ஈழத்து ஆளுமைகளின் ஒப்பபுதல் வாக்கு மூலங்கள்: எம்.பௌசரின் ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

‘நேர்காணல்’ இன்று தவிர்க்க முடியாதபடி நவீன இலக்கியத்தில் ஒரு கலை வடிவமாக உருப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக்கலை, நாடகம் போன்றே ஆளுமைகளின் நேர்காணல்கள் யாவும் தொகுப்புக்களாக ஒரு கலை வடிவமாக  உருமாற்றம் அடைந்துவரும் மேற்கத்தைய சூழலில், அதற்கு சளைக்காத வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் நேர்காணல் வடிவம் ஆனது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்காணல்கள்   ஆனது பிரதிகள் மூலமே அறியப்பட்ட ஒரு ஆளுமையின், அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை எமக்கு உருவாக்கித் தருகின்றன. இவை  முக்கியமாக ஒரு ஆளுமையின் வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, மாறுபடும் கால, சூழலிற்கு ஏற்ப மாறுபடும் அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன குறித்த ஒரு நேரிடையான, தெளிவான பார்வைகளை  வெளிப்படுத்தி நிற்கின்றன.

90 களின் ஆரம்பித்தில் இருந்தே நேர்காணல் ஆனது நவீன தமிழ் இலக்கியச் சூழலில், அதிலும் முக்கியமாக சிறுபத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது. பல தருணங்களில் இலக்கியச் சூழலில் ஏற்படுகின்ற சோர்வினையும் அயற்சியினையும், நேர்காணல்கள் ஆனது அது ஏற்படுத்திய சர்ச்சைகள் மூலமும் பரபரப்புக்கள் மூலமும் விரட்டியடித்த வரலாறினை பல்வேறு காலகட்டங்களிலும் நாம் அவதானித்து வந்திருக்கின்றோம். இவ்வகையில் தமிழகத்தில் சுபமங்களா, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்கள் நேர்காணல்களை சிறப்பித்த இதழ்களாக அல்லது நேர்காணல்கள் மூலம் சிறப்புற்ற இதழ்களாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். இந்த நேர்காணல்களுக்காக மட்டுமே இவ்விதழ்களை காசு கொடுத்து வாங்கிப் படித்தவர்களும் உண்டு. இவ்விடயத்தில் ஈழத்தமிழ் இலக்கியமானது தனது கவனிப்பினை சரியாக செய்யாத நிலையில் , 90 களின் இறுதியில் இருந்து வெளிவர ஆரம்பித்த எம்.பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மூன்றாவது மனிதன்’ இதழானது தனது ஒவ்வொரு இதழிலும் ஒன்று அல்லது இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனான  நேர்காணல்களுடன் வெளிவந்து நேர்காணல்களுக்கும் இலக்கியத்திற்குமான உறவை பலப்படுத்தி நின்றது. இவற்றிடையே  மூன்றாவது மனிதன் பதிப்பகம் ஆனது இந்நேர்காணல்கள் பலவற்றினதும்  தொகுப்பாக ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற நூலினை வெளியிட்டு ஈழத்தமிழ் இலக்கிய உலகில் நேர்காணலுக்கான ஒரு நூலினை  முதலாவதாக வெளியிட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தடத்தைப் பதித்து விட்டிருந்தது.  இங்கு தோழர் பௌசரினால் தொகுத்தளிக்கப்பட்ட இந்நூல் குறித்து ஒரு பார்வையினையும் சில கருத்துக்களையும்  முன் வைப்பதே எமது நோக்கமாகும்.

ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற இந்நூலில் அன்றைய ஈழத்து இலக்கியத்தில்  தடம் பதித்த 12 ஆளுமைகளான  உமா வரதராஜன், எம்.ஏ.நுஃமான், கா.சிவத்தம்பி, சி.சிவசேகரம், வ.ஐ.ச. ஜெயபாலன், மு.பொன்னம்பலம், ஏ.இக்பால், சோலைக்கிளி, செ.யோகநாதன், டொமினிக் ஜீவா, சேரன் போன்றோரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் கா.சிவத்தம்பி, சே.யோகநாதன், ஏ.இக்பால், போன்றோர் இன்று உயிருடன் இல்லை என்பது வருத்தத்துடன் குறிப்பிடத்தக்கது. அத்துடன்  சோலைக்கிளியின் நேர்காணல் மட்டும் உமா வரதராஜனால் மேற்கொள்ளபட்டிருந்து என்பதுவும்  மற்றைய 11 நேர்காணல்களும் எம்.பௌசரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதுவும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

இந்நூலினை முழுவதமாக படித்து முடித்த பின்பு  ஒரு விடயம் துலக்கமாகப் புலப்படுகின்றது. கால மாற்றங்களினால் போது ஏற்பட்ட அவர்களது கருத்து நிலை மாற்றங்களும் வாழ்வியலில்  மாற்றங்களுமே இந்த 12 நேர்காணல்களினதும் அடிநாதமாக அமைகின்றது. 1960 களிலும் 70 களிலும் ஈழ இலக்கிய உலகில் தடம் பதித்த இவர்கள் 90 களின் இறுதியில் நேர்காணல் செய்யப்படுகின்றனர். இந்த 20,30 வருட கால இடைவெளிகளில் ஈழத்தில் மட்டும் இன்றி உலக அரங்கிலும் பல்வேறு விதமான தலை கீழ் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சியும் அதனால் ஏற்பட்ட இடது சாரியத்தின் பாரிய  பின்னடைவும் உலக அரங்கில் மட்டும் அன்றி ஈழத்திலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி நின்றது.  சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகள் கூர்மையாக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படுத்தப்பட்ட தமிழ்த்தேசியத்தின் எழுச்சியும் அதனால் உக்கிரமடைந்த ஈழவிடுதலைப் போரும் அப்போரினால் எழுந்த உள் முரண்பாடுகளும், இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளும்  ஈழத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாற்றங்களினால்  இவர்களின் வாழ்வியலில் மட்டுமல்ல, இவர்களது தத்துவார்த்தங்களிலும் சிந்தனைப் போக்குகளிலும் கூட பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த சறுக்கல்களும் தடம்புரள்தல்களும் குறித்து இவர்களது ஒப்புதல் வாக்கு மூலங்களாக இந்நூலானது ஒரு அரை நூற்றாண்டு காலம் ஈழத்தில் அரசியல் தளங்களிலும் சிந்தனைப் போக்குகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் சாட்சியங்களாக, அதன் ஆவணப் பிரதியாகத் திகழ்கின்றது.

இதில் உமா வரதராஜனின் நேர்காணல் முதலாவதாக வருகின்றது. ‘உள் மன யாத்திரை’ சிறுகதைத் தொகுதி மூலம் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் ஆழமாகக் கால்  பதித்த இவரது பதிவுகள் ஒரு கலகக் குரலாகவே அன்று எதிரொலித்தது. ஆனால் இங்கு அவர் “ஒரு வளர்ந்த பெண் பிள்ளைகளின் தந்தையாக என்னால் எல்லாவற்றையும் எழுத முடியவில்லை.முன்பு எழுதியது போல இப்போது எல்லாவற்றையும் என்னால் எழுதிவிட முடியாது. நான் எனது ஜன்னல்களை ஒவ்வொன்றாகச் சாத்தி வருகின்றேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார். உங்களுக்கு இப்போது 44 வயதாகின்றதே என்றதும் அவருக்கு துக்கம் தொண்டையை அடைக்கின்றது. நான் எனது அந்திமக் காலத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன் என்று சஞ்சலப்படுகின்றார்.

பேராசிரியர் எம்.ஏ.நுமான் சமீபகாலமாக உங்களது விமர்சனமுறை, கருத்துக்களில் ஒரு நழுவல் போக்கு காணப்படுகின்றதே என்ற கேள்விக்கு ஒரு முல்லாவின் கதையைக் கூறி தப்பித்துக் கொள்கிறார். 52 வயதாகும் நான் இன்னுமொரு 10 வருடம் உயிருடன் இருந்தால் உருப்படியாக ஏதாவது செய்வேன் என்கிறார்.

பேராசிரியர் சிவத்தம்பியும், சிவசேகரமும் இடதுசாரியத்தின் வீழ்ச்சி குறித்து ஒத்துக்கொள்ளும் அதேவேளை அது பரிணமிக்க வேண்டிய புதிய வழிகள் குறித்து ஆராய்கிறார்கள். சோஷலிச யதார்த்தவாத்தத்தில் ஏற்பட்ட போதாத்தன்மை குறித்தும் அது படைப்பிலக்கியத்தில் ஏற்படுத்திய போலித்தன்மைகள், வரட்சிகள் குறித்தும் விபரிக்கிறார்கள்.

தமிழ்த் தேசியவாதம் குறித்து கூறும் கவிஞர் சேரன் ‘இப்போதுள்ள தமிழ்த் தேசியவாதம் உண்மையான தேசியவாதம் இல்லை. இது ஒரு வகையான பேரினவாதம். மிகவும் ஆபத்தானதும் கூட. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று பின் வாங்குகிறார்.

“நான் உமர் கய்யாம் ஆவதற்குரிய எல்லாத் தகுதிகளையும் கொண்டிருந்தேன்’ என்று கூறும் கவிஞர் ஜெயபாலன் தான் எப்படி அந்த பீடத்தில் இருந்து துரத்தப்பட்டேன் என்றும்  இன்று வரை அலைதலும் தேடலுமாக அலைந்துழலும் தனது வாழ்க்கை குறித்தும் துயருருகிறார்.

இதே போன்றே ஏ.இக்பால், சோலைக்கிளி, சே.யோகநாதன், மு.பொன்னம்பலம், டொமினிக் ஜீவா போன்றவர்களும் அன்று வெளிப்படுத்திய கருத்துக்கள், அன்றைய சூழலில் சமூகத்தில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி பலத்த விவாதங்களையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் வெளிவந்து இப்போது 20 வருடங்கள் ஆகின்றன. இதில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஒரு சிலர் மரணமடைந்து விட்டனர். அன்று கேட்கப்பட்ட இதே கேள்விகளை, ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டு, உலகெங்கிலும் அதி தீவிர வலதுசாரிகளின் கைகளில் ஆட்சியதிகாரங்கள் கைமாறுகின்ற இன்றைய சூழ்நிலையில்  இவர்களிடம் முன் வைத்தால்  இவர்களிடம் இருந்து வரும் பதில்கள் என்னவாக இருக்கும் என்பது ஒரு மில்லியன் டொலர் கேள்வியாக எம்மிடையே தொக்கி நிற்கின்றது. அன்று 44 வயதகின்றதே என்ற போதே தனக்கு அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று கலக்கமடைந்த உமா வரதராஜன் இப்போது 20 வருடம் கழித்து 64 வயதாகும் நிலையில் என்ன கூறுவார்? “இன்னுமொரு 10 வருடம் உயிருடன் இருந்தால் உருப்படியாக ஏதாவது செய்வேன்” என்று கூறிய நுஃமான் இன்று அதனைக் கூறி 20 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் சொல்வது என்னவாக இருக்கும் போன்ற கேள்விகளும் எம்மிடையே தலை தூக்கத்தான் செய்கின்றது

மேலே குறிப்பிட்ட பன்னிருவரின் பட்டியல் கூட எல்லோருக்கும் உவப்பானதாக இருக்க முடியாது. விடுபட்ட ஆளுமைகளாக பிறிதொருவரின் பெயரினை வேறு சிலர் முன் மொழியக் கூடும். ஆயினும் இந்தப் பன்னிருவரும் ஈழ இலக்கிய, சமூக, அரசியல் கலாச்சாரத் தளங்களில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக அன்று  விளங்கினார்கள் என்பதினை நாம் மறுக்கமுடியாது. அத்துடன் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினதுடன் மேற்கொண்ட நேர்காணல் ஆனது, அந்த ஒலிப்பதிவு நாடா தொலைந்த காரணத்தினால் அது அச்சுறுப் பெறவில்லையென பௌசர் அவர்கள் மூன்றாவது மனிதன் இதழொன்றில் (ஏப்ரல்-யூன் 2001) இராசரத்தினத்தின் அஞ்சலிக்குறிப்பில் குறிப்பிடுகிறார். அத்துடன் மூன்றாவது மனிதனில் நேர்காணல் செய்யப்பட்டு, வெளிவந்த  தெளிவத்தை ஜோசப், சித்ரலேகா மௌனகுரு, அ.யேசுராசா, க.சண்முகலிங்கம், தெணியான், இ.முருகையன், எஸ்.கே.விக்னேஸ்வரன், குப்பிளான் ஐ.சண்முகம்   போன்றோரது நேர்காணல்கள் இன்னும் எவராலும் நூலுருவாக்கம் செய்யப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதே.

இன்று தகவல் தொழில்நுட்பமும் அச்சு இயந்திர சாதனங்களின் வளர்ச்சியும் உச்சமடைந்துள்ள நிலையில் புற்றீசல்கள் போல் இது போன்ற நேர்காணல்களின் தொகுப்புக்கள் பல வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பௌத்த அய்யனார் தொகுத்தளித்த ‘சொல்லில் இருந்து மௌனத்திற்கு’ ஒரு காத்திரமான நூலாக தமிழகத்திலிருந்து வெளி வந்திருக்கின்றது. இதற்குமப்பால் இன்று இணைய தளங்களிலும் பல்வேறு இதழ்களிலும் தொடர்ந்தும் நேர்காணல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் இன்று வெளிவருகின்ற இந்த நேர்காணல்கள் நேர்த்தியிலும் சரி அதன் வடிவத்திலும் சரி மிகவும் குறைபாடுடையவைகளாக விளங்குகின்றன. இதில் முக்கியமாக ஷோபா சக்தி தொகுத்தளித்து ‘போர் இன்னும் ஓயவில்லை’ ‘நான் எப்போது அடிமையாயிருந்தேன்?’ போன்ற நூலுருவில் வெளிவந்துள்ள  நேர்காணல்களும், நவஜோதி ஜோகரட்னம் தொகுத்து வெளியிட்ட  ‘மகரந்தச் சிதறல்கள்’  நூலில் வெளிவந்துள்ள பல  நேர்காணல்களும் ‘ஆட்காட்டி’ இதழ்களில் வெளிவந்த பல  நேர்காணல்களும் ஒரு நேர்காணல் எப்படி மேற்கொள்ளப்படக் கூடாது என்பதற்கு உதாரணங்களாக அமைகின்றன. முன்கூட்டியே நிச்சயப்படுத்திக் கொண்ட தீர்மனாங்களுக்கும் ஊகங்களுக்கும் ஏற்றவாறு கேள்விகளை அமைத்துக் கொள்வதும், நேர்காணல் காண்பவர் மீதான Hard Talk பாணியிலான தனிநபர் தாக்குதல்களும், அல்லது அவருக்கு பிடிக்காத நபர்களின் அல்லது தத்துவங்கள் மீதான வாந்தி எடுப்புக்களை அவர் மூலமாகவே மேற்கொள்வதும் இன்றைய நேர்காணல் முறைமைகளாக விளங்குகின்றன. எனவே இன்று நேர்காணல் செய்கின்றவர்கள் நேர்காணல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கும் நேர்காணல் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கும்  இந்நூல் அவர்களுக்கு ஒரு சிறந்த  கையேடாக அமையும் என்பது என்னுடைய கருத்தாகும்.

இறுதியாக, ஈழத்தில் இதுவரை வெளிவந்த நூல்களில் முதன்மையானதும் முக்கியமானதுமாகக் கருதப்படும் நூல்களில் ஒன்றாக விளங்குகின்ற, எமது சமூகத்தின் ஒரு அரை நூற்றாண்டு கால சமூக, கலை, இலக்கிய, அரசியல் தளங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தினை தெளிவாக வெளிப்படுத்துகின்ற இந்நூலானது எம்முன்னே, எம் சமூகத்தின் சாட்சியமாக, ஒரு வரலாற்று ஆவணமாக கையில் இருக்கின்றது. இது சுமார் 20 வருடங்களுக்கு முன் வந்த நூலான போதிலும்  இன்னமும் சரியான முறையில்  வெளிக் கொணரப்படவில்லை. ஈழத்து படைப்புக்களை ஆவணப்படுத்துகின்ற நூலகம் அமைப்பினரோ அல்லது படிப்பகத்தினரோ இதனை இன்னமும் ஆவணப்படுத்தவுமில்லை. எனவே இந்நூலினை தகுந்த முறையில் ஆவணப்படுத்துவதும், அதனை பல்வேறு தரப்பினரிடம் கொண்டு செல்வதும், இது குறித்து விவாதிப்பதும், விளக்குவதும், நேர்காணல்கள் குறித்த புரிதல்கள் இல்லாத இன்றைய இலக்கிய சூழலில் அது குறித்த ஒரு சிறு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எமது நம்பிக்கை. யார் இதனைச் செய்வார்?  காதுள்ளவன் கேட்கக்கடவன்.

vasan456@hotmail.com