– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் யூன் 2007 இதழ் 90
மேலெல்லாம் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. இரவு பெரும்பொழுதும் தூக்கமற்றதாய்க் கழிந்திருந்ததில் விழித்தவளின் இமைகள் கனத்து, கண்களும் எரிச்சலாகியிருந்தன. இரவு எழுச்சி கண்டிருந்த உணர்ச்சி வேறு உள்கனன்றுகொண்டிருந்தது. அடக்கப்படாத் தாபம் எரிச்சலாய், கோபமாய் அவளில் பொங்கியது. அடைந்த மனவலி முக்கியம். அதை வெளிப்படுத்த முடியாததில் அழுகைதான் வரப்பார்த்தது.
சிந்தியா படுத்திருந்த சோபாவிலிருந்து தலையை நிமிர்த்தினாள்.
ஜன்னலூடாக வெளிச்சமடித்துக்கொண்டிருந்தது.
நேரம் என்னவாகவிருக்கும்? பத்து மணிக்கு மேலேயாய் இருக்கும் என வெளிச்சத்தில் ஊகம் கொண்டாள். தலையை இன்னும் கொஞ்சம் திருப்பி சுவர் மணிக்கூட்டைப் பார்ப்பதற்குமான அலுப்பு.
மேலே மாடியில் நடமாட்டத்தின், உடம்பசைவின் மரத்தள அதிர்வினோசை எழுகிறதா என்று கிரகிக்கப் பார்த்தாள். இல்லை, எந்த அசைவின் அறிகுறியும் இல்லை. கணேஷ் அந்தநேரமளவுக்குக்கூட எழுந்திருக்கக்;கூடிய நிலையில் இரவு வந்திருக்கவில்லைத்தான்.
இரவோ பகலோ, காலையோ மாலையோ வேலை செய்வதினூடாகத்தான் புதிதாக மோட்கேஜில் வாங்கிய அந்தப் பிரமாண்டமான வீட்டின் தவணைத் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்க முடிகிறது. மாதம் இரண்டாயிரத்து நானூறு டொலர் சாதாரணமான தொகையில்லை. அது ஒன்றே மட்டுமெனில் அவளுக்கும் கணேஷ்க்கும் கொஞ்சப் பொழுதெனினும் ஆறுதலாயிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால், கார் இன்சூரன்ஸ், ஹைட்ரோ பில், ரெலிபோன் செல்போன் பில்கள், கேபிள் ரீவி, இன்ரநெற் கனெக்சன் பில்கள் என இரண்டுபேர் சம்பளங்கள்கூட பற்றாக்குறையாய் இருக்கின்றன.