோழருக்கு செவ்வணக்கங்கள்.” என்றும் அஞ்சலி செலுத்தியிருந்தார். எழுத்தாளர் மைக்கல் (சதுக்கபூதம்) தனது முகநூற் பதிவொன்றில் அருளர் கோவியர்களோடும் ,ஒடுக்கப்பட்ட மனுஷர்களோடும தோளணைக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவை போல் அருளரைப்பற்றிய பல்வகையான கருத்துகளை முகநூலில் காணமுடிந்தது.

அருளர் முகநூலிலும் இருப்பதாக அறிந்தேன். ரிச்சர்ட் அருட்பிரகாசம் (Richard Arudpragasam) என்னும் அடையாளத்தில் அவர் இருப்பதாகவும் அறிந்தேன். அவர் என் நட்பு வட்டத்தில் இல்லாததால் அவரது பதிவுகள் எவையும் என் கண்களில் தட்டுப்பட்டிருக்கவில்லை. அவரது பதிவுகளைப் பார்வையிட்டபோது அவரது இதுவரை நான் அறியாதிருந்த ஆளுமையினை, அவரது மறுபக்கத்தினை அறியும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒருவகையில் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது என்பேன். இதுவரை நான் என் மனத்தில் பதிவு செய்திருந்த அருளர் வேறு, முகநூலில் இயங்கிக்கொண்டிருந்த அருளர் வேறு என்பதை என்பதை உணர முடிந்தது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையைப்பற்றிய அவரது கருத்து பின்வருமாறிருந்தது: ” தமிழர் தாயகம் தமிழ் சொந்தமானது, சிங்கள தாயகம் சிங்கள மக்களுக்கு சொந்தமானது,இலங்கை மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்னும்அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழீழ தேசத்துவ இறையாண்மையை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது”. இவ்விதமான கருத்துள்ள ஒருவரான அருளர்’தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் பரஸ்பர நல்லெண்ணத்தையும், இணக்கப்பாட்டையும், சுமூக வாழ்வையும் உறுதி செய்வது’ என்றும் தனது பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதமாகப் பொதுவாக அறிந்திருந்த அருளரை அவரது முகநூற் பதிவுகள் வேறொரு கோணத்தில் அடையாளப்படுத்தின. கோவியர்களை அவர் கடுமையாக எதிர்க்கின்றார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் இலங்கை வந்ததற்குக் காரணங்கள் பல இருக்கக் கூடும். ஆனால் அதற்காக அச்சமூகத்தின் நிகழ்காலத்தினரை மூர்க்கமாக எதிர்ப்பது சரியாகத் தோன்றவில்லையே. உண்மையில் அருளர் ‘கோவிய அரசியல் ‘ என்று கருதுதுவது என்ன என்பது பற்றிய விரிவான ஆய்வொன்றினையும் அவரது சொல்லாடல்கள் வேண்டி நிற்கின்றன.

உதாரணத்து அருளரின் மூன்று முகநூற் பதிவுகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். அவை வருமாறு:

1. Richrd Arudprgasam August 21, 2013: “ஈனச் சாதிக் கோவியரின் கூட்டிக் குடுக்கும் கோவியக் கூத்து சித்தாந்த செயல் பாடுகளை சக்தி வானொலியும் தொலைகாட்சியும் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது என நினைக்கின்றேன்”

2. Richard Arudpragasam – August 26, 2013: “இனப் பிரச்சினையின் தீர்வுக்கு முஸ்லீம்கள் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தொப்பிச் பிரட்டிச் சோனியின் வான் கோழியின் ஆட்டச் சித்தாந்தத்தை கைவிட்டு யதார்த்தமாக முஸ்லீம்கள் இனபிரசினையின் தீர்வுக்கு உதவ வேண்டும். வரலாற்று ரீதியான ஆட்சி உரிமை நில உரிமை தான் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது. இந்த உரிமை முஸ்லிகளுக்கு வடக்கு கிழக்கில் கிடையாது. அதிகம் பிள்ளைகளப் பெறுவதால் இந்த நிலைமையை மாற்றிவிட முடியாது. இணைந்த தமிழர் தாயகத்தை ஆதரித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வென்று உரிமைகளை உறுதி செய்து கொள்ள .முஸ்லீம்கள் முன்வர வேண்டும்.”

3. Richard Arudpragasam April 15, 2016: “தமிழ் மக்களின் தேசத்துவ இறையாண்மை வெள்ளாளர்ககளின் மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் எனக் கருதி அதை எதிர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக கருதப்படும் சாதிகளாகும். இதில் முக்கியமாக இரண்டாம் நிலைச்சாதிகளான கரையார், கோபிகர். முக்குவர் போன்றோர் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளான கொல்லர், தச்சர், நளவர், பள்ளர், பறையரை இணைத்துக் கொண்டு தேசத்துவ இறையாண்மையை எதிருப்பவர்களாக உள்ளனர். இந்த சாதிகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம் என்றால், கோபிகர் சக்தி தொலைக்காட்சி வானொலி நிறுவனங்களின் ஊடாகவும், தமது அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நிற்கின்றனர். இந்த சாதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறான வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டுள்ளன. அதில் கோபிகர் கண்டி இராச்சியத்தை ஆண்ட தெலுங்குப் பரம்பரையில் வந்தவர்கள். நாயக்கர் வம்சத்தின் பிரதிநிதியாக இருந்து வந்த கோபால முதலியார் வம்சத்தில் வழிவந்தவர்களாக கருதப்படுகின்றனர். இதில் பொதுவாக கண்டி ராச்சியத்தை ஆண்ட கோபிக் குடிகள் என்ற பெயரே பின்னர் கோபிகராக மருவியது. பின்னர் 1815 இல் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்திலிருந்து இவர்களை வெளியேற்றிய பின்னர் வடக்கு கிழக்கில் குடியேறினார்கள். இவர்களை யாழ்ப்பாண இராச்சிய வெள்ளார் மேலாதிக்கம் பாரம்பரியம் இவர்களை தாழ்த்தப்பட்ட சாதியாக உள்வாங்கியது. இதுவே பின்னாளில் கோபிகருடைய அரசியலுக்கு பின்புலமாக அமைகிறது. இவர்கள் முழு இலங்கையை ஆளும் கனவோடு உள்ளார்கள். இதனால் இவர்களுக்கு தமிழீழ தேசத்துவ இறையாண்மையில் நம்பிக்கை வைப்பது கடினமாகவுள்ளது. அத்தோடு வெள்ளாளர் மேலாதிக்கத்தின் கீழ் தமக்கு இரண்டாம் தர அந்தஸ்தே கிடைக்கும் என அச்சமும் உள்ளது. அதனால் இவர்கள் ஒற்றையாட்சி ஆதரிப்பவர்களாகவுள்ளனர்.”

முதலாவது கூற்றில் அவர் ஒரு சமூகம் பற்றி பெயர் குறிப்பிட்டுக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கின்றார். இரண்டாவது கூற்றில் முஸ்லிம் இனத்தைப்பற்றிப் பொதுவெளியில் பாவிக்கக்கூடாத சொற் பிரயோகங்களை பாவித்திருக்கின்றார். ‘தமிழர் தாயகத்தை ஆதரித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை வென்று உரிமைகளை உறுதி செய்து கொள்ள .முஸ்லீம்கள் முன்வர வேண்டும்.’ என்றும் கூறுகின்றார். இதனைத்தானே பெரும்பான்மை இனவெறி அரசியல்வாதிகளும் தமிழர்களைப்பார்த்துக் கூறுகின்றார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மூன்றாவது கூற்றும் மிகவும் தவறானது. தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தில் அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். பாராளுமன்றத்தேர்தலில் கூட உடுப்பிட்டியில் அனைத்துச் சமூக மக்களும் ஒன்றிணைந்து இராசலிங்கத்தைக் கூட்டணி சார்பில் வெற்றிபெற வைத்தார்கள். விடுதலை அமைப்புகள் எல்லாவற்றிலும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் இணைந்து போராடினார்கள். தம்முயிரைப் பலி கொடுத்தார்கள்.

சமதர்மத்தைத் தன் நாவலில் வலியுறுத்திய எழுத்தாளர், சமதர்ம விடுதலைக்காகப்போராடும் அரசியல் அமைப்பொன்றின் ஸ்தாபகர்களிலொருவர் மக்களைச் சமூக ரீதியாக, இனரீதியாகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கின்றார். இவருடைய நண்பர்களாக . மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் பிரபல கலை, இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள். யாருமே அருளரின் இவ்வகையான சொல்லாடல்களைப்பற்றிப் பொதுவெளியில் கண்டித்துத் தம் கருத்துகளை முன் வைக்கவில்லை எழுத்தாளர் சரவணனைத் தவிர. ஆச்சரியமாகவிருக்கின்றது.

அருளர் தனி மனிதரல்லர். அவர் பொதுமனிதர். அரசியல் பொதுவெளியில் உள்ளவர். விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. மறைந்த , இருக்கும் கலை, இலக்கியவாதிகளை, அரசியல்வாதிகளையெல்லாம் இன்றும் விமர்சிக்கின்றோம். அருளர் மட்டும் விதிவிலக்கானவரல்லர். அவரது சொல்லாடல்களைத்தாம் விமர்சிக்கின்றோம்.

ngiri2704@rogers.com