[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் பத்து! அகலிகையும், அவளும் !
அவன் சென்று நெடுநேரமாகி விட்டிருந்தது. இவளுக்கு நித்திரை வரமாட்டேன் என்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறாள். அலுப்பாக, மனம் சினக்கிறது. எழுந்து ‘லைற்’றைப்போட்டாள். கண்ணாடியில் தெரிந்த உருவத்தை ஒருவித ஆர்வத்துடன் முதன்முறையாக பார்ப்பதுபோல் பார்க்கிறாள். கூந்தல் விரிந்து தோள்களில் புரண்டு நிற்கிறது. அழகான உதடுகளை உவப்புடன் எடை போட்டாள். கூரிய அகண்ட பெரிய கண்களை வியப்புடன் நோக்கினாள். அவளுக்கு தன்னை நினைக்க சிரிப்பாக இருந்தது. அதே சமயம் பெருமிதமாகவும் இருந்தது. கர்வம் கூட ஓரத்தே எட்டிப்பார்க்கவும் செய்யாமலில்லை. ஏதாவது குடித்தால் பரவாயில்லை போல் பட்டது. பிரிட்ஜிலிருந்து ‘ஓரென்ஜ் யூஸ்” எடுத்துப் பருகியபடி சோபாவில் வந்தமர்ந்தாள். ரி.வி.யைத் தட்டினாள். குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. ஊர் ஞாபகம் வந்தது. கடை குட்டிகளின் ஞாபகம் வந்தது. இந்நேரம் ஆவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏ.கேயும் கையுமாக ஏதாவது சென்றிகளில் நிற்பார்களோ? அல்லது தாக்குதலில் முன்னணியில் நிற்பார்களோ? இவ்வளவு துணிச்சல் அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படி வந்திருக்க முடியும்? இவளால் அவர்களை உணர்ந்துகொள்வது கஷ்டமாக இருந்தது. சிறுவனின் ஞாபகம் கூட எழுந்தது. சிறுவனின் நட்பு நெஞ்சில் இதமாக இருந்தது. கணவனின் ஞாபகம் எழுந்தது. நெஞ்சில் ஒருவித கனிவு படர்ந்தது. அவனது நெஞ்சிலே படர்ந்து அடங்கி மனப்பாரத்தை இறக்கவேண்டும் போலிருந்தது. நான் எவ்வளவு தூரம் இன்னமும் அவரை விரும்புகிறேன். ஏன் அன்று என் உணர்வுகளுக்கு அடிமையாகிப்போயிருந்தேன்? தன்னையே கேட்டுக்கொண்டாள். எதற்காக? எதற்காக அவர் என்ன குறை வைத்தார். பின் எதற்காக? ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன்? பதில் அவ்வளவு சுலபமாக கிடைப்பதாக தெரியவில்லை. அன்று இவ்விதம் நடந்துகொண்ட நான் பின் எதற்காக அவர் இன்று நடந்து கொண்ட முறையைக் கண்டு கோபப்பட்டேன்? இவரை நான் உண்மையிலேயே விரும்புகிறேனோ? என் அடிமனதில் இவருடன் வாழ்வதை நான் உண்மையிலேயே விரும்பவில்லையா? எதற்காக என்னுள் இத்தனை முரண்பாடுகள். இப்படித்தான் பொதுவில் எல்லோருமா? அல்லது நான் தான் வித்தியாசமானவளோ? நான் நடந்த முறை தெரிந்தும் இவர் எப்படி என்னை ஏற்க முனைந்தார்? என்னில் ஏற்பட்ட கோபத்தை விட அவர் என்னை விரும்புகிறாரா? இவ்வளவு நிகழ்வுகள் சம்பவித்தபின்னும் இன்னும் அவருடன் சேர்ந்து வாழ்வது இயலக்கூடியது தானா? என்னால் தான் இயல்பாக இருக்கமுடியுமா? இவருக்கு துரோகம் செய்த நான் எதற்கு இன்று இவ்விதமாக ஆசைப்படுகின்றேன். நான் சுயநலக்காரியா? இந்தக் கேள்விகளைக் கேட்பதன்மூலம் தன்னை மேலும் அறிய முயன்றாள். இவ்வாறான நேரங்களில் சோர்வு நீங்கி ஒருவித தென்பில் மனம் துள்ளி எழுந்து விடுகிறது. செய்த செயல்களில் சரி,பிழைகளை சரியாக இனம் காண்பதன் மூலம் தவறுகளுக்கு பொறுப்பேற்பதன்மூலம் மனம் சுத்தமாகிவிடுகிறது. ஆடிப்பாடத் தொடங்கிவிடுகிறது.
‘கண்கள் புரிந்துவிட்ட பாவம் உயிர் கண்ணனுரு மறக்கலாச்சு பெண்களினிடத்திலிது போலே ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?” என்ற பாரதியின் பாடலை உற்சாகம் பெற்ற மனத் தூண்டுதலால் உதடுகள் மெல்லப் பாடின. சிறுவன் கூறியதுபோல மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ்வது தான் நல்லது. இவரைப்போல பரந்த நெஞ்சைப் பார்ப்பதே அரிதான விடயம்தான். அவர் என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். ஆனால் இப்போ அவரை நான் அழைக்கப்போகும்போது அவர் மறுக்காமல் இருப்பாரா? அப்படி அவர் மறுத்தால்.அதையும் ஏற்க நான் தயார்தான். அன்று அவரை மறுத்தற்கு கிடைத்த பரிசாக இருக்கட்டுமே”
பழைய ஞாபகங்கள் சில மெல்லத் தோன்றின. சிட்டுகளாக பறந்து திரிந்த பருவத்தில் அவளது கணவன் அவளை துரத்தித் திரிந்தது ஞாபகத்தில் வந்தது. முகம் நாணிச் சிவந்தது. எவ்வளவு தூரம் இவளுக்குப் பின்னால் அவன் நாயாய் அலைந்திருப்பான். முதன்முறையாக கடிதத்தை அவளிடம் எதோ துணிவில் கொடுத்துவிட்டு அவள் எதிரிலேயே வரப்பயப்பட்டு ஒருமாதமாக அவன் தலைமறைவாகப் போனதை நினைத்ததும் சிரிப்பு இலேசாக வந்தது. அந்த ஒரு மாதமாக இவள் அவனைத் தேடித் தவித்த தவிப்பு. வாய் விட்டுச் சிரிக்கவேண்டும்போல் பட்டது. சிரித்தாள். பழைய ஞாபகங்கள் எப்போதுமே இனிமையாகத்தான் இருந்துவிடுகின்றன. பழைய படப்பாடல் ஒன்றின் வரிகளை மெல்ல முணுமுணுத்துக்கொண்டாள். பசுமை நிறைந்த நினைவுகளே.பாடித் திரிந்த பறவைகளே ஏன் எப்போதுமே பழைய நினைவுகள் இனிமையானதாகவும் நிகழ்கால நடப்புகள் கசப்பானதாகவும் அல்லது இனிமையற்றும் இருந்து விடுகின்றன. இவ்விதம் கேள்வி ஒன்றும் எழுந்தது. அந்தப் பருவத்தில் கதைகள் வாசிப்பதென்றால் அவள் பைத்தியமாகிவிடுவாள். அதைவிட வீட்டுத்தோட்டம், வளவுக்குள் பின்னேரங்களில் பறவைகளை, அணில்களைப் பார்த்து மெய்மறந்து. நிற்பது இவளது வளவுக்குப் பின்னால் விரிந்திருந்த வயல் அவளது கணவன் குடும்பத்தாரது அங்குதான் – உயரமாக வளர்ந்திருக்கும் நெற்கதிர்களின் மறைவுக்குள் இவள் அதிகமாக அவனைச் சந்திப்பது. ஒருவித படபடப்பில் எதிர்பார்ப்பில் கழிந்து கொண்டிருந்த பருவம். அப்பருவத்தில் நெஞ்சில் பதிந்திருந்த அப்பாவித் தன்மை வயது ஆக ஆக குறைந்து கொண்டேதான் போய்விடுகிறது. உண்மைதான். குழந்தைகள் மனதில் கபடம் இருப்பதில்லை. வயது போக குழந்தைகள் மாறிவிடுகிறார்கள். இல்லாவிட்டால் காதலித்து மோகித்து மணந்தவனுக்கே துரோகம் செய்ய மனது வந்திருக்குமா?
அவளது இன்றைய சீர்குலைவிற்கு காரணமானவனின் ஞாபகமும் எழுந்தது. அவன் உண்மையில் இவளைப் பலவந்தப்படுத்தினானா? அவன் சந்தர்ப்பத்தை இவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். இவள் அந்தச் சூழல் விரித்த வலைக்குள் சிக்குப்பட்டு தானாகவே அகப்பட்டுக்கொண்டாள். இராமாயணத்தில் வரும் அகலிகை செய்ததுபோல. அகலிகைக்கும் கெளதமரின் வேடத்தில் வந்தது இந்திரன் என்று தெரிந்திருந்தது. இருந்தும் அவள் தவறினாள்? ஏன்? தேவர்களின் அரசன் இந்திரன். அவனே தன் அழகில் மயங்கி வந்து விட்டானென்றே தன் அழகின் மேல் அவளுக்கு இருந்த கர்வத்தினால் அவள் மயங்கிப்போனாள். இதனால் அவள் தவறிப்போனாள். தெரிந்தே தவறிப்போனாள். அவள் தான் எப்படித் தவறிப்போனாள் என்றால் முற்றும் அறிந்த முனிவரான கெளதமருக்கு மூளை எங்கே போயிற்று? நடுநிசிக்கும் அதிகாலைக்கும் வித்தியாசம் தெரியாத கெளதமரா முற்றும் அறிந்த முனிவர்? இப்படித்தான் முற்றும் அறிந்த பலர் ஆனைக்கும் அடி சறுக்கியவர்களாகப் போய் விடுகிறார்கள். அந்த அகலிகையைக் கல்லாக்கிய கெளதமர் கூட அவள் விமோசனம் பெறுவதற்கும் வழி வைக்காமல் இல்லை. இராமனின் பாதங்கள் பட்டு சாபம் நீங்கிய அகலிகையை கெளதமர் மீண்டும் ஏற்கத்தானே செய்கிறார்? என் வாழ்வில் இராமன் யார்? சிறுவனா.இவன் வரவால் என் பாபம் நீங்கி மீண்டும். என் புருஷனிடம் சேரப் போகின்றேனா? தெரிந்தும் தவறிழைத்தாள் அகலிகை, அவளையே கெளதமர் மீண்டும் மனையாளாக ஏற்காமல் இல்லை. இக்கதை மூலம் இராமாயணத்தில் ‘கற்பு, கற்பு என்று மேடைக்கு மேடை முழங்கும் சமூகத்தின் பெருங்காப்பியங்களில் ஒன்றில் கூறப்பட்டு அகலிகையின் கதையில் கூறப்படுவது என்ன? கற்பு தவறியவளுக்கும் மன்னிப்பு உண்டென்பதா? அகலிகையின் கதைக்கும் தன் நிஜவாழ்க்கைக்கும் இடையில் நிலவிய ஒற்றுமை ஒருவித வியப்பையும் இதே சமயம் ஒருவித ஆறுதலையும் இவளுக்குத் தந்தது. அதேசமயம் கல்லாகி எத்தனையோ வருடங்களாக காட்டில் மழையிலும் வெயிலிலும் வாடிக் கொண்டிருந்த அகலிகையின் மேல் ஒரு வித இரக்கமும் ஏற்பட்டது. அனுதாபமும் தோன்றியது. நெஞ்சில் அகலிகையின் உருவத்தைக் கற்பனை செய்து பார்த்தாள். தேவராஜனான இந்திரனே மயங்கும் அளவுக்கு அபரிதமான அழகுடையவளாக விளங்கிய அகலிகையின் உருவத்தைக் கற்பனை செய்து பார்த்தாள். கல்கியில் வெளிவந்த சித்திரக் கதைகளுக்கு ஒவியம் வரையும் வினுவின் ராஜகுமாரிகளில் ஒருத்தியின் ஞாபகம்தான் வந்தது. இவ்விதம் தோன்றிய அகலிகையைக் கட்டியனைத்து ஆறுதல் கூறினாள். இவளுக்கு இப்போது நெஞ்சு மகிழ்ந்திருந்தது. இன்பத்தில் பொங்கியிருந்தது. மிக விரைவில் கணவனுடன் கதைக்க வேண்டுமென முடிவு செய்தவளாக மீண்டும் படுக்கைக்குத் திரும்பினாள். சிந்தனைகள் அவள் குழப்பத்தைப் போக்கியிருந்தன. நெஞ்சில் நிம்மதியை, தெளிவினை, உறுதியைப் பரப்பியிருந்தன.
“தீயினை நிறுத்திடுவீர்! நல்ல தீரமுந் தெளிவும் இங்கருள் புரிவீர்! மாயையில் அறிவிழந்தே உம்மை மதிப்பது மறந்தனன், பிழைகளெல்லாம் தாயென உம்மைப் பணிந்தேன், பொறை சார்த்தி நல்லருள் செய வேண்டுகிறேன். வாயினிற் சபதமிட்டேன் இனி மறக்கிலேன். எனை மறக்கிலிர்!”
அத்தியாயம் 11: டீச்சரின் பார்வையில்….
கொஞ்ச நாட்களாகவே வேலையில் மனசு ஒன்ற மாட்டேன் என்கிறது. மனசு அமைதியில்லாம் தவிக்கத் தொடங்கி விடுகிறது. வாழ்க்கையில் அமைதி இல்லை என்றால் மனதிலும் அமைதி வற்றித் தான் விடுகிறது. போதாதற்கு மண்டையைப் பிளந்து கொண்டு தலையிடி வேறு. வழக்கமாய் அஸ்பிரின் இரண்டிரண்டாய் நாலு மணிக்கொரு தடவை எடுத்தால் தான் தலையிடி நிற்கும். ஆனால் இம்முறை இந்த வைத்தியமும் வேலை செய்யவில்லை. தலையிடிக்கும் அஸ்பிரின் பழகி விட்டதோ? பின்னேரம் மிஸிஸ் லுங்கிடம் போகவேண்டும். அவள்தான் என்ரை ஃபமிலி டொக்டர். கைராசியான டாக்டர் அவள், திரும்பத் திரும்ப அவருடைய முகம்தான் மனசிலை வந்து வந்து சிரிக்குது. எவ்வளவு தூரம் அவரிலை மனசு பதிந்து போய் கிடக்கிறது. இவ்வளவு தூரம் அவரிலை உருகிற மனசுக்கு அன்றைக்கென்று புத்தி எங்கே போயிற்று? மனம் ஒரு குரங்கென்று சும்மாவா சொன்னாங்க. அவரிட காலிலை விழுந்து கதற வேண்டும் போலிருக்கிறது. அப்படியே அந்தப் பாதங்களை கண்ண்ரீரால் குளிப்பாட்ட வேண்டும் போலவும் இருக்கிறது. இந்த செக்ஸ் உணர்ச்சி தானே என்னை இந்த நிலைக்கு தள்ளியது. வாழ்க்கை முழுக்க இந்த உணர்ச்சியையே ஒதுக்கித் தள்ளி விட்டு, அவர் கால்மாட்டில் தலை வைத்துப் படுக்க அவர் சம்மதித்தாலே போதும் போல் தெரிகிறது. அகலிகைக் கல்லாகிக் கிடந்தது போல். உணர்வுகளைக் கல்லாக்கி விட்டு அப்படி இருப்பது கூட ஒரு வித மீட்சி போலத் தான் படுகிறது. கொஞ்சநாளாகவே என்ரை போக்கை கவனித்த சுப்பர்வைசர் கிறிஸ்டினா தான் நல்லதொரு. அட்வைஸ் பண்ணினாள். “யூ டோன்ட் லுக் லைக் ஒகே. வை டோன்ற் யூ கோ போர் டூ வீக் வக்கேஷன். இட் வுட் பீ குட் போர் யுவர் மைன்ட் அன்ட் ஹெல்த்”. , கிறிஸ்டினாவின் அட்வைஸம் சரியாகத் தான் பட்டது. நானும் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து. இதுவரை லிவு எடுத்ததேயில்லை. எடுத்தால் என்ன என்று பட்டது. இவள் சொல்வது போல் உடம்புக்கும் நல்லதாகவே பட்டது. இதற்குள். என் வாழ்க்கையையும் ஒரு சீருக்கு கொண்டு வரலாம் போலவும் பட்டது. அப்பாட்மென்டிலும் ஒழுங்குபடுத்த வேண்டிய வேலைகள் நிறையவே இருந்தன. கொஞ்ச நாளாக மறைந்திருந்த கரப்பான் பூச்சிகளின் தொல்லையும் பழையபடி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. எவ்வளவோ செய்தும் அடக்க முடியாத கரப்பானை சைனாக்காரனின் ‘சோக் தான் தீர்த்து வைத்தது. இப்ப பழையபடி தலைகாட்டத் தொடங்கி விட்டினம். “சோக் கொஞ்சம் வாங்க வேணும். இந்த சைனாக்காரனின்ரை மூளையே மூளை, ஆட்கள் தான் குறுணி, விஷயகாரங்கள் தான். இந்த வெள்ளைக்காரனாலை முடியாத விஷயத்தை சின்ன ‘சோக்”கை கொண்டு என்ன மாதிரி தீர்த்து வைக்கிறாங்கள். ‘சோக் கோடுகளைப் போட்டு கரப்பான் பூச்சிகளை அடக்கிற விசயம் இருக்குதே. கோடுகளைத் தாண்டிப் போட்டு கரப்பான் பூச்சிகள் கண்மண் தெரியாமல் வந்து மோதி சாகேக்கை பார்க்கிறதுக்கு பாவமாயிருக்கும். கரப்பான் பூச்சியின் உடலில் எந்த இடத்தில் பட்டாலும் சரியாம், ஐந்தாறு மணித்தியாலத்தில் முடிஞ்சு விடுவினமாம். கோடுகளைத் தாண்டிய கரப்பான் பூச்சிகளின் முடிவை நினைச்சதும் எனக்கு வேறு ஒரு விசயமும் ஞாபகத்திற்கு வந்து போகிறது. என் வாழ்க்கையும் ஒரு விதத்தில் இந்த கரப்பான் பூச்சிகள் போலத்தானோ. என்றொரு எண்ணமும் கூட எழாமலில்லை. சில கோடுகளைத் தாண்டினதாலை தானோ என்ர வாழ்க்கையும் இப்படியாச்சோ? கோடுகளைத் தாண்டினால் நிலைமை இப்படித் தானோ?
எத்தனை விதமான கோடுகள். எங்களைச் சுற்றி நாங்களே போட்டுக் கொண்ட கோடுகள். ஆனால் சிலசமயம் கோடுகளைத் தாண்டவும் வேண்டித்தான் இருக்கிறது. ஆனால் என்ர நிலைமை வேற. ‘அழகான புருஷன், என் மேல் அன்பையே வைத்திருக்கிற புருஷன். நான் அளவு கடந்து காதலிக்கிற புருஷன். இப்படிப்பட்ட ஒரு புருஷனுக்குத் தான் நான் துரோகம் செய்தன், அகலிகை செய்தது போல. ஆனால் புருஷன்மார்கள் மனிசிமாரை அடித்து, உதைத்து சித்திரவதை செய்து பிழிகிற நிலையிலை மனிசிமார் கோடுகளைத் தாண்டி ஒட வேண்டித்தானே இருக்கிறது. ஆனால் என்ரை நிலைமைக்கும் அவர்களின்ரை நிலைமைக்கும் நிரம்ப வித்தியாசமிருக்கு. கிறிஸ்டினா சொன்னது போல் அரை நேரத்தோடயே, லிவு எடுத்துக் கொண்டு அப்பாட்மென்ட் திரும்பினேன். திரும்பும்போது சைனா டவுனிற்கு போய் காய்கறிகளும், கணவாய், சுறா, மீன் வகைகள் வாங்கிக் கொண்டும், மறக்காமல் ஒரு டசின் சைனா சோக்குகளும் வாங்கிக் கொண்டு டாக்ஸி பிடித்து திரும்பினேன். மீன் மணத்தோட சப்வேயில் வரமுடியாது. ‘பாக்கிஸ் ஆர் டேட்டி அன்ட் ஸ்மெல்லி’ என்ற கூற்றுக்கு இலக்கணமாக நின்று கொண்டு வர வேண்டும். ‘மீன் மணத்தையே நுகராதவர்கள் மாதிரி ஒவ்வொருத்தனும் முகத்தை திருப்புவதை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். பேசாமல் டக்ஸி பிடித்துக் கொண்டு போறது தான் நல்லது. ஆனா இங்க டக்ஸி சரியான எக்ஸ்பென்ஸிவ். ஆனா எந்த நாளுமா டக்ஸியிலை போறம். எப்பாலும் இருந்திட்டுத் தானே. என்றாலும் இருக்கிற பிரச்சனைக்குள்ள இப்படியான செலவுகளை தவிர்த்துக் கொள்ளுறது தான் நல்லது.
எல்லாம் கழிச்சு கையில வாறதே ஆயிரத்தி இருநூறு தான். அதிலை ஐநூற்றி ஐம்பது ரெண்டிற்கு போக மிச்சத்தில் சப்வே பாஸ், சாப்பாடு, வீட்டுக்கு அனுப்பியது போக மிச்சமென்று ஒன்றுமேயில்லை. என்ரை பேர்சனல் செலவுகளுக்கே போதாத நிலை. இங்க புருஷன் பெண்டாட்டி கல்யாணமாகி இருந்தால் கொஞ்சம் ஈஸி. வேலை வேலை என்று முதுகு முறிந்து கையில வாற காசு தான் ‘வெல்பெயர் எடுத்தாலும் வரும். பேசாமல் “வெல்பெயரே எடுத்துக்கொண்டு அக்கடா என்று இருந்து விடலாம். இது போதாதென்று கிறடிட் காட் பிரச்சனை வேற. இங்கத்தை ‘சிஸ்டம் சரியில்லை. கடன் கடன் என்று தந்தே எங்களை அடியாக்கிப் போடுறாங்கள். ஊரிலை உள்ள பிரச்சனைகள் வேற. இங்க உள்ள பிரச்சனைகள் வேற, அங்கு இங்கு போல நினைச்ச கார், வீடு, உடுப்பு என்று வாங்க முடியாது. விதவிதமாய் சாப்பிட முடியாது. காசிருந்தா தான் எல்லாம் வாங்கலாம். இங்க எல்லாமே வாங்கலாம். அனுபவிக்கலாம். ஆனால் கடனுக்குத் தான். அங்க கஷ்டப்பட்டு காசு சேர்த்து சந்தோசமாயிருக்கலாம். ஆனா இங்க கஷ்டப்படாம சந்தோசமாயிருந்து விட்டு, பின்னாலை கிடந்து நல்லா உளையலாம். ஊரிலை மட்டும் அரசியல் பிரச்சனை இல்லை என்றால் கொஞ்சம் உழைச்சுப் போட்டு பேசாம நிம்மதியாய் வாழலாம். இப்ப ஊரிலை அம்மா தங்கச்சிமாரின்ரை நிலை என்னவோ? அதுகளை ஒருமாதிரி இங்காலை கூட்டி வந்து விட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும். ஸ்பொன்சர் பண்ணி ஆறுமாதமாச்சு, இன்னமும் அங்க போர்ம்ஸே போகவில்லையாம். இனி போர்ம்ஸ் போய் எல்லாம் நடந்து முடிய இன்னும் ஒரு வருசமாவது எடுக்கும். அதுக்குள்ளை நாடிருக்கிற நிலையிலை என்னவெல்லாம் நடக்குமோ? அவசரத்துக்கு களவாய் கூட்டிக் கொண்டு வரலாம் எண்டா ஒவ்வொருத்தனும் பதினைந்து, இருபதென்று கேட்கிறாங்கள். அவ்வளவு பெரிய காசுக்கு நானெங்க போவன். எங்கட பெடியளெல்லாம் எங்காலைதான் இவ்வளவு காசை உழைக்கின்றார்களோ? ஆரைக் கேட்டாலும் இருபது முடிஞ்சுது ஒருமாதிரி தம்பி வந்து சேர்ந்திட்டான். போனமுறை பதினைந்து குடுத்தும் அம்ஸ்டர்டாமில் திருப்பி அனுப்பிப் போட்டான்கள். ஆனா இந்த முறை ஏஜண்ட் பெடியன் ஆள் விசயகாரன். கொண்டு வந்து சேர்த்திட்டான்’ என்கிறான்கள். எனக்கென்றால் தலைசுத்திறது. என்னாலை ஒரு சதம் சேர்க்க முடியாமல் கிடக்குது. இவர்கள் எப்படித்தான் இப்படி உழைச்சுத் தள்ளிறாங்களோ?
சிந்தனைகளுக்கு மூட்டி கட்டி வைத்து விட்டு கொண்டு வந்த காய்கறிகளையும் மீனையும் பிரிட்ஜில் அடுக்கி வைத்தேன். களைப்பாயிருந்தது. “ஆரஞ் ஜூஸ்” எடுத்துக் குடித்து விட்டு வந்து சோபாவில் சிறிது நேரம் படுத்துக் கிடந்தேன். சுகமாயிருந்தது. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்து விட்டு எழுந்தேன். டேப்பில் பழைய பாட்டு கசட்டைப் போட்டேன். பாட்டைக் கேட்ட படி கிச்சின் கபேட்டில் இருந்து எலலாவற்றையும் வெளியில் எடுத்து வைத்தேன். போனமுறை வாங்கி மிஞ்சியிருந்த பூச்சி மருந்தை “ஸ்பிறே பண்ணினேன். இவ்விதம் ஸ்பிறே பண்ணி விட்டு சைனா சோக்காலை கீறினா தான் எபக்டிவ் ஆக இருக்கும். ஒரு மாதிரி இந்த வேலை முடிய இருட்டி விடத் தொடங்கி விட்டது. இனி பார்க்குக்கும் போக முடியாது. இன்றைக்கு நல்ல றெஸ்ட் எடுக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். வேலை செய்து களைத்த உடம்பு உடம்போடு ஒட்டிக் கொண்டு எரிச்சலாக இருந்தது. ஆறுதலாக பெரியதொரு குளிப்பு உடம்பிற்கு இதத்தை தந்தது. மனம் தெளிவாக இருந்தது.
அவருக்குப் போன் பண்ணினால் என்ன என்று பட்டது. சோபாவில் ஆறுதலாக சாய்ந்தபடி அவரது நம்பரை டயல் பண்ணினேன்.
“ஹலோ யாரது?
அவர் தான். அவரே தான். அவரது. குரலைக் கேட்டதும் நெஞ்செல்லாம் விம்முகிறது. அவரது குரலைக் காலமெல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். போல் பட்டது. பேசாமல் சிறிது நேரம் அப்படியே இருந்தேன்.
“ஹலோ. ஹலோ”
அவர் போனை வைத்து விடுவார் போல் பட்டது.
நான் . தான் என்னைத் தெரியுதா என்றேன். சிறிது நேரம் மெளனமாயிருந்தார். பிறகு கேட்டார்.
“என்ன விசயம்”
‘உங்களுடன் கதைக்க வேண்டும் போலிருந்தது. அதுதான் போன் பண்ணினேன். இஃப் யூ ஆர் ஃபிரீ, ஐ லைக் ரு இன்வைட் ஃபோர் டின்னர் என்றேன்.
இதற்கு சிறிது நேரம் மெளனமாயிருந்தார்.
“இங்க பார். தயவு செய்து இனிமேல் இப்படிப் போன் எடுக்காதை, நீ இதுவரை தந்த பிரச்சனைகளே போதும்”
“ஹலோ. பிளிஸ். பிளிஸ். போனை வைக்காதேங்கோ. உங்களோட கொஞ்ச நேரம் வடிவாய் கதைக்க வேணும்.”
ஆனால் அதற்குள் அவர் போனை வைத்து விட்டார். அவர் நிலையில் அவரில் எந்த வித பிழையுமில்லை. ஆனால் இப்ப என்ன செய்வது? சிறுவன்தான் இதற்குச் சரி. அவன் மூலமாகத்தான் விசயத்தை அணுக வேண்டும் ஒருவேளை இவ்விசயத்தில் முடிவு ஏமாற்றமாயிருந்தால் என்ன செய்வது? வீட்டாரை ஒரு மாதிரி இங்காலை எடுத்து விட வேண்டும். அவர்கள் வந்ததும் என் வாழ்க்கையையும் மாற்ற வேண்டும். வாழ்க்கை முழுக்க இப்படியே உழைத்து உழைத்து யாருக்கும் பயனில்லாமல் எனக்கும் பயனில்லாமல் வாழ்ந்து முடிந்து விடக் கூடாது. அதை விட யாருக்காவது பயனுள்ளவளாக வாழ்ந்து முடிந்து விட வேண்டும். தற்போதைய நிலையில் ஊரிற்கு போனாலாவது அகதிகள் முகாமிலையாவது வேலை செய்ய முடியும்? அனாதைகள் ஆச்சிரமங்களில் பணிபுரிய முடியும்? எத்தனையோ மூன்றாம் உலக நாடுகளில் சமூக வேலை செய்வதற்கு போதுமான தொண்டர்கள் கிடைப்பதில்லை. அங்கு எங்காவது சென்று வேலை செய்ய வேண்டும். குறைந்தது மனதிற்கும் நிம்மதியாக இருக்கும். அதே சமயம் எத்தனையோ பேருக்கும் பிரயோசனமாயிருக்கும். வாழ்க்கையை பயனுள்ளதாக்க வேண்டும்.
அப்போது தான் இவ்வளவு நேரமும் லைற்றே போடாமல் இருப்பதை உணர்ந்தேன். இருட்டில் இவ்விதம் இருப்பது கூட ஒரு விதத்தில் புதுமையான அனுபவமாகத் தான் இருக்கிறது. இருட்டில் இருந்தபடியன்னலினூடு தொலைவில் தெரிகின்ற ஒளிப்பொட்டுக்களை பார்ப்பது கூட சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. இருட்டில் இருக்கையில் தான் ஒளியின் அருமையே தெரிகின்றது. ஒளியின் அருமையை அறிவதற்கு இருட்டில் இருக்க வேண்டும் போல தான் படுகிறது. இருளும் ஒளியும் வாழ்வின் அடிப்படைத் தத்துவங்கள் போல படுகிறது. இருளும் ஒளியும் எத்துணை விசித்திரமான ஜோடி ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஆனால் இரண்டையும் ஒரே இடத்தில் காண முடியாது. எனக்கு என் சிந்தனை சிரிப்பைத் தருகின்றது. இப்படியே என்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தத்துவ ஞானியாகி விடுவேன் போலிருந்தது. எழுந்துலைற்றைப் போட்டன். இதுவரை ஆட்சி செய்து கொண்டிருந்த இருள் போன இடம் தெரியவில்லை. எனக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு வித குறுகுறுப்புடன் லைற்றை ஒஃப் பண்ணி விட்டேன். மீண்டும் இருளின் ஆட்சி. சிரித்துக் கொண்டிருந்த ஒளி இருந்த இடமே தெரியவில்லை. சிறிது நேரம் ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான விளையாட்டை ரசித்தபடியே இருந்தேன். பெரியதொரு தத்துவமொன்றை அறிந்து விட்டது போன்றதொரு தெளிவில் நெஞ்சு மகிழ்ந்திருந்தது. உதடுகள் பாடல் ஒன்றை முணுமுணுக்கின்றன.
“சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரை கொண்டு பாய
சோதி என்னும் பெருங்கடல் சோதிச்
சூறை, மாசறு சோதியனந்தம். சோதி என்னும் நிறைவிஃதுலகைச் சூழ்ந்து நிற்ப, ஒரு தனி
நெஞ்சம் சோதியென்றதொர் சிற்றிருள் சேரக் குமைந்து சோரும் கொடுமையிதென்னே!”
அத்தியாயம் 12: சிறுவனின் கதை!
மறுநாள் அவள் நேரத்துடனேயே எழுந்து விட்டாள். அவசர அவசரமாக விழுந்தடித்துக்கொண்டு வேலைக்குப் போகும் பரபரப்பில் பஸ் பிடிப்பதற்கான தேவையேதுமின்றி நித்திரை விட்டெழும்புகையில் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.
“சைனா சோக் பட்டு கரப்பான் பூச்சிகள் ஆங்காங்கே மயங்கியும் செத்தும் கிடந்தன. பார்ப்பதற்குப் பாவமாகக் கூட இருந்தது. எங்களுக்குப் பிரியமான பறவையொன்றை அல்ல்து மிருகமொன்றை துன்புறுத்தினால் கொன்றால் நெஞ்சு வலிக்கின்றது. உயிர்களை கொல்லுதல் பாவமென்று மனம் அடித்துக் கொள்கின்றது. ஆனால் எறும்புகள், பூச்சிகள், நுளம்புகள் போன்ற சிற்றுயிர்களை நூற்றுக்கணக்கில் கொல்லும் போதே ஏதோ இயல்பானதொன்றை செய்வது போல் மனம் இருந்து விடுகின்றது. இச்சிறு உயிர்களுக்கு மட்டும் பேசும், சிந்திக்கும் சக்தியிருந்தால் நிச்சயமாக அவை மனிதனின் இந்த பாரபட்சமான போக்கிற்கு எதிராக குரல் கொடுக்காமல் போகாயின.
செத்திருந்த கரப்பான் பூச்சிகளை கூட்டித் தள்ளினாள். அப்பாட்மென்ற் முழுக்க நன்கு கூட்டித் துப்புரவாக்கித் தண்ணி இலேசாகத் தெளித்தாள். சாம்பிராணி கொளுத்திப் புகையை படரவிட்டாள். மனதுக்கு இன்பமாக இருந்தது. டேப்பில் கிடந்த பக்திப்பாடல் கசெட்டை ஓடவிட்டாள். ‘பால்மனக்குது பழம் மணக்குது பழனி மலையிலே இவளது இத்தகைய போக்குக்கு இவளது அப்பாவின் வளர்ப்புத் தான் காரணம். பாரதி பக்தரான தமிழ் வாத்தியார் அவர். சைவபக்தர் கூட, பாரதி பாடல்கள் பல இவளுக்கு மனப்பாடமாக வருவதற்கே காரணம். இவளது அப்பா இவளுக்கு படிப்பித்த தமிழ்ப் பாடம் தான்.
பத்து மணியளவில் டெலிபோன் அடித்தது.
“ஹலோ” “ஹலோ.குட் மோணிங் ரீச்சர், என்ன செய்யிறே”
சிறுவன் தான்.
ஹாய் சிறுவா.ஃபிரீயாயிருந்தால் வாவன். நான் வக்கேஷனில் நிற்கிறன்’
‘என்ன விசயம், திடீரென்று லிவு எடுத்துட்டாய்” ‘மனம் சரியில்லாமல் இருந்தது. நேற்றுத்தான் இந்த யோசனை வந்திச்சு. எதுக்கும் இங்க வாவன். ஆறுதலாய் கதைப்பம்”
‘சின்ன ஷொப்பிங் ஒண்டு செய்ய வேணும். செய்து போட்டு வாறன். ஏன்டீச்சர், உனக்கு ஏதாவது வாங்க வேணுமோ? வேணுமென்டால் வாங்கி வாறனே.”
“நீ கேட்டதும் நல்லாப் போச்சு. எனக்கும் பால் வாங்க வேணும். உனக்கு பிரச்சனையில்லை எண்டால் வாங்கி வாவன்.”
“ரூ பேர்சன்ட் தானே”
“அதே தான்”
நல்ல வேளை போன் பண்ணினான், பால் பிரச்சனை தீர்ந்தது. இனம் புரியாத சந்தோசகரமான உணர்வு நெஞ்சமெங்கும் பரந்து கிடந்தது. சிறுவன் பாலுடன் வந்தபோது மணி பதினொன்றைத் தாண்டிவிட்டிருந்தது.
‘என்ன, டீச்சர் அப்பாட்மென்ட் தெய்வீகச் சூழலிலை மணக்குது’
சிறுவன் முன்பு போல இல்லை. இயல்பானவனாக மாறிவிட்டிருக்கிறான். நல்ல மாற்றம் தான். இவ்விதம் தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்ட டீச்சரின் இதழ்களில் புன்னகை கோடு கிழிந்தது.
“பார்த்தியா சிறுவா, சூழல் மனதை மாற்றி வைக்கிறதே”
மங்கலகரமான சூழல் நெஞ்சுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அமங்கலமான சூழல் நெஞ்சுக்கு அமைதியை அழித்து விடுகின்றது. சூழல் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய உரையாடல் அவனுக்கு பழைய நினைவுகளை ஏற்படுத்தின. அவன் மெளனத்தை அவள் கவனித்தாள்.
‘என்ன சிறுவா’ என்ன மெளனம்? ‘பழைய நினைவுகள் சிலவற்றை உன்பேச்சு ஞாபகப்படுத்தி விட்டது. தட்ஸ் ஒல்”
பழைய நினைவுகள் முன்பைப் போல் அவனை உறைநிலைக்கு தள்ளி விடாததை அவள் அவதானித்தாள். அவள் சமைப்பதற்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினாள். அவன் அவளுக்கு உதவிகள் செய்யத் தொடங்கினான். ‘சிறுவா நீ பழைய நினைவுகள் என்றதும் தான் ஞாபகம் வருது. நீ இன்னம் உன்ரை கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறவில்லையே’
‘டீச்சர் உன்னிடம் சொல்றதாலை எனக்கு நல்லதுதான்’
இவள் றைஸ் குக்கரில் அரிசியும் அதற்களவான தண்ணிரும் ஊற்றி பிளக் பண்ணினாள். இவன் அவளுக்கு வெங்காயம் உரித்து தந்து உதவினான்.
‘டீச்சர் ஒரு காலத்திலை பல எதிர்பார்ப்புகளுடன் இயக்கமொன்றில் சேர்ந்தன்’
‘என்ன. என்ன நீ இயக்கத்தில இருந்தனியோ இவளுக்கு வியப்பாக இருந்தது.
“இளம் ரத்தம். சமூக அநியாங்களை கண்டு பொறுக்காமல் பொங்கியெழும் துடிப்பான நெஞ்சு, பல்வேறு கனவுகள் நெஞ்சை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம். ஆனால் எல்லாமே வீணாய் போயிற்று’
‘எனக்கு விளங்காத விசயமே இதுதான் சிறுவா”
‘என்ன டீச்சர் சொல்றாய்”
‘ஊருக்காக மக்களுக்காக தங்களது சொந்த வாழ்க்கையை தியாகம் பண்ணிவிட்டு இயக்கமென்று போறீங்களே. அதைத் தான் என்னால புரிஞ்சு கொள்ள முடியேலை. அப்பப்பா. என்னால் கொஞ்சம் கூட முடியாத விசயம்’. இவள் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டாள்.
‘டீச்சர் உனக்கு இதுதான் புரியேலை. ஆனா எனக்குப் புரியாத விசயம் என்னவென்றால்’
“என்ன?”
“சொந்த வாழ்க்கையையே தியாகம் பண்ணிப் போட்டு போராடப் புறப்பட்ட எங்களுக்கு இடையில் உருவான போட்டி பூசல்கள், பொறாமை, ஒற்றுமையின்மை. இவற்றைத்தான் புரிய முடியவில்லை.”
இவள் இதற்கு மெளனமாயிருந்தாள் பின் தொடர்ந்தான்.
“நாங்கள் புறப்பட்டதோ ஏதோ ஒன்றுக்கு. கடைசியில கிடைச்சதோ டீச்சர். என்ரை உயிர் நண்பனை சாகடிக்கவே நான் காரணமாயிருந்திட்டன்.”
‘என்ன சொல்றாய். சிறுவா”
இதுதான் இவனது உறைதலுக்கு காரணமான விடயமோ? இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
‘என்ரை நண்பனை இயக்கத்தில சேர்த்ததே நான் தான். கடைசியில அவன்ரை உயிரைப் பறிப்பதற்கு நானே காரணமாயிருந்து போட்டன். அவனை எச்சரித்து தப்பி வைப்பதற்கு கூட எனக்கு நிறைய நேரமிருந்தது. ஆனா நான் அப்படிச் செய்யவேயில்லை டீச்சர். இயக்கத்தில நான் வைச்சிருந்த அளவு கடந்த பக்தி, விசுவாசம் என்ரை கண்ணையும் கட்டிப் போட்டுது. நானே அவனைக் கைது செய்தன்’
‘என்னத்துக்கு சிறுவா.”
‘டீச்சர் அவன் ஒளிவு மறைவில்லாது பேசுறவன். அவனது அந்தப் போக்கே அவனுக்கு எதிரியாய் போட்டுது. எப்படியோ அவன் மேலை ‘உளவாளி என்ற சந்தேகம் ஏற்பட்டு விட்டது.
“என்னையே கைது செய்யச் சொன்னார்கள். கடமையைச் செய்தேன். ஆனால் முடிவோ’
‘என்ன சிறுவா சொல்லுறாய், அவனுக்கு என்ன நடந்தது?”
‘அவன்ரை உடம்பைக் கூடப் பார்க்கேலை, சித்திரவதை செய்தே கொன்றுபோட்டார்கள்’
‘இதென்ன இதென்ன அநியாயமாய் கிடக்கு நம்பவே முடியேலை”
‘இதுதான் எனக்கும் விளங்கேலை. உயிரை தியாகம் செய்து போராடப் புறப்படுறம். ஆனா எங்களுக்குள்ள ஒன்றாய், ஒற்றுமையாய் செயற்பட மட்டும் எங்களாலை முடியவில்லை. உயிர்த்தியாகத்தையும் விட எங்களுக்கிடையிலான போட்டி பூசல்கள் முக்கியமாகிப் போய் விட்டனவா? இதுதான்.எனக்கு விளங்கேலை”
இவளுக்கு இவனைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. கானல்களாகி விட்ட கனவுகளைச் சுமந்துகொண்டு, உயிர் நண்பனின் முடிவுக்கும் காரணமாயிருந்து விட்டு தவிக்கிறான். இதுவரையில் இவள் இயக்கங்களைப் பற்றி ஆராயும் தகுதி தனக்கில்லை என்று எண்ணிக் கொண்டிருவந்தவள். நடைபெறும் செயல்களுக்கு ஏதாவது சரியான காரணங்கள். இருக்குமென எண்ணியவள். ஆனால் இன்று தான் முதன்முறையாக இயக்கங்களிலும் தவறுகள் நடைபெறக் கூடும் என்பதை உணர்ந்தாள். மிகவும் அற்பத்தனமான கேவலமான விடயங்களிற்காகக் கூட அவற்றில் தவறுகள் நிகழக் கூடும் என்பதை உணர்ந்தாள். இதற்கு சாட்சியாக எதிரில் சிறுவன் இருக்கின்றானே. ‘நான் ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இவள் இன்னொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இவளது பாதிப்பு இவளோடு சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் என் பாதிப்பு, முழுச் சமூகத்தையுமே பாதிக்கும் விடயம். முழுச் சமூகத்தின் தலைவிதியையுமே தங்கள் கைகளில் வைத்திருக்கின்ற இயக்கங்களில் ஏற்படும் பாதிப்புகள் முழுச் சமூகத்தையுமே பாதித்து விடுகின்றன. இயக்கங்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை என்றால் பாதிக்கப்படுவது யார்? இவன் அவன்ரை ஆள். அவன் இவன்ரை ஆள். இவன் அவனுக்கு சாப்பாடு போட்டான். அவன் உவனுக்கு தண்ணி வார்த்தான் என்று பாதிக்கப்படுவது யார்? இயக்கப் பிளவுகள் இயகங்களை மட்டும் பாதிக்கவில்லை. மொத்தச் சமூகத்தையுமே பாதிக்கின்றன. ஏன் இன்னமும் இயக்கங்களால் இந்தச் சின்ன விடயங்களை கூட உணர முடியவில்லை. உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் உட்பகையை தியாகம் செய்யத் தயாராக இல்லை. இந்த உட்பகை இருக்கும் மட்டும் நமக்கு உய்வில்லை. நிச்சயமாக உய்வில்லை. அவள் இந்த சூழலை மாற்ற விரும்பினாள். இந்தப் பிரச்சனையை இத்தோடு இப்போதைக்கு விடுவோம். இது பற்றி மேலும் கதைப்பது சிறுவனது மனநிலையை மேலும் குழப்பி விடும். இவ்விதம் எண்ணினாள்.
‘சிறுவா. சாப்பிட்டுப் போட்டு வெளியாலை போட்டு வருவமா’ என்று கேட்டாள்.
‘எங்க போகலாம். இந்த சமயத்திலை டீச்சர்”
“ஒண்டாரியோ சயன்ஸ் சென்ரர் போவமா? தூரமுமில்லை. பக்கத்திலை தான். பொழுது போகும். என்ன சொல்லுறே சிறுவா”
அவனுக்கும் அவள் யோசனை பிடித்திருந்தது. ஒகே. டீச்சர் எனக்கும் இது நல்லதாய் படுகுது என்றான்.
‘சிறுவா, டி.வி. பார்த்துக் கொண்டிரு. அதுக்குள்ள வெளிக்கிட்டு வாறன்”
இவனுக்கு டி.வி. பார்க்கிறது அவசியமாயிருக்கவில்லை. அங்கு கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் புரட்டினான். “ஸ்டீன்பெக் கின் “த பேர்ல்” என்ற சிறுநாவல். இவன் முன்பு எப்போதோ வாசித்திருந்தான். ஒரு முத்து மனித மனத்தில் ஏற்படுத்தும் உணர்வுகளை, விளைவுகளைப் பற்றிய கதை. மனித மனத்தின் இயல்புகளை அழகான சிறுநாவலாகப் படைந்திருந்தார் ஸ்டீன்பேக், சில பக்கங்களைப் புரட்டியவன் அதை அப்பால் வைத்து விட்டு, பாட்டு கேட்போம் என்று எண்ணியவனாக எழுந்தான்.
‘ஹாய் சிறுவா! எப்படியிருக்கிறன் அதற்குள் அவள் முகம் கழுவி ஆடை மாற்றி வந்திருந்தாள். அழகான வெள்ளையில் நீலப்புள்ளிகளிட்ட நூற்சேலை கட்டியிருந்தாள். கூந்தலை அழகாக முடிந்து கொண்டை போட்டிருந்தாள். பொட்டு வைத்திருந்தாள். அழகாக இருந்தாள்.
‘டீச்சர் உண்மையிலேயே நீ நல்ல வடிவுதான்’ தாங்ஸ் சிறுவா’ அவள் மனம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. மனித மனம் புகழ்ச்சிக்கு எப்போதுமே அடிமையாகி விடுகிறது. புகழ்ச்சி இன்பத்தை தந்து விடுகிறது.
‘அப்ப என்ன வெளிக்கிடுவமா அவள் தான் கேட்டாள். இருவரும் புறப்பட்டு அப்பாட்மென்ட் கதவு வரை வந்திருக்க மாட்டார்கள்.
“ட்ரீங். ட்ரிங். ட்ரிங்’
டெலிபோன். யாராக இருக்கும்? டெலிபோனை எடுப்போமா? அல்லது பேசாமல் விடுவோமா? அவளது தயக்கத்தை கவனித்த அவன் கேட்டான்.
‘என்ன டீச்சர், தயங்குறே”
‘எந்த ஒரு முக்கியமான கோலையும் நான் எதிர்பார்க்கேல்லை. யாராயிருக்கும்.”
‘டீச்சர் எதுக்கும் ஆன்ஸர் பண்ணு. உன்ரை ஹஸ்பண்டோ தெரியாது”
“அதுவும் சரிதான்.”
அவள் டெலிபோனை எடுப்பதற்கு திரும்பினாள். இவன் அவளுக்காக கதவருகில் காத்துக் கொண்டிருந்தான்.
[தொடரும் ]