– என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –
அத்தியாயம் ஆறு
நல்லது. திரும்பவும் எனது கிழவன் பழையபடி முருங்கை மரம் ஏறி விட்டான். நீதிபதி தாட்சர் மீது அந்தப் பணத்திற்காக வழக்குப் போட்டான். நான் பள்ளிக்குச் செல்கிறேனா என்று என் பின்னால் வந்து உளவு பார்க்கவும் ஆரம்பித்தான். சில சமயங்களில் என்னைக் கைப்பிடியாகப் பிடித்து, கடுமையாக அடித்தான். ஆனால் நான் பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். ஒன்று அவனைத் தவிர்த்து விடுவேன் அல்லது அவன் என்னைப் பிடிக்கமுடியாத அளவு வேகமாக ஓடி விடுவேன். உண்மையில் பள்ளிக்குச் செல்வது எனக்கு முன்பெல்லாம் பிடிக்காத ஒன்று. ஆனால் இப்போது பள்ளிக்குச் செல்வது என் அப்பாவை கடுப்பேத்தும் என்பதை உணர்ந்து தவறாமல் செல்ல ஆரம்பித்தேன்.
என் அப்பா போட்ட வழக்கோ மிகவும் மெதுவாக நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வழக்கு நடத்தும் செயல்முறையை ஆரம்பிப்பதாகவே தெரியவில்லை. எனவே, அவ்வப்போது நான் நீதிபதி தாட்சரிடம் இரண்டு அல்லது மூன்று டாலர்கள் கடன் வாங்கி என்னை அடிக்காமல் இருக்க அப்பாவுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் அவனுக்குப் பணம் கிடைக்கும்போதும் கண் மண் தெரியாமல் குடிப்பது மட்டும் அல்லாது கலாட்டா செய்து ஊரையே இரண்டாக்குவான். அப்படி ஊரில் கலாட்டா செய்யும் ஒவ்வொரு முறையும், அவனைச் சிறையில் அடைப்பார்கள். இந்த மாதிரி ஒரு வாழ்கை முறை அந்த மனிதனுக்கு மிகவும் சரியாகப் பொருந்தியது – அவனது பாதையைப் பொறுத்த வரை அவனுக்கு சரியாகப் பட்டது போலும்..
அந்த விதவையின் வீட்டைசுற்றியே அப்பாவின் நடமாட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த விதவை கடும் எரிச்சலுடன் இவ்வாறு தொந்தரவு செய்தால் அவன் வாழ்க்கையை கடினமாக மாற்றிவிடப்போவதாக கடைசியாக அவரை எச்சரித்தாள். அது அவனை மிகவும் கடுப்படையச் செய்தது. ஹக் ஃபின்னுக்கு யார் உண்மையான பாதுகாவலர் என்று அவளுக்குக் காட்டப்போவதாகத் தெரிவித்தான். எனவே, ஒரு வசந்த கால நாளில் மறைந்திருந்து எனக்காகக் காத்திருந்து என்னைப் பிடித்துவிட்டான். என்னை இழுத்துக்கொண்டு ஒரு தோணியில் மேல் நோக்கி ஓடும் ஆற்றின் திசையில் மூன்று மைல்கள் கூட்டிச்சென்றான். அதன் பின் இல்லினோய் மாகாணத்தை நாங்கள் கடந்து சென்றோம். அடர்ந்த மரங்களால் மறைக்கப்பட்ட மரத்தினாலான தனித்திருக்கும் சிறிய குடிலுக்கு அழைத்துச் சென்றான். அப்படி ஒரு இடம் அங்கே உள்ளது முன்னமே அறிந்திருக்காத பட்சத்தில், நீங்கள் அதை ஒருபோதும் கண்டுபிடிக்கவே இயலாது.
எல்லா நேரமும் அப்பா என்னை தன்னுடனே இருத்தி வைத்துக்கொண்டான். எனவே, தப்பி ஓட எனக்கு வாய்ப்புக் கிட்டவே இல்லை. நாங்கள் அந்த பழைய சிற்றறையில் வசித்தோம். அவன் எப்போதும் அந்த அறையைப் பூட்டி அதன் சாவியை இரவு வேளைகளில் தனது தலைமாட்டில் வைத்துக்கொள்வான். அவனிடம் ஒரு துப்பாக்கியும் இருந்தது. எங்கேயோ அதை அவன் திருடி இருக்கக்கூடும் என்று நான் யூகித்திருந்தேன். வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் அதைப் பயன்படுத்தினோம். கொஞ்ச நாட்களுக்கு ஒரு முறையாவது என்னை அந்த அறையில் விட்டுப் பூட்டிவிட்டு தோணியை எடுத்து கீழ்த்திசை நோக்கி செலுத்தி அங்குள்ள கடையில் மீன் விற்று , மது வாங்கும் விளையாட்டுக்குச் சென்று விடுவான். நன்கு மூக்கு முட்டக்குடித்து விட்டு, கையிலும் மது பாட்டில் வாங்கி கொண்டு வந்து பழைய காலம் மாதிரியே பொறுப்பற்ற ஊதாரியாக வாழ்ந்து கொண்டிருந்தான், அந்த சமயங்களில் என்னைச் சரமாரியாக அடிப்பான், இதற்கிடையில் என் இருப்பிடத்தை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த விதவை ஒரு ஆள் மூலம் என்னை திருப்பிக் கொண்டு செல்ல முயற்சி செய்தாள். ஆயினும், அந்த ஆளை அப்பா கையில் இருந்த துப்பாக்கி கொண்டு ஓட அடித்துவிட்டான். அங்கே குடியமர்ந்து நீண்ட நாள் ஆகவில்லை எனினும், எனக்கு அந்த இடம் பழக்கமாகி விட்டது. என் அப்பாவிடம் அடி வாங்கும் பகுதியைத் தவிர மற்றபடி அந்த வாழ்க்கை எனக்குப் பிடித்துத்தான் போனது.