மூன்று நூல்களின் அறிமுகம்: ‘முதுசம்’, ‘ரோஜாக்கூட்டம்’, & ‘குள்ளன்’

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம்முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார். திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.

வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.

அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். ‘எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்’. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.

இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.

வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.

அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் ‘அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ’ என்கிறான்.

இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.

நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.

பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.

‘அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.’

எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.

இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – முதுசம் (சிறுகதைகள்)
நூலாசரியர் – திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
வெளியீடு – சேமமடு பதிப்பகம்
தொலைபேசி – 011 4902406, 0718 676482
விலை – 280 ரூபாய்


சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

ரோஜாக் கூட்டம்இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில்;, கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.

முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.

அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.

இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் – ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் – ஏ.சி. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
தொலைபேசி – 011 5020936
விலை – 150 ரூபாய்


சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

'குள்ளன்'கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.

‘எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்’

இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.

இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ – மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.

வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.

அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.

இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் – குள்ளன் (சிறுவர் கதை)
நூலாசரியர் – கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்
முகவரி – 460ஃ16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.
தொலைபேசி – 0773 706374
விலை – 100 ரூபாய்

riznahalal@gmail.com