பதிவுகளில் அன்று: ப.வி.ஶ்ரீரங்கன் கவிதைகள் மூன்று: அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…, தொப்புள் கொடி & ஆவீன மழைபொழிய இல்லம் வீழ… (சின்னக் கதை)

-பதிவுகள் இணைய இதழ் புகலிடத் தமிழ் இலக்கிய இதழ்களில் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் நூற்றுக்கணக்கான கவிதைகளை இதுவரை பிரசுரித்துள்ளது. பெருமைப்படத்தக்க பங்களிப்பு அது. இப்பகுதியில் தொடர்ந்து  வெளியாகும் கவிதைகள் வாசித்துப்பாருங்கள். புரிந்து கொள்வீர்கள். அவற்றை  ஆவணப்படுத்த வேண்டுயது அவசியம். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தம் கவிதைப் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் கவிஞர்கள். – பதிவுகள் –


ப.வி.ஶ்ரீரங்கன்
1. பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63
அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…

அன்புக் குழந்தைகளே!
நம்பிக்கை தரும் எந்த அழகிய வார்த்தைகளும்
என்னிடமில்லை,

கவித்துவமற்ற மொழியூடு
வாழ்வின் கரடுமுரடான பகுதிகளை
வழக்கொழிந்த வார்த்தைகளாய் கொட்டுவதைத் தவிர

நீண்ட சோகம் கப்பிய எதிர்காலத்தைப் போக்கி
ஒளிமிக்க நம்பிக்கையை கொணர்வதற்கு
எம்மிடம் எந்த மந்திரமுமில்லை

இரண்டும் கெட்டான் பொழுதுகளை
மெல்ல விரட்டி பொழுது புலர்வதற்குள்
ஒரு அழகிய தீவை உங்கள் முன் சமர்ப்பிக்க முடியவில்லை

நீங்கள் கிரகணத்தின் மெல்லலுக்குள் நீண்ட நாட்களாகச் சிக்கியுள்ளீர்கள்
முகட்டு உச்சியில் குண்டொலிகளையும்
தரைகளில் மோதும் அபாயகரமான மரணத்தையும் செவிகளால் கேட்கிறீர்கள்

நெருப்பில் வேகும் தும்பிகளின் மரிப்பையும்
குளிரல் கூனிக் குறுகும் காக்கையின் அச்சத்தையும்
என் செவிகளினு}டாகவும் கேட்கிறேன்

கண்கள் விரிகிறது
அவற்றைப் பார்த்துவிட,
எதிர்த்து தாக்குவதற்கு, வெறுமை!

ஓலமும் எங்கோ நெடும் தொலைவில்

பரிகாசிக்கின்ற இதழ்களிலிருந்து மெல்லிய “ச்சீ” ஒலி
இந்த உலகத்தின் அனைத்து மூலையிலும் சாவினது நிழல் விழுந்து கிடக்கிறது
அதனது நீண்ட விரல்கள் எனதருகில் புதையும்படி

எப்படி இந்தக் குழந்தைப் பருவம்…
கண்களை இறுக மூடிப் பெருமூச்சு விடுவதைத்தவிர
வேறெதையும் என்னால் செய்ய முடியாது,

அன்னையை இழந்த சேயும்,
சேயை இழந்த அன்னையும் சில காலத்து சோகச் சுவட்டில்,
அதுவரையும் இந்த பயங்கர உலகத்தை துடைத்தெறிந்து
புதிய ஆறுதலைப் பிரகாசிக்க வைப்பதற்கான
எல்லாக் காரியத்தையும் நீங்களே கைகளிலெடுங்கள்

எனது மெழுகு திரியோ
மிகவும் தன்னையுருக்கி கீழ்விழுந்தெரிகிறது!
ஆழிப் பேரலை கூத்தாடிக் குடித்த உங்கள் பள்ளித் தோழர்களுக்காகவும்
எனக்காகவும்,

போரினது நீண்ட தடம் எம் பின்னே கொள்ளிக் குடத்துடன்
ஒரு விடியலிலாவது இந்த வடுவைத் தொலைத்த நாளாக
புதிய பொழுது மலராது போய்விடுமோவென்ற
நெஞ்சத்து ஏங்கலில் ,

உங்கள் தோளோடு கைகோர்த்து தும்பி பிடித்திடவும்,
பள்ளியிலிருந்து தேவாரம் பாடவும்…
பார்க்கின்ற இடமெல்லாம் பால்ய காலத்து சிவாவும்,
கெளரியுமாக நீங்களும் நானும்,இன்னும் பலருமாய்…

மேகங்களுக்குப் பின்புறம்
எங்கோ நெடும் தொலைவில் நாம் புதிய மனிதர்களாக
மண்டியிட்டுக் கிடக்க
இந்த உலகத்து மானுடர்களெல்லாம்  நமக்காக பிராத்தனையிலீடுபட
அனைத்து நித்யங்களும் மெளனித்துக் கொள்கின்றன

இனி எவரும் வரமாட்டார்கள்
இந்த அற்ப உலகத்து நியமங்களை உங்கள் முதுகினிலேற்றி
நாளைய தமது சுகத்திற்கான கனவுகளாக விதைத்து
அறுவடை செய்வதற்கான முனைப்புடன்

மேசைகளில்”மற்றவர்களினது தவறுகளாக”கொட்டி
கடைவிரிதவர்கள் இப்போ
அவற்றைக் குருதியால் எண்ணிக்கொள்ள அவர்களும்,நீங்களும்,
மற்றவர்களுமாக புதைகுழி நிரம்பிக் கொள்கிறது

என்றபோதும் ,
குழந்தைகளே இன்னுமொரு முறை சொல்வேன்:
நம்பிக்கை தரும்  அழகிய வார்த்தைள் எவையும்
என்னிடமில்லை.


பதிவுகள் மார்ச்  2004 இதழ் 51

2. கவிதை: தொப்புள் கொடி!

கனவுகளின் எச்சமாக
சோகம் கப்பிய மங்கலான
நினைவுகளினது நிழல்கள்
தேகமெங்கும் தன் இருள் படர்ந்த விரல்களைப் பரப்பியபடி
அன்னை!
அடுப்பினில் புகையும் தென்னம் பாளையும் ,
அதனருகினில் வேகும் அந்த அற்புத உயிரும்
மப்புக் கரைந்த மந்தாரமாய்

வெறுமையின் நீண்ட கரங்கள் பிடரியைத் தடவ
உணர்வினது சூனிய வெளியில் அந்தரத்தில் தொங்கும் அன்னை,
நொண்டிக்காகமும் சொண்டுக்கிளியும்
நொந்து போக வைக்கும் நெருங்கிய தோழமையின் இழப்பாய்
நெஞ்சத்து மூலையில் மோதியபடி

கனவுகளைக் கருக்கிய பனிக்காலக் காற்றின் ஓலம்
கற்சுவரின் மோறையில் அறைந்து காலத்தில் அமிழ்ந்தது
எழுந்து சென்று பார்த்திட கால்களை அசைக்க
முதுகினது பின்புறமிருந்து மோதிய அதிகாரத் திமிர் இரும்புச் சுவராய்

நேரம் நெருங்குகிறது!
ஒர கால அவகாசம் கோவணம் கழன்ற கதையாக
மோப்பம் கொண்ட வெறி நாயோ வெல்வதற்குத் தயாராகும்
கோபுரத்து உச்சியில் தவமிருந்த கொக்கு பறப்பதற்கு இறக்கை விரிக்கும்

இங்கு காத்துக்கிடக்குமிந்த நடை பிணம்
கஞ்சல் பொறுக்கியபடி
அன்னையின் மடியும் அவித்துண்ணும் பனங்கிழங்கும்
அற்புதமான நிகழ்வாகிப் போச்சு!

தெருவோர வேப்பமரமும் வைரவ சூலமும்
முற்றத்து முல்லையும் பனையும்
முந்திய காலத்துச் சுவடாய்
கருச்சுமந்த அந்தக் காதலி கால் நீட்டிட

துணியினால் பிணை படும் அவள் விரல்கள்
என் முனகலில் கிழிபடக் காத்துக்கிடக்கும்
எனக்கு நரையேற்றும் காலமோ தன் கொடுங் கரம் கொண்டு
ஓங்கி உச்சியில் குத்த ஒப்பாரியாய் விரியும்
குடும்ப அகழியும் ஆழப் புதைக்கும் அன்னை மீதான பரிதவிப்பை

என்றோ அறுபட்ட தொப்புள் கொடி
இதுவரை ஆறுதலளித்த ஆத்தை
இருண்டுவிடப் போகுமிந்த யுகம்
விழி நீரின் வெடிப்பில் அமுங்கும்.


பதிவுகள் மே 2005 இதழ் 65
3. ஆவீன மழைபொழிய இல்லம் வீழ…  (சின்னக் கதை)

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ….
இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும்
என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள்
உருண்டன.

கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது.
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ…
நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற
அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள….

இருப்பைக் காக்கத்தான் யாவும்.

ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய
கனவின் உந்துதலால்தான்.

நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.
சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்.
மனைவி.
ஒலி.
எதிரொலி!

என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது.
பிரபஞ்ச இரைச்சல்.
ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது.
ஒலியே அநாதி!
சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.
ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக….

என் அகத்தடியாள் அழுதாள்.
மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள்.
அடிமை?
இவ் லோகத்தின் அடிமை??
தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.

என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை.
முகங்கற்குவியலுக்குள்.
நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க
முடியவில்லை.
உச்சியிலிருந்து குருதி கசிந்தது.
அவன்மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும்.
என் மீது நான் கொள்ளும் பச்சாதாபம் அவனுருவில் வலிமை சேரும்.
எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாய் போனபோது, அவன் எனக்கு
ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில்
வந்து சேர்ந்தது.

இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது
என்னை.
அவன் மனிதத்தை(சஞ்சிகை) இறுகப்பற்றியிருந்தான்.
குருதியினால் அதைத் தூய்மைப்படுத்தவா…?
போன கிழமைதான் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ்
நண்பர்களின் முயற்சி அது.
மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில்
குடிகளுக்குள் வருகின்றன?
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள….
இருப்பதே வாடகைக்குடியில் இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?

ஒரு
நாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகை வீட்டு ஞாபகம்.
கிருஷ்ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக….,
அதற்குள் மானுடம் புழுவாக நெளியும் காட்சியாக விரியும்.

நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என்
நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையில் இருந்து
நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு
அனுப்பியபோது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.
டொச்சில்’Ausbeutung Systeme”  (சுரண்டல் பொறிமுறை)
என்று கோசம் போட்டவன்.
நேற்று….

இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி….
உயிர் கொடுத்து….
இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.
வேலைக்குப்போக முடியாமல் நேர்ந்ததையெண்ண அது பயமாகி என்
வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.

டொச்லாண்ட் புகைகளின் பின்னே…
எனக்கு ஈழம் இப்போ சிறப்பானதாகப்பட்டது.
யுத்தத்தை மறுத்து,

தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது
கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன்
காலந்தள்ளி…. அமைதியாய் உடல் அசைந்து உயிர்தாங்கும்.

டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கி இருந்தது. ஆனால் குண்டை
எப்போது வழங்குமென்று தெரியாமற்போய்விட்டது! தெரிந்திருந்தால்….
என்வீரியம்…. என் கனவு…. என் மனைவி….
நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என்
மனைவியை…. என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன்.
சில நிமிடங்கள் கழிய…. கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்
தெறித்தன.
இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபகமூட்டியது.
நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்….
இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதிராடியது.
சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர்.
அவர்கள் Notruf காரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்)
கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள்.
அது துவண்டுவிட்டது.
நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய
முறையில் அவனைப் பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பல மணி
நேரங்களை நான் அவனுக்காகச் செலுத்தாமல் புத்தகங்களுடன்
செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல்
நூல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன்
என்னைவிட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான் எனக்குள்
நொந்து வெதும்பினேன்.
இனி இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?
நான் இதையறியேன்.
ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.
அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து…. அகோரமான வாழ்வுப் படலத்தை
சொல்லாமற் சொன்னது.
இருவிழி சிந்தும் நீரைப் பாராதே என்
இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை.
இயற்கை வலிமையுடையது.
சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.
மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.
தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை, தற்போது
தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை
அணைத்து மூர்ச்சையானாள்.
அவள் உடலெங்கும் இரத்தக் காயங்கள். தலையிலிருந்து குருதி
வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.
என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.
என் குழந்தையும் இப்படி….
என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது.
உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனூடோ சென்று
எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி
வர்ணிப்பானோ தெரியாது.

ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரட்ணம் என்
விழிமுன் வந்து போனார்.

எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.
என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும்
சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச் சென்றார்கள்.
நேரம், அதிகாலை நான்கை நகர வைத்தியசாலை காட்டியது.
எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது.
கூடவே உடற் சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது.
மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள்
கடுமையாகக் குண்டடிபட்டுவிட்டாள்.
நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று
ஏங்கித் தவித்தேன்.
மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு
வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு
உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது.
என்ன பாவம் செய்தேனோ தெரியாது!
புண்ணியம் செய்திருந்தால் நானும் கூடவே போயிருப்பேன். இப்போது
நான்…

இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.
என் உடலில் வலுவிருந்தது.
வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத் துண்டு
வழி வகுத்தது.

அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,
மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தலத்திற்குச்
செல்லக் கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.
என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்
நான் மௌனமாகியிருந்தேன்.
மச்சான் போன மாதம் வேண்டிய ஆயிரத்தையும் தாவன்ராப்பா.
வீட்டுக்காரர் கொழும்பிலை வந்து நிற்கினம். இப்ப அவையளோடை
ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கைதான் நீயும் கடவுளேயெண்டு
நேரிலை வாறாய். காசைத் தாவன்ரா.

ஆவீன மழை பொழிய இல்லாம் வீழ
அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள….

வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக் கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ளச்
சாவீடு என் வீட்டில் நிகழ
நான் விழி பிதுங்கி நிற்க…

ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை.
பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில்
அவன் தன்னை மறந்திருந்தான்.
பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.
சரி மச்சான்’ ஏதோ சிந்தனைவயப்பட்டவனாய் விடைபெற்றான்.
அவனைப் பிரிந்து கிளம்பினேன்.
வானம் அழத்தொடங்கியது.
எனக்காக…?

குண்டுச்சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின
எனக்கு.
நிம்மதி இல்லை.
என் மழலை பற்றிய கனவுகள்.
வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.
வேலை ஏன்?
மருந்து விடுப்பேன்?
எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன?

பொன் எழில்கொள் மேனியைக்
கண்ணீரினால் கழுவி ஆறுவேனோ?

மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன்.
இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன்.
என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.
அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.
கண்கள் மீண்டும் பனித்தன.

விழிநீரினூடே அவன் மலர்ந்தான்.
விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.

குயிலும் கரும்பும் செழுந்தேனும்
குயிலும் யாழும் கொழும்பாகும்
அயிலும் அமுதம் சுவைதீர்த்த
மொழியைப் பிரிந்தான் அழியானோ…!

சீதைக்கும் ராமனுக்குமா இது பொருந்தும்….?
எனக்கும் தாம்!
என் மழலையை எந்தச் சவக்காலைக்கு
எடுத்துச்
சென்றிருப்பார்கள்…?
மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன.

இரத்தம் ஏற்றினார்கள். எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளாஸ்மா
மூலம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.
டாக்டர்கள் கேட்கவில்லை.
அவள் நிலைமையை நானறியேன்.
ஓடினேன். ஓடினேன். என் குழந்தை நினைவால்.
அவள் நினைவால். வைத்தியசாலை அண்மித்தது.
என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்
தலைகள் தென்பட்டன.
என்ன தம்பி உமக்கு இப்படி…? பெரியவர் ஒருவர் நா தளதளக்க
கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார்.
ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான்.
மனைவி கோமாவில் இருந்தாள்.
நான தலைமை வைத்தியரிடம் என் மழலைபற்றிய விபரம் அறியச்
செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.
என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய்ச் சொன்னார்கள்.
பதில் கிடைத்தது.
தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது.
ஓடினேன் மீண்டும்.
அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
பஸ், டிராம், கார் யாவுமே மெதுவாகச் செல்வதாய் உணர்ந்தேன்.
இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.
பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை.
இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன்.
இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது.

‘மண் சுழன்றது. மால்வரை சுழன்றது,
மதியோர் எண் சுழன்றது, சுழன்றது
அவ்வெறி கடல் ஏழும்
விண் சுழன்றது ,விரிஞ்சன்
கண் சுழன்றது,சுழன்றது
கதிரொடு மதியும்…. ‘என்று கம்பன் சொன்னதுபோல் நான் சுழன்றேன்.
வாய்மட்டும் அசைந்தது.

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே எனப் புலம்பினேன்.

எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன.
சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என்
வீட்டிலேயே நிகழ்ந்தது.
அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.
கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள் குருக்கள் வடிவில் போன
கிழமை.
அவர்கள் அவசரகால யுத்தநிதி என்
விருப்பை அறியாமலே ஐந்நூறு
மார்க் என எழுதி ரசீது தந்தார்கள்.
இவை யாவும் காட்சியுருவாகின.
கண்களை இருள் முழுமையாக கவ்வியது.
நான் மூர்ச்சையானேன்.
நினைவு திரும்பியபோது ஒரு வைத்திய சாலைக்கட்டிலில் கிடப்பது
புரிந்தது.
கண்ணெதிரே என் மழலை ஓடியாடுவது புலப்பட்டது.
விழிகளைக் கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.
கண்ணீர் மட்டும் நிஜமாகியது.
விழிகளை இறுக மூடினேன்.
மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது.
அகத்தடியாள் மெய்நோக…
அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலைப் பார்க்கும்வரை.
வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன். முடியவில்லை.
உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.
மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத் தெறித்தது.
இப்பேது கண்களில் இருந்து நீர் வரவில்லை.
வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன்.
வானத்தில் முழுநிலவு வட்டமிட்டது. அது என் மழலையின்
நிர்மலமான தோற்றத்தை உரித்து வைத்தாற்போல காட்டி நிற்க.
என் வாய்மட்டும் ஆவீன மழை பொழிய இல்லம் வீழ…? என
முணுமுணுக்க விழிகள் பனித்தன.

10.12.1992
srirangan@T-Online.de