‘முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’

'முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன்  அவர்கள் ஐபிசி தமிழ் பத்திரிகையில் ஈழத்து இலக்கியச் சிற்பிகள் என்னும் தலைப்பில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், இலங்கை இலக்கியத்தில் தடம் பதித்த ஆளுமைகள் பற்றி எழுதி வருகின்றார். இதுவரை பெப்ருவரி மாத இதழில் அவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி ‘முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’ என்னும் தலைப்பில்  எழுதியிருக்கின்றார், அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதிலெங்கும் அ.ந.க.வின் நினைவு நாள் பெப்ருவரி 14 என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் பெப்ருவரி மாதம் அ.ந.க.வை நினைவு கூர்ந்திருப்பதும், அம்மாதத்திலேயே அவரது நினைவு தினம் வருவதும் பொருத்தமானது.

Continue Reading →

தமிழிலக்கியங்களில் அறச்சிந்தனைகள்

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையும் மேன்மையும் உடையது தமிழ். இவ்வகையில் தமிழ் ஈடு இணையற்ற மொழி. பழந்தமிழர்கள் இனக்குழுக்களாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். அறம், இசை, ஈதல், கல்வி, காதல், வீரம், போர்த்திறன் எனப் பல்வேறு சிறப்புகளோடு வாழ்ந்ததை இலக்கியங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. தமிழ்இலக்கியங்களில் காணப்படும் சிறப்புகளில் ஒன்று அறம். இந்த அறம் சங்க இலக்கியம் தொடங்கிக் காப்பியம், அறஇலக்கியம், சிற்றிலக்கியம் என நீண்டு இன்றைய நவீன இலக்கியம் வரை தமிழின் மரபு அறுபடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய அறச் சிந்தனைகளில் சிலவற்றை இங்குக் காணலாம்.

முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். சங்கக் காலத்தில், உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். புலவர்களைப் பெரிதும் போற்றினான். மிகுந்த பொருள்களை நல்கினான். இதனைக் கண்ட அவன் மக்கள் வெதும்பினர். தந்தைக்குப் பிறகு நாட்டில் நமக்கு எதுவும் இராது. எல்லாவற்றையும் புலவர்களும் பாணர்களும் எடுத்துக் கொள்வர். இதன்காரணமாகப் படைத்திரட்டிக் கொண்டு தந்தைக்கு எதிராகக் கிளம்பினர். போர் மூழ்வதற்குரிய சூழ்நிலை நிகழ்ந்தது. இதைக் கேள்விபட்ட புல்லாற்றூர் எயிற்றியனார் புலவருக்குப் பொறுக்க முடியவில்லை.  சோழரை அவர் சந்தித்தார். நீங்கள் போர் புரிகிறீர்கள், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யாருக்கு ஒப்படைக்கப் போகிறீர்கள்? அந்தப் போரில் தோற்றால் யாருக்கு என்னாகும்? மக்களுக்கு எதிராகப் போரிடுவது முறையன்று. போரிடுவதைக் கைவிட்டு உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு நல்லது செய்து வானுலகம் போற்றும்படி வாழ்வாயாக! என நல்லறம் உரைக்கின்றார். அவர் பாடிய பாடல் வருமாறு:

‘மண்டுஅமர் அட்ட மதனுடைய நோன்தாள்,
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு
— — – – – – – –
ஓழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே;
ஆதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்’  (புறம்.213)

Continue Reading →

நான் ஏன் எழுதுகின்றேன்?

அறிஞர் அ.ந.கந்தசாமி– எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14.  அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அறிஞர் அ.ந.க.வின் ‘நான் ஏன் எழுதுகிறேன்?’ என்னுமிக் கட்டுரை ஏற்கனவே ‘தேசாபிமானி’, ‘நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு இக் கட்டுரை அ,ந,கந்தசாமியின் ஆளுமையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. அவரது இலக்கியக்கோட்பாடுகளினூடு அவரது எழுத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவரது ஆரம்ப காலக் கவிதையான ‘சிந்தனையும் மின்னொளியும்’ எனக்கு மிகவும் அவரது கவிதைகளிலொன்று. தமிழில் வெளியான சிறந்த மழைக் கவிதைகளிலிலொன்றும் கூட. அக்கவிதையில் வரும் “என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்” என்னும் வரிகள் இக்கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளென்பேன். .அக்கவிதையை முழுமையாகக் கட்டுரையின் முடிவில் இணைத்துள்ளேன். – வ.ந.கி –

அ.ந.க பற்றிய மேலதிக  விபரங்களுக்கு:

1. கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! – வ.ந.கிரிதரன் – வாசிக்க
2. அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை – வ.ந.கிரிதரன் (இலக்கியபூக்கள் தொகுப்பு ஒன்று நூலில் வெளியான கட்டுரை. எழுத்தாளர் முல்லை அமுதன் வெளியிட்ட நூலிது.) -வாசிக்க –
3. நூலகம் தளத்தில் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம் (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (உளவியல் நூல்) ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதற்கான இணைப்பு
4. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் கவிதைகள் மின்னூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
5. பதிவுகள் இணைய இதழ் வெளியிட்ட அ.ந.கந்தசாமியின்  ‘மனக்கண்’ நாவல் மின்னூலையும் நூலகம் தளத்தில் வாசிக்கலாம்
6. ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’  -அந்தனி ஜீவா – வாசிக்க
7. (சிறுகதைகள்.காம்) அ.ந.கந்தசாமி சிறுகதைகள் சில – வாசிக்க
8. அ.ந.கந்தசாமி பக்கம் (பதிவுகள்.காம்) – வாசிக்க


நான் ஏன் எழுதுகின்றேன்?  – அ.ந.கந்தசாமி –

அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். “சிந்தனையும் மின்னொளியும்” என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய ‘ஈழகேசரி’யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

Continue Reading →

இன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம்! அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் !! எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை !!!

கவிஞர் அம்பி“எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை.“  இந்த வரிகளை மறந்துவிடாதீர்கள். உங்கள் வாழ்க்கை பயணத்திலும்  ஏதோ ஒரு வடிவத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும்! கடந்த  வாரம் சிட்னியில் திடீரென மறைந்த கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவின் இறுதி நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி சிட்னியில் நடந்து முடிந்தபின்னர்,  நேற்று சிட்னியில் Hurstville என்ற பிரதேசத்தில்,  தனது  மனைவி,  பிள்ளைகள்,  மருமக்கள், மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் எங்கள் மூத்த கவிஞர் அம்பி அவர்களை பார்ப்பதற்குச்சென்றேன்.

அம்பிக்கு இன்று 17 ஆம் திகதி 91 வயது பிறக்கும் செய்தியறிவேன். இதனை சிட்னியில் வதியும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான எனது அருமைத்தம்பி கானா. பிரபா அவர்களிடம் சொன்னதும், தானும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்து, என்னையும் அழைத்துச்சென்றார்.

அவர் முன்னேற்பாட்டுடன் வந்து என்னையும் அம்பியையும் கலந்துரையாடச்செய்து, எமது உரையாடலை ஒளிப்பதிவு செய்து காணொளியாக்கி இன்று அம்பியின் பிறந்த தின நாளிலேயே வெளியிட்டும்விட்டார். இந்த சந்திப்பும், காணொளியும் அம்பி எதிர்பார்த்திருக்காத ஒரு திடீர் நிகழ்வு.

கானா பிரபாவும் அம்பியுடன் கலந்துரையாடிவிட்டு, அம்பி குழந்தைகளுக்காக வண்ணப்படங்களுடன் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கொஞ்சும் தமிழ் நூலின் பிரதியை, தனது குழந்தை இலக்கியாவுக்காக அம்பியின் கையொப்பத்துடன் பெற்றுக்கொண்டு விடைபெற்றுச்சென்றதன் பின்னர், மாலை 6.00 மணி வரையில் அம்பியுடன் இலக்கியப்புதினங்களை பரிமாரிக்கொண்டிருந்தபோது,  சிட்னியில் வதியும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் திருமதி கார்த்திகா கணேசர், செல்வி ஜெயசக்தி பத்மநாதன் ஆகியோரும் அம்பிக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவித்தனர்.

Continue Reading →

அஞ்சலி: பாடகர் எஸ்.ராமச்சந்திரன்

பாடகர் எஸ்.ராமச்சந்திரன்எனக்கு பிடித்த இலங்கைத்தமிழ்ப்பாடகர்களில் இவருமொருவர். இவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று இவர் பாடிய  “வான நிலவில் அவளைக் கண்டேன் நான். வாசமலரில் அவளை கண்டேன் நான் .” இப்பாடலை எழுதியவர் அல்வாய் சுந்தரம். பாடலுக்கு இசையமைத்திருப்பவகே. சவாஹிர். எஸ்.ராமச்சந்திரன் அவர்கள்  சிறிது  காலம் நோய்வாய்ப்பட்டிருந்து நேற்று (16.02.2020) மறைந்த செய்தியினை முகநூலில் நண்பர்கள் பகிர்ந்திருந்தார்கள். என்னைப்போன்ற பலரைத் தன் குரலால் இன்பமூட்டியவர் ராமச்சந்திரன் அவர்கள். அவருக்கு என் அஞ்சலி. அவரிழப்பால் வாடும் அனைவர்தம் துயரத்திலும் நானும் ‘பதிவுகள்’ சார்பில் பங்குகொள்கின்றேன். அத்துடன் ஜூலை 15, 2012 ஞாயிறு தினகரன் வாரமஞ்சரியில்  வெளியான “பொப்இசை பாடகர் எஸ். இராமச்சந்திரன்” என்னும் இவரைப்பற்றிய கட்டுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

இவர் பாடிய ‘வான நிலவில் அவளைக் கண்டேன்’ பாடலுக்கான இணைப்பு: https://www.youtube.com/watch?v=gkzbvnUJBuE


(தினகரன் – இலங்கை) பொப்இசை பாடகர் எஸ். இராமசந்திரன்   பரசுராமன்

1970 இலங்கையில் இயல் இசை நாடகம் முற்போக்கான எழுச்சியைக்கண்ட காலம். ஈழத்து சஞ்சிகை, ஈழத்து சினிமா, மெல்லிசைப்பாடல், இலங்கை பொப்பாடல் என வரிசைக்கட்டிக்கொண்டு கொடிக்கட்டிப்பறந்தது. இக்கால கட்டத்தில்தான் தொழில் ரீதியாக இலங்கை வானொலியில் இணைந்து தன் இசைத் திறமையால் இலங்கை பொப்இசை உலகில் பிரவேசித்து ரசிகர்களை கிரங்க வைத்தவர்தான் எஸ். இராமச்சந்திரன்.

கடந்த நான்கு தசாப்தங்களைத் தாண்டியும் இலங்கை, தமிழகம் மற்றும் உலகளாவிய புலம்பெயர் நாடுகளிலும் வாழும், தமிழ் உள்ளங்களில் துள்ளிசையாக ஒலித்துக்கொண்டிருக்கிறது இவரது பொப் இசை பாடல்கள். மனது மறக்காத சமூக நலம் நாடிய பாடல்களைத் தந்த அவரை திரும்பிப் பார்க்கின்றேன் பக்கத்திற்காகச் சந்தித்தேன்.

Continue Reading →

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ’
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை. ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.

Continue Reading →

‘காதலர்தின’ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி

'காதலர்தின'ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி குரு அரவிந்தன்அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?

அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.

தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.

அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ பதுமவயதுப் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று தனது உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான்.
எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்று வெறித்தனமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.

தனது அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் இருந்த அறைப்பக்கம் திரும்பிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.

Continue Reading →

‘பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்’

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் ‘பகிடிவதை’ என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ‘பகிடிவதைக்’கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.

பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே ‘காமவெறிபிடித்த சில காவாலிகளின்’ சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

Continue Reading →