இன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம்! அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் !! எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை !!!

கவிஞர் அம்பி“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.“  இந்த வரிகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்திலும்  ஏதோ ஒரு வடிவத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்! கடந்த  வாரம் சிட்னியில் திடீரென மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி சிட்னியில் நடந்து முடிந்தபின்னர்,  நேற்று சிட்னியில் Hurstville என்ற பிரதேசத்தில்,  தனது  மனைவி,  பிள்ளைகள்,  மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் எங்கள் மூத்த கவிஞர் அம்பி அவர்களை பார்ப்பதற்குச்சென்றேன்.

அம்பிக்கு இன்று 17 ஆம் திகதி 91 வயது பிறக்கும் செய்தியறிவேன். இதனை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான எனது அருமைத்தம்பி கானா. பிரபா அவர்களிடம் சொன்னதும், தானும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னையும் அழைத்துச்சென்றார்.

அவர் முன்னேற்பாட்டுடன் வந்து என்னையும் அம்பியையும் கலந்துரையாடச்செய்து, எமது உரையாடலை ஒளிப்பதிவு செய்து காணொளியாக்கி இன்று அம்பியின் பிறந்த தின நாளிலேயே வெளியிட்டும்விட்டார். இந்த சந்திப்பும், காணொளியும் அம்பி எதிர்பார்த்திருக்காத ஒரு திடீர் நிகழ்வு.

கானா பிரபாவும் அம்பியுடன் கலந்துரையாடிவிட்டு, அம்பி குழந்தைகளுக்காக வண்ணப்படங்களுடன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கொஞ்சும் தமிழ் நூலின் பிரதியை, தனது குழந்தை இலக்கியாவுக்காக அம்பியின் கையொப்பத்துடன் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றதன் பின்னர், மாலை 6.00 மணி வரையில் அம்பியுடன் இலக்கியப்புதினங்களை பரிமாரிக்கொண்டிருந்தபோது,  சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திருமதி கார்த்திகா கணேசர், செல்வி ஜெயசக்தி பத்மநாதன் ஆகியோரும் அம்பிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவித்தனர்.

இன்று இரவு ஏழு மணிக்குப்பின்னர் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் ( A.T.B.C. Radio) அம்பியின் 91 ஆவது பிறந்ததின வாழ்த்து நிகழ்ச்சியை ஒலிபரப்புவதற்கும் தயாராகியிருப்பதாக  கார்த்திகா சொன்னார்.
இதுவும் அம்பிக்கு எதிர்பாராத நிகழ்வுதான்!

கடந்த 2004 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா வாழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இணைந்து அம்பியின் 75 ஆவது வயதுக்குரிய பவள விழாவை கன்பரா மாநிலத்தில் நான்காவது தமிழ் எழுத்தாளர்  விழாவுடன் இணைத்து நாமெல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தோம். இவ்வேளையில் அம்பி வாழ்வும் பணியும் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தேன். 

கடந்த 2019 ஆம் ஆண்டு அம்பியின் 90 ஆவது பிறந்த தின நிகழ்வை சிட்னி வாழ் தமிழ் அன்பர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடியதுடன் சிறப்பு மலரும் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வுகள் யாவும் கவிஞர் அம்பி அவர்கள் எதிர்பார்க்காமலேயே நடந்த வைபவங்களாகும்.

கவிஞர் அம்பிஇந்த பின்னணி தகவல்களுடன் மற்றும் ஒரு எதிர்பாராத நிகழ்வு அம்பியின் இன்றைய 91 ஆவது பிறந்த தினத்திற்கு முதல்நாள், அதாவது நேற்று 16 ஆம் திகதி நான் அம்பியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது நிகழ்ந்தது.
கிளிநொச்சியிலிருந்து நண்பரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கருணாகரன் தொடர்புகொண்டார். அவர் எப்போதும் என்னை அண்ணாச்சி என்றே அன்பொழுக அழைப்பவர்.

“ அண்ணாச்சி… நீங்கள் இப்போது சிட்னியில் கவிஞர் அம்பியுடன்தானே நிற்கிறீர்கள்…!?  “ எனக்கேட்டார்.

“  ஆமாம். அது எப்படி உங்களுக்குத் தெரியும்…?  “

“ நீங்கள் எங்கே இருந்தாலும் எமக்குத் தெரியவரும். நாம் மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ் அப் உலகில் இருக்கின்றோம்.  கவிஞர் அம்பிக்கு வாழ்த்துக்கூறுவதற்கு இங்கே ஒரு ஆசிரியை காத்துக்கொண்டு நிற்கிறார். “ என்றார். இதனை உடனே அம்பியிடம் தெரிவித்ததும் அவர் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

இலங்கை தமிழ்ப்பாடசாலைகளுக்கிடையில் நடக்கவிருக்கும் தமிழ்த்தினப்போட்டியில் அம்பி பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய இலக்கியப்பெண் என்ற கவிதை குறித்தும் மாணவர்களிடம்  போட்டி நடத்துவதற்கு தீர்மானமாகியிருப்பதாகவும், அந்தக் கவிதையை அவர் எழுதியதன் நோக்கம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் அந்த ஆசிரியை சொன்னார்.

அவர் கிளிநொச்சி  இந்துக்கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி  யூடிற் அருள் சண்முகநாதன்.

இது அம்பி,  தனது வாழ்நாளில் எதிர்பார்த்திருக்காத  திடீரென வந்த தொடர்பு. எனக்கும் பேராச்சரியமாக இருந்தது!

அம்பி 91 வயதை நெருங்கியிருக்கும் இவ்வேளையில், சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அம்பியால் எழுதப்பட்டுள்ள இக்கவிதையை அம்பி எப்போதோ மறந்துவிட்டார்.

உடனே அந்த ஆசிரியை,  “ அய்யா, உங்களது அம்பி கவிதைகள் நூலில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது  “ என்று நினைவூட்டினார்.

அவரை அம்பியுடன் தொடர்ந்து பேச விட்டுவிட்டு, அம்பியின் அறையிலிருந்த புத்தக அலுமாரியில் அந்த நூலை தேடிப்பிடித்து எடுத்து பக்கங்களை புரட்டி அந்த  இலக்கியப்பெண்ணைத்  தேடி எடுத்துகொடுத்தேன்.

ஏறினால் படுக்கை, இறங்கினால், சக்கர நாற்காலி என்று நீண்ட காலமாக பொழுதை கடந்துகொண்டிருக்கும் அம்பி அவர்கள், சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர்  கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில்,   பாட நூலாசிரியராக பணியாற்றிய காலப்பகுதியில் தான் எழுதிய அந்த இலக்கியப்பெண் பற்றி விளக்கினார். 

அம்பி கவிதைகள்இக்கவிதையும் இடம்பெற்ற அம்பி கவிதைகள் நூல் 1994 ஆம் ஆண்டில் சென்னைமித்ரா வெளியீட்டகத்தினால் எஸ்.பொ. அவர்களினால் வெளியிடப்பட்டது. 

அம்பி, இலக்கியத்தை பெண்ணுக்கு ஒப்பிடுகிறார்.

உடலின்  அசைவு இயக்கத்தை ஒரு எக்ஸ்ரே கருவி எவ்வாறு படம் பிடித்து காண்பிக்கின்றதோ, அவ்வாறே  குறுந்தொகை, ஐங்குறு நூறு, புறநானூறு முதலானவற்றில் காண்பிக்கப்படும் பெண்களும் தாங்கள் உள்வாங்கும் காட்சிகளை வெளிப்படுத்தும்  உணர்வுகளை  இந்த இலக்கியப்பெண்ணூடாக  சித்திரிக்கிறார்.   

இந்த இலக்கியப் பெண் கணவனுக்கு அறுசுவை உணவு தயாரித்து விருந்து படைக்கும்போது, அதில் பரிமாறப்படும் குழம்பின் சுவையறிந்து கணவன் கூறும் காதல்மொழிகளை அப்பெண் எவ்வாறு உள்வாங்கி சிலிர்த்துவிடுகிறாள் என்பதை குறுந்தொகை காட்சி விவரிக்கிறது.

இந்த இளம் கணவன் –  மனைவி குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்ததும், கணவனால் மனைவியும் குழந்தையும் அரவணைக்கப்படும்போது அந்தப்பெண் உணரும் இன்பத்தை ஐங்குறு நூறு சித்திரிக்கிறது.

தேசத்தை காக்கும் போரில் கணவன் மாண்டுவிட, தன் மைந்தனை அனுப்பி, அவனும் புறமுதுகிட்டு ஓடாமல் மார்பிலே வேல் தாங்கி உயிரை மாய்த்தபோது அந்த வீரத்தை உள்வாங்கி, தனது உணர்வை வெளிப்படுத்துவதை சித்திரிக்கிறது புறநானூறு. ஒரு இலக்கியப்பெண்ணின் வாழ்வின் விழுமியங்களை கவிதையாக வடிப்பதற்காக இந்த முப்பெரும் காவியங்களை உள்ளடக்கி அரைநூற்றாண்டுக்கு முன்னரே கவிதையாக தாம் எழுதியதாக கவிஞர் அம்பி தெரிவிக்கின்றார். அவுஸ்திரேலியா சிட்னிக்கும், இலங்கை கிளிநொச்சிக்கும் இடையில் நிகழ்ந்த இந்த திடீர் உரையாடலும் அம்பியின் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வாகும்.

அத்துடன் தனது இன்றைய 91 ஆவது பிறந்த தினத்தின்போது அம்பி அவர்கள் தனது அபிமான வாசகர்களுக்கு ஒரு புத்தம் புதிய செய்தியையும் பிரகடனப்படுத்துகிறார்.

அவர் பல வருடங்களுக்கு முன்னர் தட்டச்சில் பதிவுசெய்து பாதுகாத்து வைத்திருந்த சொல்லாத கதைகள் என்ற பத்தி எழுத்து தொடரை மீளுருவாக்கி, ஒவ்வொரு அங்கமாக இந்த வாரத்திலிருந்து வெளியிடவுள்ளார்.   நிரந்தரமாக படுக்கையிலிருந்தவாறே மீண்டும் எழுதுவதற்கு ஆரம்பித்துள்ள கவிஞர் அம்பி அவர்களை பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோம்.

letchumananm@gmail.com