கலாச்சாரத்தை மையப்படுத்தல் என்ற அடிப்படையினைப் பெரியார் தனது சிந்தனை முதன்மையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் நடைபெற வேண்டிய எழுச்சி கலாச்சாரக் கேள்விகளைக் கொண்ட எழுச்சிதான் என்பதனைத் தனது செயல்பாடுகளில் வகைப்படுத்தியிருக்கிறார். “ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சார வாதியாக, எல்லா விதமான பற்றுகளுக்கும் எதிரியாக, சுய உறுதியாகத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக்கொள்ளப் பயன்படும்” (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 152) பண்பாட்டு அடிப்படையிலான நிகழ்காலச் சூழலின் மீது விமர்சனம் செய்த பெரியாரின் சிந்தனை மரபினைக் கடவுள் மறுப்பாளர் என்ற பொதுப் பின்னணியில் வைத்து குறுக்கிவிடுகின்றனர். பண்பாட்டு அடிப்படையிலான முன்னெடுப்புகள்தான் பெரியாரியச் சிந்தனையின் மையப்புள்ளி என்பதனைக் கிராம்சியின் அணுகுமுறைகளிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.
கிராம்சி காந்தியின் போராட்ட வடிவங்களைப் பிற்பற்றியதோடு அதனைக்குறித்து நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்கிறார். இத்தாலியின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பண்பாட்டு வடிவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினைக் குறித்துப் பேசிய கிராம்சி பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் முன்னெடுப்புகளைவிட பண்பாட்டு முன்னெடுப்பு வடிவிலான நடைமுறை செயல்பாட்டு விமர்சனங்கள் முக்கியமானது என வலியுறுத்துகிறார். இந்த வகையான சமூக நிலைப்பாடுகளைக் குறித்து மார்க்ஸின் கருத்துக்களும் நோக்கத்தக்கது. இந்தியச் சமூகம் நிலைப்படுத்தப்பட்ட வடிவிலானது. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. “ஆசியக் குழுமச் சமூகத்தில் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ குறிக்கப்படலாம். இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை” (ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, ப. 19) இந்தியச் சமூகத்தின் பிணைப்பு மணமுறையுடன் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் குழுவின் பிளவுகளில் தங்கியிருக்கிறது. இந்த வகையான சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் மட்டுமல்ல. தெய்வமும் பண்பாட்டு வழக்கங்களும் என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
“கிராம்ஷியின் மார்க்ஸிய மெய்யியல் ஒருமைப்பாட்டுக் கருத்தாக்கம் ‘நடைமுறையியல்’ ஆகும். கோட்பாட்டையும் நடைமுறையையும் சிந்தனையையும் செயல்முறையையும், அகவயத்தையும் புறவயத்தையும் ஒன்றிணைப்பது பற்றிய அவரது அறிவுப் பிரயத்தனத்தில் நடைமுறையியலுக்கு முக்கியப் பங்கிருந்தது. அரசியல் மாற்றங்களுக்குப் பகுத்தறிவுரீதியான அறிதல் செயற்பாடு மட்டும் போதுமானதல்ல என கிராம்ஷி கருதினார்” (எம்.எஸ்.எம் அனஸ், மெய்யியல் கிரேக்க முதல் தற்காலம் வரை, 2013, ப. 275) இங்கு கிராம்சியும் பெரியாரும் ஒத்தக் கருத்துக்களைக் கொண்டவர்களாக மட்டுமல்லாமல் அடிப்படையில் செயல்பாட்டினைக் கொண்டவர்களாகவுமிருக்கின்றனர். பண்பாட்டு மையங்களை கேள்விக்குட்படுத்தி அதன் மதிப்பீட்டினை மக்களிடம் உணர்த்துதல் என்ற பான்மையைப் பெரியார் மேற்கொள்கிறார்.
பூணூல், நெருப்பினை மையமாகக் கொண்ட கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம். இதிலிருந்து நாம் விடுபடவேண்டும் என வலியுறுத்தும் பெரியார் மேலும் “போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றிபெற முடியாது. கலாச்சாரத்தின்பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்தப்பட வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம். மொழிப் போராட்டம் கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது” (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 48) எனவே இவை பண்பாட்டு கூறுகளிலிருந்து பெறப்படுகின்ற விழுமியங்கள் புனிதத்துவம் கொண்டவையென்று இச்சமூகத்தின் கருத்தியல்களால் மீண்டும் மீண்டும் நம்ப வைக்கப்படுகிறது. இக்கூறுகள் ஏற்றத்தாழ்வான சமூகப் பண்புகளைக் கொண்டிருக்கின்றனவென்றும் அவற்றின் உண்மை நிலவரங்களை மக்களிடம் அறவிப்படுத்த வேண்டும்; இத்தகைய விழிப்புநிலையே உண்மையான சமூகச் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
பெரியார் கலாச்சாரத் தளத்தில் போராட்டத்தின் முதன்மையை எடுத்துரைக்கிறார். ‘ஊர்வலம், மலர், மாலைகள் போன்ற உபச்சாரங்கள் மேட்டிமைத் தன்மையைக் காட்டுவதோடு பயனற்றது’ (ஈ.வெ.ரா. சி., ப. 4436) என்பதோடு தோழர் என்ற பதத்தைப் பயன்படுத்துங்கள், சாதிப் பெயரை நீக்குங்கள், ஆலயவுரிமை அவசியமில்லை, விக்கிரக உடைப்பு, குறியீட்டு தன்மை அழிப்பு (பட்டை, நாமம், தாலி, கதர் உடை) போன்ற பண்பாட்டு வேற்றுமைகளைக் களைய வேண்டும் என எதிர்க்கலாச்சாரத் தன்மைகளை வலியுறுத்துகிறார். அடையாளங்கள் பண்பாட்டு மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. அதன்மீதுள்ள புனிதத்தைக் கொட்டிக் கவிழ்க்கும்போது புதிய கலாச்சார உத்வேகம் ஏற்பட்டு சமூகம் முன்னேற்றமடையும் என்ற ரீதியில் பின்நவீனக் கருத்தியலுடன் பெரியார் ஒத்துபோகிறார்.
மனிதன் இத்தகைய முரணான பண்பாட்டு கருத்தியலிருந்து போராட வேண்டியவனாக இருக்கிறான். சமூக இயங்கியலில் தனித்துவிடப்பட்டு ஏற்றத்தாழ்வுகளால் அந்நியப்பட்டு நிற்கிறான். மதக் கருத்தியலிருந்து முளைக்கிற பண்பாட்டு வேறுபாடுகள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப்பட்ட மக்களைச் சமூகத்தின் மையத்திலிருந்து ஒதுக்குகிறது. ஆதிக்கச் சாதியினர் பண்புகளின் மேன்மைகளால் தன்னைப் புனிதத் தன்மை கொண்டவனாகக் கட்டமைத்துக் கொள்வதோடு பின் தங்கிய சமூக உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளுகிறது. புனிதம் / தீட்டு என்ற எதிர்வு கலாச்சார முரண்பாடுகள் தோற்றம் கொள்கின்றன. இத்தகைய வருணநிலைப்பட்ட சாதியப் பண்புகளையும் பண்பாட்டு மதிப்பீடுகளையும் தகர்க்காவிட்டால் மேலாதிக்கக் காரர்களின் வெகுசன அரசியல் மாண்புகளே சமூகத்தில் நிலையானதாக மாறி பின்தங்கியவர்களின் உணர்வுகளுக்கு எதிரானதாக மாறிவிடும். சமூகத்தைப் பலகோணங்களில் பிளவுபடுத்துவதற்கேதுவான கூறுகள் பண்பாட்டுக் கூறுகளில் அதிகம் காணப்படுகின்றன. எனவே சமூகத்தைப் பலப்படுத்த வேண்டுமானால் பண்பாட்டு விழுமியங்களின் புனிதத்தைத் தகர்த்து சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற புரிதல் பெரியாரிடம் தெளிவாகவே காணப்படுகிறது.
பெரியாரைச் சிந்தனையாளர், தத்துவவாதி என்ற அடையாளத்திற்குள் கொண்டுவருவதற்கான கூறுகள் இல்லை என்றே தொடர்ந்து மதிப்பிடுகின்றனர். பெரியார் சிந்தனையாளர் என்பதற்கான எடுகோளை கிராம்சியின் கூற்றுகளிலிருந்து பெற இயலுகிறது. “பாரம்பரிய அறிவுஜீவிகள் என்போர் இருக்கிற நிலைக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் உயிர்ப்புமிகு அறிவுஜீவி என்பவன் ஸ்டேடஸ்கோவிற்கு எதிராக இருப்பவன். இந்த உயிர்ப்புமிகு அறிவுஜீவிகளிடம்கூட ஏதும் பலவீனங்கள் இருந்தால் பின்னாளில் அவர்களையும் அவை உள்வாங்கும்” (அ. மார்க்ஸ், பெரியார் தலித்துக்கள் முஸ்லீம்கள் தமிழ்த தேசியர்கள், 2018, ப. 12) இந்த மதிப்பீட்டின்படி பார்த்தால் பெரியார் நடக்கின்ற சூழலை ஏற்றுக்கொள்ளாத அராஜகவாத சிந்தனையாளர் என்று வரையறை கொள்ள இயலும். அரசியலை மறுக்கின்ற அனாக்கிசவாதி, தேசியத்தை மறுக்கின்ற சுயராஜ்ய வேட்கையாளர், அகமண முறையை மறுக்கின்ற பகுத்தறிவுவாதி சமூக இயங்கியலில் புதிய கலாச்சார நவீன மாறுதல்களை எதிர்நோக்குகிற, கலாச்சாரத்தைத் தகர்த்து மீளாய்வு செய்கிற சிந்தனையாளராகப் பெரியார் இருக்கிறார்.
பின்நவீனம் கலாச்சாரத்தின் எழுச்சி விளிம்புநிலைப்பட்ட மொழி, கலை, இலக்கியம், பாடல், கவிதை, சொல்லாடல் போன்றவற்றின் முன்னெடுப்புகளால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்கிறது. பெரியார் கீழ்ச்சாதி பண்பாட்டு தன்மைகளைப் போக்கிக் கொள்ள கீழ்க்கண்ட முறைமைகளைப் பின்பற்ற வேண்டுமென்கிறார்.
“1. எந்த இந்து கோயிலுக்கும் நீங்கள் – பிற்படுத்தப்பட்ட, கீழ்ச்சாதி மக்கள் யாரும் போகக் கூடாது.
2. இந்துமதக் கடவுளைக் கும்பிடக்கூடாது.
3. இந்துமதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக் கூடாது.
5. உச்சிக் குடுமியை – ‘சோட்டி’ யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது.
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.
8. இந்தக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக்கூடாது.
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச்சாலை, சிற்றுண்டி சாலைகளுக்குப் போகக்கூடாது”
(ஈ.வெ.ரா. சி., ப. 2273) என்று கலாச்சார ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் அடையாள அடிப்படையினைச் ‘சமூகத்தளத்தில் புகுத்த முயற்சிக்கிறார். கலாச்சாரக் கூறுகளைக் கேள்வியெழுப்புவதன் மூலம் அதன் புனிதத் தன்மையைக் கட்டுடைக்கும் பான்மையைக் கையாள்கிறார். ’மோட்சம், நரகம் போன்ற இந்துத்துவ மதிப்பீடுகள்’ (மேலது., ப. 4216) ‘கொலை செய்தால் கூட பாவமில்லை ஆனால் பறையனை திண்ணையில் உட்கார வைக்க பயப்படும் பண்பாட்டு குணங்கள்’ (மேலது., ப. 4271) ‘மேல்சாதிக்காரன் உயர்வான குணமுள்ளவன் கீழ்ச்சாதிக்காரனிடம் ஒழுக்கமில்லை’ (மேலது., ப. 3827) ‘நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் 20 லட்சம்பேரே. அவர்களின் மனம் புண்படும் என்று தடைச் சட்டம் கொண்டு வர முயல்வது’ (மேலது., ப. 2094) என்ற கருத்தியல்களைச் சமூக விவாதங்களின்மூலம் மக்களிடம் பரப்புவது; அதன் மூலமான அறிவுப் பரவலைச் சமூகத்தில் நேரடியாக ஏற்படுத்துவது சமூகத்துடன் நேரடியான செயல்பாடுகளை மேற்கொள்ளும் கருத்துடையவராக விளங்குகிறார்.
“சமூகத்தில் எல்லாவற்றைப் பற்றியும் ஒரு பொதுக் கருத்து (Consensus) நிலவுவதாக சிவில் சமூகம் நிலவுகிறது. இந்த மாயையைச் சிதைத்துச் சமூகத்தில் நிலவும் பல்வேறு விதமான சிந்தனைகளையும் களத்திற்குக் கொண்டு வந்த அதற்கொரு ஏற்பை ஏற்படுத்துவது மாற்றுக் கலாச்சாரத்தின் பணியாகிறது” (அ. மார்க்ஸ், நிறப்பிரிகை, மாற்றுக் கலாச்சாரம் – விவாதத்திற்குரிய சில குறிப்புகள், ஏப்ரல் 6, 1993) சமூகத்தின் மட்டத்தில் முன்வைக்கின்ற கருத்தியல் விவாதங்களின் அடிப்படையிலான மாற்றங்கள்தான் இந்தியச் சமூகத்தில் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் புனிதம் போன்றவற்றின் வீழ்ச்சியை உறுதி செய்யும். சாதியத்தை ஒழித்து மாற்று குடிமைச் சமூகத்தினை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் நமக்கு இன்னும் புலனாகவில்லை என்று ந. முத்துமோகன் கருத்து தெரிவிக்கிறார். வர்க்கச் சமுதாயத்தின் அழிவு மதத்தின் அழிவினைக் கொண்டு மார்க்சியம் எடுத்துரைக்கிறது. ஆனால் பெரியாரிடம் கிராம்சியும் அரசியல் மாற்றங்களால் சமத்துவம் சாத்தியப்படாது. ஜனநாயகப்படுத்தல், பண்பாட்டு எழுச்சி, பண்பாட்ட மீளாய்வு முன்னெடுப்புகளால் இச்சமூகத்தின் பிளவினைப் போக்கி சமத்துவ உரிமையை பெறவியலும் என்கின்றனர்.
மக்களை நோக்கிய அணுகுமுறை
மக்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக மாறுகிறபொழுது சமூகத்தின் இயங்குநிலையும் இயல்பானதாக மாறும் என்கிற கருதுகோளைக் கொண்டிருக்கிற பெரியார் அதற்குத் தடையாக உள்ள கடவுள், மதம், விதி போன்ற நம்பிக்கைகளைப் போக்க மக்களிடம் நேரடியான அணுகுமுறையுடன் செயலாற்றி வருகிறார். மக்களின் சிந்தனைமுறை அறிவியல், ஆராய்ச்சி போன்ற தன்மைகள் உண்டாகும். அதனடிப்படையிலான சமூகம் சமத்துவ உணர்ச்சியுள்ள சமூகமாக மாற்றம் கொள்ளும் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் செயல்படும் பெரியார் நேரடியாகக் களத்தில் பணியாற்றுவதில் நம்பிக்கைக் கொண்டவராக விளங்குகிறார். “மனிதன் சமூக விடுதலைப் பெறும் காலத்தில், தற்கால ஊக்கி (Stimulent – தேநீர், காபி போல) யாகவோ, வேதனையாகவோ ,வேதனைக் குறைக்கும் மருந்தாகவோ மதம் இருக்க வேண்டியதில்லை ” (நா. வானமாமலை, இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும், 2008, ப. 43) என்கிறார் மார்க்ஸ். அரசியல் மாற்ற அடிப்படையில் உள்வாங்கப்பட்டிருக்கிற மார்க்சியக் கோட்பாடு நடைமுறையில் ஜனநாயகப் பண்பாட்டு புரட்சிகளில் பெருமளவு ஈடுபாடு கொண்டு செயலாற்றுவதில்லை.
எங்கெல்ஸின் வார்த்தைகளில் மேற்கண்ட யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடிகிறது. “உழைப்பாளர்கள் சட்சியின் திட்டத்தில் மதத்துடன் போராட வேண்டும் என்ற கருத்துடன் நாத்திக வாதத்தை திட்டவட்டமாகச் சேர்க்க வேண்டும் என்று கூறுவதைக் கண்டித்தார். பகிரங்கமாக மதத்தை எதித்துப் போராடுவது என்பது முட்டாள்தனத்தின் ஒரு பகுதி. போராட்டம்தான் மதம் மடிவதைத் தடுக்கும் சிறந்த வழி மட்டுமல்லாமல் மதத்தின்மீது உள்ள ஆர்வத்தைப் புதுப்பிக்கும் வழியும் ஆகும். உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டம் மட்டும்தான், ஏராளமான பாட்டாளி மக்களை உணர்வு பூர்வமான புரட்சிகர சமூக நடைமுறைக்குக் கொண்டுவருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களைமதத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும்” (எஸ். தோதாத்ரி, மார்க்சிசமும் மதமும், 2001, ப. 63) என்கிறார். இங்கு நேரடியான பண்பாட்டு புரட்சி தொழிற்படுவதை விலக்குகின்ற கருத்தியல் இருக்கிறது. உழைக்கும் மக்களின் போராட்டம் மட்டும்தான் சமூக மாற்றத்திற்கான வழிமுறை என்பதில் உறுதியாக இருக்கிறது. சமதர்மத்தின் பொறுப்பு தொழிலாளர்களுடையதாகிறது. இந்தவகையான அக்டோபர் புரட்சியைத்தான் லெனின் தலைமையும் விரும்புகிறது.
பெரியாரின் முன்னெடுப்பு நேரடியாக ஜனநாயகப்படுத்தல், பண்பாட்டு இழிவினை ஒழித்தல் சமூகத்தினை அறிவுப்படுத்தல் சிந்தனை முறையை மாற்றுதல் என்ற நடைமுறைகளை மேற்கொள்வதே பெரியார் சிந்தனை முறையியலாக இருக்கிறது. மக்கள் சமூகத்தின் இயங்குநிலைகளால் பயந்தாங்கொள்ளிகளாக இருக்கின்றனர். தன்னம்பிக்கை உணர்ச்சியில்லாமல் சமூக நடவடிக்கைகளில் பங்கொள்ளாமல், தங்களது “இழிவினை உணர்ந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர் எனக் கருதுகிறார். மனிதனுக்கு நலம் என்பவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத்திருப்தியேயாகும். அவனுடைய மனத்திற்குப் பூரண திருப்தி அளிக்கக்கூடியது எதுவோ அதுதான் அவனுக்குச் (சுய) நலமாகும்” (ஈ.வெ.ரா. சி., ப. 2454) என்கிறார். “நமக்குப் பயமே அதிகமாக இருக்கின்றது; தைரிய உணர்ச்சி என்பது சிறிதுகூட இல்லை” (மேலது., ப. 2621) “நிலைகுலைந்த தமிழர்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி ஊட்டி, அவர்களுக்குத் தன்மான உணர்வும் ஊட்ட வேண்டாமா? தமிழ் மக்களை – அவர்கள் படித்தவர்களானாலும் பண்டிதர்களானாலும், மந்திரி, கவர்னர் – வைசிராய் நிர்வாகசபை மெம்பர் ஆனாலும் பகுத்தறிவு விஷயத்தில் மரக்கட்டையாக்கிவிட்டு, தமிழரல்லாதவர் அடிமைப்படுத்திக் சுரண்டிக் கொள்வதைத் தடுக்க வேண்டாமா?” (மேலது., ப. 2475) மேற்கண்ட பெரியாரின் உரையாடல்கள் சமூக உளவியலுடன் நேரடித் தொடர்பு கொண்டதாகக் காட்டுகின்றன.
பெரியாரின் அணுகுமுறை ஜனநாயகப் பண்பாட்டு புரட்சியினையும் தாண்டி, சமூக உளவியலையும் அதனைப் பண்படுத்த வேண்டிய தேவையினையும் குறித்து அலசுவதாகக் காணப்படுகிறது. இந்திய வரலாற்றில் சிந்தனையாகப் பரிணமித்த பெரியார் மற்ற நாடுகளின் சீர்திருத்தங்களிலிருந்து இந்தியச் சூழ்நிலைகளில் வேறுபட்டு இயங்க வேண்டிய தேவையினை முற்றிலும் உணர்ந்திருக்கிறார்.
துணைமை ஆதாரங்கள்
ஆனைமுத்து. வே, (ப.ஆ.), பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், 2009, (இரண்டாம் பதிப்பு), பெரியார் ஈ.வெ. இராமசாமி – நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, சேப்பாக்கம், சென்னை – 600 005.
அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, (இரண்டாம் பதிப்பு), அடையாளம், புத்தாநத்தம், திருச்சிராப்பள்ளி – 621 310.
ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிட், அம்பத்தூர், சென்னை – 600 098.
எம்.எஸ்.எம் அனஸ், மெய்யியல் கிரேக்க முதல் தற்காலம் வரை, 2013, அடையாளம், புத்தாநத்தம், திருச்சிராப்பள்ளி – 621 310.
அ. மார்க்ஸ், பெரியார் தலித்துக்கள் முஸ்லீம்கள் தமிழ்த் தேசியர்கள், 2018, அடையாளம், புத்தாநத்தம், திருச்சிராப்பள்ளி – 621 310.
நா. வானமாமலை, இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும், 2008, அலைகள் வெளியீட்டகம், கோடம்பாக்கம், சென்னை – 600 024.
எஸ். தோதாத்ரி, மார்க்சிசமும் மதமும், 2001, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிட், அம்பத்தூர், சென்னை – 600 098.
sowndhri.priya@gmail.com
* கட்டுரையாளர் — செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 –