வண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல… உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே… எங்கயும் நிக்காது… பைப்பாஸ் வழியா போறது…” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.
“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா… எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்… சார் டைம்பாஸ் புத்தகம் சார்…” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்…
“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே…” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு…”
“மாதுளை கிலோ எம்பது, எம்பது”
“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்…”
“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை…” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது…
“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்…”
“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா…”
சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது… குரு தியேட்டர் திரும்பி… வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது…
“டிக்கெட்… டிக்கெட்… எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க… “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு… பாட்ட கேட்க முடியல… ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க…”