சிறுகதை: புலம்பெயர்ந்த காகம்

நாகரத்தினம் கிருஷ்ணா‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38

கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?

இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் “கொக்கரிக்கோ ” எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. ” இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.

இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..

இப்படி திடுமென்று பிரான்சில்,அதுவும் இவர் இருக்கின்ற குளிர்கூடிய நகரத்தில் காகத்தினை எதிர்பார்க்கவில்லை. படுக்கை அறையில் நுழைந்து பால்கனி வழியாக எட்டிப் பார்த்தார்.

அவருக்கு நம்புவது கடினமாக இருந்தது. அது ஒரு காகம் அல்லது காகத்தின் சாயலில் இருந்த ஒன்று. கண்ணாற் பார்த்ததும் காதாற் கேட்டதும் அது காகம் என்று ஊர்ஜிதம் செய்தாலும், மனம் நம்ப மறுத்தது. தீர விசாரிப்பதே மெய் என்பதின் முதற் கட்டமாக கீழே இறங்கி அதன் எதிரே சென்று கொஞ்ச நேரம் நின்றார். திரும்பக் கத்தும் என எதிர்பார்த்தார். ம்.. இல்லை. மாறாக இறக்கைகளைப் படபடத்து, கண்களில் பயத்தை இடுக்கிக் கொண்டு, குதித்துக் குதித்து அருகிலிருந்த பைன் மர மெல்லிய இருளில் ஒதுங்கிநின்று என்ன நினைத்ததோ மறுபடியும் கா கா கா… அந்தக் குரலுக்கு ஆறுதல் அளிக்க அல்லது துணையாக வேறு காக்கைகள் வருமோ? எனச் சில விநாடிகள் அவர் காத்திருக்க, அங்கே அசாதரண மெளனம். குரல் கொடுத்த காக்கையிடத்தும் அந்த எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். எல்லாத் திசைகளிலும், தலையை நான்கைந்து முறை வெட்டி வெட்டி இழுத்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் இவரைப் பார்த்தது. அதன் பதற்றத்தைத் தணிக்கின்ற வகையில் மெள்ள அதனை நெருங்கிக் கைகளைக் கொண்டுபோனார். அதற்குப் பயம் குறைந்ததா அல்லது மறுபடியும் குதித்து ஓட வழியில்லையா எனத் தெரியவில்லை. அமைதியாக அசையாமல் நின்றது. மெள்ளப் பற்றினார். இந்த முறை சற்று அதிகமாக கா.. கா. என்று கூச்சலிட்டு அவரிடம் இருந்து விடுபடமுயன்று தோற்றுப் பின்னர் சோர்ந்து அவரைப் பார்த்தது. உள்ளே கொண்டு போனால் சத்தம் போடுமே என்ற கேள்வி எழுந்தது. சந்தேகத்தோடு பார்த்தார். அதற்கு என்ன புரிந்ததோ மெளனமாய் நின்றது. கைகளில் அணைத்துக் கொண்டு உள்ளே கொண்டு வந்தார்.

படுக்கையில் புரண்டு படுத்த அவரது திருமதி “என்னங்க சத்தம் ? கொஞ்சம் கதவடைக்கிறீங்களா?” என்று சொல்லிவிட்டு புரண்டு படுத்தாள். காலை எட்டு மணிக்கு முன்னதாக அவள் எழுந்திருப்பதில்லை. அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்களுக்கு வேண்டிய காலை உணவை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அதற்குப் பிறகு தங்களைத் தாங்களே தயார்படுத்திக்கொண்டு அவரவர் பள்ளிக்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்கோ சென்றார்களென்றால் திரும்பிவர, மாலையாகிவிடும். எட்டுமணிக்கு எழுந்து, பத்துமணிக்கு சமைக்க உட்கார்ந்து பதினோருமணிக்கு வீட்டைச் சுத்தப் படுத்துகிறேன் என ஆரம்பித்தால் பின்னேரம் வரை சுத்தம் செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு எல்லாம் பளிச்சென்று அந்தந்த இடத்தில் இருக்கவேண்டும். அவளைத் தவிர அந்த வீட்டில் யாருமே அசுத்தவாதிகள் என்பது அவளது கட்சி.

கொண்டுவந்த காகத்தைச் சமயலறையின் மேசையில் நிறுத்தி, குக்கரில் நேற்றைய சாதம் ஏதேனும் இருக்குமா என்றுபார்த்தார். இருந்தது. ஒரு பிடி எடுத்து ஆர்வத்தோடு அதன் முன் வைத்தார். கா கா.. எனச் சொல்ல நினைத்து வெட்கப்பட்டு ஆவலைத் தணித்துக் கொண்டார். இப்போது அவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. எங்கேஅது தொண்டை கிழியக் கத்தி ஊரைக் கூட்டிவிடுமோ என்ற பயம். அப்படி ஏதும் நிகழ்ந்து விடவில்லை. மாறாக, உணவை ஆவலோடு அலகில் முடிந்த மட்டும் கொத்தி விழுங்க ஆரம்பித்தது. சந்தோஷம் நிறப்பிரிகையாய்த் தோகைவிரித்தது. அவருக்குள் இருந்த மன அழுத்தம் குறைந்திருந்தது

சம்தி அவரது குடும்பப்பெயர் அல்லது முதலாவது பெயர் எனச் சொல்லலாம். பெயருக்கு முன்னால் தகப்பன் பெயரைப் போட்டுக் கொள்ளுவதில் என்ன குழப்பமோ? பிரான்சில் எல்லோருக்குமே இந்த குடும்பப்பெயர்தான் முதற் பெயர். ஒருவரை அடையாளப் படுத்துவதற்கு உதவுவது என்னவோ இந்தக் குடும்பப்பெயர்தான். சொந்தப்பெயர்கள் வீட்டில் மட்டுமே பயன்படுத்தபடும். இந்தக் குடும்பப் பெயரை வைத்து வம்சாவளிகளை எத்தனை தலைமுறையானாலும் அடையாளப் படுத்தமுடியும். ஆனால் அவருக்கு சம்தி என்ற பெயர் வந்ததில் சுவாரஸ்யமான செய்தி உண்டு.

அப்போது புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களுக்கு அடிமைப் பட்டிருந்தநேரம். வியட்நாம் போருக்கு, பிரெஞ்சு ராணுவம் ஆட்சேர்த்துக் கொண்டிருந்தது. சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ தண்டிக்கப்பட்டிருந்தவர்கள் எல்லாம் கப்பல் ஏறினால் விமோசனம் கிடைக்கும் எனக் காத்திருந்த காலம். அப்படிக் காத்திருந்தவர்களிலே கோவிந்தசாமியும் ஒருவர். தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கச்சிரமப்பட்ட பிரெஞ்சுக்காரன் அவனுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் தமிழனுக்கு வைத்தான். அவருக்கு முன்னே வரிசையில் நின்றவர்களுக்கு வாரத்தின் நாட்களின் பெயர்களை வைத்துக் கொண்டு போக, இவருக்குக்கிடைத்தது ‘சம்தி’. ‘சம்தி’ யென்றால் பிரெஞ்சில் சனிக்கிழமை. வேலுநாயக்கர் கோவிந்தசாமி சம்தி கோவிந்தசாமியாகி இருபது ஆண்டுகாலம் வியட்நாம் , அல்ஜ”ரியாஆகிய நாடுகளில் ‘சொல்தா’ வாகக் காலந் தள்ளிவிட்டு கணிசமான பணத்தோடு இந்தியாவிற்குத் திரும்பி கிராமத்தில் வீடு, நிலம் என வாங்கிப் போட்டு, பிரெஞ்சுக்காரன் கொடுத்த பென்ஷனில், ராஜ வாழ்க்கை. அதைத் தொடர வேண்டுமே, அவரது இரண்டாவது மகன் சம்தி பாஸ்கரனை பிரான்சுக்கு அனுப்பி வைத்தார்.

ஏதோ ஒர் ஆர்வத்தோடு வந்து, தாசி வீட்டின் ஆரம்பகால போகியாய்த் தொடர்ந்த சம்தி பாஸ்கரனின் பிரான்சு வாழ்க்கை, இந்த 30 ஆண்டுகளில் அவர் அறிந்தோ அறியாமலோ எதை எதையோ இழந்து கசந்து முடிந்திருக்கிறது. இங்கே வானும் மண்ணும், நீரும் காற்றும்கூட ஒருவித அன்னியத்துடன் பழகி வந்திருப்பதை உணரத் தலைப் பட்டபோது காலம் கடந்திருந்தது. பிரான்சுத்கு வந்தவுடன், பிரெஞ்சு ராணுவத்தில் ஒரு வருடக் கட்டாய சேவையை முடித்து வெளிவந்தவருக்கு ஏமாற்றங்கள் வரிசையாய்த் காத்திருந்தன. வேலைவாய்ப்பின்மை, பெருகிவரும் வன்முறை, எனத்தொடரும் பிரச்சனைகளுக்கு வெளிநாட்டினரே காரணம் என்று வலதுசாரித் தீவிரவாதக் கட்சிகள் குற்றஞ் சாட்ட, அதைக் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அவர் இன்றைக்குவரை வேலை செய்த தொழிற்சாலையில், பயணம் செய்யும் பஸ்ஸில், மருந்து வாங்கப்போன பார்மஸியில், ஏன் நேற்றுவரை இவர் எதிர்ப்படும்போதெல்லாம் “போன்ழூர்” சொல்வானே ழில்பெர் அவனிடத்திற்கூட அந்த மாற்றத்தின் இறுக்கம் தெரிந்தது.

ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்துவிட்டு அந்த ரொட்டிகள் தயாரிக்கும் உசினில் இரவு நேர ஊழியராகப் பணியில் சேர்ந்தபோது சந்தோஷப்பட்டது வாஸ்த்தவம். கைநிறையச் சம்பளம், கூடுதலாக ஏதேதோ பெயரில் ஊக்கத் தொகைகள், கனிவான நிர்வாகம், என அனைத்தும் சேர்ந்து அவரை அதிஷ்டசாலி என்றது . கற்பனையில் விரிந்த அந்த வாழ்வுக்கும் கண்முன்னே தெரிந்த இந்த வாழ்வுக்கும் இடையிலான அகன்றவெளிக்கு யார் காரணம். அவர் பிறந்த மண்ணா? புலம் பெயர்ந்த மண்ணா?

பிரான்சுக்கு வந்த புதிதில் ‘சம்தி என்ற தனது பெயர்குறித்து ஒரு வித அற்பசந்தோஷம். வித்தியாசமான அந்தப் பெயரும், இங்கே வந்து அவர் தழுவிய மதமும் சேர்ந்து, பிரெஞ்சுக் காரனோடு தன்னை நிகராக்கிவிடும் என்ற பேராசை அவருக்குள்ளும் இருந்தது. மாற்றத்தை மதமோ பெயரோ அழைத்து வராது, நல்ல மனங்கள்தான் அழைத்து வரவேண்டும் என்பது அவரைப் பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. இப்படித்தான் ஒரு நாள் தொழிற்சாலையில் புதிதாக பொறுப்பேற்றிருந்த உற்பத்தி இயக்குனர் இவரை “ஷேப் த எக்கிப்” ஆக பதவி உயர்வு செய்வதற்குக் கூப்பிட்டனுப்பினான். இவரை நேரில் பார்த்தவுடன் “அடடே நீ இந்தியனா? உன் பெயரை வைத்து ஏமாந்து விட்டேன்” என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பதவி ஒரு இத்தாலியனுக்குப் போய்ச் சேர்ந்தது.

இன்றைக்கும் அப்படித்தான் தொழிற்சாலையில் கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட நட்டத்தை சரிக் கட்ட ஆட்குறைப்பை நிருவாகம் அறிவித்தது. பாதிக்கப்பட்டிருந்த பதினைந்துபேருக்குள்ளும் அடிப்படையில் ஒர் ஒற்றுமை. சம்தி பாஸ்கரன் இந்தியா என்றால், போனிபாஸ் செனகலிலிருந்தும், தான் சூன் லாவோசிலிருந்தும், அஜ்மால் மொராக்கோவிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்தவர்கள், அந்நியர்கள் அதுதான் உண்மை.

நினைவிலிருந்து மீண்டு காகத்தைப் பார்த்தார். அதற்குக் கவனம் முழுதும் சோற்றுருண்டைகள் மீது. இந்த மனிதர்களுக்கும் காக்கைக்கும் அதிக வித்தியாசமில்லை . “உபரி” என்கின்ற போது கூவி அழைப்பதும், இல்லை என்கின்றபோது எரிச்சல் படுவதும் இயற்கை என்றாகிவிட்டது.

“என்னங்க இது? காகம் மாதிரி இருக்கே?”

மனைவியின் குரல் தீண்ட, தன் மனோ அவஸ்தைகளிலிருந்து மீண்டு அவளைப் பார்த்தார்.

“ஆமாம் காகமேதான்.” அமைதியாக பதிலிறுத்தார்.

“என்னாலெ நம்ப முடியலையே!”

“நம்பித்தான் ஆகணும். எப்படியோ வந்துட்டுது. ஏன் இப்படி வரணும்? இந்த மண்ணுல சாகணும்ணு அதுக்குத் தலையெழுத்தா?”

“என்ன பேசறீங்க நீங்க? பாவம். அதற்கு பழைய இடத்துல என்ன பிரச்சினையோ?”